Saturday, November 30, 2013

PART -1, Chapter - 28

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 28

ஒரு சமயம் மனசுக்கும், வாக்குக்கும் இடையே பெரிய சண்டை வந்தது.  வாக்கு, மனசைக் கேட்டது "சதா  என்னை சச்சரவு பண்றியே. கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு நீ... நான் இல்லன்னா உனக்குப் பிரயோஜனம் உண்டா ? என் உதவியினால் தானே நீ வெளியில் வர முடியறது"?
மனசிலே ஆயிரம் எண்ணங்கள் இருக்கும்.  அடியேன் இங்கே வந்து உட்காருகிறேன்.  ராத்திரி 9 மணி வரைக்கும் வாயைத் திறக்காமலே உட்கார்ந்திருந்தால், என் மனத்திலே என்னதான் விஷயங்கள் ஓடினாலும், அது எதிரே இருப்பவர்களுக்கு ஏதாவது புரியுமோ?
வாக்தேவதை இல்லாத மனத்தினாலே பிரயோஜனமில்லை - என்று வேதமே சொல்கிறது.  இன்னொரு இடத்தில், மனிதர்கள் ஒருத்தரோடு ஒருத்தர் தொடர்பு கொண்டு எதனாலே மேன்மையுறுகிறார்கள் என்றால், வாக்கினாலேதான் அவ்வாறு மேன்மையுறுகிறார்கள் என்கிறது வேதம்.
உலகிலே மனிதர்கள் வாக்கினால் பரிமாறிக் கொண்டுதான் உறவு முறையை வளர்த்துக் கொள்கிறார்கள்.  வாக்கு கேட்ட கேள்விக்கு வருவோம்... அதற்கு மனசு சொன்னது: "நான் மட்டும் இல்லாவிட்டால் நீ தனியாக பேசிவிட முடியுமா?  நான் விஷய தானம் பண்ணினால்தானே நீ பேச முடியும்?"
வாக்கு வாதம் தொடர்ந்தது.  ஏகமாய்ச் சண்டை.  கடைசியில், இரண்டுமே, "பிரும்மாவிடம் போய்க் கேட்போம்" என்று நியாயம் கேட்கக் கிளம்பிப் போயின.

வாதி - பிரதிவாதி இரண்டுமே பிரும்மாவிடம் போய்  நின்றன.  "எங்களுக்குள் யார் பெரியவன்" என்று  கேட்டன. இந்த பிரும்ம பாவம்.  லௌகிகமே தெரியாதவர்.  உலகம் முழுவதையும் படைக்கிறார் என்றாலும் அவருக்கு லௌகிகம் தெரியவில்லை.
"என்னுடைய படைப்பை சொல்கிறேன் - நீங்கள் சண்டை போடக் கூடாது" என்றார்.
"மனசை முன்பு சிருஷ்டி பண்ணினேன் - வாக்கை பின்பு சிருஷ்டி பண்ணினேன்"
பிராணனை முன்பு சிருஷ்டி பண்ணினேன்.  அபானனை பின்பு சிருஷ்டி பண்ணினேன்.  கவே மனசுதான் பெரிது.  வாக்கு சிறியது!  "ஏ வாக்கே, மனசுடன் சண்டை போடதே" என்று சொல்லிவிட்டார்.
வாக்குக்கு ஏகமாய்க் கோபம்.  "என்னையும் படைத்து, மனசையும் படைத்து.. இப்படி நாங்கள் மத்யஸ்தம் கேட்க வந்த நேரத்தில் என்னை மட்டம் என்று சொல்லி விட்டீரே... அதுவும் அந்த மனசை பக்கத்திலே வைத்துக் கொண்டே சொல்லி விட்டீரே..என்னால் உமக்குப் பிரயோசனமே இல்லாமல் போகக் கடவது!" என்று சாபம் கொடுத்து விட்டது வாக்கு!
இந்தச் சாபம் காரணமாகத்தான் பிரும்மாவுக்கு என்ன மந்திரம் சொன்னாலும் உரக்கச் சொல்லக்கூடாது என்று வழக்கம் ஏற்பட்டுள்ளது.  உரக்கச் சொல்லப்படும் மந்திரம் பிரும்மவுக்குப் போய்ச் சேரவே சேராது!

