Tuesday, January 29, 2013

PART-1, Chapter-12

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 12

சர்க்கரைப் பொங்கல் உணர்த்தியது எப்படி?
விதண்டாவாதம் பண்ணிய சிஷ்யன் அதைச் சாப்பிட்டு முடித்தான்.  குரு இன்னொரு சிஷ்யனை அழைத்தார்.  துளி சீயக்காய்ப் பொடி கொண்டு வரச்சொன்னார்.  முதலாமவனிடம் அதைத் தரச் சொன்னார்.  தானும் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொண்டார்.  "சீயக்காய்ப் பொடி போட்டு அவன் கையை நன்னா அலம்பிண்டு வரட்டும்.. மற்றவர்களுக்கு அவன் சர்க்கரைப் பொங்கல் பரிமாறணும்" என்றார். அவனும் சீயக்காயைப் போட்டு கையை நன்றாக அலம்பிக்கொண்டு வந்தான்.  ஆசார்யர் அவனை அழைத்து தன் கையிலே இருந்த சீயக்காய்ப் பொடியைக் காண்பித்து, "கையை நீட்டு, சீயக்காய்ப் பொடி போடறேன்" என்றார். அதற்கு அவன் சொன்னான், "சுவாமி, கையிலே பிசுக்கில்லை.  சுத்தமாகிவிட்டது, போதும் சீயக்காய் இனி வேண்டாம்".  அப்போது குருநாதர் சொன்னார், "இது உன் கை பிசுக்குக்காக இல்லை, உன் வாயிலே, நாக்கிலே இருக்கிற பிசுக்கு போகறதுக்காகப் போடறேன்" என்றார்.  "கொஞ்சம் நாக்கிலே போட்டுத் தேயேன்".  "நாக்கிலே ஒட்டிக்கலையே சுவாமி".  
"இப்ப அந்த வேத வாக்கியம் உனக்குப் புரிகிறதா? என்றார் குரு. 
"புரிஞ்சுடுத்தே, புரிஞ்சுடுத்தே", என்று மாணவன் கீழே விழுந்து சேவித்தானாம்.  "ஒரு சின்ன எளிய பதார்த்தம் நெய்.  நம் கையிலே ஒட்டிக் கொள்வது போல், நாக்கிலே ஒட்டிக் கொள்வதில்லை.  அப்படி ஒட்டிக்கொண்டால் சீயக்காய்ப் பொடியை போட்டல்லவா தேய்க்கணும்.   ஒரு சாதாரண பதார்த்தமே இப்படி என்னும்போது எல்லாவற்றையும் காத்து ரட்சிக்கிற அந்த சர்வேசுவரனுக்கு இந்த சக்தி இராதா?  அவனை நாம் சாமான்யமாக எடை போடலாமா?  வேதம் இப்படிச் சொல்கிறது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று நீ சொல்வது பவ்யமா"? என்று ஆசார்யர் சிஷ்யனைப் பார்த்துக் கேட்டார்.  "நான் ஒப்புக் கொண்டேன் சுவாமி" என்றான் அவன்.
"இவ்வளவு தூரம் இதை வெளிப்படையாகக் காண்பித்துச் சொல்ல அவசியமில்லை.  வேதம் சொல்கிறது என்றால் நாம் அதை அப்படியே நம்பலாம்.  ஏனென்றால் அதில் பொய்யான வார்த்தை எதுவும் இல்லை.  பரமாத்மா எதிலும் ஒட்டிக் கொள்ளாமல், குண - தோஷங்கள் அற்றவனாக இருக்கிறான் என்பது வேதவாக்கு" என்று விளக்கினார் ஆசார்யர்.

சூர்ய ரச்மி ஒரு நதியிலே விழுகிறது.  அதே சூர்ய ரச்மி கோபுரத்திலே விழுகிறது. சாக்கடையிலும் விழுகிறது.  அந்த இடங்களுடைய குண தோஷங்கள் சூர்யா ரச்மியில் ஒட்டிக் கொள்கிறதா என்ன..? அதைப் போல தான், எம்பெருமான் எங்கே இருந்தாலும் அவன் இருப்பிடத்தின் குண தோஷங்கள் அவனிடத்தில் சேர்வதில்லை.  அதனால் தான் அவன் 
பூதாத்மா ஆகிறான்.  நமக்குள்ளே இருந்தாலும் நம்முடன் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.  

சஹஸ்ரநாம பாஷ்யத்திலே பராசர பட்டர் ரொம்ப அழகாக எழுதுகிறார்.  அதை இன்னொரு உபமானமாகச் சொல்லலாம். 
ஒரு பள்ளியிலே உபாத்யாயர் மாணவனிடம், வீட்டுப் பாடம் எழுதிண்டு வந்தாயா என்று கேட்கிறார்.  எல்லோரும் எழுதி வந்திருக்க, அவன் மட்டும்  எழுதவில்லை. அவருக்குக் கோபம் வந்தது. நீளமான பிரம்பை எடுத்தார்.  இரண்டு கையையும் நீட்டச்  சொன்னார்.  இந்த கையிலே ஆறடி, இன்னொரு கையிலே ஆறடி ஓங்கி அடித்தார்.  வலியிலே துடிக்கிறான் அவன்.  அடுத்த அடிக்குக் கையை நீட்ட அவனால் முடியவில்லை.  அடித்த அந்த பிரம்பு இருக்கிறதே.. அதனுடைய சம்பந்தம் பள்ளி ஆசிரியருக்கும் உண்டு, பையனுக்கும் உண்டு. பிரம்பின் இந்த நுனியை அவர் பிடித்துக் கொண்டிருக்கிறார்.  அந்த நுனி அவன் கையில் விழுகிறது.  ஆனால் அடிக்கின்ற ஆசிரியருக்கு ஏதாவது நோவு, கிலேசம், கஷ்டம் என்பது உண்டோ? இல்லவே இல்லை. ஆனால் அடிப்படும்படியான மாணவன் துடிக்கிறான்.  
அந்த மாதிரி பரமாத்மா பிரம்பைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான்.  பரமாத்மா இருக்கிற இந்த சரீரம் என்பது பரமாத்மா இருக்கிற இடமாகவும் உள்ளது.  ஆனால் கிலேசங்கள் எதுவும் அவனுக்கு இல்லை.  அதைத்தான் புருஷ சூக்தம் தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட புருஷன்தான் விச்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிறான்.
சர்வ பதார்த்தங்களுக்குள்ளே அவன் இருந்தாலும் அவற்றுடைய குண தோஷங்கள் எல்லாம் ஒட்டிக் கொள்ளதவனாக அவன் இருக்கிறான்.  உத்தமோத்தமனான எம்பெருமானுடைய அந்தப் பெருமையைத்தான் புரி சயநாத்; என்றது.  
அடுத்து பஹு தானத்.  கேட்கும் வரமெல்லாம் கொடுப்பான்.  வாரி வழங்குவான்.  மோட்சத்தையே கொடுப்பான்.  மோட்ச்ததையே கொடுக்கும்படியான எம்பெருமான் இந்த லோகத்து சந்தோஷங்களை எல்லாம் கொடுத்து மோட்சத்தையும் கொடுப்பான்.
அதனால் தான் சாஸ்திரங்கள், அவனிடத்திலே போய்  எதையும் கேட்காதே, என்று நம்மை சிக்ஷிக்கின்றன.  நாம் கேட்டால் ஏதாவது அல்பமான பொருளைக் கேட்போம்.  அவனோ வாரி வாரி வழங்கக் கூடியவன்.  அதனால், அவனிடத்திலே யாசிக்காதே. கட்டாயம் அவன் கொடுப்பான்.  பரிபூரணமாக விச்வாசிக்க (நம்ப) வேண்டும், அவ்வளவுதான்.    

