Wednesday, January 29, 2014

PART - 1, Chapter - 33

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 33



காபாரத ஆரம்பத்தில் இந்தக் கதை இருக்கிறது.  பரீஷித்தை தட்ஷகன் என்ற பாம்பு கடித்துவிட, அவன் இறந்து போகிறான்.  அதனால் பரீஷித் மகன் ஜனமேஜயன் சர்ப்ப யாகம்  ஒன்றை நடத்தினான். 
அந்த யாகத்துக்கு பயந்து கொண்டு தட்ஷகன், இந்திரனிடத்திலே போய்  சரணாகதி பண்ணினான்.  இந்திரன்  சொன்னான்: "நான் உன்னை ரட்சிக்கிறேன், இங்கேயே இரு.." என்றான்.
ஜனமேஜயனின் ஹோமம் நடக்கிறது.  எங்கெங்கோ இருந்த பாம்புகள் எல்லாம்  வந்து விழுந்தன.  யாகம் நடத்தியவரிடம் ஜனமேஜயன் கேட்டான், "என் அப்பாவைக் கடித்த பாம்பு மட்டும் இன்னும் வரவில்லையே..."?
தேடிப் பார்த்தால், இந்திர லோகத்திலே இருந்தது அந்தப் பாம்பு!  இந்திரனுடைய சிம்மாசனத்தின் காலைச் சுற்றி வளைத்துக் கொண்டு சுருண்டு கிடந்தது. உடனே எல்லோரும்.  "இந்திராய தட்ஷகாய ஸ்வாஹா" என்று ஹோமம் பண்ணினார்கள்.  இந்திரன் தட்ஷகனோடு வந்து இதிலே வந்து விழ வேண்டும் என்பது வேண்டுகோள்!
இந்திர லோகத்தில் இருந்து சிம்மாசனம் கிளம்பி விட்டது.   வந்து கொண்டிருக்கிறான்.  அந்த சமயத்திலே இந்திரன் அவனை விட்டு ஓடியே போய்  விடுகிறான்..! பிற்காலத்திலே அந்த தட்ஷகன் ரட்சிக்கப்பட்டான்.  
ஆனால் பாருங்கள், இந்திரன் தட்ஷகனை ரட்சிக்கிறேன் என்று சொன்ன போதும் அவனால் அதைச் செய்ய முடியவில்லை!  அவனிடத்திலே காருண்யம் இருந்தது, சக்தி இல்லையே!  அதனாலேதான் ரட்சிக்க முடியவில்லை.
பரசுராமரிடத்திலெ சக்தி இருந்தும் காருண்யம் இருக்கவில்லை என்பதைப் பார்த்தோம்.
காருண்யம், சக்தி ஆகிய இரண்டையும் உடைய பகவானிடத்திலெ தான் நாம் சரணாகதி பண்ணனும்.
பரமார்த்த ஸ்துதி என ஒன்றை சுவாமி தேசிகன் பண்ணியிருக்கிறார் - திருப்புட்குழி (காஞ்சிபுரம் அருகே) என்ற க்ஷேத்ரத்தில் இருக்கும் எம்பெருமான் பேரிலான பத்து சுலோகங்கள்.  அதை நித்திய பாராயணம் பண்ணனும் என்பது தேசிகரின் திருவுள்ளம்.  அந்த பரமார்த்த ஸ்துதியில் அவர் அழகாகச் சொல்கிறார்:
நாம் எத்தனையோ யக்ஜம் பண்ணுகிறோம்.  ஆனால், பகவான் ஒரு யக்ஜம் பண்ணுகிறான். அது அவனைத் தவிர வேறு ஒருத்தர் பண்ண முடியாத யக்ஜம்.   அது தான் சரணாகத ரக்ஷணம் என்னும் யக்ஜம்.
யக்ஜம் பண்ணனும் என்றால் தர்மபத்தினி பக்கத்திலே இருக்க வேண்டாமா?  அந்த ஸ்ரீயோடு கூட சேர்த்தே விளங்கி சரணாகத ரக்ஷணம் என்கிற யக்ஜத்தை நடத்துகிறான் பரமாத்மா.  அந்த சரணாகத ரக்ஷண யக்ஜத்திலே ரித்விக்குகள் யார் என்று கேட்டால், எம்பெருமானிடத்திலே இருக்கும்படியான அவனுடைய கல்யாண குணங்கள்.  அவற்றுள் தயைதான் முக்கியமான ரித்விக்.  மற்றவை துணையானவை.
எந்த யக்ஜமும் தட்சிணையில் முடிய வேண்டும்.  தட்சிணை இல்லாவிட்டால் அதற்குப் பூர்த்தி கிடையாது.  பகவான் பண்ணுகிற சரணாகத ரக்ஷணம் என்கிற யக்ஜத்தில் யார் யார் தட்சிணை பெறக் கூடியவர்கள்?
யார் யாரெல்லாம் அவன் சரணாகத ரக்ஷகன் என்பதை உணர்ந்து வருகிறார்களோ, அத்தனை பேருக்கும் தட்சிணை உண்டு.
பகவானிடத்திலே கை கூப்புவதற்கு அதிகாரி, அதிகாரி அல்லாதவன் என்றெல்லாம் வேறுபாடு உண்டோ?  யார் வேண்டுமானாலும் தொழலாம். சரணாகதி பண்ணலாம். சுத்தி பண்ணிக் கொண்டு வரவேண்டும்.  சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் தேடிப் போக வேண்டியதில்லை.  இருக்கிற இடத்திலே சரணாகதி பண்ணலாம்.
உயர்ந்த ரீதியிலே பகவானை உணர்ந்து சரணாகத ரக்ஷணம் பண்ணிவிட்டால், மோக்ஷ தட்சிணையை - சாச்வதமான நித்யானந்தத்தைக் கொடுக்கிறான் அவன்.  சரணாகதி பண்ணுபவர்கள், பரப்ரும்மத்துக்குத் துல்லியமான, சமானமான யோக்யாதிகளை அடைந்து மோக்ஷத்தை அடைகிறார்கள்.
அவனைத் தவிர வேறு யாரும் அப்படி சரணாகத ரக்ஷணம் பண்ண முடியாததனாலே அவனுடைய திருவடியை நாம் பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார் சுவாமி தேசிகன்.

யோத்யா காண்டத்தில் சீதா பிராட்டியிடம் லக்ஷ்மணன் சரணாகதி பண்ணினான். அந்த சரணாகதிக்குப் பயனாய், பகவானுக்கு நித்ய கைங்கர்யம் செய்கிற வாய்ப்பு லக்ஷ்மணனுக்குக் கிடைத்தது.  கூடவே வனவாசம் அழைத்துப் போனான் பகவான்.  அந்த லக்ஷ்மண சரணாகதி பூரண பலனைக் கொடுத்தது.   
வசிஷ்டாதிகளை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமான் திருவடிகளிலே சரணாகதி பண்ணினான் பரதன்.  பரமாத்மா தன பாதுகைகளை அவன் சிரஸில்  வைத்து அனுக்ரஹித்தான்.  அவன் பண்ணிய சரணாகதியின் பூரண பலனை அயோத்தியிலே இருக்கிற புல் பூண்டுகூட அனுபவித்து உயர்கதி பெற்றதாம்!
பாதுகைகளை ஆச்சர்யமாக நந்தி கிராமத்தில் பிரதிஷ்டை பண்ணி, பாதுகா ஆராதனம் செய்தான்... 14 ஆண்டுக்காலம்!  யாருக்காவது கிடைக்குமா இப்படி ஒரு பாக்கியம்!  முக்தி ஐஸ்வர்யத்தைக் காட்டிலும் உயர்ந்த ஐஸ்வர்யம் கிடைத்ததே அவனுக்கு! பரதனுடைய சிரஸுக்கு அத்தனை  அழகாகப் பொருந்தியது பாதுகை!  சிரஸ்  அதற்கு ஒரு பீடம் போல அமைந்திருந்ததாம்.