சபித்துவிட்டுப் போன வாக்தேவதை அதோடு விட்டு விடவில்லை.  கோபத்துடன் ஒரு மூலையிலே போய்  உட்கார்ந்து அழுதது.  இந்த மனசு சும்மா இருக்கலாமல்லவா!  அது தான் இல்லை! அங்கேயிருந்து வந்து வாக்தேவதையை முதுகிலே ஒரு தட்டு தட்டியது.  "பெரிசா பேசினியே.. பிரும்மா என்ன சொன்னார் பார்த்தியா...அதுக்கப்புறமும் உனக்குத் தெளிவு வரலை.  இப்படி விசாரப்பட்டுக் கொண்டு அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கியே..? என்னைப்  பெரியவன் என்று ஒப்புக் கொள்வதில் உனக்கென்ன கஷ்டம்? என்று கிண்ட ஆரம்பித்தது.
"சரி, பிரும்மா சொன்னதை விட்டுடு: இப்போ உனக்கும் எனக்கும் போட்டி.  நான் பரப்ரும்மத்தைப் பார்க்கப் போறேன்.  உனக்கு சக்தி இருந்தால் ஓடி வா பார்ப்போம்".. என்று மேலும் சொல்லிவிட்டு குடுகுடுவென்று ஓட ஆரம்பித்து விட்டது.
வாக்குக்கு அந்த கணத்தில் ரொம்ப பௌருஷம் வந்துவிட்டது.  அப்படியா சங்கதி! நானும் வருகிறேன் என்று மனசோடு சேர்ந்து ஓடியது.  மனசு ரொம்ப ரொம்ப வேகமாகப் போயிற்று.  அந்த வேகத்தில் போக முடியாமல் வாக்கு ஏதோ தன் வேகத்திலே ஓடிப் போனது.  ஆனால் இரண்டும் எத்தனை வேகமாய்ப் போய்த் தேடியும் அந்த பரப்ரும்மத்தைக் காண முடியவில்லை!
வேகமாய் வந்து கொண்டிருந்த வாக்கு திரும்பி ஓடி வந்து கொண்டிருந்த மனசைப் பார்த்துக் கேட்டது.
"ஏ  மனசே, என்னைக் காட்டிலும் அதிவேகமாய் ஓடினாயே.. அந்த பரப்ரும்மத்தைக் கண்டாயா..?  இல்லை..! என்று கையை விரித்து விட்டது மனசு.  வாக்குக்கு ஒரே சந்தோசம்.  ஒரு எகிறு எகிறி மனசினுடைய தோள்  மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, "நீயும் நானும் கூட்டாளி தான்;  நீயும் நானும் ஒண்ணு தான்.. வா! என்றதாம்.
இப்படி ஒப்புவமை சொல்லிக்கறதுலே சிலர் சமர்த்தர்கள்.  ஒருத்தர் சொல்கிறார் "அந்த சதுர்முக பிரும்மாவும் நானும் ஒண்ணுதான்" என்று.  "எப்படி"?  ஒருவிதத்துலே சமம்.. எந்த விதத்திலே?  "அந்த சதுர்முக பிரும்மாவுக்கும் பரப்ரும்மத்தைக் குறித்துப் பிரமாணமாய்த் தெரியாது.  எனக்கும் தெரியாது" என்றார்.  அந்த மாதிரிதான்.  மனம் ஓடியதையும் வாக்கு ஓடியதையும் அட்டவணை போட்டுப்  பார்த்தால், மனம் ஓடிய தூரம் ரொம்ப அதிகம். ஆனால், வாக்கு, மனம் இரண்டுக்கும் வாய்த்த பலன் ஒன்று தான்!  ஓடிய தூரம்தான் வேறுபட்டது.