ஒரு சரித்திரத்திலே இந்த உண்மை தெரிகிறது.
குசேலர், பகவானைப் பார்க்க வருகிறார். பகவான் கிருஷ்ணன் பண்ணுகிற உபசாரத்திலே கூசிப் போய்  உட்கார்ந்திருக்கிறார்.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சிசுருஷை பண்ண, சாஷாத் மகாலஷ்மியே  விசுருகிறாள்.  
சுற்றியிருப்பவர்கள், "இந்த பிராமணன் ஜன்மாந்திரத்திலே என்ன புண்ணியம் பண்ணினானோ! இப்படி ஒரு யோகம் அனுபவிக்கிறாரே...மகாலஷ்மியே விசுருகிறாளே" என்று ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள்.   குசேலரோ பிரமித்துப்போய் பிம்பம் மாதிரி, சிலை மாதிரி உட்கார்ந்திருக்கிறார்.  மகாலஷ்மி பகவானிடம் கேட்கிறார், "இந்த பிராமணர் எந்தத் திக்கிலிருந்து வந்தார்?"   யாரவது நம் வீட்டுக்கு வந்தால், "இவர் எந்த ஊரிலிருந்து வந்தார்"என்று தான் கேப்போம்.  கிழக்கா, மேற்கா என்று திக்கை யாராவது கேட்பாரோ, மகாலஷ்சுமி கேட்கிறாள்.  கபட நாடக சூத்ரதாரியான பகவான் அவள் குறிப்பை நன்றாக உணர்ந்தான்.   உடனே இரண்டு கைகளையும் விரித்து "இந்தப் பக்கம்" என்று அழுத்தி ஜாடை காட்ட, அந்த திக்கை மகாலஷ்மி நோக்க, அஷ்ட ஐஸ்வர்யங்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்த திக்கை நோக்கி போயினவாம்.  
இரவெல்லாம் நண்பர்கள் கிருஷ்ணனும் குசேலனும் பழைய கதைகள் பேசி மகிழ்ந்தார்களாம். விடிந்து எழுந்ததும் குசேலருக்குப் போகவும் மனமில்லை, கிருஷ்ணனுக்கு அனுப்பவும் மனமில்லை.  ஆனால்  புறப்பட்டாயிற்று.  ஒரு ரூபாயாவது தட்சிணைக் கொடுக்க வேண்டாமோ,  ஒன்றும் கொடுக்கவில்லை பகவான்.     குசேலர் தம் வீட்டை நோக்கி வருகிறார்.  சின்ன வயதிலே நடந்ததெல்லாம் கிருஷ்ணன் ஞாபகத்துக்குக் கொண்டு வந்தானே, என்று நினைத்த வண்ணம் வரும்போது, நூறு வேத வித்துக்கள் எதிரே பூரண கும்பத்தோடு  நின்றார்கள்.  குசேலர் பின்னால் திரும்பி பார்க்கிறார்.  பூரண கும்ப மரியாதைக்குரிய பெரியவர் யாரேனும் வருகிறார்களா? என்று.  "சுவாமிக்குத்தான்", என்கிறார்கள் வேத வித்துக்கள்.  பூரண கும்பத்தைத் தொட்டுவிட்டு ஊருக்கு உள்ளே போகிறார்.  இந்த ஊரா என்று சந்தேகம் வந்து விடுகிறது அவருக்கு.  குடிசையத் தேடுகிறார்.  தேவேந்திர பவனம் போல், ஒரு பவனத்திளிருந்து ராணி வந்து அவரை செவிக்கிறாள்.  அட்சதைத் தட்டு நீட்டப்படுகிறது.  தர்மபத்தினியின் பெயர் சுட்சாமா (பசியினால் ஒடுங்கியவள் என்று அர்த்தம்).  
அட்சதையை எடுத்து சுட்சாமாவுக்குத் தூவி, "தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசீர்வதிக்கிறார் குசேலர்.   பத்தினி பதருகிறாள், "சுவாமி, இப்படிச் சொல்லலாமா? என்கிறாள்.  

"தீர்க்க சுமங்கலி" என்று சொன்னால் அது என்ன தப்பான ஆசியா?  கிடையாது.  ஆனால் கணவன் தன் பத்தினியை அப்படி ஆசி பண்ணக் கூடாது.  அது தன் தலையிலேயே அட்சதையைப் போட்டுக் கொள்கிறமாதிரி.   இந்த சின்ன சாஸ்திரம் குசேலருக்குத் தெரியாதா.  64 சாஸ்திரங்களையும் 64 நாட்களில் கிருஷ்ணனுடன் சேர்ந்து பயின்றவராயிற்றே. அவருக்குத் தெரியாமல் இருக்குமா, தெரியும்.  ஆனால், வந்து நமஸ்கரித்தவள் யாரோ ராணி என்று நினைத்துக் கொண்டுவிட்டார்.
மகாலஷ்மி கடாஷம் வேண்டும் என்று குசேலர் கேட்டாரா?  இல்லை!.  ஆனால் எப்படிப்பட்ட ஐஸ்வர்யம் கிடைத்தது.    
அப்படிக் கொடுப்பதுதான் அவன் குணம்.  பஹு தானத் புருஷ: அவன் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் நம்மாலே தாங்க முடியாது.

புராணாத்வாத் புருஷ: புராணாம் என்றால் ரொம்ப பழமையானவன்.  பழமையிலேயே புதுமையானவன்.  அவனுடைய ஆதி எது என்று நமக்குத் தெரியுமா?
பூர்ணாத்வாத் புருஷ:  எல்லாம் நிறைவானவன்.  குறைவே இல்லாது சர்வமும் நிறைந்து விளங்கக் கூடியவன் என்று அழகான இந்த புருஷ சப்தத்துக்கு நான்கு பொருள் சொன்னார்கள்.
விச்வ சப்தத்தினாலே சொல்லப்படக்கூடிய புருஷனாகிற அந்த எம்பெருமானை ஆச்ரயித்து (வணங்கி) எல்லோருமே ஜீவிக்கிறோம்.

தொடரும்...

 
 


 

   



Monday, January 28, 2013

PART-1, Chapter-11

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 11

ஒருத்தர்  கை நீட்டி யாசிக்கிறார்.  பத்து ரூபாய் கேட்கும் அவருக்கு மற்றொருத்தர் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். ஆஹா, என்ன உதார ஹ்ருதயம்னு கொடுத்தவரை நாம் கொண்டாடுகிறோம்.  இதை பகவான் கீதையிலே அப்படியே  மாத்திட்டார்.  என்கிட்டே கையை நீட்டிக் கேட்கிறீங்களே, என்ன உதார ஹ்ருதயம் உங்களுக்கு என்று கேட்பவரைச் சிலாகிக்கிறார்.  
அவனிடத்திலே சென்று அவன்தான் சர்வம் என்று உணர்ந்து அவனைப் பார்த்துக் கை நீட்டுகிறவர்களை உயர்த்திச் சொல்கிறான் பகவான்.  இவர்கள் கேட்கா விட்டால் நான் யாருக்குக் கொடுப்பேன் என்கிறான்.  வேறொருவர் கை நீட்டினால் ஒழிய  கொடுப்பவருக்குப் பெருமை உண்டோ?  அப்படிக் கை நீட்டுகிறவர்களை உதாரா: என்று கொண்டாடுகிறான் பகவான்.  அவனையே பற்றுதல் என்கிற அறிவை நமக்குத் தருகிறான்.  அந்த அறிவை உண்டாக்கும் தன்மை உடையவன் யார் என்று கேட்டால்... விச்வ சப்தத்தினால் அறியப்படுகிரவன்;  சர்வத்திலும் இருப்பவன் நமக்குச் சுலபமாய்க் கிடைக்கக் கூடியவன்; பரமாத்மா.
அவன் ரொம்பப் பெரியவன்,  அவன் கிட்டவே போக முடியாதுன்னு சொல்லி விட்டால், இந்த உபதேசம் எதற்கு?  உபன்யாசம் எதற்கு?  எல்லாத்தையும் நிறுத்துங்கோ என்று தான் சொல்லத் தோன்றும்.  ஆனால் எவ்வளவு தான் உயர்ந்தவன் என்றாலும் அவன் திருவடியை அணுகிவிட்டால் நம்மிடத்திலே அன்பு கொண்டு ஓடி வருகிறான்.  "அகலில் அகலும் அணுகில் அணுகும்" என்கிறார் நம்மாழ்வார். 
ஒரு கப்பல் நிறைய அரிசி மூட்டை அடுக்கியிருக்கு.  அதைச் சாப்பிட வருகிறது ஒரு காகம். சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் கப்பல் புறப்பட்டு நடுக்கடலுக்கும் போய்விடுகிறது.  அதை உணர்ந்த காகம் கரைக்குத் திரும்பி விடலாம் என்று எண்ணி கிழக்குத் திக்காகப் பறந்து நெடுந்தூரம் பறந்தும் கரை தென்படவில்லை.  இனிமேல் பறக்க சக்தியில்லைன்னு கப்பலுக்கே திரும்பி விடுகிறது காகம்.  சற்றைக்கெல்லாம் திரும்பவும் பார்க்கிறது மேற்கு திக்கு நோக்கி... மீண்டும் திரும்புகிறது.  இப்படியே நாலா திக்கிலும் பறந்து ஓடி, சோர்ந்து கப்பலுக்கே திரும்பிடறது.