ஆரண்ய காண்டத்தில், மகரிஷிகள் அத்தனை பேரும்  எம்பெருமாணன் திருவடியில் சரணாகதி பண்ணியபோது, தண்டகாரண்யத்தையே ஒரு யாகம் செய்வதற்கு அனுகூலமான இடமாக ஆக்கித் தந்தான் பரமாத்மா.   
சுக்ரீவ சரணாகதிக்குப் பூரண பலனைக் கொடுத்து, அவன் சொன்ன காரியத்தை பகவான் பண்ணினான்.

சுந்தர காண்டத்திலே திரிசடை சீதாபிராட்டியிடம் சரணாகதி பண்ணினாள்.  சீதாபிராட்டி அந்த சரணாகதிக்குப்பலனாய் ஆஞ்சநேயனிடமிருந்து அத்தனை ராக்ஷஸ ஸ்திரீகளையும் ரட்சித்து விட்டாள்.
சீதாபிராட்டியை  இத்தனை நாட்களாக விரட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த ராட்சஸ  ஸ்திரீகள்.  "அத்தனை பேரையும்  முஷ்டியினாலே, காலினாலே உதைத்துத் தள்ளிவிடுகிறேன் - ஆக்ஜை கொடுங்கள்" என்றான் ஆஞ்சநேயன்.
அதற்கு சீதாபிராட்டி சொல்கிறாள்: "அப்பா! இத்தனை நாளாக இவர்கள் என்னை ஏசியதும் பேசியதும், ராவணனிடம் உள்ள பயத்தினாலே..  அவன் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அப்படி செய்தார்கள்.  உலகத்திலே உன் திருஷ்டியினால் இவர்கள் தப்பு.  என்னுடைய திருஷ்டியில் இவர்கள் நல்லவர்கள் என்றே நினைக்கிறேன்.  தப்பு செய்தவர்கள்  ஆனாலும் நல்லதையே பண்ணக் கூடியவர்கள்  ஆனாலும், உலகத்தில் தப்பே பண்ணாதவர்கள் கிடையாது.."
ஆஞ்சநேயனின் முகம் வெளுத்துப் போய்  விட்டதாம்!  ராமனைத் தன் ஹ்ருதயத்திலே வைத்திருந்தான் அல்லவா ஆஞ்சநேயன்!  "இப்போது சீதை சொன்ன வார்த்தையிலே ராமனும் அல்லவா அடிபட்டுப் போய்விட்டான்! என்று அவனுக்கு அதிர்ச்சி.  ராமனும் தப்பு செய்தவன் என்றல்லவா ஆகிவிட்டது.
அதைப் பார்த்து சீதாபிராட்டி சொல்கிறாள்:  
ஹே, ஆஞ்சநேயா! உன் முக விகாரத்தில் இருந்து உன் என்னத்தைப் புரிந்து கொண்டேன்.  ராமன் தப்பு பண்ணவில்லையா?  அவனும் தப்பு பண்ணியவன் தான்.
என்ன தப்பு என்று கேட்டானாம் ஆஞ்சநேயன்.
"அவன் வந்து என்னை மீட்காவிட்டால் அவன் பௌருஷம் நிலைக்குமா என்று கேட்கும்படி உன்னிடம் நான் சொல்லியனுப்பினேன்.  அப்புறமே அவன் என்னை மீட்க வந்திருக்கிறான்.  பத்தினி இங்கே இருக்கிறாள் என்பது அவனுக்கு ஏற்கெனவே தெரியாத விஷயமா என்ன?  உடனே ஓடி வந்து என்னைக் காப்பாற்ற வேண்டாமா?  அபலையான ஒரு ஸ்திரீ, ஒரு காமாதுரனுடைய முன்னிலையிலே தன்னுடைய பதிவ்ரத்யத்தை எத்தனை நாள் ரக்ஷித்துக் கொள்ள முடியும்?  இவ்வளவு நாள் என்னை இந்த இடத்திலே விட்டு வைத்தது அவர் பண்ணின குற்றமில்லையா?  
ஆஞ்சநேயன் பார்த்தான், "ஆமாம்,  அது ரொம்ப பெரிய குற்றம்.  உடனே வந்து மீட்டிருக்க வேண்டாமா?  இது இத்தனை நாள் எனக்குத் தெரியாது போயிடுத்தே" என்று  ராமனின் தவறை ஒப்புக் கொண்டு விட்டான்.   
அதற்குப் பிறகும் ஆஞ்சநேயனுக்கு இன்னொரு சந்தேகம்! "அம்மா, நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள்?" என்று கேட்டான்.
"நானும் தப்பு பண்ணியவள்தான்" என்றாள் சீதை. 
"தன் கணவன் எப்படி இருந்தாலும் அவனைக் குறித்து மற்றவரிடத்திலே விமர்சித்துப் பேசக் கூடியவள் உத்தம பத்தினியாகமாட்டாள். இப்போது என் பர்த்தா ராமபிரான் என்னைப் பத்து மாதம் இங்கே விட்டு வைத்தார் என்று உன்னிடம் சொன்னேனே... அதுதான் பெரிய தப்பு".
ஆஞ்சநேயன் அதையும் ஒப்புக் கொண்டான்.  "அடியேன் என்ன தப்பு செய்தேன்"? என்று கேட்டான் அடுத்தபடியாக.
"நீயும் தப்பு பண்ணியவன்தான்.  இந்த ராட்க்ஷஸிகளை எல்லாம் அடிக்கிறேன், உதைக்கிறேன்" என்று சொன்னாயே.. அது தான் பெரிய தப்பு.  அந்த மந்தரையையே (கூனி) பகவான் ரட்சித்தானே.  நாம் அதை நினைக்க வேண்டாமா? என்றாள் சீதபிராட்டி.

விஷ்ணு சஹஸ்நாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பராசர பட்டர், மகாலக்ஷ்மியின் திருக்கல்யாண குணங்களை வர்ணிக்கக் கூடிய ஸ்தோத்திரம் இயற்றி இருக்கிறார்.  குணரத்ன கோசம் என்று அதற்குப் பெயர்  அதில் சீதாபிராட்டியின் கோஷ்டி, ராமபிரானுடைய கோஷ்டி என்று இரண்டாகப் பிரித்து, சீதையினுடைய கோஷ்டியே உயர்ந்து நிற்கிறது என்று தீர்ப்புச் சொல்கிறார்.
பிராட்டியின் கோஷ்டி ஏன் உயர்ந்து நிற்கிறதாம்..? அதற்கான விளக்கத்தை அடுத்த அத்தியாத்தில் தருகிறேன்.