ப்படி மனசும் வாக்கும் தேடி ஓடிய திருவடி, அவை தேடியும் காண மாட்டாத திருவடி, தம்மை நாடி வந்ததே என்று பிரும்மவுக்கு ஒரே சந்தோசம்.  சத்ய லோகத்தில், அவர் பக்கத்தில் பகவானின் திருவடி தெரிய பிரும்மா அதைத் தம் கமண்டல தீர்த்தத்தால் அலம்புகிறார்.   அந்த திருவடி தீர்த்தம், பகவானின் பாதம் துளைத்துக் கிழித்த ஆவரண தீர்த்தம்,  பலி சக்ரவர்த்தி பகவானின் கையிலே விடுகிற தீர்த்தம் என இந்த மூன்றும் ஏக தாரையாக - ஒரே நேர்க்கோடாக விழுந்ததாம்.
அவ்வாறு விழுந்ததென்றால், பகவான் எத்தனை வேகத்தில் உலகளந்தான் என்பதை நாம் யோசனை செய்து பார்க்க வேண்டும்.  கற்பனைக்கெட்டாத வேகம் அது.

லகளந்த சேவடியை உயர்த்திய நிலையில் பகவானை சீர்காழியில் பார்க்கலாம்.  அந்த காட்சியை திருஞானசம்பந்தர் முன்னிலையில் பாடியிருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.  
சின்னக் குறள்  உருவாய் வந்தான்.  இந்த இரு நிலத்திலும் மூன்றடி கேட்டான்.  இரண்டாவது அடியால் அளந்து முடித்துவிட்டு, மூன்றாவது அடியை "எங்கே வைக்க" என்றான்.
ஆழ்வார் இதைப் பாடிய உடனே திருஞானசம்பந்தர் தம் கையில் இருந்த வேலை அவரிடம் கொடுத்து விட்டாராம்.  ஒரு வித்வானுக்குத்தானே இன்னொரு வித்வானின் சிரமம் தெரியும்!
இந்த சீர்காழிப் பெருமான் ஒரு காலை உயர்த்தி இருப்பதுடன் ஒரு விரலையும் உயர்த்தி, மூன்றாவது அடியை எந்த இடத்தில் வைக்க? என்று கேட்கிறான்.  அந்த மூன்றாவது அடிக்குத்தான் மகாபலி தன தலையைக் காட்டிவிட்டானே.  பிறகு ஏன் விரல் இன்னும் உயர்த்திய  நிலையிலேயே இருக்க வேண்டும்.
நாமும் பலியைப் போல் அவனுக்கு தலைதாழ்த்த வேண்டும் என்பதை நினைவுப்படுத்தத்தான்.   ஆளவந்தார் அப்படித்தான் பகவானிடம் போய்க் வேண்டிக் கொண்டார்.  "ஹே பிரபு!  நாராயணா! திரிவிக்ரமா!  மறுபடி உன் திருவடியை என் சிரசில் வையேன்..
மறுபடி என்ற சொல் கவனிக்கத்தக்கது.  "முதலில் நீ திரிவிக்கிரமனாய் இந்த உலகை அளந்தபோது நான் என்ன வஸ்துவாக இருந்தேனோ தெரியாது.  அப்போது என்னையும் சேர்த்து தானே அளந்திருப்பாய்.. எனவே இப்போது இரண்டாவது முறையாக".. என்று ஆளவந்தார் உட்பொருள் வைத்து வேண்டுகிறார்.