நாம் அந்த காகம் மாதிரி.  பரமாத்மா அந்தக் கப்பல் மாதிரி.  "நீ எங்கதான் போவே.. எங்க போனாலும் இங்கே தானே வரணும்" என்று நாம் போவதைப் பார்த்துக் கொண்டு வாய் மூடி இருக்கிறான். 

ராமாயணத்திலே விபீஷண சரணாகதியை வர்ணிக்கும்போது "விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்" என்று சொல்லப்படவில்லை.  "ராமனிருக்கும் இடம் வந்தான்" என்று தான் சொல்லி இருக்கிறது.   இதற்கு என்ன அர்த்தம்?  வர வேண்டிய இடத்துக்கு அவன் வந்து சேர்ந்து விட்டான் என்று அர்த்தம்.   நாமும் அப்படித்தான் பகவானை விட்டுச் சென்றவர்களாக இருக்கிறோம்  அவனிடத்தில் சேர வழி அனைத்தையும் அவனே தான் காட்டிக் கொடுக்கிறான்.

வேதத்திலே புருஷ சூக்தமும், புராணங்களிலே விஷ்ணு புராணமும், பாரதத்திலே பகவத் கீதையும், தர்ம சாஸ்திரங்களிலே மனு ஸ்ம்ருதியும், ரொம்ப உயர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.  அப்படிப் பட்ட புருஷ சூக்தத்திலே சொல்லப் படுபவன் தான் பரமாத்மா.  புருஷ என்கிற சப்தத்துக்கு நான்கு வித அர்த்தமிட்டார்கள்.  புரி சயநாத் புருஷ: புரி என்றால் சரீரம்.  நம் சரீரத்திலே இருக்கிறான் பகவான்.  கீதையிலே பகவான் குந்தி புதல்வனிடம் சொல்கிறார்  "இதம் சரீரம் கௌந்தேய" (குந்தி புதல்வா) க்ஷேத்ரம் = சரீரமே க்ஷேத்ரம்.  
ஆகையினாலே ரொம்ப ஜாக்கிரதையாக அதைக் காக்க வேண்டும்.  இந்த சரீரம் எப்படிப்பட்டது?     அதிகாலை நாலுமணிக்கு எழுந்திருக்கும் வழக்கத்தை உண்டு பண்ணி விட்டால், எந்த ஊருக்கு நாம் போனாலும், இது நாலு மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொள்ளும்.  நாம் எப்படி வளைக்கிறோமோ அப்படியெல்லாம் வளைந்து கொடுக்கும் நம் சரீரம்.   அதற்காக அதை எப்பாடு வேணுமானாலும் படுத்துவதா..?
பகவான் வாழும்படியான இந்த சரீரத்தை அழித்துக் கொள்ள நமக்கு உரிமை இல்லை. ரொம்ப ஜாக்கிரதையாக இதை ரட்சிக்கணும்.  சரீரத்தினுள்ளே ஆத்மா இருக்கிறதாலே அதை போஷித்து ரட்சிக்க வேண்டியுள்ளது.  
ஒரு நல்ல பட்டு  வஸ்திரம் துவைத்து உலரப் போட்ட வஸ்திரம்.  முள் புதரில் பறந்து போய் விழுந்து விடுகிறது.  ஏகப்பட்ட முட்கள் சிக்கிக் கொண்டு நிற்கின்றன.  பிடித்து இழுத்தால்  கிழிந்து விடும்.  முள்ளுக்கு நெருப்பு வைத்தால் மொத்தமும் போய்விடும்  அந்த நேரத்தில் என்ன வேண்டும் நமக்கு?  ரொம்பப் பொறுமை வேண்டும்.  பொறுமை இருந்தால் ஒழிய அந்தப் பட்டு வஸ்திரத்தை நாம் பெற முடியாது.  நிதானமாக ஒவ்வொரு முள்ளில் இருந்தும் நீக்கி எடுக்க வேண்டும் அதை.
அந்த மாதிரி, இந்த ஆத்மா என்கிற பட்டு வஸ்திரம் சரீரமாகிற முள் புதரிலே அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது.  திடீர்னு அதை இழுத்திட முடியுமா?  ரொம்ப ஜாக்கிரதையாய், சாஸ்திரம் சொன்னபடி நின்று சரீரத்திலிருந்து ஆத்மா பிரியும்படியான அந்த உத்தமமான நிலையை, சாஸ்திர ரீதியாக நடத்தி வைக்க வேண்டும்.  கோணலான மார்க்கத்தில் போகக்கூடாது.
ஏனென்றால் நமக்குள்ளே எம்பெருமான் இருக்கிறான் - புரி சயநாத் புருஷ:
விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே பூதாத்மான்னு ஒரு நாமம் வருகிறது.   பரம பவித்ரமான ஆத்மா, பாவனமான ஆத்மா.. என்று இதற்கு அர்த்தம்.  அப்படிப்பட்டவன் நமக்குள்ளே இருக்கிறான்.   அப்படியானால் இயல்பான ஒரு சந்தேகம் வருகிறது.  நமக்குத் தலைவலி வந்தால் அவனுக்கும் வருமா?  ஒரே சளி பிடித்து மூக்கை அடைக்கிறது.  அவனுக்கும் அடைக்குமா?  நமக்கு ஏற்படும்படியான விசார, விகாரங்களெல்லாம் அவனுக்கும் உண்டா என்கிற கவலை வந்து விடுகிறது.   நமக்குள்ளே அவன் இருந்தாலும் இந்த சரீரத்துடன் சம்பந்தம் இல்லாமல் தான் இருக்கிறான்.
அப்படி அவன் இருக்கும்படியானது அவனுடைய அகடி தகடனா சாமர்த்தியம் என்பது. எல்லாம் வல்லவனான பரமாத்மாவுக்கு இது பெரிய விஷயமில்லை.  
உபநிஷத் நம் சீரத்தையே ஒரு மரமாகச் சொல்கிறது.  (இதையே கீதையில் பதினைந்தாம் அத்தியாயத்திலும் பார்க்கலாம்)  அந்த சரீர மரத்தின் இடது பக்கத்திலே நிறைய கிளைகள். அதிலே இரண்டு பக்ஷிகள் உட்கார்ந்திருக்கின்றன.  ஒரு பறவைக்குத் திடமான இறக்கைகள் இருக்கின்றன.  இன்னொரு பறவைக்கு அதெல்லாம் கிடையாது.  இரண்டும் பக்கத்து - பக்கத்திலே  தான் உட்கார்ந்திருக்கின்றன.   இந்த உடம்புக்கு ஏற்படக் கூடிய சுகம், துக்கம் ரோகங்கள் எல்லாம் இறக்கை இல்லாத பறவை இருக்கே... அதுக்கும் பூரணமாய் ஒட்டிக்கொள் கிறது.  ஆனால் அதன் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிற பறவைக்கு எதுவும் ஒட்டிக் கொள்வதில்லை.  எவன் பரமாத்மாவை தியானம் பண்ணுகிறானோ அவன் இதைப்போல ஒன்றும் ஒட்டிக் கொள்ளாமல் கதி அடைவான் என்பது பலசுருதி (விளக்கம்).
இந்த விஷயத்தை குருகுலத்திலே ஒரு கார்த்திகை மாசம் உபாத்யாயர் சொல்லிக் கொண்டிருதார்.
எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பார்களா?  அதிலே ஒரு மாணவன் எழுந்தான் "ஆசார்யரே இந்த விஷயத்தில் எனக்கு ரொம்ப பெரிய சந்தேகம்" என்றான். இந்த மாதிரி இரண்டு பறவைகள், ஒரு பறவைக்கு மட்டும் ஓட்டும் இன்னொன்றுக்கு ஒட்டாதுன்னா நான் நம்ப மாட்டேன்" என்றான்.  உபாத்யாயர் பார்த்தார்.  "நானா அப்படிச் சொல்கிறேன்? ஆயிரம் தாய் தந்தையருக்குச் சமானமாக நம்மிடம் அன்பு கொண்டிருக்கிற சாஸ்திரம் - வேதம் அல்லவா அப்படிச் சொல்கிறது.  நீ விதண்டாவாதம் பண்ணலாமா"? என்றார்.
"அப்படியே வேதம் சொன்னாலும் அதை நான் ஏற்று கொள்ளத் த இதையே  யாராயில்லை.  ஏதாவது ஆதாரம் காண்பிக்கணும் நீங்கள்.  இல்லாவிட்டால் நான் நம்ப மாட்டேன்" என்றான் மாணவன்.  இன்னொரு குருவாக இருந்தால் மாணவனை அடித்திருப்பார்,  ஆனால் இவர் ரொம்ப சாத்வீகர், அடிக்கவில்லை.  "உட்காரு" என்று மாணவனை அமர்த்தி விட்டார்.  "இப்ப நீ கேட்கிற விஷயம் எனக்குப் புரியவில்லை, அப்புறமா விளக்கறேன்" என்றார்.  
அன்றையிலிருந்து அத்தப் பையனுக்கு கர்வம் அதிகமாயிடுத்து.   "நான் கேள்வி கேட்டு ஆசார்யனுக்கு பதில் சொல்லத் தெரியலை", அப்படின்னு ஒரு கர்வம்.  எல்லோரிடமும் இதையே போய்ச் சொன்னான்.  குருவோ பொறுமைக்கு நிலைக்களனாய் இருந்தார்.  
மார்கழி மாசம் வந்தது.  திருப்பாவை இருபத்தேழாவது பாசுரம் படிக்க வேண்டிய நாள். அது எல்லோருக்கும் ரொம்பப் பிடித்தமான பாசுரம்.  ஏனென்றால் இரண்டாவது பாசுரம் மாதிரி அது விரதம் இருக்கச் சொல்வதில்லை.   பாத்திரத்தின் மேலே ஒரு முழத்துக்கு நெய் மிதக்கிற மாதிரி சர்க்கரைப் பொங்கல் தயார் பண்ணி, எல்லோரும் கூடியிருந்து அதை அனுபவிக்கச் சொல்கிறது.  அந்த நெய் முழங்கை வழியே வழிந்து ஓட, அதை இன்னொருத்தர் ஏந்திக் கொள்ள, அவர் கையிலிருந்தும் வழிந்தோட மேலும் ஒருத்தர் கை நீட்டி ஏந்தணுமாம்.   அப்படிப்பட்ட சர்க்கரைப் பொங்கல் அன்றைக்கு குருகுலத்திலே தயாரானது.
விதண்டாவாதம் பண்ணிய மாணவனை அழைத்து நிறைய சர்க்கரைப் பொங்கலை வாரிக் கொடுத்தார் குரு.  அவனுக்கு ரொம்ப சந்தோசம்.  ஆசார்யரே கொடுக்கிறாரே, இன்னொரு கை எடுத்துப் போட்டார்.  "நன்றாகச் சாப்பிடு" என்றார்.  திருப்தியாகச் சாப்பிட்ட அந்த மாணவனுக்கு அந்த சர்க்கரைப் பொங்கலே ஞானத்தை உண்டாக்கியது.

அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.  

தொடரும்...


























Thursday, January 17, 2013

PART-1, Chapter-10

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

 
அத்தியாயம்10

தர்க்க  சாஸ்திரம் கற்க ஒருவர் போனார்.  இல்லை என்கிற சொல்லுக்கு நான்கு விதமான விளக்கம் உண்டு என்றார் ஆசார்யர்.  மாணவர் ஆச்சர்யப்பட்டார்.  அது என்ன நான்கு விதமான இல்லை?
ஒரு பானையையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.  ஒரு பானை உருவாக்கப்படுகிறது அதை நாம் பானை என்று சொல்கிறோம்.   உருவாக்கப்படுவதற்கு முன் அது இருந்ததோ? இல்லை.  இந்த இல்லையை பிராக பாவம் என்று சொல்வோம்.
பானை ரொம்ப அழகாக இருக்கிறது.  அங்கேயிருந்து ஒரு குழந்தை வருகிறது,  கையில் ஒரு தடியோடு வருகிறது.  அதை ஓங்கி, பானையை ஒரு அடி.   பானை சுக்கு நூறாகப் போயிடறது இப்போது அந்த பானை இருக்கிறதா? இல்லை.  இந்த இல்லை வேறு.  முதலில் பிராக பாவமாய் சொன்ன இல்லை வேறு.  இந்த இரண்டாவது இல்லையை பிரத்வம்ஸாபாவம் என்று சொல்லலாம்.  
அடுத்து அன்யோந்ய பாவம்.  ஒரு கடிகாரம், எனக்கு சற்று தூரத்தில்  வைக்கப்பட்டிருக்கிறது நான் இங்கே இருக்கிறேன்.  அது இருக்கும் இடத்தில் நான் இல்லை.  நான் இருக்கும் இடத்தில் அது இல்லை.  இந்த இல்லை அன்யோந்ய பாவத்தில் சொல்லப்படுவது.
நாலாவதான அத்யந்தா பாவத்தை ஒரு கதை சொல்லி விளக்கலாம்  பரம ஏழை ஒருத்தர். ஒரு வீட்டு வாசலில் அதிகாலையிலேயே நின்று யாசகம் கேட்டார்.   எட்டு மணி ஆகியும் அந்த வீட்டின் வாசல் கதவு திறக்கவில்லை  அந்த வழியே போன இன்னொருத்தர் பார்த்தார். கதவைத் தட்டி நின்றவரிடம் போனார்,  "நீர் வேறு எங்கேயாவது போய்  யாசகம் கேளும், தாத்ருத்வம் என்கிறது இந்த வீட்டிலே அத்யந்தா பாவம் ஆயிற்றே" என்றார்  யாசித்தவருக்குப் புரியவில்லை.  "வள்ளன்மை என்பது முன்பும் இல்லை, இப்போதும் இல்லை,  இனியும் இராது  இந்த கிரஹத்தில்" என்பதே நான் சொன்னதன் அர்த்தம் என்று விளக்கம் கிடைத்தது.  ஆக நான்காவது பாவத்தில் இல்லை என்று சொன்னால் எக்காலத்திலும் இல்லை என்று பொருள்.