  





(தொடரும்)

 

Friday, January 24, 2014

PART -1, Chapter - 32

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 32

 

கவானுடைய சுவாசமாகவும் நிஸ்சுவாசமாகவும் - அதாவது உள்ளே இழுக்கும்படியான காற்றாகவும் வெளியே விடும்படியான காற்றாகவும் விளங்குவது வேதம்.  பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம் இங்கே.  நமது சரீரம் மூச்சுக் காற்றினாலே பெருமை அடைவது போலே பகவானுக்கும் வேதமாகிற மூச்சுக் காற்றினாலே பெருமை உண்டாக்குகிறது என்றால், அந்த வேதம் எப்பேர்ப்பட்டதாக  இருக்க வேண்டும்.  அதில் சொல்லப்பட்ட விஷயத்தை எல்லோரும்  சுலபமாக தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் புராண இதிகாசமாக மாற்றிக் கொடுத்தார்கள். 
இப்படிச் சொன்னால் வேதத்தில் சொன்ன விஷயங்கள் முன்பாக நடந்தனவா?  புராண இதிகாசங்கள் முன்பாக நடந்தனவா?  என்று கேள்வி வரும்.
புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு அவதாரத்தையும் வேதம் சொல்கிறது.   அப்படியென்றால் அவதாரங்களுக்குப் பின்பாகத்தான் வேதம் உண்டானதா?
நன்கு கவனிக்க வேண்டும்.  வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதைத்தான் பகவான் நடத்திக் காட்டினான்.  பகவான் வராஹ அவதாரம் பண்ணி பூமியை உய்வித்தான் என்று வேத்தில் வருகிறது.  அதையே பகவான் நடத்திக் காட்டினான்.  வேதத்தைப் பூரணமாய் அனுஷ்டித்தான் பரமாத்மா.  அதை அனுஷ்டானம் பண்ணுவதற்கென்றே இந்த லீலா விபூதிகள்.
வேதம் சொல்படி நடந்தான் பரமாத்மா என்பதை நாம் ஸ்பஷ்டமாக உணர வேண்டும்.  வேதத்தில் வரும் ஒரு வாக்கியம் - தேவதைகளெல்லாம் யக்ஜம் பண்ணினார்கள் என்கிறது.
நாம் யக்ஜம் பண்ணினால் இந்திராதி தேவர்களைப் பார்த்து பண்ணுகிறோம். பகவான் அவர்கள் ரூபத்தில் இருந்து நமக்கு அனுக்கிரகம் பண்ணுகிறான்.  னால், தேவதைகள் யக்ஜம்  பண்ணினால்...?
தேவதைகள் யக்ஜம் செய்தால் தேவலோகத்தில் பண்ணமுடியாது.  பூலோகத்துக்கு வந்துதான் பண்ண வேண்டும்!
"வையத்து வாழ்வீர்காள்" என்று ஆண்டாள் அழைப்பதைப் பார்க்கிறோம். வையத்தில் வாழ்வதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பொருள்.  எல்லா கர்மாவும் விலகும்படியான, உயர் பலனைக் கொடுக்கும்படியான, சாஸ்திரங்களை அனுஷ்டிக்கும் உத்தமமான பூமி இது.  அதிலும் பாரத தேசம் ரொம்ப சிறப்பு என்று சாஸ்திரமே கொண்டாடுகிறது.
இப்படிப்பட்ட பூமிக்கு வந்துதான் தேவர்கள் யக்ஜம் பண்ண வேண்டும்.  அவர்களும் வந்து நாராயணனைக் குறித்து யக்ம் பண்ணினார்கள்.
அந்த தேவர்களுக்குள்ளே துவஷ்டா என்கிற ஒருவன்
அவனுக்கு புரோடாசத்தின் பேரிலே ரொம்பவும் ஆசை. 
புரோடாசம்...! அப்படியென்றால்..?

அப்படியென்றால் என்னவென்று வேதமே சொல்கிறது .  அதைத் தயாரிக்கும் முறையை விளக்குகிறது.
யக்ஜம்  பண்ணக்கூடியவருடைய தர்ம பத்தினி, ரொம்ப சுத்தமாக, மடியாக இருந்து,  உலக்கையைக் கையில் எடுத்து, உரலுக்கும் உலக்கைக்கும் பூஜை பண்ணி விட்டு, மந்திரம் சொல்லிக்கொண்டே நெல்லைக் குத்த வேண்டும்.  அதிலே கிடைக்கிற அரிசியை மாவாக அரைத்து, அதை அடையாகத் தட்ட வேண்டும்.  அதற்குப் பெயர்தான் புரோடாசம்.  அப்படித் தட்டி அதன் மேலே நெய்யைத் தடவி வைத்தார்களானால் ரொம்ப வாசனையாக இருக்கும்.  அதிலே நமக்கொண்ணு கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று எல்லோருக்குமே தோன்றும்!
ரொம்ப பக்குவமாக அதைத் தயார் பண்ணி ஹோம சமயத்திலே கொண்டு வர வேண்டும்.  கோவில்களில் கூட அதை நன்றாக மூடி யார் கண்ணிலும் படாமல் எடுத்து வந்து செய்விப்பார்.  அவரே கூட அதைப் பார்த்து இவ்வளவு முந்திரிப் பருப்பா? இத்தனை நெய்யா? என்றெல்லாம் நினைத்து விடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதை... நன்றாக இருக்கும் போலிருக்கே என்று நாம் மனசில் கூட நினைத்து விடக்கூடாது - அப்படி நினைத்தால் அபசாரமாகி விடும்.  அந்த மாதிரிதான் யக்ஜத்திலும் புரோடாசத்தை கவனமாக எச்சரிக்கையாகத் தயாரித்துக் கொண்டு வருவார்கள்.  

தேவர்கள் நடத்தும் யக்ஜத்திலே புரோடாசத்துக்குப் பங்கம் வந்தது!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபத்திலே வந்து, துவஷ்டாவே புரோடாசத்தைக் கொண்டு போய்  விட்டான்! யக்ஜமே நஷ்டமாகி விட்டது.  இதனாலே முப்பத்து முக்கோடி தேவர்களும் துவஷ்டாவை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வந்தார்கள்.   
அப்போது அவன் என்ன பண்ணினான்...? அஸ்வினி தேவதைகளிடம் போய்ச் சரணடைந்தான்.  இந்த அஸ்வினி தேவதைகள் மற்ற தேவதைகளுக்கு வைத்தியர்கள். எப்போதும் இரு அஸ்வினி தேவதைகளும் ஒன்றாகவே இருப்பார்கள்.  வால்மீகி கூட ராமாயணத்திலே ராம - லக்ஷ்மர்களைப் பற்றிச் சொல்லும் போது, "அஸ்வினி தேவதைகளைப் போல் காட்சி அளிக்கிறார்கள்" என்கிறார்.  
இப்படிப் பட்ட அஸ்வினி தேவதைகளைப் போய்ச் சரணடைந்தான் துவஷ்டா.  அவர்கள் பார்த்தார்கள்.  வன் தப்பான காரியத்தைப் பண்ணியிருக்கிறான்.  கொல்லத் தகுந்த குற்றம் இருந்தாலும் சரணாகதி என்று நம்மை வந்தடைந்துள்ளானே... அதனால் அவனைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று அத்தனை தேவதா நிக்ரஹத்துக்கும் அவனை ஆளாக்காமல் அஸ்வினி தேவதைகள் காப்பாற்றி விட்டார்கள்.

