Wednesday, February 13, 2013

PART-1, Chapter-14

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 14

கூர்மாவதாரமும் விச்வ சப்தத்தினாலே அறியப்படுகிறது.  கூர்ப ரூபதாரியான விச்வம்.
கூர்மமாக (ஆமையாக) அவதாரம் பண்ணி, மந்திர பர்வதத்தைத் தாங்கிப் பிடிக்கிறான்.  தேவாசுரர்கள் பார்க்கும்போது தேவாசுரர்கள் அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. பகவானே கடைவதாகத்தான் தெரிகிறது  அவ்வளவு சிரமப்பட்டுக் கடைகிறானாம். வியர்வை கொட்டுகிறதாம் அவனுக்கு.
இந்த கட்சியை திருமங்கையாழ்வார் வியந்து பாடியிருக்கிறார்.  எதற்காக இந்தச் சிரமம்? ஏன் இப்படிக் கடைய வேண்டும்?
உலகத்திலே வேறு ஒருத்தருக்காக ஒரு காரியம் பண்ணுவதென்றால் அது ஒரு மாதிரி... ஆனால் அதையே தனக்காகப் பண்ணிக்கொள்வது என்றால் அதிலே ஒரு அவசரம் இருக்கும்.  மற்றவருக்காகப் பண்ணக் கூடியதை தனக்கொரு லாபம் இருந்தால் "இப்பவே பண்ணிடலாமே" என்பார்!  அதைத்தான் செய்தான் பரமாத்மா!
பரமாத்மாவுக்கு என்ன லாபம்..?
தேவதைகள் அமுதுண்ண, அந்த அமுதில் வந்த பெண்ணமுதுண்டான் பரமாத்மா.  தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்து விட்டு, அந்த அமிர்தத்துடன் வந்த மகாலக்ஷ்மியை, தான் அடைந்தான்.
லக்ஷ்மியை அடைவதற்கு பரமாத்மா பரிசிரமப்பட்டான் அந்த கூர்மாவதாரத்திலே.  அவன் லக்ஷ்மியோடவே காட்சி தந்தான்.  அவ்வாறு ஸ்ரீயோடு (லக்ஷ்மியோடு) விளங்கும்படியான அவதாரமானவன் கூர்மரூபதாரி - அவன் யார் என்றால், அவனே விச்வம். 
"பேராயிரமும் திருவும் பிரியாத நாராயணன் அருள் பெற்ற நாம்"என்கிறார் சுவாமி தேசிகன்.  பரமாத்மாவானவன் ஆயிரம் திருநாமங்களையும் மகாலக்ஷ்மியையும் பிரியாதவன்.

விச்வத்துக்கு அந்தராத்மா அந்த வராஹப் பெருமாள் என்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. வராஹ அவதாரத்த்தை மட்டும் விச்வாத்மா என்று சொல்வது வழக்கம்.  எல்லார் செமத்தையும் உத்தேசித்து, பேசிய அவதாரம் இந்த அவதாரம்.  அதனாலே இது எல்லாவற்றைக் காட்டிலும் பெரியது.  வெண்பா பாடுவதிலே வல்லவரான பொய்கையாழ்வார் "பிரான் உன் பெருமை பிறரார் அறிவார்" என்று பாடியிருக்கிறார்.