இந்த நான்கு அபாவங்களிலே அன்யோன்யா அபாவம் பகவானிடத்திலே இருக்கிறதா?   அவன் அங்கே இருக்கிறான், இங்கே இல்லை என்று வரையறுக்க முடியுமா? பகவான் சர்வ வியாபி.  உள்ளும் புறமும் இடைப்பட்ட இடங்களிலும் வியாபித்திருக்கிறான்  இப்படி எங்கும் வியாபித்திருப்பதனாலேதான் விச்வம் என்கிற சப்தத்துக்கு நாராயாணன் என்று பொருள்.  இந்த வியாபித்தலைத்தான் பிரஹலாதன் நரசிம்ஹ அவதாரத்திலே வெளியிட்டான்.  பகவானை நாடி வருந்தும்படியான ஒரு பெண்ணின் நிலையிலே, தாயின் பாவத்திலே ஒரு பாசுரம்:
ஆடி ஆடி அகங் கரைந்து இசை 
பாடிப் பாடி கண்ணீர் மல்கி - எங்கும் 
நாடி நாடி நரசிங்காவென்று 
வாடி வாடும் இவ்வானுதலே  
இதிலே எங்கும் என்பது உயிர்நாடியான சொல்.  நரசிம்ஹன் கம்பக் (தூண்) குழந்தை என்பதால் கம்பத்தை மட்டுமே பார்க்காதே, எங்கிருந்தும் அவன் வரலாம், என்று உணர்த்துவது.

தத்வ விவேகோ விஷ்ணு புராணாத் என்று விஷ்ணு புராணத்தை மிகவும் கொண்டாடிப் பேசுகிறார்  சங்கர பகவத்பாதாள்.  அவர் தமது விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்திலே, அந்த விஷ்ணு புராணத்திலே நிறைய மேற்கோள் காட்டுகிறார்.  அதிலே ஒன்று:
உலகம் என்கிற தாமரை மலர் மலர்வதற்காக தேவகி என்கிற கிழக்கு திக்கிலிருந்து, அச்சுதன் என்கிற சூரியன் உதித்தான்.
தேவகியை கிழக்குத் திக்காகச் சொல்லி, அச்சுதனை சூரியனாகச் சொன்னதில் ஒரு தர்ம சூஷ்மம் இருக்கிறது.  கிழக்கு திக்குக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் தேவகிக்கும் பரமாத்மாவுக்கும்.  இப்படிச்  சொன்னால் என்ன அர்த்தம்?
கிழக்கு திக்குக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உண்டா?  மேற்கு திக்குக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உண்டா? யோசனை பண்ண வேண்டும்.
கிழக்கு திக்கிலே உதித்து சூரியன் மேற்கிலே மறைவது நமக்குப் பிரத்யட்சமாகத் தெரிகிறது. ஆனால் உண்மையிலே ஆராய்ந்து பார்த்தால் சூரியன் தன்னுடைய மண்டலத்திலே சஞ்சாரம் பண்ணுகிறான் அவ்வளவுதான்.  உலகத்திலே இருப்பவருக்குத்தான் அவன் உதிப்பதாகவும் மறைவதாகவும் தெரிகிறது.  சாஸ்திரத்தைப் பார்க்காமலே இது கண்கூடாகவே தெரிகிறது. பாரத தேசத்திலே நமக்கு இரவு நேரமாக இருக்கிறது.  அதே நேரத்திலே அமெரிக்காவிலே சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  சூரியனுக்கும் கிழக்கு திக்குக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.  அதே போல், தேவகியின் கர்ப்பத்துக்கும் பரமாத்மாவுக்கும் யாதொரு சம்பந்த்தமும் இல்லை.  எங்கும் பரவியிருக்கும்படியான பரமாத்மாவை தேவகியின் கர்ப்பத்திலே அடக்கிப் பேசலாமா?  ஒன்றை வைத்து மற்றொன்றை அடையாளம் காட்டுவதென்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட மரபு. "தடஸ்த லட்சணம்" என்று இதைச் சொல்வார்கள்  ஒருத்தர் கேட்கிறார், இந்த ஊரில் நதி எங்கே இருக்கிறது, ஸ்நானம் செய்ய வேண்டும், என்று.
அவருக்கு இன்னொருத்தார் பதில் சொல்கிறார் அதோ.. கூட்டமாக தென்னை மரங்கள் தெரிகிறதே, அங்கே இருக்கிறது நதி. தென்னை மரத்தை வைத்து நதியின் இடத்தை சொன்னது போல், தேவகியின் கர்ப்பமும் "தடம்", அவ்வளவுதான்.
ஒரு மூதாட்டி தவறாமல் சந்திர தரிசனம் செய்யும் பழக்கம்  வைத்திருந்தார்.  ஒரு நாள் சந்திரன் மரக்கிளை பின்னாலே  இருந்தது.  அவரால் பார்க்க  முடியவில்லை.  பேரனை அழைத்துக்  கேட்டார். "அதோ பார் பாட்டி மரம் தெரிகிறதா? அந்த மரத்தின் நுனிக்கிளை தெரிகிறதா? அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது பார் சந்திரன்" என்றான் பேரன்.   உண்மையிலே சந்திரன் கிளை நுனியிலேயா ஒட்டிக் கொண்டிருக்கிறது?  இல்லவே இல்ல.  ஓர் அடையளத்துக்காகச் சொல்லும் இந்த வர்ணனையைத்தான் தடஸ்த லட்சணம் என்பது.  எங்கும் பரமாத்வை சங்கோசமான இடத்திலே வைத்து இங்கேயிருந்துதான் வந்தான் என்று சொல்வதும் இதுபோல்தான்.
ருக்மிணி பிராட்டி, கிருஷ்ணனுக்கு ஏழு சுலோகங்களை எழுதி அனுப்பினாள்.   அதில் ஏழாவது சுலோகமாக இந்த ஜன்மாவிலே நீ எனக்குக் கிடைக்காவிட்டால் அடுத்த ஜன்மாவிலும், அதற்கடுத்த ஜன்மாவிலும், தொடரும் நூறு ஜன்மாக்களிலும் உன்னையே அடையத் தொடர்ந்து முயற்சி செய்வேன்  என்று பொருள்பட எழுதினாள்.
நூறு ஜன்மா ஆனாலும் உன்னை விட மாட்டேன் என்றால், நூற்றியோராவது ஜன்மாவில் விட்டுவிடுவேன் என்று பொருள் கொள்வதா? 