தனால் தான், கொல்லத் தகுந்த குற்றம் பண்ணினாலும் சரணாகதி பன்னியவர்களைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று சாஸ்திரம் உண்டாகியிருக்கிறது.   சரணாகதி பண்ணுகிறவன் எப்பேர்ப்பட்ட குற்றங்கள் பண்ணியிருக்கட்டுமே... அவனை காப்பாற்றியே தீர வேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது.  இதை மெய்ப்பிக்கவே பகவான் ராமாவதாரம் பண்ணினான் என்று சொன்னால் அது மிகையாகுமோ...?
இப்படி வேத தர்மத்தை அனுஷ்டிக்கிற அவதாரமாக ராமாவதாரம் இருக்கிறது.  துஷ்ட: என்கிற திருநாமம் பரமாத்மாவுக்கு உண்டு.  பரிபூரண துஷ்டி (மனநிறைவு) அனுபவிக்கிறவன் அவன்.  அந்த வேத தர்மத்தை அவன் அனுஷ்டிப்பதனாலே கிடைக்கிறது பரிபூரண திருப்தி.

"பயப்ரதான சாரம்"என்பதாக ஒன்றை சுவாமி தேசிகன் எழுதியிருக்கிறார்.  அதிலே சரணாகதி என்றால் என்ன என்று பூரணமாய் நாம் தெரிந்து கொள்ளலாம்.  அதிலே அவர் எழுதுகிறார்:
ராமாயணத்திலே சரணாகதி என்பது அஞ்சுறு ணியாகக் கோக்கப் பெற்றது.
ராமாயணம் என்பது பெரிய ரதம்.  ரதம் நிற்க வேணுமானால் சக்கரம் அவசியம்.  சக்கரத்தில் கடையாணி ரொம்பவும் முக்கியம். தவிர, ரதத்தில் பல மரச் சட்டங்கள் ஒன்றோடொன்று கோக்கப்பட்டிருக்கும்.  கடை ஆணியைக் கொண்டு அவை கோத்து பொருத்தப்பட்டிருக்கும்.  ஆணியை எடுத்து விட்டால் ரதம் கீழே விழுந்து விடும்.  அதைப் போல ராமாயணத்திற்குக் கடையாணியாக அதைக் கோத்து நிறுத்துவது சரணாகதி! 
பூர்வ காலத்திலே ஒரு சபையிலே பல வித்வான்கள் கூடியிருந்தனர்.  தர்க்க வித்வான், வியாகரண வித்வான், மீமாம்ஸ சாஸ்திர வித்வான் என்று இப்படிப் பல வகையினர்.  அவர்களிடையே புதுசாக ஒருத்தர் வந்து உட்கார்ந்தார்.  மற்றவர்களுக்கு அவரைத் தெரியவில்லை. "எந்த சாஸ்திர நிபுணர் நீங்கள்" என்று மெள்ளக் கேட்டார்கள். "சரணாகதி சாஸ்திரம்தான்" என்றார் அவர்.  தர்க்க, வியாகரணம் படித்தவர்களெல்லாம் வியப்போடு பார்த்தார்கள். "இதுவரைக்கும் கேட்டதில்லையே.. அது என்ன சாஸ்திரம்? கேள்விப்பட்டதில்லையே?" என்றார்கள்.  "அந்த சரணாகதி சாஸ்திரம் ராமாயணத்திலே சொல்லப்பட்டிருக்கிறது" என்கிறார் அவர்.
இப்படிப்பட்ட ராமாயணமும் மகாபாரதமும் தெரியாத புராண ஞானம் இல்லாத ஒருத்தருக்கு மற்ற சாஸ்திரங்கள் தெரிந்திருப்பதெல்லம் வீண்தான்!  
சரணாகதி சாஸ்திரத்தை உணர்த்தும் ராமாயணம்தான் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.  
ராமாயத்தின் பால காண்டத்தில் பார்த்தால் பகவானிடத்தில் தேவதைகள் பண்ணின சரணாகதி.
அதே பால காண்டத்திலே தசரதர் பரசுராமரிடத்திலே பண்ணிய சரணாகதி
அயோத்யா காண்டத்திலோ ராமரிடத்தில் லக்ஷ்மணர் பண்ணிய சரணாகதி.
பரதன் சக்ரவர்த்தித் திருமகனிடம் பண்ணிய சரணாகதி.
ஆரண்ய காண்டத்தில் மகரிஷிகள் எல்லாம் பகவானிடத்தில் பண்ணிய சரணாகதி.
உயர்ந்த கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் பகவானிடத்திலே பண்ணின சரணாகதி.
சுந்தர காண்டத்தில் திரிஜடையானவள் சீதா பிராட்டியிடம் பண்ணிய சரணாகதி.
உத்தர காண்டத்திலே விபீஷணன் பகவானிடத்தில் பண்ணிய சரணாகதி.
பகவான் சமுத்திர ராஜனிடம் பண்ணிய சரணாகதி.  
உத்தர ராமாயணத்தில் எல்லா தேவதைகளும் பகவானிடத்திலே பண்ணிய சரணாகதி.
இப்படி, சரணாகதியானது அஞ்சுறு ஆணியாக ராமாயணத்தில் கோக்கப்பட்டுள்ளது.  
இத்தனைக்கும் பலனிருந்தது.  
பகவான் பூலோகத்தில் வந்து அவதாரம் பண்ணினதாலே பலன் இருந்தது.
னால், அதே சரணாகதியை தசரதன் பரசுராமனிடத்திலே பண்ணியபோது பலனிருக்கவில்லை.
இந்த பரசுராமர் இருக்கிறாரே..ஏறிட்டுப் பார்க்க முடியாத வீரியம் அவருக்கு.  கோபத்துடன் இருக்கிறார்.  சுவாமி தேசிகன் தமது தசாவதார ஸ்தோத்திரத்திலே எல்லா அவதாரங்களுக்கும் ஒரு சிறப்பு அடைமொழி கொடுக்கிறார்:
ரோஷ ராமஎன்கிறார் பரசுராமரை!  
அத்தனை ரோஷம்..... கோபம் உடையவர் அவர்!
பரசுராமர் வந்தவுடனேயே "என் குழந்தைகள் சின்னவர்கள்.  இப்போது தான் கல்யாணம் பண்ணி அழைத்துக் கொண்டு போகிறேன்.  அவர்களை விட்டு விடுங்கள், என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்" என்று கெஞ்சுகிறான் தசரதன்.  ஆனால் பரசுராமர் கோபத்துடன்தான் நிற்கிறார்.  இந்த சரணாகதி பலிக்கவில்லையே.  ஏன் பலிக்கவில்லை. முறை தவறி பிரார்த்தித்தோமானால் பலிக்காது!
யாரிடத்திலே சரணாகதி பண்ணுகிறோமோ அவரிடத்திலே இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்.  
ஒன்று சக்தி, இன்னொன்று காருண்யம்.  இவை இரண்டும் இல்லாவிட்டால் பயனில்லை.  காருண்யம் இருந்து சக்தியில்லா விட்டாலும் பலனில்லை.
முதலாவதுக்கான உதாரணமாக பரசுராமரைச் சொன்னேன்.  கருணை இருந்தும் சக்தி இல்லாததால் சரணாகதி தோற்ற கதையை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.