இந்த ஆழ்வாருக்கு என்ன கர்வம்!  அவர் ஒருவர்தான் பகவானின் பெருமை உணர்ந்தவரா? இவ்வளவு கர்வமாய் அவர் பேசுவது பாவ்யமா என்றெல்லாம் கேட்கத் தோன்றும்.  கர்வப் பேச்சு பிறருக்கு உபதேசம் ஆகுமா என்று சந்தேகம் வரும்.  உன் பெருமையை யார் முழுதும் அறிவார் என்பதுதான் அதன் பொருள்.  
ஸ்ரீ கூரத்தாழ்வானோ மகாலக்ஷ்மியிடம், "அம்மா உன் பெருமையை உன் வல்லபனான நாராயணன் கூட உணர மாட்டான்.  ஏன் நீயே உணர மாட்டாய்" என்று பாடுகிறார்.  
உலகத்திலே திரிவிக்கிரம அவதாரம் தான் மிகப் பெரிது என்று நாம் நினைக்கிறோம். லோகமெல்லாம் அளந்து நின்றானே அந்த பிரும்மாண்ட ரூபத்தைத்தானே எல்லோரும் பெரிது என்று கொண்டாடுவோம்.  ஆனால் அந்த திரிவிக்கிரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம் என்பது  யோசித்தால் புரியும்.  அதனால் தான் உன் பெருமையை யாரும் உணர முடியாது என்று அந்த அவதாரத்தைப் பாடுகிறார் ஆழ்வார்.
வராஹ அவதாரம் எப்படி மற்றவற்றைக் காட்டிலும் பெருமை வாய்ந்ததாகிறது.
எந்த உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி வைத்தானோ அதே உலகமானது இந்த வராஹ அவதாரத்திலே பகவானின் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது.  ஏதோ சிறு அழுக்கு போல் துளியூண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது.  உலகையே மூக்கின் மேலே தரிக்கிறான்.  
அதனால் தான் ஆண்டாள் சொல்கிறாள்:

பாசிதூர்த்துக் கிடந்த 
பார்மகட்குப் பண்டொருநாள் 
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம் 
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார் 
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே 

மானமில்லா பன்றியாம் ?  அப்படி  என்றால் என்ன?
வெட்கத்தை விட்டு, பகவான் நாராயணன் பன்றியாக அவதாரம் பண்ணினான் என்று வியாக்கியானம் (விளக்கம்) சொன்னார் ஒருத்தார்.  சொல்லலாமா அப்படி...?
மானமில்லா என்றால், 'அளவில்லாத' "எவ்வளவு பெருமையுடையது" என்று நிர்ணயிக்க முடியாத என்று அர்த்தம்.  அப்படிப்பட்ட மகாவராஹம் அது.  தாமரை புஷ்பம் போன்ற அதன் திருநேத்திரங்களே (கண்களே) அது நாராயணன் ஸ்வரூபம் என்று கொள் சொல்லிக் காட்டிக் கொடுத்து விடுகின்றன.  அந்த வராஹ அவதாரிதான் விச்வாத்மா - ஜகத்துக்கு எல்லாம் தலைவன்.
நான்கு வேதங்களையும் நான்கு தமிழ்ப் பிரபந்தங்ககாக மாற்றிக் கொடுத்த நம்மாழ்வார் திருவிருத்தம் என்கிற முதல் பிரபந்தத்தை முடிக்கிற சமயத்திலே வராஹ மூர்த்தியைத்தான் தியானம் பண்ணுகிறார்.  "அந்த வராஹ மூர்த்தியை விட்டால் நமக்கு வேறு கதி ஏது" என்கிறார்.
எப்படி எந்த வகையிலே உயர்ந்த்தது இந்த அவதாரம்?
விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே பிற்பகுதியில் "மகா வராஹோ கோவிந்த" என்று வருகிறது.  
அதையே தான் சஹஸ்ர நாமத்தின் ஆரம்பத்தில் வரும் விச்வ சப்தமும் சொல்கிறது.
ஹிரண்யாசுரனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறான்;  கண்களை உருட்டுகிறான்.  சப்தித்துக் கொண்டு வருகிறான்.  பூமி பிராட்டி அந்த நேரத்திலே அழுது கொண்டிருக்கிறாள்.
பகவானுக்கு ஒரே வருத்தம்!  காப்பாற்றுகிற நேரத்திலே அவள் அழுது கொண்டிருக்கிறாளே! உலகில் யாராவது கிணற்றில், பள்ளத்தில் விழுந்தவர்களைத் தூக்கிவிட்டால் அழுவார்களா? தூக்கிவிட்டவர்களைக் கொண்டாடி மகிழ்வதல்லவா வழக்கம்.  பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள்..?
நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா? என்று கேட்கிறார் பகவான்.
அதற்கு பிராட்டி கேட்கிறாள்:  
நான் கூக்குரலிட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள்.  நான் உங்கள் பார்யை, சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள்.  இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா?  என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா? என்று கேட்டாள்.
 