அடியேன் ஒரு சமயம் உபன்யாசம் பண்ணியபோது முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் இந்தக் கேள்வியைக் கேட்டார்  சுவாமி (அழகிய சிங்கர்) சமத்காரமாகப்  பேசக் கூடியவர் ஆதலினாலேதான் பரிசோதனை மாதிரி அப்படி ஒரு கேள்வி கேட்டார். உபன்யாசத்தின் கடைசி தினத்தில் விளக்கம் தருவதாகச் சொல்லி அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டேன்.
நூறு ஜன்மம் என்று ருக்மிணி கணக்கு சொல்வது எண்ணிக்கையைக் குறிக்க வந்ததில்லை... ஆயிரம், ஆயிரம் என்று வேதம் சொல்வதெல்லாம் வெறும் ஆயிரம் இல்லை அநேகம் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது ஆயிரம் என்ற பதம்.  சதமானம் பவதி (நூறு வயது சிறப்பாய் வாழுங்கள்) என்று ஆசி கூறுவதுண்டு.  அப்படியானால் நூற்றியோராவது வயது வாழக்கூடாது என்றா பொருள்?  தீர்க்கமான ஆயுள் உண்டாகட்டும் என்ற உயர்ந்த பாவத்தில் ஆசி சொல்லப்படுகிறது, அவ்வளவுதான். சதம் என்பது எண்ணிக்கையைக் குறிக்க வந்ததன்று.  அதை போலவேதான் சஹஸ்ரம் என்பதும்.  விச்வத்தையே கண்களாக உடையவனை எந்த எண்ணிக்கையில் அடக்கிச் சொல்ல முடியும்?  விச்வம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிய கண்களை உடையவன் அவன்.  நாம் அவனைப் பார்க்க வேண்டுமானாலும் விச்வத்தையே நேத்திரங்களாக்கித் தான் பார்க்க வேண்டும்.  ஆதலினாலேதான் விச்வ சப்தம் அவனுக்கு மிகப் பொருத்தமான பெயராக அமைந்திருக்கிறது. 
இந்த ஜன்மா பூராவும் செலவிட்டாலும் விச்வம் என்கிறதுக்கான அர்த்தத்தை சொல்லி மாளாது.   இந்த ஒரு சஹஸ்ர  பெருமையை நினைத்துப் பாருங்கள்.  சஹஸ்ர நாமங்களுக்கு என்ன ஒரு விசே-ஷம் என்றால் அவை அனைத்துமே வேதத்திலே மந்திரங்களாக அமைந்திருக்கின்றன.   மந்திரம் என்று எடுத்துக் கொண்டோமானால் பல வகையான நிர்ப்பந்தங்கள்.  இப்படியிப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நியமமுண்டு.  சுவரம் மாற்றிச் சொன்னேமேயானால் அனர்த்தங்கள் ஏற்படும்.  எந்த சப்தத்தை அபஸ்வரமாகச் சொல்கிறோமோ அந்த சப்தமே வஜ்ராயுதமாக மாறி சொன்னவரை அடிக்கிறது;  கேட்டவரை ஹிம்சை பண்ணுகிறது.  ஒரு மந்திரத்தை மாற்றி உச்சரிப்பது பொய்யான வார்த்தை சொன்னதற்குச் சமமாகும்.
துவஷ்டா என்று ஒருவன் இருந்தான்.  குழந்தை வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் பண்ண நினைத்தான்.  அமராவதி பட்டணத்திலேயே வைத்து இந்திரனை ஜெயிக்கக் கூடிய புதல்வன் வேண்டும் என்று அவன் விரும்பினான்  அதற்குரிய யாகத்தை நடத்தித் தரச் சொல்லி புரோகிதரிடத்திலே கேட்டான்.   மனத்திலே இந்த மாதிரி கோரிக்கையுடன் பண்ணக் கூடிய யக்ஜத்துக்கு, கர்த்தாவான நீயேதான் மந்திரத்தைச் சொல்லணும். புரோகிதனான நான் சொல்ல, நீ கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பிரயோஜனமில்லை.  முதலில் அந்த மந்திரத்தை அத்யயனம் பண்ணிவிடு என்றார் புரோகிதர்.  இப்போது நான் எப்படி மந்திரம் கற்றுக்கொள்வது, நீங்கள் யக்ஜத்தை ஆரம்பித்து விடுங்கள். அவ்வப்போது தேவையானதைக் கற்றுக் கொண்டு சொல்கிறேன் என்றான் அவன்.  
அவன் ரொம்பவும் நிர்ப்பந்தித்ததால் வேறு வழியில்லாமல் புரோகிதர் யாகத்தை ஆரம்பித்தார்  துவஷ்டா சரியாக அத்யயனம் பண்ணாமல் சுவரம் மாற்றி மந்திரத்தை உச்சாரணம் செய்தான்.     சுவரம் மாறிப் போனதினாலே, இந்திரனை வீழ்த்தக் கூடிய பிள்ளை என்பது, இந்திரனால் வீழ்த்தப்படக்க்கூடிய பிள்ளை என்று பொருள் மாறி ஒலித்தது அந்த யக்ஜத்தின் முடிவிலே விருத்திராசுரன் என்ற அசுரன் ஒருவன் உண்டாகினான்.  அந்த விருத்திராசுரனை இந்திரன் தன வஜ்ராயுதத்தினாலே கண்ட துண்டமாய் வெட்டி வீழ்த்தினான்.
அக்ஷரங்களைப் போலவே சுவரங்களுக்குக் கூட அர்த்தம் உண்டு என்பதற்காக இக்கதையைச் சொன்னேன்.  தினம், தினம் ஒருவர் ஒரு கிரஹத்துக்குப் போகிறார். வாங்கோ என்று அவரை அழைக்கும் தொனியிலேயே அது வாங்கோவா, போங்கோவா என்று அர்த்தமாகிறதில்லையா?  அது போல்தான்; லௌகிகத்தில் அர்த்தம் மாறுகிற மாதிரி வேதத்திலேயும் மாறுகிறது.
இவ்வளவு கடினமான வேதத்தை எல்லோரும் தரிக்க முடியுமா? முடியாது என்பதால்தான் வேத வான்மயமான சஹஸ்ர நாமத்தைச் செய்திருக்கிறது.  வேதம் போல, இவ்வளவு சுவர அமைப்போடு அதைச் சொல்லணுமா என்றால், சொல்ல வேண்டியதில்ல.
பீஷ்மர் வாக்கிலே வந்த சஹஸ்ரநாமம் சுலபமாய் உச்சாரணம் பண்ணக்கூடியது. 

