Wednesday, April 17, 2013

PART-1, Chapter-17

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 17

"முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா" என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிலே ஈஸ்வரனை அனுபவிக்கிறார் .
மூன்று நேத்திரங்களால் (கண்களால்) சொல்லப்படக்கூடியவன் பரமசிவன்.  அதே போல், மூன்று நேத்திரங்களால் சொல்லப்படக்கூடியவன் நரசிம்ஹன் - லக்ஷ்மி நரசிம்ஹன். 
மூன்று நேத்திரங்கள் உடையவன் நரசிம்ஹன் என்று தாபனீய உபநிஷத் கொண்டாடுகிறது. இதை சுவாமி தேசிகன் எடுத்துச் சொல்கிறார்.
காஞ்சிபுரம் அருகே திருவேரிக்கை என்கிற ஷேத்ரம்.  அங்கே வேகவதி நதி தீரத்திலே அமைந்துள்ளது அது .   இப்படி அமர வேண்டும், இங்கே இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல் பகவான் தானாகவே, இஷ்டமாய் அமர்ந்திருக்கும் ஷேத்ரம். அதனால் அதற்கு காமாளிகை  என்றொரு பெயர்.  அந்த ஷேத்ரத்திலே சுவாமி தேசிகன் வாக்கிலே ஓர் அஷ்டகமானது உதிக்கிறது.  அதிலே வருகிற வரிகள்:
தபன இந்து அக்னி நயன:
தாபனீய ரஹஸ்யானாம் சார:
 
தாபனீய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சமஸ்த ரகசியங்களின் சாரமாய் இருக்கக் கூடியவன் காமாஸிகா ஹரி: இங்கு அமர்ந்திருக்கிறானே, அந்த நரசிம்ஹன் எப்பேர்ப்பட்டவன்? 

பகவானுக்கு ஒரு பக்கம் வலது திருநேத்திரம் - சூரியனே (தபன) வலது திருநேத்ரமாக அமைந்துள்ளது.  இடது திருநேத்திரம் சந்திரன் (இந்து).  இடையிலே ஒரு நேத்திரம் - அது அக்னி. 
எல்லோருக்கும் நேத்திரமாய் இருக்கக் கூடிய பரமாத்மாவுக்கு, இந்த மூன்று தேவதைகள் நேத்திரமாய் இருக்கிறார்கள்.  

பகவானுடைய நேத்திரத்திலிருந்தே சூரியன் உண்டானான் என்று புருஷ சூக்தம் சொல்கிறது. இப்படி பகவானின் நேத்திரத்திலிருந்து தோன்றியவனே அவனுக்கு வலது நேத்திரமாய் இருக்கிறான்.  
சூரியனுக்கு என்ன அதி சக்தி?  நித்யம் அவனை நமஸ்காரம் பண்ண வேண்டும்.  அனுதினம் அவனை வந்தனம் பண்ண வேண்டும்.  சூரியனைப் பார்க்காமல் யாராவது சாப்பிடுவாரேயானால் அவர் சாணியிலே தோன்றும் புழுக்களைக் காட்டிலும் மட்டமானவர் என்று வேதம் ஒதுக்குகிறது  அத்தகையவன் மனிதனாய் இருந்தும் அல்பமான கிருமியைக் காட்டிலும் மட்டமானவன்.
எவனொருவன் சூர்ய நமஸ்காரம் செய்யாமல் வாழ்கிறானோ அவன் வாக்கு நன்றாக இராதாம்.  எப்போதும் அமங்கலமே அவனிடத்திலிருந்து வெளிப்படுமாம்.  அவன் எதைக் கேட்டாலும் பாவமான வார்த்தைகளாகவே இருக்குமாம்.  இப்படி, காதிலும் அமங்கலமே விழுகிற, பேசுவதும் அமங்கலமேயான ஒருத்தனிடம் யாராவது போவார்களோ?
சூரியனை ஆராதித்தால் ஆரோக்கியம் வாய்க்கும் என்கிறது சாஸ்திரம்.

சூரியன் நான்கு நாள் பிரகாசிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உலக சலனம் நடக்குமா?  சரீரம் வேலை செய்யுமா?

சூர்ய என்ற சொல்லுக்கே நம்மை சத்கர்மானுஷ்டானத்திலே செலுத்துகிறவன் என்றுதான் பொருள்.  நம் இந்திரியங்கள் எல்லாம் வேலை செய்யனும்னா சூர்யன் பிரகாசிக்கணும்.
சூரியன் பிரகாசிக்காத நாளை துர்தினம் என்றே சாஸ்திரம் சொல்கிறாது. கர்மானுஷ்டானங்களுக்குத் தகாத நாள் அது.  மகான்களாகப்பட்டவர்கள் மப்பும், மந்தாரமுமாக இருக்கிற நாட்களிலே சாப்பிட மாட்டார்கள்.  என்றைக்கு சூரியன் தென்படுகிறதோ, அன்றைக்கு அவனைப் பார்த்துவிட்டே உணவு கொள்வார்கள்.