எத்தனை  வித ரூபங்களில் பகவான் வந்தாலும், அவன் பேசுகிற பேச்சிலே மாற்றம் கிடையாது.  பூமி பிராட்டிக்குப் பதில் சொன்னான்:
 
"ஒருத்தனுக்கு மனம் தெளிவாக, அலைபாயாமல், விகாரமில்லாமல் இருக்கிற போதே - சின்ன வயதிலேயே, மனத்தில் காமம் புகாத நிலையிலே, இந்திரியங்கள் சரியாக இயங்கும் நிலையிலே, என்னுடைய விச்வரூபத்தை எவன் உணர்கிறானோ, என் திருவடியிலே எவன் ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ, எவன் என் திருநாமத்தை வாய்விட்டு உரக்கச் சொல்கிறானோ, என் திருவடியிலே எவன் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ, அவன் அழைக்கும் போது நான் ஓடோடி வருவேன்". 
அந்திம காலம் என்பது மனிதர்களுக்கு எப்படி இருக்கும்.  கல் கட்டை மாதிரி விழுந்து கிடக்கும்  நிலை வந்து விடும். அப்போது சரணாகதி பண்ண முடியுமா? சுற்றம் அவனைச் சூழ உட்கார்ந்து "சொல்லு, சொல்லு, நீ பெருள் வைத்திருக்கிறாயா? சொல்லு" என்று கேட்டுத் துளைக்கும்.அவன் இதற்குப் பதில் சொல்வானா? இல்லை நாராயணா என்று பகவான் நாமத்தைச் சொல்லுவானா?  இத்தனை நாள் ஓடி உழைத்துப் பொருள் தேடியும் அதை எங்கே வைத்தோம் என்று அவனுக்கு நினைவு வரவில்லையே... அந்தச் சமயத்திலே பகவான் திருப்பெயரை அவன் எப்படிச் சொல்வான்?
ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும்.  ஏனென்றால் அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு.  அது நமது கட்டுப் பாட்டிலே இல்லை.
ஒருவர் தம் மனைவியிடம்  குடிக்க தீர்த்தம் கேட்டார்.  அவள் கொண்டு தருவதற்குள் காலமாகி விட்டார்.  சடங்குகள் எல்லாம் நடந்து அவரை எடுத்துச் செல்ல சித்தமானபோது திடீரென்று உயிர் திரும்பியது போல் கண்விழித்து நான் எங்கே இருக்கேன்? இங்கே என்ன நடக்கிறது? என்று கேட்டார்.
எனவே உயிர் போவதும் வருவதும் நம் கட்டுக்குள் இல்லை என்பதாகிறது.
அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும் என்கிறான்.  
என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன்.  நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான்.
எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம்.  அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம்.   புஷ்பம் அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.
பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் அவள் (பூமி பிராட்டி) தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.

தொடரும்...