தொடரும்...













Saturday, January 5, 2013

PART-1, Chapter-9

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

 
அத்தியாயம் 9
வேதம் என்ற சொல்லுக்கு உணர்த்துதல் என்று அர்த்தம்.  பரப்ரும்மத்தை உணர்த்துவதனாலே அது வேதம்.  இதையே தமிழில் "மறை" என்கிறோம்.   மறைப்பதனாலே அதற்கு மறை என்று பொருள்.  
சமஸ்கிருத அர்த்தத்துக்கு  தமிழ் அர்த்தம் முரணாக நமக்கு தோன்றுகிறதல்லவா? இந்த முரண்பாடு கண்டு நாம் பிரமித்துப் போய்விடக் கூடாது.  ஏனென்றால் சமஸ்கிருதத்தில்  சொல்லப்பட்டதைத்தான் தமிழ் மேலும் வலியுறுத்திச் சொல்கிறது.  
பரப்பிரும்மத்தை உணர்த்துவதனால் வேதம். 
பரப்பிரும்மத்தைத் தன்னுள்ளே மறைத்து வைத்ருப்பதனாலே அது மறை.  வேதமானது யாருக்கு மறைக்கிறது யாருக்கு பரப்பிரும்மத்தைக் காட்டுகிறது?  ஆசார்ய கடாக்ஷம் அற்றவருக்கு மறைக்கிறது.  ஆசார்ய கடாக்ஷம் பெற்றவருக்கு பரப்பிரும்மத்தை அதுவே உணர்த்துகிறது.  
பளிங்கு கற்களால் தயார் பண்ணப்பட்ட திவ்யமான ஒரு மாளிகையிலே நான்கு பக்கமும் தேதீப்யமாய் விளக்குகளை ஏற்றி வைத்து, அந்த மாளிகைக்கு இடையிலே நவநிதிகளையும் கொட்டினால், அது எப்படி தகதகாயமாய்ப் பிரகாசிக்குமோ, எல்லோருக்கும் எப்படிப் பளீரென்று புலப்படுமோ, அந்த மாதிரி... ஆசார்ய கடாக்ஷம் பெற்றவர் வேதத்தைப் பார்த்தாரானால், அதற்குள்ளே இருக்கக்கூடிய  விஷயங்கள் கூட சுலபமாக அவருக்குப் புரியும்.  சாமானியர்களுக்கும் இந்த மாதிரி புரிய வைக்கக் கூடியது மகான்களின் அனுக்கிரஹம்.  இந்த வேதம் ஓதி யக்ஜம் செய்யப்படும்போது, பூரணமாய் ஆயுள் உண்டாகவும், இறுதிவரையிலே பார்வையும் செவிப்புலனும் சித்திக்கவும், மனசு சலிக்காமல் இருக்கவும், வாக்கிலே எப்போதும் தேன் சிரவிக்கவும் அனுக்கிரஹமாகிறது.  வாக்குக்கான இந்திரியம் நாக்கு.  அது பற்களைப் பார்த்துக் கேட்கிறது. 
"கடுமையான விஷயங்களைப் பொடியாக்கி எனக்குக் கொடுக்கிறீர்களே, நான் உங்களுக்கு கடமைப்பட்டேனே.  என்ன பண்ணினால் உங்களுக்குப் பிரதியுபகாரமாய் இருக்கும்?  அதை நீங்கள் சொல்ல வேண்டும்".
அதற்கு முப்பத்திரண்டு பற்களுமா பதில் சொன்னதாம்... நீ ஒண்ணும் உபகாரம் பண்ண வேண்டாம்.  பகவான் உன்னை எப்படி வச்சிருக்கான்னு எண்ணிப்பாரு.  அதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்.  
எப்படி வச்சிருக்கான்? என்றது நாக்கு.
உன்னை உள்ளே வைத்து, எங்களை வெளியே வச்சிருக்கான்.  இதனோட தாத்பர்யம் என்ன? எங்களைத் தாண்டி நீ வெளியே வரக்கூடாது.  கட்டுப்பட்டு இருக்கணும்றது பகவானின் சங்கல்பம். அப்படி இருந்துட்டா துன்பம் ஒண்ணுமில்லை.
பற்களின் இந்த பதிலைக் கேட்ட நாக்கு வருத்தப்பட்டது.  என்னை இப்படி நிஷ்டூரமா சொல்கிறீர்களே, நான் வெளியில் வந்தால் என்ன? 
"நீ வெளியில் வந்தால் எங்களுக்குத்தான் கஷ்டம்.  எதிரேயுள்ளவன் உன் பேச்சைக் கேட்டு என்ன சொல்வான்?  உன் நாக்கை அடக்குவேன் என்று சொல்வதில்லை எதிராளி.  பல்லை உடைப்பேன் என்று தான் சொல்கிறான்.  அதனால் எங்களுக்குக் கட்டுப்பட்டு இரு" என்றன பற்கள். 
இது கலியுக தர்மம். கலியுகத்திலேதான் தப்பை ஒருத்தன் பண்ணினாலும் சிஷை இன்னொருத்தனுக்கு.  எனவே நமக்கு வார்த்தைகள் மிகும்போதெல்லாம் இந்த சம்பாஷணை நினைவு வர வேண்டும்.  அடங்கிவிடுவோம்.
வாக்கு நமக்கு நல்லவிதமாய் அமையணும் என்றால், நாமாக அதைப் பெற்று விட முடியாது. யக்ஜங்கள் தான் நல்ல வாக்கை உண்டாக்கித் தர வேண்டும்.  வாக்கு மட்டுமல்ல, புலன்கள் யாவும், ஆத்மாவும் கூட யக்ஜத்தினாலே ரக்ஷிக்கப்படுகின்றன.

யக்ஜம் என்ற சொல்லால் எது மறைத்துச் சொல்லப்படுகிறது என்று பார்த்தால் அந்த பரமாத்மா தான் மறைத்துச் சொல்லப்படுகிறார்.  விஷ்ணுதான் யக்ஜன் - யக்ஜ சாதனன், யக்ஜரூபி, யக்ஜபுருஷன்.  எல்லாவற்றையும் அவன் உண்டாக்கித் தரட்டும் என்று வேதம் சொல்கிறது.
யக்ஜம் என்ற பதத்தினாலே நாம் அறிந்து கொள்பவர் பரமாத்மா.  அதே போல்தான் மந்திரங்களுக்குத் துல்லியமாய் இருக்கக் கூடிய சஹஸ்ரநாமத்திலே, விச்வம் என்கிற சொல். வெளியே காணக்கூடிய உலகம் என்று கருத்து தென்பட்டாலும் அது நாராயணனையே உணர்த்துகிறது.  விச்வ சப்தத்தினாலே உணர்த்தப்படுகிறவன் நாராயணனே.    
"நாராயண" என்ற சொல்லுக்கு நாம் பொருள் உணர வேணும்.  விஷ்ணு புராணத்திலே "தீர்த்தம்", "ஜலம்", இவற்றுக்கு நாரங்கள் என்று அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.  
"நாரம் ததாதி இதி நாரத".. பித்ரு தேவதைகளை ஏராளமாக தர்ப்பணம் பண்ணி ஆராதித்தார் என்பதாலே அவருக்கு நாரதர் என்று பெயர்.  தீர்த்தத்தை நிறைய, பித்ரு தேவதைகளுக்குக் கொடுத்தவர். 
நாரம் என்றால் பிரும்ம ஜானம் என்றும் ஓர் அர்த்தம் உண்டு.  பிரும்ம ஜானத்தை அனவரகம் உபதேசித்தவர் நாரதர்.  பரப்ரும்மத்தைத் தவிர மற்றொரு விஷயம் பேசமாட்டார் அவர். 

சிருஷ்டிக் கிரமத்தில் தக்ஷபிரஜாபதி என்பவர் ஹரியச்வரர்கள் என்று விஷேசமாக பத்தாயிரம் பேரை சிருஷ்டி பண்ணினார்.  அந்த பத்தாயிரம் பேரையும் உட்கார வைத்து நாரதர், "இந்த சிருஷ்டி உலகம் எதுக்கு?  பரப்ரும்மத்தை அடைய வேண்டாமா?" என்று உபதேசம் பண்ணினார்.  உடனே, அத்தனை பெரும் பரப்ரும்மத்தை தியானம் பண்ணி மோட்சத்துக்குப் போய் விட்டார்கள். சிருஷ்டியே நடக்கவில்லை.  இன்னொரு ஆயிரம் பேரை சிருஷ்டித்தார் 
தக்ஷபிரஜாபதி.  நாரதர், அவர்களுக்கும் உபதேசம் பண்ண, அவர்களும்
மோட்சத்துக்குப் போனார்கள்.  பார்த்தார் தக்ஷபிரஜாபதி.  "நாம் சிருஷ்டிகிறது, இவர் மோட்சத்துக்கு வழி பண்றதா? என்று கோபித்துக் கொண்டு நாரதருக்கு ஒரு சாபம் கொடுத்தார்.
"நின்றவா நில்லா நெஞ்சம் போல்" அவர் அலைந்த வண்ணம் இருக்கக்கடவது என்று சாபம்.  மனசு எப்படி ஓர் இடத்திலே நிற்காதோ.. அப்படி நிற்காமல் போய்க் கொண்டேயிருக்க வேண்டும் என்று சாபம்.
அதனால்தான் நாரதர் ஒரு கணம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டார்.  அவர்  ஒரு நிமிஷம் தங்கினால், அங்கிருப்பவருக்கு மோக்ஷ சித்திதான்.  
நாரம்  என்றால் தீர்த்தம் என்று சொல்லப்போக, தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் செய்த நாரதரின் கதையைச் சொன்னேன்.  தீர்த்தத்தை எவனொருவன் படுக்கையாக - தன் இருப்பிடமாகக் கொண்டானோ.. அவனுக்கு நாராயணன் என்று பெயர்.
ஒருவர் சமத்காரமாக பகவானை ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார் - சிலேடை என்று அதைச் சொல்வது.   
பூர்வ காலத்திலே பழையது சாப்பிடுவது என்றொரு வழக்கம்.  சாதம் சேர்ந்து போயிருந்தால் அதை எடுத்து ஜலத்திலே போட்டுடறது.  விடியற்காலையிலே அந்த சாதத்தை எடுத்துப் பிழிந்து போட்டுவிட்டு, அந்த ஜலத்திலே உப்பு சேர்த்து ஒருத்தர் சாப்பிட்டாரானால், காலை வெயிலைத் தாங்கக்கூடிய சக்தி உண்டாகிறது.  குறிப்பா விவசாயிகள், வயல் வேலைக்குப் போகிறவர்கள் இப்படிச் செய்வதுண்டு.  (இந்த விவசாயிகளுக்கு போக பாக்யங்களைத் தரச் சொல்லி கேட்கிற ஒரு பிரார்த்தனை கூட பிராதஹ்கால சந்தியாவந்தனத்த்திலே உண்டு.)  
சாதத்துத் தீர்த்தத்தைச் சாப்பிட்டால் வெயிலைத் தாங்கற சக்தி வரும்.  இது பழையது சாப்பிட்ட உடம்பு.  ஒண்ணும் பண்ணிக்க முடியாது என்று கூடச் சொல்வார்கள்.  இந்த பழையதும் பகவானும் ஒண்ணு என்றான் ஒருத்தன். இது பழையது. அவனும் புராண புருஷன். இது எங்கே படுத்து இருக்கிறது?  ராத்திரி முழுதும் சாதம் ஜலத்திலே படுத்திருக்கிறது.  அவனும் ஜலத்திலே படுத்திருக்கிறான். அதனாலே ஜலே சயனம்.
என்னை உள்ளபடியே உணர்கிறவர்கள் ஒரு சிலரே என்றான் பரமாத்மா.  கீதையிலே பழையதின் பெருமையும் அதை அனுபவித்துணர்ந்த சிலருக்கே தெரியும்.

