Thursday, May 8, 2014

PART - 1, Chapter - 44

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 44


யிரமாயிரம் ஹிரன்ய கசிபுகளும் ராவணன்களும் இருந்தும் பகவான் ஏன் இன்று அவதாரம் பண்ணவில்லை..?
ஏனென்றால், ஒரு பிரஹலாதன் கூட இன்று இல்லை!   அவன் அவதாரம் பண்ணி வந்தானானால் ஒரு பிரலாதனாவது கிடைப்பானா?
இதன் தேரிய பொருள் என்னவென்றால், பகவான்  அவதாரத்துக்கு சாது ரக்ஷணம் தான் முக்கிய குறிக்கோள்:  துஷ்ட விநாசனம் என்பது அடுத்த பட்சம்தான்.  நெல் பயிரிட்டால் அங்கே புல் முளைக்குமா?  தானாகவே அழிந்து போகுமல்லவா?  அது போல் சாது பரித்ராணம் தான் முக்கியம் பகவானுக்கு.  அதை நிகழ்த்தும்போது துஷ்ட நிக்ரஹம் தானாக நடைபெறுகிறது.
சாதுக்கள் ரக்ஷணத்தையும் வைகுண்டத்திலிருந்தபடியே அவனால் பண்ண முடியாதா என்ன?  தாராளமாய்  முடியும். ஆனால் அவர்கள் (சாதுக்கள்) அவனை அழைக்கிறார்கள்.  பரமாத்மாவும் இறங்கி வருகிறான்.
இதைத்தான் கிருஷ்ணாவதாரம் காட்டுகிறது.  அதிலே அவன் பிறப்பு, லீலைகள் இரண்டுமே திவ்யம் என்று கொண்டாடுகிறான்.  "அதை உள்ளபடி உணரக்கூடியவன் ஒருவன் இருந்தால், அவன் மறுபடி பிறக்க மாட்டான்:    என்னையே வந்து அடைவான்" என்று பரமாத்மா தமது அவதார ரஹஸ்யத்தை வெளிப்படுத்துகிறார்.
அந்த அவதார ரகசிய சாரமானது ரொம்பவும் முக்கியம்.  அது இருந்தால் மோக்ஷத்தை வாங்கிக்  கொடுக்கும். ஆகையினாலே,
  • பகவான் அவதாரமானது இந்திர ஜாலமல்ல;
  • வானுடைய அவதாரத்திலே அவன் ஞானத்துக்கு குறைவில்லை;
  • அவன் அவதாரம் புண்ணிய / பாவத்தினால் ஏற்படும் மானுட அவதாரம் போலில்லை;
  • சாது பரிபாலனம் பண்ணுவதற்காக ஏற்பட்டது;
  • துஷ்ட நிக்ரத்துக்காக ஏற்பட்டது;
  • தர்மம்  வாட்டமுறும்போது, அதர்மம் தழைக்கும்போது   வந்து அவதரிக்கிறான்.
இந்த ஆறு விஷயங்களையும் நாம் மறவாமல் இருக்க   வேண்டும்.  இதை நினைத்தாலே பாவமெல்லாம் போய்விடும்.
அதனால் தான் பகவான், அர்ஜுனனிடத்திலே தன் அவதார மகிமையைத் தானே சொன்னான். 
"புத்திமான்களுள் முதலிடத்திலே வைக்கப்படக் கூடியவர்கள், பகவானுடைய பிறப்பின் ரகசியத்தை நன்கு உணர்கிறார்கள்" என்று வேதமும் சொல்கிறது. 
அவர்கள் என்ன உணர்கிறார்கள்?
பிறப்பற்றவன் பலபடியாகப் பிறக்கிறான் என்று உணர்கிறார்கள்.
இப்படிச் சொன்னால் முரண்பாடாக இல்லையா?  பிறப்பற்றவன் என்றால் நம்மைப் போல் பிறப்பற்றவன் என்று அர்த்தம் - ஆனால்  அவனே தன்னுடைய சங்கல்பத்தினால் பல படியாக வந்து பிறக்கிறான்.
அவன் பிறந்தால் அது அவனுக்குப் பெருமை;  நாம் பிறந்தால் நமக்குச் சிறுமை, இழுக்கு!
பிறவியே அற்றவன் பிறக்கிறான் என்றால் பெருமைதானே.
"எங்கள் பிறப்பை அறுக்க, எங்கள் அஞ்ஞானத்தைப் போக்க பிறவியே இல்லாத நீ அவதரித்தாயே" என்று பேசினார் நம்மாழ்வார்.