PART-1, Chapter-13

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 13

பகவானுக்கும் நமக்கும் ஒன்பது வித சம்பந்தம் என்று சாஸ்திரத்திலே சொல்வார்கள்  அதில் ஒன்று பதி-பத்னி பாவம்.  அவன் பதி; நாமெல்லாம் பத்னி.  கோபிகாஸ்த்ரீகள் வெளிப்படுத்தியது இந்த பாவம்.  பரமாத்மா வேணுகானம் பண்ணியபோது குழந்தைக்கு தலைபின்னிக் கொண்டிருந்தவர்களும், பர்த்தாவுக்கு சிசுருஷை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு கன்றைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் காரியங்களை விட்டுவிட்டு அவனிடத்திலே போய்விட்டார்கள்.
பகவான் அவர்களிடத்திலே கேட்டான், "இப்படி பர்த்தாவை விட்டுட்டு ஒடி வந்துவிட்டீர்களே இது தோஷமில்லையா...?
கோபிகாஸ்த்ரீகள் வெட்கத்திலே தலை குனிந்து காலால் பூமியைக் கீறினார்கள்.  "விச்வாத்மா இல்லையா நீ? எல்லோருக்கும் பதி அல்லவா நீ? அது எப்படி தோஷமாகும்?" என்றார்கள்.
இங்கேயிருந்து ஒரு கணவன் மனைவி திருவல்லிக்கேணி போனார்கள்.  இரண்டு பெரும் பகவானைப் பார்த்து, கைகூப்பி சேவிக்கிறார்கள்.  பத்னி உரத்த குரலில் அந்த பார்த்த சாரதி பெருமாளைப் பார்த்து, என் பதியே விச்வஸ்ய பதியே! உன்னை விட்டால் கதி ஏது? என்று கதறுகிறாள்.  அவள் பக்கத்திலே நிற்கும் கணவனுக்குக் கோபம் வருகிறதா என்றால் இல்லை. 
ஸ்த்ரீ புருஷ பேதமெல்லாம் சரீரத்துக்குத் தானே தவிர ஆத்மாவுக்கு உண்டோ.  எனவே எல்லோரும் அவனைப் பதியாக மதிக்கும்படியான இந்த பாவம்.  
ஸ்த்ரீகள்  அவனைப் பதியாக பாவிப்பது போலவே நிகரான பக்தியுடன் ஆண்களும் அவன் கையைப் பிடித்துக் கொள்ளலாம்.  ஆத்மா அவன், ஜோதி அவன், விச்வ சப்தத்தினாலே அறியப்படுகின்ற நாராயணன் அவன். 