கையினாலே, பகவான் எல்லா இடத்தையும் சமமாக அளந்து எடுத்துக் கொண்ட அவதாரம் வாமன அவதாரம்.  விச்வமாகிற  பரமாத்மா, தன்னையே தான் கேட்டுப் பெற்றுக் கொண்டான்!  கேட்டால் பலி சக்ரவர்த்தி கொடுக்கிறானா இல்லையா என்று பரீட்சித்து பார்த்தான்.   
அதே போல் தான் நமது ஆத்மாவும் அவனுடையது.  அதை நாம் அவனிடம் கொடுக்கிறோமே என்றுதான் அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான்.  நமது ஆத்மா அவன் சொத்து.  அதைப் பெற வேண்டும் என்கிற முயற்சியிலேயே அவன் இருப்பான்.  அதைத்தான் இந்த விச்வம் என்கிற சப்தத்தினால் உணர்த்தப்படும் வாமன அவதாரமும் காட்டிக் கொடுக்கிறது.
ஒருவர் கையிலே ஒரு சவரன் மோதிரம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.  மோதிரம் காணாமல் போய்விடுகிறது.  தொலைத்தவருக்கு ரொம்ப விசாரம்.  ஆனால், விரலைப் பிரிந்தோமே என்று மோதிரம் விசனப்படுகிறதா என்ன...
அந்த மோதிரத்தின் நிலைமை தான் நம்முடையது!  பகவான் நமக்காக விசனப்படுகிறார்.  எப்போது நாம் நற்கதி அடைவோம் என்பது அவருக்குக் கவலை.  நாமோ, கீழே விழுந்த மோதிரம் மாதிரி எதையம் லட்சியம் பண்ணாமல் உட்கார்ந்திருக்கிறோம்.  ஆனால் நம்மை விட்டு விடுவானா பரமாத்மா...?  நம்மைக் கரை சேர்ப்பதே காரியமாய் இருப்பான்.


(தொடரும்)...

 


Monday, November 25, 2013

PART -1, Chapter - 27

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 27

தூக்கத்திலே நம்மை ரட்சிக்கிற பரமாத்மா, விழிப்பின் போதும் ரட்சிக்க மாட்டானா? என்று பராசர பட்டர் கேட்டாரல்லவா?
தூக்கம் என்பதை நமக்கு விதித்ததே இந்தப் பேருண்மையை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.  அவன் சர்வாந்தர்யாமி என்பதை உணர்த்துவதற்குத்தான்!
பகவானே ரட்சகன் என்பதை சகல சித்தாந்தங்களும் ஒப்புக் கொள்கின்றன.  இப்படிப்பட்ட பகவானை ஆவாகனம் பண்ணி சாதரணமாய் யாக பூஜைகளுக்கு வரவழைக்க வேண்டும்.  ஆனால் அதெல்லாம் பண்ணாமலே பலி சக்ரவர்த்தியின் அசுவமேத யாகத்துக்கு வருகிறான் பரமாத்மா.  மகாபலியுடைய யாகத்தின் பயனே நேரே வருகிறது!
எங்கும் வியாபித்து இருக்கக்கூடிய விபு - விச்வமாக இருப்பவன், தன்னை ஒடுக்கி எல்லாவற்றையும் மறைத்து, குள்ளமாய் வாமனனாய் அல்லவா வருகிறான்!  அவன்  விபு - அவன் பிரபுவும் கூட - எல்லாவற்றுக்கும் மேலானவன்;  எல்லாவற்றையும் நியமிக்கக்கூடியவன்,  அவனே யாசித்தலுக்கு வருகிறான் என்றால்.. அதுதான் பரமாத்மாவினிடத்திலே இருக்கிற உத்தமமான குணம்.
இந்த வாமன அவதாரத்திலே ஆண்டாள் ரொம்ப ஈடுபாடு கொண்டு வாமன மூர்த்தியை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று கொண்டாடுகிறார். 
உத்தமன்...? பிறருக்காக காரியம் செய்கிறவன் உத்தமன்.   
தம்மை ஆச்ரயித்தவர்களுக்காக எதையும் செய்பவன்.  
தன்னை ஆச்ரயித்த அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்தான் பகவான்.  "உனக்கு நான் சாரதியாக இருக்கிறேன்" என்று தானே அந்த வேலையைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.  எடுத்துக் கொண்ட காரியத்துக்கு ஏற்ப பவ்ய மூர்த்தியாய் விளங்கினான்.  ரதத்தை நிறுத்திய போதெல்லாம் தான் முன்னதாகக் கீழே இறங்கி, அர்ஜுனனுக்குக் கைகொடுத்து கீழே இறக்கி விட்டான்.  அவ்வளவு பவ்யம்!  "இங்கே நிறுத்து, அங்கே கொண்டு போ" என்று அர்ஜுனன் இட்ட வழக்காய் வேலை செய்தான். 
கடைசியில் யுத்தமெல்லாம் முடிந்த பிறகு பகவான்  மாறி விட்டான்! தான் முன்னே இறங்காமல் அர்ஜுனனை இறங்கச் சொன்னான்.  "கீழே இறங்கி, தூரப் போய்விடு" என்றான்.  அர்ஜுனன் நகர்ந்ததும் பகவான் இறங்கினான்! அந்த ரதம் அப்படியே கருகிப் போய்விட்டது! அத்தனைக் காலமும் பாணங்களின் சக்தியால் அந்த ரதம் அழியாமல் பகவான் அல்லவா ரக்ஷித்துக் கொண்டிருந்தான்.
அதைப் போல, இந்திராதி தேவர்கள் தன்னை ஆச்ரயித்தற்காக அவர்கள் பொருட்டு - இந்த யாசகத்தை மேற்கொண்டான் பகவான்.   வாமனனாக அவதரித்து வந்தான்.  இந்த யாசகம் இருக்கிறதே... ரொம்ப சிரமமான காரியம்.
கேட்கிறபோது கை நடுங்கும்.  வாக்கு குழறும்.  உடலெல்லாம் வியர்க்கும். என்ன கேட்பதென்று புரியாமல் வார்த்தையே வராது.  "அடியேன், அடியேன்" என்று யாசிப்பவர் மேலே கேட்கத் தெரியாமால் தவிப்பார்.
அந்திம காலத்திலே என்னென்ன விகாரங்கள் எல்லாம் ஏற்படுகிறதோ, அது மொத்தமும் ஒருத்தரிடம் கையை நீட்டி யாசிக்கும்போதும் ஏற்படும் என்று சாஸ்திரம் சொல்கிறது.    ஆகையினாலே இரத்தல் இறத்தலுக்குச்  சமம்!  அப்படியிருந்தும் அந்தத் தொழிலையே  மேற்கொண்டானே...!