 





(தொடரும்)

Thursday, January 23, 2014

PART -1, Chapter - 31

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம்31
ரசுராமனின் கர்வ பங்கத்தினாலே தான் யார் என்பதை உலகுக்குக் காட்டினான் பகவான்.  நாராயணனின் திருஅவதாரம் ஸ்ரீராமன் என்பதை மீண்டும் ராமாயணத்திலே பார்க்கிறோம்.
ஸ்ரீ ராமபிரானைப் பாதுகையின் மேல் ஏறி நின்று, அந்தப் பாதுகையைத் தமக்கு தந்தருளும்படி கேட்கிறான் பரதன்.  பரதன் கேட்டது போல வசிஷ்டரும் பகவானின் பாதுகைகளைக் கேட்டதாக ராமாயணத்தில் வருகிறது.
சுவாமி தேசிகன் அந்தப் பாதுகையைப் பார்த்தே கேட்பது போல் பாடுகிறார்.  "தந்தைக்கு சமானமான அண்ணனின் பாதுகையைக்  கேட்டு வாங்கி பரதன் பூஜை பண்ணியது சரி.  ஆனால் வசிஷ்டர் உன்னைக் கேட்டாரே.  அவர் எதை மனத்தில் வைத்துக் கொண்டு கேட்டார், நீயே சொல்லு?"
வசிஷ்டருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?  பாதுகையின் மேல் நிற்பவன் சாஷாத் ஸ்ரீன் நாராயணன் என்பது தெரியாதா?  அவனே ராமனாக அவதரித்திருக்கிறான் என்பது தெரிந்துதான் அவர் அப்படிக் கேட்டார்.  
தேரெழுந்தூர் ஸ்ரீமத் ஆண்டவன், தமது பாதுகா சஹஸ்ரத்திலே இதை அழகாக வியாக்யானம் பண்ணுகிறார்.  
முதலில் விச்வாமித்ரர் வந்து ராமனை யார் என்று காட்டிக் கொடுத்தார்.  அது எந்த சந்தர்ப்பம் என்றால், விச்வாமித்ரர் ராமனைத் தம்முடன் காட்டுக்கு அனுப்பச் சொல்லிக் கேட்டபோது தசரதர் தயங்கினார் அல்லவா? அப்போது, "உனக்கே உன் மகனின் பராக்கிரமம், மகிமை தெரியவில்லை.  பகவான் நாராயணனின் திரு அவதாரம் அவன்" என்று சொல்லிக் கொடுத்தார்.
பிறகு ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது சர்கம் -  எட்டாவது சர்கத்தைப் படித்துவிட்டு, ஒன்பதாவதைப் படிக்காமலே பத்தாவது சர்கத்துக்குப்  போகலாம் - தொடர்ச்சி விட்டுப் போகாது... கதைக்குப் பங்கம் வராது.  ஆனால் ஒன்பதாவது சர்க்கத்திலே முக்கியமான விஷயம் இருக்கிறது. ராமாயணத்திலே ரொம்ப முக்கியமான விஷயம் இது.  அது என்ன விஷயம்?
சரண்ய தம்பதிகளான ராமரும் சீதையும் பேசுகிறார்கள்.  ராமன் சில இடத்திலே பேசுகிறான்.  சீதை வேறு இடங்களிலே பேசுகிறாள்.
நாம் என்ன செய்யவேண்டும் என்றால், இரண்டு நோட்டுப் புத்தகங்களை வாங்க வேண்டும்.  ராமன் பேச்சை ஒரு புத்தகத்திலும், சீதையின் பேச்சை இன்னொன்றிலும் தனித் தனியாக எழுத வேண்டும்.  பிறகு இரண்டையும்  ஒப்பு நோக்கிப் பார்த்தோமானால், இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். மாறுபட்ட கருத்தே இருக்காது!  இதில் சீதாப்பிராட்டி ராமனைப் பார்த்துப் பேசுகிறாள்... ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறாள்.
"தாங்க முடியாத மூன்று விசனங்கள் இந்த உலகத்திலே உண்டு சுவாமி! பொய் சொல்வது; பிறன் மனையாடல், துவேசம் எதுவும் இல்லாத சமயத்தில் கூட அனாவசியமாக ஆயுதம் தாங்கி நிற்றல்.   இந்த மூன்று குற்றங்களில் முதல் இரண்டும் தங்களிடத்திலே இல்லை;  ஆனால் மூன்றாவது குற்றம் தங்களிடத்திலே இருக்கிறதே! என்கிறாள் சீதை.

"ரே சொல், ஒரே இல், ஒரே வில்" என்று பெயர் பெற்றவன் ராமன்.  பொய் பேசமாட்டான். பிற பெண்களைக் கண்ணெடுத்தும் பாரான் - ராவணனின் பதினாலாயிரம் சைன்யமும் அடித்து வீழ்த்தப் பட்ட நேரத்தில் அவனிடம் போய் அந்தச் செய்தியை சொன்னான் ஒருவன்.  ராவணன் ஆரவாரமாய்ச் சிரித்து கைதட்டினானாம்! "என்ன உளறுகிறாய்!  எல்லோரும் மாண்டு போய்விட்டார்கள் என்றால் நீ மட்டும் எப்படிப் பிழைத்தாய்"? என்று கேட்டானாம்.  செய்தி கொண்டு வந்தவன் சொன்னான், "எனக்கிருக்கிற சாமர்த்தியம் அவர்களுக்கு இல்லையே"!  "அப்படி என்ன தனி சாமர்த்தியம் உனக்கு?  நீ என்ன பண்ணி தப்பித்தாய்"? என்றான் ராவணன்.
"சீதையைத் தவிர வேறு ஸ்திரீயைப் பார்க்காதவன் ராமபிரான்.  அதனால், நான் பெண்ணுடை உடுத்தி ஓடி வந்தேன், இல்லவிட்டால் தப்பித்து இருக்க முடியுமா"?
-எதிர் கட்சியிலே இருக்க கூடியவன் ராமனுக்குத் தந்த நற்சான்று பத்திரம் இது! ராவண குடும்பமே ராமபிரானை இப்படி நிறைய ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறது.