விச்வரூபனானவன் எம்பெருமான் என்று  பார்த்தோம். விச்வ சப்தத்தினாலே பத்து அவதாரங்களும் பேசப்படுகின்றன.  இந்த அவதாரங்கள் எல்லாமே பின்னால் சஹஸ்ர நாமத்திலே வருகின்றன.
வேதத்தை மீட்க பரமாத்மா மத்ஸ்யாவதாரம் பண்ணினான்.  அப்போது விச்வத்தினாலே வேதங்கள் மீட்கப்பட்டன என்று பொருள்பட சுலோகம் இருக்கிறது.  இதிலே விச்வம் என்ற சொல் மத்ஸ்ய ரூபியக் குறிக்கிறது.  நம்மைக் காட்டிலும் பகவான்தான் அதிகமாக வேத சம்ரக்ஷணம் பண்ணுகிறான்.  நாம் பண்ணுவது ரொம்ப குறைவு.  பகவான் இப்படி ஏன் வேதத்தை சம்ரக்ஷணம் பண்ணுகிறான்.  ஏனென்றால் வேதம் அழிந்துவிட்டால் அவனை நாம் உணர முடியாது.
வேதம் இருக்கிறதென்றால் பரமாத்மா இருக்கிறான்.  வேதம் இல்லை என்றால் பரமாத்மா இல்லை என்பது சாஸ்திரம் சொல்லும் உண்மை.  சாஸ்திர அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.
இதிலே முதல் பகுதியை எல்லோரும் ஒப்புக் கொள்வோம்.  வேதம் இருக்கிறது என்றால் பரமாத்மா இருக்கிறான்.  ஆனால் வேதம் இல்லை என்றால் பரமாத்மா இல்லை என்று எப்படிச் சொல்லலாயிற்று? இந்த உலகத்திலே வேத பாராயணமே யாரும் பண்ணுவதில்லை; அப்போ பரமாத்வே இல்லைன்னு சொல்லி விட முடியுமா?  இதன் பொருள் என்னவென்றால், வேதம் இருந்தால்தான், அதன் மூலமாக பரமாத்வை நாம் உணர முடியும்.
வேதம்தான் பரம பிரமாணம்.  அதனால்தான் நம் மீது எல்லையில்லாக் கருணைகொண்ட பகவான், அவனை நாம் உணரும் பொருட்டு அதைத் தன ஹ்ருதயத்திலே தரித்துக் கொண்டிருந்தான். சிருஷ்டியிலே மீண்டும் அதை உபதேசம் பண்ணினான். பிரளயத்திலேயும் கூட சகலத்தையும் தாங்குகிறவன் அவன்.
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவன் ஒரு வடபத்ரசாயி..
ஒரு சின்ன ஆலந்தளிரிலே எல்லாவற்றையும் விழுங்கின விச்வம் என்று சொல்லக்கூடிய பரமாத்மா படுத்துக் கொண்டிருக்கிறான்.  இதைக் கேட்கிற நமக்கெல்லாம் என்ன சந்தேகம் வரும்? ஒரு சின்ன ஆலந்தளிர் அவ்வளவு பளுவான வஸ்துவைத் தாங்க முடியுமா? அந்த தளிரா அவனைத் தாங்குகிறது?  அதையும் சேர்த்துத் தாங்குகிறவன் அவன்தானே.
ஆகையினாலே பரமாத்மா இளந்தளிரிலே படுத்திருப்பதைப் பார்த்தால், அவன்தான் சகலத்தையும் தாங்குபவன் என்பதை நேரே நமக்குள்ளேயும் காட்டிக் கொடுக்கும்படியாக அந்தக் காட்சி  இருக்கிறது.
அதுதான் அகடிதகடான சாமர்த்தியம்.  அகடிதம் என்றால் பண்ண முடியாதது.  பண்ண முடியாததையும் சாட்சியாய் பிரளய காலத்திலேயே அந்த இளம் ஆலந்தளிரிலே படுத்திருக்கிறான்.
தர்க்க சாஸ்திரத்திலே, தொன்னைக்கு நெய் ஆதாரமா?  நெய்க்கு தொன்னை ஆதாரமா? என்று ஒரு வாதம் எழுந்தது.  இந்த தொன்னைக்கே ஒரு சிறப்பு.  அதைத் தைக்கிறதே ஒரு கலை. அந்தக் கலையைத் தெரிந்து வைத்துக் கொண்டவன் பாதி வாத்தியார் என்று சொல்வார்கள்.  ஏனென்றால் ஹோமம் பண்ணுவதற்கான நெய்யை தொன்னைகள் தைத்து அதிலேதான் வைத்துக் கொள்வது.   அதைச் சரியாய் தைக்காமல் போனால் ஒரு பக்கமாய்ச் சாய்த்து நெய் கொட்டிவிடும்.
சரி, இப்படி யக்ஞத்துக்குத் தேவையான நெய்யைத் தாங்குகிறதே அந்த தொன்னை.. ஒரு பெரிய தொன்னை.. அதில் நிறைய நெய்.  இவற்றிலே எது, எதைத் தாங்குகிறது? என்பது சர்ச்சை.
சர்ச்சையிலே ஒருத்தர் சொன்னார் "பிரத்யக்ஷம் பிரமாணம்".  நேரே நாம் கண்ணால் பார்கிறோமே...  அந்த நெய், தொன்னையிலே வைக்கப்படுவதினாலே தாங்குவது தொன்னை, தாங்கப்படுவது நெய், என்றார்.
சிலர் இவருடைய கருத்தை மறுத்து விட்டார்கள். தாங்குவது தொன்னை இல்லை.  தாங்குவது நெய்.  தாங்கப்படுவது தொன்னை... நெய்யினால் தொன்னை தாங்கப்படுகிறது என்றார்கள்.
இது பிரத்யக்ஷத்துக்கு (கண்ணால் பார்ப்பதற்கு) விரோதம்.   ஆனால் சாஸ்திர திருஷ்டியாக அவர்கள் சொல்கிறார்கள்.  அதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.  எப்படி?
என்ன நடக்கிறது அவ்விடத்திலே?  ஹோமம் நடக்கிறது. ஹோமம் என்கிற காரியத்துக்குத் தொன்னை வேணுமா?  நெய் வேணுமா?  நெய்தான்! நெய்யானது உண்டு பண்ணுகிறது.  அவ்வாறு உண்டு பன்னுவதாலே நெய்தான் தொன்னையைத் தாங்குகிறது.   யாராவது இல்லை என்று  முடியுமா
தர்க்க சாஸ்திரத்தினாலே இப்படி இருக்கு என்பதை இல்லை எனப் பண்ணிவிடலாம். இல்லை என்பதை இருக்கு என்றும் ஆக்கிவிடலாம்.  தர்க்க சாஸ்திரத்திலே ஒருவனுக்குச் சாமர்த்தியம் இருந்துவிட்டால், அவனால் சாதிக்க முடியாததே கிடையாது.
அஹோபில மடத்தின் நாற்பத்திரண்டாவது குரு ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஒரு கதை சொல்லுவார்.  வியாகரணம், ஜோதிஷம், தர்க்கம் என்று எல்லாவற்றையும் கற்ற நிபுணர் ஒருவர்.  அவர் தன்னைப் போலவே எல்ல சாஸ்திரங்களையும் ஒரே நபருக்குச் சொல்லித் தருவது கஷ்டம் என்று முடிவுக்கு வந்தார்.  தர்க்க சாஸ்திரத்தை ஒருவனுக்கும், ஜோதிஷத்தை வேறு ஒருத்தனுக்கும், வியாகரணத்தை இன்னொருவனுக்கும் சொல்லிக் கொடுத்தார்.  வியாகரணம் படிப்பவன் வந்தால், பல்லைத் தேய்த்துக் கொண்டே அவனுக்குப் பாடம் சொல்லித் தருவாராம்.  அவன் அப்படியே, பாவம் அதை எழுதிக் கற்றுக் கொள்வான். ஜோதிஷம் கற்றுக் கொள்பவன் வந்தால், துணிகளைத் துவைத்தபடி பாடம் நடத்துவாராம். தர்க்க சாஸ்திரம் படிக்க வருகிறவனை மட்டும் பக்கத்திலே உட்கார வைத்துக் கொண்டு, அவன் தொடையைப் பிடித்து இழுத்துச் சொல்லித் தருவாராம்.