கவானுடைய இந்த அவதார சரித்திரம், லீலைகள் எல்லாமே பாவத்தைப் போக்கடிக்க கூடியவை.
கிருஷ்ணாவதாரத்தில் பல இடங்களில் நவநீத சௌர்யம் (வெண்ணை திருடுதல்) என்கிற பெரிய விருத்தாந்தம் சொல்லப்பட்டிருக்கிறது.
வெண்ணையிலே பகவானுக்கு விருப்பம் அதிகம் - வெண்தயிர் தோய்த்த செவ்வாயன் அவன்!
வெண்ணையை அவன் விழுங்கிவிட்டு வெறுங்கலத்தை நடுக்கூடத்தில் வைத்துத் தட்டுவானாம்.  அதன் ஓசை ஓம்! ஓம்! என்று பிரணவம் போல் ஒலிக்கிறதாம் - பெரியாழ்வார் பாடுகிறார்!
நம் கிரஹத்திலே குழந்தை அப்படி அடித்தால் வெறும் ஒலிதான் கேட்கும்.  ஆனால் தெய்வக் குழந்தை பிரணவத்தைக் கேட்டு ஆனந்தப்படுகிறது.
இப்படிப்பட்ட குழந்தையைப்பார்க்க பூதனை வருகிறாள்.  அவித்யையின்  உருவமாக, மாயையின் ஸ்வரூபமாக வருகிறாள்.  குழந்தைக்கு ஸ்தன்யபானம் பண்ணி வைக்க வருகிறாள்.  அது தொட்டிலில் படுத்துக் கொண்டிருக்கிறது.
எப்படிப்பட்ட தொட்டில்..?.  மாணிக்கம் இடைகட்டி, வைரம் இடைகட்டி, ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில் - அதனருகே பூதனை வந்து யசோதை வடிவத்தில் நிற்கிறாள்.  அதைப் பார்த்து விட்டது குழந்தை.. துளிக்கூட அவளைப் பார்த்து பயப்படவில்லை.  கண்ணை மூடித் தூங்குகிற மாதிரி பாசாங்கு செய்கிறது.
நிஜ யசோதை வெளியே புறப்பட்டுப் போய்விட்டாள்,   குழந்தை தூங்குகிறது என்று.  இது (குழந்தை) வேகமாக அழ ஆரம்பிக்கிறது.   சாம வேதம் கேட்கிறது!  தெய்வக் குழந்தையல்லவா.. நடந்தால் வேதம்;  நின்றால் வேதம்;  சிரித்தாள் வேதம்; அது அழுதாலும் வேதம்தான்.
எல்லா மகரிஷிகளும் அக்னிஹோத்திரத்துடன் நந்தகோபன் வீட்டு மாட்டுக் கொட்டகையில் வந்து நிற்கிறார்களாம்  அந்த அழுகை ஒலி கேட்டு!   அப்படி அதிசயமாக சாம வேதத்தில் அழுகிறது அந்த குழந்தை!  கையைக் காலை உதைத்துக் கொண்டு அழுகிறது.
பூதனை ஏமாந்து போகிறாள். அது தன்னை நிஜமாக தாயென்று எண்ணிக் கொண்டதாக நம்பி வருகிறாள்.  பாலோடு சேர்த்து அவள் பிராணனையும் இழுத்துக் கொண்டு விடுகிறது குழந்தை.
இங்கே உட்கார்ந்து இந்தக் கதையைச் சொல்வதாலும் கேட்பதாலும் என்ன லாபம்?
இதை யார் சொல்கிறார்களோ, யார் யார் கேட்கிறார்களோ, அவர்களெல்லாம் மறுபடியும் தாயிடம் பால் பருக மாட்டார்கள்  -  அதாவது இனி அவர்களுக்குப் பிறப்பு இல்லை!
அப்படி பரமாத்மா பூதனையை சம்ஹாரம் பண்ணினான்.   நம் பிறப்பை அறுக்கக் கூடியவன் அவன் என்பதை எந்தவொரு லீலையும் காட்டி நிற்கிறது.