"ந்த நற்குனங்களைத்தான் சீதையும் சுட்டிக்  காட்டினாள்.  முதல் இரண்டு நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற மாதிரி மூன்றாவது ஏன் வாய்க்கப் பெறவில்லை என்றும் கேட்டாள் ... "ஜடாமுடியும், மரஉரியும் தரித்துக் கொண்டு, ஒரு கையிலே தர்பையும் மறுகையிலே சமித்தும் அல்லவா வைத்துக் கொள்ள வேண்டும் சுவாமி? அப்படியில்லாமல், தாங்கள் வில்லையும் அம்பையும் ந்தியிருக்கிறீர்களே?  இது பொருந்தாமல் இருக்கிறதே?
பரமாத்மா அதற்கு பதில் பேசுகிறான்.
"உத்தம குத்தில் பிறந்து, உத்தம குத்தில் வாழ்க்கைப்பட்டதற்கேற்ப நீ பேசினாய் சீதா !  ஆனால், அவசியமேற்பட்டால் நான் உன்னையும் கைவிட வேண்டும்.. என் பிராணனாக, என் உடலுக்கு வெளியே நடமாடும் லட்சுமணனையும் உதற வேண்டும்.  என் திருவடி பற்றினவர்களைக் காப்பதற்காக, அவசியமானால் அப்படிச் செய்யத்தான் வேண்டும்" என்கிறான்.
அந்த வார்த்தையை முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டாளாம் சீதை!  சீதாபஹரணமே அதனால் தான் சாத்தியமாயிற்று!  ராமனின் இந்த வார்த்தை நிரூபணமாக வேண்டும் என்பதற்காகத்தான் சீதை அவனை விட்டு பிரிக்கப்பட அனுமதித்தாள்.  அவள் மட்டும் அப்படி நினைத்திருக்காவிட்டால் ராவணனால் அவளை பகவானிடமிருந்து பிரிக்க முடியுமா?  அந்த திவ்ய தம்பதிகள் இணைந்த சிந்தனையால் அந்த நிகழ்ச்சியை சங்கல்பித்தார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.  அதோடு, அப்படியொரு சொல் ராமனிடமிருந்து வெளிப்பட்டதே அவன் பகவான் நாராயணன்தான் என்பதைத் தெளிவாக மீண்டும் உணர்த்துவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டுத்து கிஷ்கிந்தா காண்டத்திலே தாரை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், வாலி யுத்தம் செய்கிறான்.  அப்புறம் ராமபாணத்தால் வீழ்த்தப்பட்டு அவன் கிடப்பதைப் பார்த்து அவள் ராமனை நோக்கிச் சொலகிறாள்:
"தாமரைக்  கண்ணன் நீ.  உன் நேத்திரமே உன்னை பகவான் நாராயணன் என்று காட்டிக் கொடுக்கிறது. சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்படுகிற எட்டு குணங்களையும் உடையவன் நீ" என்று தாரை பகவானாகவே ஸ்ரீராமனைக் கொண்டு பேசுகிறாள்.
யுத்த காண்டத்தில், விபீஷணன்  ராவணனோடு உரையாடும்போது இந்த விஷயம் மீண்டும் உறுதியாகிறதுராவணன் என்ன சொல்கிறான்: "விபீஷணா! எனக்கு நன்றாகத் தெரியும்நான் முற்றிலும் உணர்கிறேன் - அவனே ஸ்ரீமன் நாராயணன்.  ஆனால், என்னோடு கூடவே பிறந்த குணம் என்று ஒன்று இருக்கிறது பார்.. யாருக்கும் வணங்காத குணம். அதனால் தான் நான் பணியாமல் இருக்கிறேனேயொழிய அவனே நாராயணன் என்பது தெரியும்!"

ராமாயணத்திலே ஜெயித்தது ராமனா? ராவணனா? என்று தெலுங்கு கவி ஒருத்தர் அலசுகிறார்.  ராவணன் தான் ஜெயித்தான் என்கிறார்.  "யார் வந்தாலும் ரட்சிக்கிறேன்" என்கிறான் ராமன்; "ஒருத்தருக்கும் தலை வணங்க மாட்டேன்" என்றான் ராவணன்.  "இறுதி வரைக்கும் அப்படியே இருந்தவன் ராவணன்தானே " என்று ஹாஸ்யம் பண்ணுகிறார்!
ஆனால், அந்த ராவணன் வீழ்ந்த போதும் வந்து நின்று ரட்சித்தான் பரமாத்மா.  ராவணன் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து மண்டோதரி புலம்புகிறாள்:
"நல்லது பண்ணியவன் நல்லதை அடைகிறான்.  தீமை செய்தவன் தீயதையே அடைகிறான்.  விபீஷணன் நல்லதை அடைந்தான்.  நீங்கள் இப்படிக் கெட்டுப் போய்விட்டீர்களே" என்று அவள் அரற்றுகிறபோது ராமன் எதிரே வந்து நிற்கிறான்.  வாலியின் எதிரே வந்து நின்றது போலவே வந்து நின்று ரட்சிக்கிறான்.
"இதோ  இருக்கிறானே, இந்த ராமன் பரமாத்மா" என்று மண்டோதரியைப் பேசவைக்கிறான்.
ராமாயணத்தின் 24,000 சுலோகங்களிலே வேறு எந்த இடத்தில் தேடினாலும் இந்த வார்த்தை கிடைக்காது!  பரமாத்மா - இந்த ஒரு இடத்தில்தான் வருகிறது அந்த வார்த்தை.  மகா பதிவிரதையான மண்டோதரியினிடத்திலே பகவானால் தன்னை மறைத்துக் கொள்ள முடியவில்லை!
க்னிப் பிரவேச கட்டத்தில் பாருங்கள், சீதை அக்னிக்குள் இறங்க இருக்கும் சமயம் அங்கே ஈஸ்வரன் எழுந்தருளியிருக்கிறார்.  ப்ரும்மா வந்திருக்கிறார்.  இந்திராதி தேவதைகள் வந்திருக்கிறார்கள்.  "அக்னியில் விழக்கூடிய சீதையைத் தடுத்து நிறுத்தாமல் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாயே.. உன்னை நீ உணரவில்லையா"? என்று ராமனிடம் கேட்கிறார்கள்.  அதற்குப் பரமாத்மா சொல்கிறார். 
"நன்றாக உணர்ந்திருக்கிறேன்.  நான் மனிதன்.  தசரதன் பிள்ளை ராமன்" என்று.
"நீ மனிதனா?  நீ யார் என்பதை நாங்கள் சொல்கிறோம்!  விஷ்ணு நீதான்! கிருஷ்ணன் நீதான்! புருஷ சூக்த பிரதிபாத்ய தேவதை நீதான்" என்று அங்கே அழுத்தம் திருத்தமாய் வேதலோகமே சொல்கிறது.
இப்படியாக, பால காண்டத்திலே ஆரம்பித்து ஒவ்வொரு காண்டத்திலும் பரமஸ்பஷ்டமாக ராமனை பகவான் என்று சொல்லியிருக்கிறது.
இதை கூரத்தாழ்வான் ரொம்ப நயமாகச் சுட்டிக் காட்டுகிறார்.  "ஹே  ராமனே! சீதையைக் காணோம் என்றதும் - ஏ  மரமே நீ சீதையைப் பார்த்தாயா?  மட்டையே அவளைக் கண்டாயா" என்று புலம்பி அலைந்த நீ, ஜடாயுவுக்கு மட்டும் மோக்ஷம் கொடுக்க முன்வந்தாயே! அத்தனை நேரமும் உன்னை ஆட்டி வைத்த அஞ்ஞானம் அந்தக் கணத்திலே எங்கே பறந்து போனது!  அந்த நிகழ்ச்சியே தெளிவாகக் காட்டி விடுகிறதே நீதான் பரமாத்மா என்று".
பரமாத்மா பரமஸ்பஷ்ட:
ஆகவே, விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சப்தமான விச்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிற ஸ்ரீமன் நாராயணன் தான் ஸ்ரீராமன் என்றாகிறது.  விச்வ சப்தத்தால் சொல்லப்படுபவன் ராமன் என்றும் ஆகிறது. 