இதை, குருவின் பத்னி பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டு பேருக்கும் உதாசீனமாகச் சொல்லித் தருகிறார்.  தர்கத்தை மாத்திரம் இழைச்சு இழைச்சு சொல்லித் தருகிறாரே?என்று மனசிலே தோன்ற அவரிடமே கேட்டாள்.  "சுவாமி! எல்ல சாஸ்திரங்களும் நமக்குக் கண் போன்றவைதானே!  ஒரு சாஸ்திரம் இல்லையென்றால் நம்மால் ஜீவிக்க முடியுமா?  அப்படியிருக்கும்போது உமக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? பட்சபாதம்? இது பாவ்யமா?
"உனக்கு நான் சொன்னால் தெரியாது.  நாளைக்குக் காட்டறேன்" என்று பதில் சொன்னார் குரு.  "நாளைக்குக் காட்டறதா"?  "நான் காட்டப் போவதில்லை,  நீயே உன் செயலாலே தெரிந்து கொள்வாய்".
மறுநாள் "குருவின் காதிலே ஓர் ஓணான் புகுந்து விட்டது; அதனால் அவர் மாண்டு விட்டார்" என்று ஒரு வாக்கியத்தைப் பத்னிக்குச் சொல்லிக் கொடுத்து, அதை மூன்று மானவர்களிடத்திலும் சொல்லச் சொன்னார்.  
வியாகரணம் படிக்கிறவன் வந்தான்.  அவனிடம் குரு பத்னி இதைச் சொன்னபோது, அவள் சொன்ன வாக்கியத்தின் இலக்கணத்திலே அவனுக்குச் சந்தேகம் வந்து விட்டது.  உடனே அதைச் சரி பார்க்க நூல்களைத் தேடித் போனான்.
ஜோதிடம் படிக்கிறவனிடமும் அதையே சொன்னாள்.  அவனோ "சனி தசையானால் நீங்கள் சொல்வது போல் நடக்கக் கூடும்.  குருதசையிலே நடக்காதே" என்று குருவின் ஜாதகத்தைத் தேடித் பார்க்கப் போய்விட்டான்.
இத்தனையும் கேட்டபடி குரு சமையல் அறையின் மறைவிலே இருந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
மூன்றாவதாக தர்க்கம் படிப்பவன் வந்தான்.  அதே விஷயத்தை குரு பத்னி அவனிடம் சொன்னதுதான் தாமதம் "அசம்பவம்" என்றான் அவன். "நீங்கள் சொன்னது நடந்திருக்க முடியாது".
"ஏன் அப்படிச் சொல்கிறாய்".   
"குருவினுடைய காது துளை சிறியது. ஓணான் அவர் காதுக்குள்ளே எப்படி நுழையும்? நீங்கள் சொல்வது மாதிரி ஒரு வேளை ஓணான் நுழைந்து குரு மாண்டு போய் விட்டார் என்றே வைத்துக் கொள்வோம்.  இப்படி நீங்கள் சிரித்தபடி என்னிடம் பேசுவீர்களா? நித்தியம் கணவன் மனைவி சண்டை நடக்கும் ஒரு கிரஹத்திலே கூட பர்த்தா மாண்டு போனால் பத்னி அழுவாள்.  நீங்களோ அழாமல் சிரித்தபடி இருக்கிறீர்கள்.  ஆசார்யரே என்னைப் பரீட்சை பண்ண வேண்டாம்.  வெளியே வாருங்கள்" என்றான் தர்க்க சாஸ்திர மாணவன்.
"சத்சிஷ்யனே" என்று ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டார் குரு.  "இப்போ புரிகிறதா தர்க்க சாஸ்திர மகிமை" என்று பத்னியைப் பார்த்துக் கேட்டார்.