தன் பிற்பாடு பரமாத்மா பல இடங்களில் வெண்ணையைத்  திருடுகிறான். 
உலகத்திலே ஒரு திருட்டு - ஒருத்தர் ஒரு கிரஹத்திலிருந்து வெள்ளி சொம்பைத் திருடுகிறார். அதை இன்னொருத்தர் அவரிடமிருந்து திருடி விடுகிறார்!  ஆனால் திருட்டுத்தனம் என்பதே திருடுமா..? பகவானின் அவதார விசே-ஷத்தில் அது நடக்கிறது... அவன் வெண்ணை திருடுகிறான் - அந்தத் திருட்டுத் தன்மை நம் பாவம் மொத்தத்தையும் திருடிக் கொள்கிறது.
அவன் காராகிரத்திலே (சிறை) பிறந்தான் என்றால், நமது சிறைவாசம் விடுபடுகிறது.  அவன் அந்த ராத்திரியில் பிறந்தான் என்றால் நம் அஞ்ஞன இருள் நீங்கி விடுகிறது. இப்படி கிருஷ்ண சரித்திரத்தை நினைக்க நினைக்க நமக்கு எதிர்த்தட்டான பலன்கள் கிடைக்கின்றன.
நமது சர்வ பாவங்களையும் போக்கடித்து விடுகிறான் எம்பெருமான்.

ரு பெரிய பானை.  அதிலே பெரிய மத்தைப் போட்டுக் கடைகிறாள் யசோதை.  "டர்-டர்" என்று ஒலி - புலி உறுமுகிற மாதிரி சப்தம் வருகிறது.  வைகுண்ட லோகத்தில் போய்  எதிரொலிக்கிதாம் அது!
எங்கோ போய்க் கொண்டிருந்த குழந்தை  கிருஷ்ணன், அவள் கடைகிறதைப் பார்க்கிறான்.   மத்து, பானைக்குள்ளே போவதும் வருவதுமாக "குங்-குங்" என்று ஓசை!  வேதத்தில் கணம் சொல்கிறபோது எழுகிற மாதிரியான ஓசை கேட்கிறது.
ஓடி வந்து அம்மாவின் முதுகிலே கை வைத்தது குழந்தை!
"பானை நடுவிலே குங்-குங் என்று ஓசை வருகிறதே அது என்னம்மா? என்று கேட்டது.
நடுங்கிப் போய்விட்டாள் யசோதை!  ஏனென்றால் மொத்தத்தையும் துவம்சம் பண்ணிவிடும் குழந்தை!  வெண்ணையை வைத்திருந்து மெதுவாகக் கொடுக்க வேண்டும் என்பது அவளுக்கு ஆசை.  குழந்தையை வெளியே துரத்த வேண்டும் என்பதற்காக, "அதுக்குள்ளே பூதம் இருக்கு.. உன்னைப் பிடிச்சுக்கும்.  வெளியிலே ஓடிப் போய்விடு" என்று மிரட்டினாள்.
குந்தையோ, வெளியிலே ஓடாமல், பானை பக்கத்திலே போய்  அதைப் பிடித்துக் கொண்டு நிற்கிறது.  உலகத்தையே விழுங்கக் கூடிய பூதம், இந்த பூதத்துக்குப் போய்  பயப்படுமா?
"அம்மா என்கிட்டே பொய் சொல்லலாமா?  இதுக்குள்ளே நிஜமாகவே பூதம் இருக்கா.."? 
"சத்யமாகக் சொல்றேண்டா!   பூதமிருக்கு.. அது உன்னைப் பிடிச்சுக்கும்."
" ஏம்மா! பூதம் உன்னைப் பிடிச்சுக்காதா"?
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை யசோதைக்கு... சமாளித்துக் கொண்டு பேசுகிறாள்.  "நீ சின்ன குழந்தையல்லவா?  உன்னைப் பிடித்துக் கொள்ளும்;  நான் பெரியவள் என்பதால் என்னைப் பிடிச்சாலும் தாங்கிக் கொள்வேன்."
பிற்காலத்தில் உலகுக்கே கீதையைச் சொல்லவிருந்த குழந்தை, இந்த நேரத்திலே அம்மாவுக்கு ஒரு குட்டி கீதை சொல்கிறது.
"அம்மா! நீ சொல்வது நன்றாயிருக்கா?   என்னை வெளியே போகச் சொல்றியே.  நான் போன பிற்பாடு அந்த பூதம் உன்னைப் பிடித்துக் கொண்டால்... உலகத்திலே உள்ளவர்கள் என்னை என்ன சொல்லுவார்கள்?  அம்மாவை பூதத்திடம் காட்டிக் கொடுத்த அல்பமான பிள்ளை என்று அல்லவா என்னைச் சொல்லுவார்கள்!  அம்மாவை ரட்சிக்க முடியாதவன் இருந்து என்ன பயன்"