ந்து நின்ற பகவானைப் பார்த்து ஒரே ஆச்சர்யமாம் மகாபலிக்கு!

"தாங்கள் யார் தெரியலையே"... என்று அவன் கேட்கிறான்.
யாரென்று சொல்வான் பரமாத்மா...? 
"அபூர்வ" என்று பதில் சொல்கிறான்.  "என்னை நீ பார்த்திருக்க முடியாது.  நான் யார் என்பதைச் சொன்னாலும் புரியாது".
தினமும் இங்கே நான் வந்து உபன்யாஸம் பண்ணுகிறேன்.  இதில் சொல்வது எல்லாம் புரிகிறதா என்றால், இல்லை...  எனக்கே இன்னும் பல விஷயங்கள் முழுவதுமாய்ப் புரியவில்லை.  விச்வ சப்தத்தினுடைய முழு அர்த்தமும் புரிந்து விட்டதாகச் சொல்ல முடியுமா?  ஏதோ பரஸ்பரம் இங்கே வந்து பகவான் குணத்தை நாம் பரிமாறிக் கொள்கிறோம்.
"கொண்டி பசுவுக்கு தடி கட்டி விட்டாற்போல" என்று பழமொழி சொல்வார்கள்.  அது  மாதிரி தான் இந்த உபன்யாஸம்.
ஒருத்தன் 100 பசு வைத்திருந்தான்.  அதிலே ஒரு பசு ரொம்ப துஷ்டை. புல்லை மேயாமல் கதிர் விட்டிருக்கிற பயிரைப் போய்  மேயும்.  பயிருக்குச் சொந்தக்காரரான விவசாயி அதை நன்றாகப் போட்டு அடித்து விட்டார்.  பசு மாட்டுக்காரனுக்கு ஒரே வருத்தம்.  இந்தப் பசு இப்படி அடி படறதே என்று ஒரு மரக்கட்டையை அதன் கழுத்திலே கட்டி வைத்தான்.  பசு இப்படி அப்படிப் போனால் அந்தக் கட்டை ஆடி, அதன் முட்டியிலே இடிக்கும்.  இடித்தால் ஏகமாய் வலிக்கும்.  அதனாலே பசு மேயப் போவதை நிறுத்தி விட்டது!
நாமும் அப்படித்தான்.  விஷ்ணு சஹஸ்ரநாமம் என்கிற தடி கட்டி வைத்திருக்கு நமக்கு!
"தினமும் இரண்டு மணி நேரம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாலே மனம் அங்கே இங்கே போகாமல் இருக்கிறது.  எல்லோரும் ஒரே இடத்திலே, ஒரே மனத்துடன் பகவானை நினைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.  கலியுகத்திலே இதைப் போன்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு மகிமை அதிகம்.  இப்படி உபன்யாசம் சொல்லிக் கொண்டேயிருந்து, கேட்டுக்  கொண்டேயிருந்தால் பகவத் அனுக்கிரஹத்தினாலே ஒரு நாள் எல்லாம் புரிய ஆரம்பிக்கும்.  அதுவும் அவன் அருளால்தான் நடக்கிறது"  