இடம், பொருள், ஏவல் அறிந்து பேசும்படியான புத்தி கூர்மை தர்க்க சாஸ்திரத்தைப் படிப்பவருக்கு அமைகிறது.  இப்படிப் பட்ட தர்க்க சாஸ்திரம் சொல்வதுதான் தொன்னைக்கு நெய் ஆதாரம் என்கிற உண்மை.
"ஆலிலைக்கு பகவான் ஆதாரமா? பகவானுக்கு அது ஆதாரமா? என்றால் பகவானே விச்வமாக இருக்கிறபோது அதில் ஒரு துளி தானே ஆலிலை. அதையும் சேர்த்து அல்லவா தாங்குகிறான் என்று ஆகிறது.  இப்படி தர்க்க வாதத்திலே முடிவு கிடைக்கிறது.  ஆனால் அந்த தர்க்கத்தையும் தாண்டி நிற்கக் கூடிய விச்வபதி அவன்.   ஆலிலை அவனைத் தாங்குவதாகத் தோன்றுகிறது.  ஆனால் ஆலிலையோடு, விச்வத்தையும் அதிலுள்ள வேதங்களையும் சேர்த்து அல்லவா பகவான் தாங்கிக் கொண்டிருக்கிறான்.

எனவேதான் வேதங்களைக் காப்பாற்ற அவன்  எடுத்த மத்ஸ்யாவதாரம், விச்வம் என்கிற சப்தத்தாலே அறியப்படுகிறது. 

 தொடரும்...