பழையதை எப்போ சாப்பிட வேண்டும்?  அதிகாலையிலே. எம்பெருமானையும் அதிகாலையிலே தியானம் பண்ண வேண்டும்.  பழைய சாதத்தைப் போல் பரமாத்மாவும் நாரங்கள் சூழ இருக்கிறான்.  எனவே அவன் நாராயணன்.  

சேதனம் - அசேதனம்.  அதாவது அசையும் பொருள், அசையாத பொருள் என்ற இரண்டு விதமான பொருள்களிலேயும் இருப்பவன் நாராயாணன்.  அது அந்தப் பெயருக்கு இன்னொரு விளக்கம்.  சித் ஆகவும் அசித் ஆகவும் இருப்பவன் அவனே.  சித் என்பது நமது அறிவான ஜீவாத்மா  அசித்-அசேதன அறிவற்ற பதார்த்தங்கள்.  உலகில் எத்தனையோ ஜீவன்கள் உள்ளன.  மனிதனுக்குள்ளே இருக்கும் ஜீவன் ஒரு சாக்கடைப் புழுவுக்குள்ளும் இருக்கிறது.  ரொம்ப பரமாணுவான உயிர்களுக்குள்ளேயும் இருக்கு.  அதைக் கண்ணாலே பார்க்க முடியுமா என்றால் பார்க்க முடியாது என்கிறது உபநிஷத்.  

பசுவின் வால் நுனியில் உள்ள கேசத்தில் ஒரே ஒரு கேசத்தை எடுத்துக் கொள்.  அதை நூறு கூறுபோடு.  ரோமத்தை நூறு கூறு போட முடியுமா? என்று கேள்வி கேட்கக் கூடாது. மனசாலேயே கூறு போடு என்கிறது உபநிஷத்.  அப்படி நூறு கூறு போட்டதில் கிடைக்கும் ஒரு இழையை  எடுத்து மறுபடியும் நூறு கூறு போடு.  இப்படிப் போட்டுக் கொண்டே போனால் இறுதியில் கிடைக்கக் கூடியதுதான் ஜீவன் என்கிறது உபநிஷத்.  
இந்த காலத்திலே மைக்ராஸ்கோப் என்கிற கருவியைக் கொண்டு பல நுண்ணிய விஷயங்களையெல்லாம் பார்க்கிறார்கள்.  ஆனால் அதைக் கொண்டு ஆத்மாவை பார்க்க முடியுமா?  முடியவே முடியாது.  காரணம், அதற்கு இருக்கிற ஜானம் எங்கும் பரந்து விரிந்திருக்கும்.  இதற்கு ஒரு கதை சொல்லலாம். 

வியாசர் உட்கார்ந்திருந்தார்.  ஒரு சின்ன புழு, ரொம்ப அல்பமான புழு - தன் உடம்பைக் கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு போயிற்று.  வியாசர் வாயை மூடிக் கொண்டு இராமல் இந்தப் புழுவோடு பேசுகிறார். ஏ  புழுவே! புழுவே! என்ன இவ்வளவு வேகம்? எங்கே போகிறாய் என்று கேட்கிறார்.  அந்தப் புழு அவரைத் திரும்பிப் பார்த்துச் சொல்கிறது.  அதோ பாரும்! அங்கே இரண்டு காளை மாடு பூட்டப்பட்ட வண்டி வேகமாக வருகிறது.  அந்த வண்டி இந்தப் பாதையிலே வேகமாகப் போகப் போகிறது.  அது என் மீது ஏறினால் அநியாயமா நான் மாண்டு போய் விடுவேன்.  ஆகையினாலே அந்த வண்டி வந்து சேர்வதற்குள்ளே வேகமாகப் போகிறேன் என்றது புழு.   வியாசர் அதோடு விடாமல், "அந்த வண்டி உன் மேலே ஏறட்டுமே.  நீ போனால்தான் என்ன" என்று கேட்டாராம். வியாசரே, "என்ன சொன்னீர், மறுபடியும் சொல்லும்".  நீ போனால் போயேன்னு சொன்னேன், என்ன இப்போது"?  "உமக்கு என்னைக் கண்டால் அசூயை, அதனால் தான் அப்படிச் சொல்கிறீர்". " 
என்ன அசூயை"? 
"நான் என்ன சந்தியாவந்தனம் பண்ணணுமா? மாத்தியானிகம் பண்ணணுமா, உபன்யாசம் கேட்கணுமா, இல்லை நான் என்ன பெண்ணுக்கு கல்யாணம் பண்ணணுமா, பையனுக்கு உபநயனம் பண்ணனுமா, நான் என்ன பந்து பரிபாலனம்  பண்ணணுமா?  ஆசார்யனை சேவிக்கணுமா?  இதையெல்லாம் நான் செய்ய அவசியமில்லையே என்று உமக்கு அசூயை" என்றது புழு.

இந்த கதையாலே இரண்டு விஷயங்கள் உணர்த்தப்படுகின்றன. 
ஒன்று - சக்தி சாமர்த்தியத்தைக் கொடுத்து, அறிவைக் கொடுத்து, சாஸ்திரத்தைக் கொடுத்து வைக்கப்பட்டிருக்கு நமக்கு.  அப்படிப்பட்ட நாமே நமக்கு விதித்தக் காரியங்களைச் செய்யவிட்டால், அந்தப் புழுவைக் காட்டிலும் நாம் மட்டமாகப் போய்  விடுகிறோம்.
இரண்டு - புழுவுக்குள்ளேயும் இருக்கக்கூடிய ஆத்மா மிக நுண்ணியது.  எவ்வளவு அல்பமான வஸ்துவானாலும் அதற்குள்ளேயும் அந்தராத்மா..பரமாத்மா இருக்கிறான்.
சித்..அசித் பதார்த்தங்கள் அனைத்திலும் பரமாத்மா இருக்கிறான்.  சித்-அசித் சேர்ந்து அமைவனதான் நாரங்கள்.  நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன் நாராயணன். அந்த நாரங்கள் - அதாவது சேதன - அசேதன பதார்த்தங்கள் எவனிடத்திலே உறைகின்றனவோ அவன் என்றும் இன்னொரு பொருள் சொல்லலாம் நாராயண சப்தத்துக்கு.  

தொடரும்...