க, அறிய முடியாத தன்மையைத்தான் "அபூர்வ" என்கிற பதில் மூலம் பலிக்கு உணர்த்தினான் பகவான்.
பலி அடுத்தக் கேள்வி கேட்கிறான்.
"சரி, உங்களுக்கு எந்த ஊர்?"  "பிரும்ம சிருஷ்டியிலே இருக்கும்படியானது மொத்தமும் என் ஊர்தான்"
இந்த பதிலைக் கேட்டு பலி சக்ரவர்த்திக்கு, "ஐயோ பாவம்" என்று தோன்றியதாம்.  இவ்வளவு தேஜஸ்வியாய் இருக்கிறாரே... இவருக்கு இவ்வளவு ஏழ்மையா" என்று வருத்தம் வந்ததாம்.
"இந்த சென்னை மொத்தமும் என்னுது" என்று ஒருத்தர் சொன்னார் என்றால் அர்த்தம்?   ஒரு அடி மண் கூடச் சொந்தமில்லை - மேலே ஆகாசம், கீழே பூமி என்று தானே அர்த்தம்.  அப்படி அர்த்தம் புரிந்து கொண்டான் மகாபலி.
அடுத்தக்  கேள்வி கேட்டான்.
"உங்க அப்பா என்ன பண்ணுகிறார்?  யாருடைய பிள்ளை நீர்"?
"நான் அநாதை.  எனக்கென்று யாரும் கிடையாது".
இதைக் கேட்டு பலிக்கு ரொம்ப வீர்யம் ஏற்பட்டுப்  போய்விட்டது.
"ஆஹா! எப்பேர்ப்பட்ட பாத்திரமிது!   நல்ல பாத்திரத்திலே தானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரமல்லவா... வந்திருப்பவரோ ஏழை.  அப்பா - அம்மா கிடையாது.  பிரும்ம தேஜஸ் வேறு சொட்டுகிறது அவரிடத்திலே என்று எண்ணுகிறான்.  பெரிதாக ஒரு வார்த்தை வருகிறது அவனிடமிருந்து.
"என்ன வேண்டும் உனக்கு..? என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்".
பகவான் தன சின்ன திருவடியைக் காட்டிச் சொல்கிறான் - "இந்த அடியினாலே மூன்றடி மண் வேண்டும்".
"அதற்கு மேலே வேண்டாமா...?
"வேண்டியதில்லை.  அதிலேயே சந்தோஷம் எனக்கு ஏற்படும்".
இந்த சம்பாஷணையை சுக்ராச்சார்யார் பார்த்து கொண்டேயிருக்கிறார்.  இவனுக்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு யாகத்தைச் செய்து கொண்டிருக்கிறோம்... இந்தச் சமயத்திலே ஏமாற்றுவதற்கென்றே ஒருவன் வந்திருக்கிறானே...!
மகாபலியை எச்சரித்தார் சுக்ராச்சார்யார்.  
ஆனால் பலிச்சக்ரவர்த்தி கேட்கவில்லை!  "சாஷாத் நாராயணனே வந்தாலும், அவன் கை தாழ்ந்து யாசிக்க, என் கை உயர வேண்டும் என்று இருக்கிறதே.  அதுவும் அவனுடைய சங்கல்பத்தினாலேதானே அமைந்திருக்கிறது.  அதனால் அவன் கேட்டதைக் கொடுப்பேன் என்றான்.
பரம பாகவதோத்தமன் அந்த பலி.  தேவதைகளைச் சித்ரவதை பண்ணினாலும் சொன்ன வாக்கைக்  காப்பாற்றியவன், தன்னிடம் யாசித்தது பகவானே  என்று உணர்ந்த பிறகும் அவன் பின்வாங்கவில்லை.