இப்பேர்ப்பட்ட சூரியன் பகவானின் வலது திருநேத்திரமாய் அமைந்திருக்கிறான் அவன். என்ன உபகாரம் பண்ணுகிறான் நமக்கு...?  ஞானத்தையும் ஐச்வர்யத்தையும் கொடுக்கிறான்.
ஞானத்தை கொடுக்கிறான் என்பதை எப்படி அறியலாம் என்றால் அதற்கொரு கதையிருக்கிறது.
வைசம்பாயனர் பல பேருக்கு வேதத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்குக் கற்றுக்  கொடுத்தார்.  ஒருநாள் நதியிலே நீராடி விட்டு சிந்தனை பண்ணிக் கொண்டே ஆசிரமத்தை நோக்கி வந்தார் வைசம்பாயனர்.  அப்போது நடு வழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் படுத்திருந்தான்  அதை கவனிக்காது அவன் வயிற்றிலே கால் வைத்து விட்டார் வைசம்பாயனர்.  அவன் துடிதுடித்து மாண்டு போய் விட்டான்.

வைசம்பாயனருக்கு பிரும்மஹத்தி தோஷம் வந்து விட்டது.  ரொம்ப வருத்தம் அவருக்கு... ஆசிரமத்திலே உட்கார்ந்திருக்கிறார்.  எல்லா சிஷ்யர்களும் வந்து வணங்குகிறார்கள் அவரை.
சிஷ்யர்கள் பண்ணும் பாவம் ஆசார்யர்களை அடையும்.  இங்கோ, ஆசார்யரே பாவம் பண்ணியிருக்கிறார்.  சிஷ்யர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து எதாவது பிராயஸ்சித்த கர்மா  அனுஷ்டித்தால் அது போகும்.  வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து, பிரும்மஹத்தி தோஷத்தில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிஷ்யர்கள் எல்லோரும் அப்படியே நாங்கள் பண்ணுகிறோம், அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? என்று முன் வந்தார்கள்.  ஆசார்யருக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போக்கவில்லை என்றால் சிஷ்யஜன்மா எதற்கு? என்றார்கள்.
அப்போது தான் அந்த சிஷ்யர்களுள் ஒருவரான யாக்ஞவல்க்யர் சொன்னார், "இத்தனை பேர் எதற்கு?  நான் ஒருவனே ஆசார்யனின் பிராயஸ்சித்தம் பண்ணி கஷ்டத்தைப் போக்குவேனே".  
வைசம்பாயனருக்குக்  கடும் கோபம் வந்தது.  "எல்லோரையும் சாமானியர் என்று மதித்து, நீ ஒருவனே உயர்வானவன் என்று காட்டிக் கொண்டாயே, அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது.  இவ்வளவு அகங்காரமுடைய ஒரு சிஷ்யன் எனக்கு வேண்டியதில்லை,  நீ வெளியே போ ஆசிரமத்தை விட்டு" என்றார்.  யாக்ஞவல்க்யருக்கு அதற்கு மேல் கோபம்!

"தங்களிடத்திலே இருக்கிற பரிவினாலே, ப்ரீதியினாலே சொன்ன வார்த்தையே ஒழிய இவர்களையெல்லாம் மட்டம் தட்டுவதற்காக நான் பேசவில்லை.  அப்படி நீங்கள் நினைக்கிறது அனுசிதம்.  என் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் என்னைப் போகச் சொன்னீர்களே!  உங்கள் ஆசார்யத்வம் எனக்கு வேண்டியதில்லை" என்று சொல்லிவிட்டார்.
"ஆசார்யத்வம் வேண்டியதில்லை என்றால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போக முடியுமா?  அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ" என்று வைசம்பாயனார் பேசிவிட்டார்!
கடன் கொடுத்தவன் சண்டை அதிகமானால் "காசை எண்ணி வச்சுட்டுப் போ" என்பானே அது போல!
யாக்ஞவல்க்யர் சளைக்கவில்லை.  அப்படியே ஒரு மாமிச கோளமாக மொத்தத்தையும் கக்கி விட்டார். கக்கிவிட்டு, மகா கோபத்தோடு அகன்று போய்  விட்டார்.
வேத வித்தை கேட்பாரற்றுக் கிடந்தது.  ஒரே மாமிசம் சூழ்ந்து கிடந்தது.  வைசம்பாயனார் பார்த்தார்.  மற்ற சிஷ்யர்களை எல்லாம் கூப்பிட்டு தித்திரா என்கிற புறா வகையாக அவர்களை மாற்றினார்.  மாமிசத்தைச் சாப்பிடச் செய்தார்.  அவர்களும் அப்படியே மாறி அந்த வேத வித்யை வீணாகாமல் அதைத் தரித்தார்கள். 
இவ்வாறு கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரிக்கப்பட்டதனாலே, கிருஷ்ண-யஜுர்வேத தைத்ரீய சம்ஹிதை என்று அந்த சம்ஹிதைக்குப் பெயர்.  (தித்திரா-என்கிற புறாவின் பெயரிலிருந்து வந்தது தைத்ரீய).
வேதமிழந்த யாக்ஞவல்க்யர் சமுத்திரக் கரையிலே போய் நின்று கொண்டார்.  சூரியனைப் பார்த்து தியானம் பண்ணினார்.    
ஆச்சர்யம் பாருங்கள்.  சூரியன் அவருக்குப் பிரத்யட்சமானான்.  எப்படி?  ஒரு குதிரை வடிவிலே தோன்றினான்.
(அதனால்தான் இப்போதும் முறைப்படி முத்திரையிட்டு சூரியனைப் பார்த்துவிட்டு கண்ணை மூடினோமானால் குதிரை ரூபம் கண்ணுக்குள்ளே தெரியும்) 
யாக்ஞவல்க்யரின் முன் தோன்றிய சூரியன் "உனக்கு என்ன வேணும்" என்று கேட்டான்.
"என் ஆசார்யர் வைசம்பாயனார் என்னை அனுப்பி விட்டார்.  அவருக்குத் தெரியாத வேதம் முழுதும் எனக்கு வேண்டும்" என்றார் அவர்.  உடனே சூரியன், குருவுக்கு என்ன தெரியாதோ அதை சிஷ்யருக்கு உபதேசம் பண்ணினார்.  அப்படி சூரியன் உபதேசம் பண்ணியதுதான் "சுக்ல யஜூர்வேதம்".
இந்த வரலாறு எதை உணர்த்துகிறது என்றால், சூரியன் ஆரோக்கியத்தை மாத்திரம் கொடுப்பவன் அல்ல... சிறந்த ஞானத்தையும் கொடுப்பவன். வேதத்தையே கொடுக்கக்கூடியவன்.