(தொடரும்)

Friday, January 10, 2014

PART -1, Chapter - 30

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம்30
ஸ்ரீராமனின் குணா இயல்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.  இதரர் நலனையும் தன்னலனாகவே கருதக் கூடியவன் அவன்.  இங்கேயிருந்து அணை  கட்டி இலங்கைக்குப் போக வேண்டும். விபீஷணனைக் கூப்பிட்டுப் பரமாத்மா கேட்கிறான்.  "உங்க ஊருக்கு போகணும்னா, இவ்வளவு பெரிய சமுத்திரம் குறுக்கே இருக்கறதே.. என்ன பண்ணலாம்?"  உடனே விபீஷணன் சொல்கிறான், "ஹே ராகவா! சமுத்திரராஜனிடத்திலே சரணாகதி பண்ணு, அவனே வழி காட்டுவான்".  இவன் சரணாகதி பண்ணிதாலே, பகவானையும் அதே மாதிரி சரணாகதி பண்ணும்படி சொன்னான் விபீஷணன்!
பகவானுக்குக் கொஞ்சம் யோசனை, "நம்மைப் போய்ச் சரணாகதி பண்ணச் சொல்கிறானே, இவன் பண்ணினதால் தான் நாமும் பண்ணவேண்டும் என்கிறான்".
ஆனால் பரமனுக்கு விபீஷணனுடைய உள்ளத் தூய்மை புரிந்திருந்தது.  சரணாகதி பண்ணினால் பலன் ஏற்படும் என்பது அவன் அனுபவத்தில் அறிந்த உண்மை.  அதனால் பகவான் அப்படி சரணாகதி பண்ணலாமா?  அவ்வாறு அவனைப் பண்ணும்படி சொல்லலாமா?  கூடாதா? என்கிற கேள்விகளெல்லாம் அவன் மனத்தில் எழவேயில்லை... இதை பகவான் அறிந்திருந்தான்.  விபீஷணனின் உள்ளத் தூய்மையை மதித்து அவனும் சரணாகதி பண்ணினான்.  
இங்கு ஆசார்யர்கள், விபீஷணன் எவ்வளவு நல்லவன் என்கிறதைக் காட்ட ஒரு கதை சொல்லுவார்கள், வேடிக்கையான கதை.
ரொம்ப பரமைகாந்தியாக ஒருத்தர். பாவம்! லௌகீகமே தெரியாது அவருக்கு!   ஆசார அனுஷ்டானங்களைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்.  வாசல் திண்ணையை விட்டு எங்கும் போய்  அறியார்.  நித்தியம் அந்தத் திண்ணையிலேதான் படுத்து உறங்குவார்.  ஒருநாள், அப்படிப் படுத்துத் தூங்கப்போன சமயம். அவருடைய தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்திய வெள்ளிச் செம்பு.. அதைத் தலைமாட்டிலே வைத்துக் கொண்டு படுத்திருந்தார். அங்கேயிருந்து அவருடைய தர்மபத்தினி வந்து சேர்ந்தாள்.  வந்து, "சுவாமி! இப்படிப் படுத்துண்டிருக்கீரே! நிராதரவா, தலைமாட்டிலே வெள்ளிச் செம்பை வைத்துண்டு படுத்திண்டிருக்கீரே.. உள்ளே வைக்கிற, பூட்டி வைக்கிற வஸ்துவே திருட்டுப் போய் விடுகிறதே.. இப்படிப் பந்தோபஸ்து இல்லாமல் செம்பை வைத்தால் திருடுபோய் விடாதா? என்றாள்.
"இது திருடு போகாது" என்று உறுதியாக பதில் சொன்னார் அவர்.  "அது எப்படிச் சொல்றீங்க".  "அந்த செம்பப் பாரேன்".  "பார்க்கிறேனே,  தெரியலையே"  "செம்பை நான் எப்படி வச்சிருக்கேன் பாரேன்"  "கவிழ்த்து வச்சிருக்கு.  அப்படி வைத்தால் திருட்டுப் போகாதா, சுவாமி?
அதற்கு அவர் சொல்கிறார்: நிமிர்த்து வச்சால் அதிலே தீர்த்தம் - ஜலம் இருக்கும். கவிழ்த்து வச்சால், அதுலே ஒரு சொட்டு ஜலம்கூட இல்லைன்னு தெளிவாயிடுத்தோல்லியோ, அதனாலே திருட்டுப் போகாது"  "தீர்த்தம் இல்லைன்னா திருட்டுப் போகாதா, சுவாமி?  "இப்ப இந்த செம்பைத் தொடணும்னா கை அலம்பணுமே, கை அலம்ப இங்க தீர்த்தம் எங்க இருக்கு? என்று கேட்டார், அந்த எளியவர். 
இவர் செம்பைத் தொடவேண்டுமென்றால் முதலில் கை அலம்பிக் கொண்டுதான் தொடுவார்.  வருகிற திருடன் கூடவா கை  அலம்பிக் கொண்ட பிறகே செம்பைத் தொட வேண்டும் என்று நியமம் பார்க்கப் போகிறான்? ஆனால் அவர் அப்படி எல்லாம் யோசிக்கவில்லை.  ஆசார சீலர்!  இந்த உலகத்திலே அத்தனை பேருமே தம்மைப் போல ஆசார சீலர்களாக இருப்பார்கள் என்று அவர் நினைக்கிறார்!  அதிலே ஏதாவது தப்பு உண்டோ!  அதே மாதிரிதான், ராமன் சரணாகதி பண்ணலாமா கூடாதா என்கிற விசாரமெல்லாம் விபீஷணனுக்கு ஏற்படவில்லை!
பகவானும் விபீஷணன் சொல்படி சமுத்திர ராஜனிடம் சரணாகதி பண்ணினார்.  மூண்று நாட்கள்.   திருப்புல்லாணியில் சரணாகதி பண்ணியும் சமுத்திரராஜன் வழி விடவில்லை.  உடனே, "சுமித்ரா நந்தனா! வில்லை எடு! இந்த சமுத்திரத்தின் மீது அஸ்திரப் பிரயோகம் பண்ணுகிறேன்!  என்று சொல்லி பாணத்தைப் பிரயோகம் பண்ணினான்.  அதன் பிறகு ஐந்து நாட்களில் சேது பந்தனம் நடந்து முடிந்தது. சின்னக் குரங்கு, பெரிய குரங்கு அதைக் காட்டிலும் பெரியது, கிழட்டுக் குரங்கு என்று அத்தனை குரங்குகளும் வந்து சேர்ந்து உதவின.  அந்தக் குரங்குகள் செய்த பாக்கியம் தான் என்ன?
அவை அத்தனையும் எகிறிக் குதித்துக் கொண்டு சந்தோஷத்துடன் சேதுவை கடந்து போயினவாம்.  மறுபக்கத்தில் என்ன வாழையிலை போட்டு விருந்தா பரிமாறப் போகிறார்கள்...? அதெல்லாம் கிடையாது; பிராணனை விடுவதற்காகத்தான் போகிறோம் என்று அத்தனை குரங்குகளுக்கும் தெரியும்.  பகவான் ராமனுக்காகப் பிராணனை விடுவதற்குத்தான் அத்தனை உத்ஸாஹம். 