பலியின் தர்மபத்தினி விந்த்யாவளி. அவன் தானம் கொடுக்கும்போது அருகிலிருந்து தீர்த்தம் சேர்க்க வருகிறார்.  அப்போது சுக்ராச்சார்யார் தவளை வடிவாக மாறி, கமண்டலத்தில் இருந்து  ஜலம் விழுவதை தடுக்கிறார்.  அப்போது பகவான் தம் கையில் அணிந்திருந்த விச்வாமித்ர தர்பத்தினால் அந்த கமண்டலத்தின் தாரையைக் குத்துகிறார். 
தர்ப்பத்தை பகவான் கையிலே  வைத்திருக்கிறார். தேஜஸ் மிகுந்த பிரும்மச்சாரியாய் வந்தார் என்று பார்த்தோமல்லவா.  அந்த கோலத்துக்கு உரியதுதான் இந்த தர்ப்பம்.  கிருஷ்ணாஜினம் என்னும் வஸ்த்ரத்தாலே மார்பைப் போர்த்திக் கொண்டு வருகிறார்.  மார்பை ஏன் மறைத்துக் கொள்கிறார் என்றால் அந்த பிரும்மச்சாரி கோலத்திலும் மஹாலக்ஷ்மி தாயார் விடாமல் அவன் திருமார்பிலே வாசம் பண்றாளாம்.  அவள் பார்வை பலியின் பக்கம் படக்கூடாது என்பதற்காக மார்பை மறைத்துக் கொண்டானாம் பரமாத்மா.  லக்ஷ்மி கடாக்ஷம் பட்டு விட்டால் பலிக்குக் கொள்ளக் குறையாமல் செல்வமல்லவா ஏற்படும்.  அப்புறம் அவதார பூர்த்தி ஆகாது அல்லவா!.
எனவே கிருஷ்ணாஜினம் போர்த்தி வருகிறார் பகவான்.  பலியின் மனைவி தீர்த்தத்தை அவர் கையிலே விடும்போது அதை வாங்கிக் கொள்வது போல, தம் கையில் இருக்கும் தர்ப்பத்தை கொண்டு சுக்ராச்சார்யாரின் கண்ணைக் குத்தி விடுகிறார்.  அவருக்கு ஒரு கண்ணே போய்  விட்டது. 
தர்ப்பத்தால் குத்தினால் கண் போய்விடுமா என்று கேட்டால், பகவான் சுதர்சன சக்ரத்தை அல்லவா பவித்ரமாகப்  (விரலில் மோதிரம் போல் அணியப்படும் தர்ப்பை) போட்டுக் கொண்டிருக்கிறான். அதனால் அத்தனை சக்தி, தர்ப்பத்தை கொண்டு செய்த அந்த பவித்ரத்துக்கு. 
கிண்டியிலிருந்து ஜலம் பகவான் கையிலே விழுகிறது.  அந்த நேரத்திலே அவன் திருவடி எங்கே போச்சு என்று கேட்டால், நீண்டு கொண்டே போகிறது.  பூலோக மேலோகங்களெல்லாம் தாண்டி பிரும்மாவின் உறைவிடமான சத்யலோகம் வழியே போகிறது அந்த திருவடி.  சத்ய லோகத்தையும் தாண்டிப் போய் ஆவரண ஜலத்தை கிழித்து விடுகிறது.
பிரும்ம லோகத்தைத்  நோக்கிப் போன அந்தத் திருவடியை பிரும்ம பார்த்தார். நான்கு வேதங்களும் தேடிக்  தோற்ற திருவடி!  மனசும் வாக்கும் அலைந்து தேடியும் கண்டறியாத திருவடி!
மனமும் வாக்கும் அந்தத் திருவடியைத் தேடி அலைந்த கதையொன்று உபநிஷத்தில் உண்டு.  அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.












(தொடரும்...)