ஐச்வர்யத்தையும் கொடுக்கக் கூடியவன் சூரியன்.  சத்யபாமாவினுடைய தந்தை சத்ராஜித். சூரியனை அவன் உபாசனை பண்ணினான்.  அப்போது சூரியன் அவன் எதிரே தோன்றினான்.  "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.   சூரியனின் கழுத்திலே அழகான ஒரு மணி இருந்தது.  அந்த மணியைத் தர வேண்டும் என்று கேட்டான் சத்ராஜித். ச்யமந்தக மணி என்று அதற்குப் பெயர். சூரியனும், அதைக் கேட்டவுடனே கழற்றிக் கொடுத்துவிட்டான்.  அதை வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு எட்டு பாரம் தங்கம் கிடைக்குமாம்! 
அப்படிப்பட்ட ஐச்வர்யம் வாய்த்தது சத்ராஜித்துக்கு...  அதனாலேதான் அவன் மகள் சத்தியபாமாவுக்கு அவ்வளவு கர்வம்! ஒருவேளை பூண்ட நகைகளை, அடுத்த வேளை பூணமாட்டாளாம்!
எனவே, அப்பேர்ப்பட்ட ஐச்வர்யம் தரக்கூடியவன் சூரியன்.
அனைத்தையும் கொடுக்கக் கூடியவன் சூரியன்.
பாண்டவர்கள் வனவாசம் பண்ணுகிறார்கள்.  அந்த நேரத்திலே அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டுமே. குறிப்பாக பீமசேனனுக்கு வயிறு நிரம்ப வேண்டுமே என்று கவலை வந்தது வியாச பகவானுக்கு.  உடனே பஞ்ச பாண்டவர்களுக்கு சூரியன் பேரிலே ஒரு சுலோகத்தை உபதேசம் பண்ணுகிறார், வியாசபகவான். அத்தனை பெரும் அதைச் சொல்ல, சூரியன் எதிரே பிரத்யட்சமானான்.  ஒரு யந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்தான்.  அஷ்ய பாத்திரம் என்பது அதன் பெயர்.  எவ்வளவு அன்னம் வேண்டுமானாலும் அது கொடுக்கும்.  சகல பதார்த்தங்களையும் கொடுக்கும்.  அன்றைய பொழுதுக்கு அலம்பிக் கவிழ்த்து வைக்கிறவரை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
அந்த அஷ்ய பாத்திரத்தைக் கொண்டு தாங்களும் நன்றாகச் சாப்பிட்டு, வனவாசத்தில் தங்களைத் தேடி வந்தவர்களையும் உபசரித்தார்கள் அவர்கள்.
இப்படி, ஐச்வர்யமா?  ஆரோக்கியமா?  ஞானமா? அன்னமா? எது வேண்டுமானாலும் கொடுக்கும் சக்தி சூரியனுக்கு இருக்கிறது.  அது சர்வேச்வரனான பகவானால் கொடுக்கப்பட்ட சக்தி.
அப்படிப்பட்ட சூரியன், நரசிம்ஹனின் வலது திருநேத்திரமாய் இருக்கிறான் என்றால், பகவான் அந்த திருநேத்திரத்தினால் நம்மைக் கடாஷிக்கும்போது ஞானமும், ஐச்வர்யமும், ஆரோக்யமும், அன்னமும் நமக்கு சங்கல்பிக்கின்றன.
எனவேதான் நரசிம்ஹ தியானத்துக்குள்ளே சூரியனும் அடங்கிவிடுகிறான். 

தொடரும்...
http://youtu.be/nq36tVASsxY