உடனே அவள் கண்களிலே தாரை தாரையாக நீர்!  என்ன பேசுவதென்று தெரியவில்லை யசோதைக்கு.  தழுதழுத்து, "குந்தாய்!  என்னை என்னடா செய்யச் சொல்கிறாய்..? என்று கேட்கிறாள்.
"முதலிலேயே என் யோசனையைக் கேட்டிருக்கலாம்ல்லையா.. சொல்லியிருப்பேனே! யோசனை சொல்வதற்காகப் பிறந்தவன் தானே நான்"
"இப்போது தான் சொல்லேன் உன் யோசனையை"
"அம்மா!  உன் இரண்டு கைகளையும் பூரணமாகக் பானைக்குள் விடு.  அதற்குள் பூதம் இருக்கு என்றாயே, அதை எடுத்து என் கையிலே கொடு.. அதை நான் விழுங்கி விடுகிறேன்" - என்று தாயாரிடம் சொல்லி, சிரித்தபடி பானையை எட்டி உதைத்து விட்டது குழந்தை!  வெண்ணையை எடுத்து விழுங்கி விட்டு மோரை அலட்சியப்படுத்தி விட்டு குடுகுடுவென்று ஓடுகிறது!
எல்லோரும் குழந்தையைத் துரத்திக் கொண்டு ஓட்கிரார்கள்.  ஒரு கோபிகா ஸ்த்ரீ கிரத்திலே நுழைந்தது அது.  இந்தக் கருங்குந்தை நுழைந்ததும் அந்த இடம் மேலும் இருட்டு ஆகி விட்டது.
கறுப்புப் பானையிலே கருப்பு மடக்கு போட்டு வெண்ணையை மூடி  வைத்திருக்கிறார்கள். பானையைத் திறந்து வெண்ணையை எடுத்து  கொள்கிறது.  அந்த நேரத்திலே கேபிகா ஸ்த்ரீ வந்து  விட்டாள். நடுங்கிப் போய்  விட்டது குழந்தை.  இரண்டு பானைகளுக்கு நடுவிலே போய்  உட்கார்ந்து கொண்டது!
உட்கார்ந்தால்.. தலையிலே இருக்கிற ஆபரணம் கிணி-கிணி என்று ஆடி ஒலி எழுப்புகிறது.  கழுத்து ஆபரணம் கண-கண என்கிறது!  இடையிலே உள்ள ஆபரணம் கல-கலவென்கிறது. திருவடி ஆபரணமோ ஜில்-ஜில் என்று ஒலிக்கிறது.  ஒடுக்கி ஒட்கார உட்கார, ஒலி அதிகமாகிறது!
குழந்தை அந்த ஆபரங்களைப் பார்த்துக் கேட்கிறது.  "நான் உங்களைத் தாங்குகிறேனே... இப்படி நீங்கள் ஒலிக்கலாமா?  அவள் கண்டு பிடித்தால் என் அம்மாவிடம் போய்ச் சொல்வாளே.. அப்புறம் அவர் என் முதுகில் ஒலிக்கச் செய்து விடுவாரே"!  - எல்லா ஆபரணங்களையும் பார்த்துக் கைகூப்பிக் கேட்கிதாம் குழந்தை!
அசித் விஷயங்களை, ஆபரங்களை எல்லாம் வந்தனம் பண்ணுகிறானே பகவான்.. நாம் அவனை வந்தனம் செய்ய வேண்டாமா!  ரிக் வேதம் சிரசிலே ஒலிக்கிறது.  விசே-ஷ சக்தியுடன் இருக்கும்படியான யஜுர் வேதம் கண்டத்தில்.  அதர்வண வேதம் இடையிலே ஒலிக்கிறது...  சாமம் திருவடியில் ஒலிக்கிறது.
ஒலிக்காமல் இருங்கள் என்று பகவான் கைகூப்புகிற அழகே அழகு!

ன்னொரு கிரஹத்திலே போய் உறியைத் தொடுகிறது குழந்தை.  தொட்ட கணத்திலே கணகணவென்று மணி அடிக்க ஆரம்பித்து விடுகிறது!
"ஏ மணியே!  நீ இப்படி அடித்து என்னைக் காட்டிக் கொடுகிறாயே" என்கிறது குழந்தை.
"அடியேன், அடியேன்" என்று நயமாய் பதில் சொல்கிறது மணி.
குழந்தை பானையை எடுத்து வைத்துக் கொண்டு வாயிலே வெண்ணையைப் போட்டுக் கொள்ளும் கணத்தில் மணி திரும்பவும் அடிக்க ஆரம்பித்தது.
"அடிக்க மாட்டேன் என்று சொன்னதால் தானே வாயில் போட்டுக் கொண்டேன்...  இப்படி நீ அடிக்கறியே, இது பாவ்யமா!" குழந்தை  கேட்டது.  
மணியோ, மணியான வார்த்தையால் பதில் சொன்னது!

(தொடரும்) 

No comments:

Post a Comment