லங்கைக்குப் போன சுக்ரீவன் அந்த நாடு எப்படி இருக்கிறது என்று பார்க்க முதலில் கிளம்பினானாம்.  இதற்குள்ளே, வானரப்படை வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, ராவணனும் என்னவென்று பார்க்கப் புறப்பட்டானாம்.  ஆகாச மார்க்கமாய் வருகிறான் ராவணன்.  சுக்ரீவனுக்கும் அவனுக்கும் பெரிய சண்டை உண்டாகிறது.  உடனே சுக்ரீவன் அந்த பத்துத் தலை கிரீடங்களில் இருந்தும் பத்து ரத்தினங்களைப் பறித்துக் கொண்டு விட்டானாம்.  அவற்றை அப்படியே எடுத்து வந்து ராமபிரானுடைய திருவடியிலே வைத்து, நடந்ததைச் சொல்லுகிறான்.  இந்த மாதிரி நிலைமையிலே வேறொரு தலைவனாயிருந்தால் என்ன சொல்லியிருப்பான்?  "சபாஷ்! உன்னைப் போல வீரன் உண்டா? இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கியே" என்று கொண்டாடியிருப்பான்.  ஆனால், ராமபிரான் சுக்ரீவனை இப்படிக் கொண்டாடவில்லை.  சுக்ரீவனைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான் பரமாத்மா: "ஹே சுக்ரீவா!  என்ன காரியம் பண்ணினாய் நீ!  எனக்குத் தெரியாமல் இந்தக் காரியத்தை நீ பண்ணியிருக்கலாமா?  இது நியாயமா"? என்று வருத்தப்படுகிறான்! பகவானுடைய இந்த குணத்தைப் பார்க்க வேண்டும் நாம்.  இதரர் நலனைத் ன் நலனாய் காணக் கூடியவன் அவன்.  அதனால் அவன் சொல்கிறான், "உன்னை இழந்து, சீதை கிடைப்பதானால் அந்த சீதை எனக்குத் தேவையில்லை!".
எவ்வளவு உயர்ந்த குணம் இது!  தன் காரியம் நடந்தால் போதும் என்று நினைக்காமல், எல்லோரும் சௌக்கியமாய் இருக்க வேண்டும்.  தம் காரியமும் கைகூட வேண்டும் என்று நினைக்கிற குணம்.  
இத்தனை உயர்ந்த குணம் படைத்தவன் ஆனதாலே தான் அவனை "விச்வ மூர்த்தி": என்பது. 

விச்வ யோனி: என்பது நரசிம்ஹனுக்குச் சொல்லப்பட்ட திருநாமம்.  "விச்வமாகதா" என்பது வாமன அவதாரத்திலே சொல்லப்பட்டது. 
விச்வ மூர்த்தி:  எல்லார்  நலத்தையும் தன் நலனாகக் கருதக்கூடியவன்  இஷ்வாகு வம்ச திலகனான ராமபிரான் என்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.
தசரதன் அசுவமேத யாகம் முடித்து, புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப் போகிறான்.  எல்லா தேவதைகளும் பாகத்தை வாங்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறார்கள்.   எல்லா தேவதைகளும் நிற்கிற இடத்திலே பகவான் கரூடா ரூபனாக, சங்கு சக்ரதாரியாக ஆச்சரியமாய்த் தோன்றினான்.  இதை வேதம் எப்படிச் சொல்கிறது என்றால், "எல்லா தேவதைகளையும் அங்கங்களாக உடைய பரமாத்மா, அவர்களின் இடையிலேயே தோன்றினான்" என்கிறது. 
தோன்றியவன் என்ன பேசினான்?  "சமஸ்த தேவதைகளும் எம் திருவடியிலே சரணாகதி பண்ணினார்கள்.  அவர்களை ரட்சிப்பதற்காக நான் இந்த பூலோகத்திலே வாசம் பண்ணப் போகிறேன்.  பதினோராயிரம் வருஷ காலம் பூலோகத்திலே இருக்கப் போகிறேன்.  நீங்கள் துக்கத்தை விடுங்கள்.  ராவணனை ஹதம் பண்ணப்போகிறேன்" என்று அபயம் சொல்லி, தசரதனைத் தந்தையாக வரித்து ராமனாக வந்து பிறந்தான்.

இந்த விஷயம் ராமாயணத்திலே ஒளிவு மறைவு இன்றி ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருப்பதினாலே, நாராயணன்தான் ராமனாகப் பிறந்தான் என்பது சந்தேகமற்ற உண்மைஇதை விச்வாமித்திரர் மேலும் ஸ்பஷ்டப்படுத்துகிறார். தசரதனிடம் சொல்லும்போது, "புருஷ சூக்த தேவதை உன் பிள்ளைஅதை நான் உணர்ந்திருக்கிறேன்ஆனால் நீ உணரவில்லை" என்று எடுத்துச் சொல்கிறார்அதற்குப் பிற்பாடு, பரசுராமரின் கர்வ பங்கத்தின்போது, நாராயணனே ஸ்ரீராமனாக அவதரித்தான் என்பது இன்னும் தெளிவாகிறது.
பாலகாண்டம் முடிந்து பரசுராம கர்வ பங்கம் ஆனதுமே... ராமாயணம் முடிந்து போய்விடுகிறது!  அதற்கு மேலே சொல்லப்பட்டதெல்லாம் பகவான் "பதினோராயிரம் வருஷம் இருப்பேன்" என்று சொன்னான் அல்லவா.. அவனுடைய அந்த வாக்குக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியே  தவிர வேறில்லை. 
பரசுராம கர்வ பங்கத்திலேயே ராமாயணம் முடிந்து போவது எப்படி...?  
தட்ச யக்ஞத்தை துவம்சம் பண்ணியவர் பரமசிவன்.  அவரிடத்திலே அத்யந்த பக்தி கொண்ட ராவணன் என்ன பண்ணினான்? அந்த பரமசிவன் எழுந்தருளியிருக்கிற போதே அந்த கைலாச பர்வதத்தைத் தூக்கி ஒரு ஆட்டு ஆட்டினான்!  ராவணனுடைய பலம் அத்தனை பலம்!  அஷ்ட திக்கங்களின் தந்தங்களைத் தன் மார்பிலே தாங்கியவன் அவன்.  குபேரனை ஜெயித்து அவனுடைய புஷ்பக விமானத்திலே வந்து கொண்டிருக்கிறான்.
மாஹிஷ்மதி என்கிற பட்டணத்துக்கு அதிபதியான கார்த்த வீர்யார்ஜுனன் அந்த சமயத்திலே நர்மதை நதியிலே ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறான்.  தன் எல்லையில் ஒருவன் வருவதைப் பார்த்து ஒரு எகிறு எகிறி புஷ்பக விமானத்தில் குதிக்கிறான்.  குதித்து விட்டு பார்த்தால் பத்துத் தலை ராவணன்!
இந்த கார்த்தவீர்யார்ஜுனன் என்ன பண்ணினான்?  கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையிலே அந்தப் பத்துத் தலைகளையும் அப்படியே ஒரு பிடி பிடித்தான்.  குழந்தைகள் தும்பியைப் பிடிப்பது போல, பிடித்த வாக்கில் அப்படியே தூக்கிப்போய் ன் ஊரில் சிறைவைத்து விட்டான்!  கொஞ்ச நாள் கழித்து, பிழைத்துப் போ! என்று ராவணனை வெளியே விட்டு விட்டான் கார்த்தவீர்யார்ஜுனன்.  இல்லாவிட்டால் ராவணன் வெளியே வந்திருக்க முடியுமா?
அஷ்ட திக்கணங்களை வென்றவன், கைலாச பர்வதத்தை அசைத்தவன் ராவணன் என்றால், அவன் பலத்தை என்ன சொல்வதுஅத்தகைய ராவணனையே விரல் நுனியில் பிடித்துப் போனான் கார்த்தவீர்யார்ஜுனன் என்றால் அவன் பலம்தான் எத்தகையதாய் இருக்க வேண்டும்அந்த கார்த்தவீர்யார்ஜுனனின் இருப்பிடம் என்று தெரியாமல் பரசுராமர் அடித்து நொறுக்கினார்அப்படியானால் அவருடைய பலம், முதல் இருவர் பலத்தைக் காட்டிலும் அதிகமில்லையா...?
அப்படிப்பட்ட பரசுராமரை பன்னிரண்டு வயதேயான பாலகன் ராமன் அடக்கி ஆள்கிறான் என்றால்... ராவணனை ஜெயித்தவனை, ஜெயித்தவனை, ஜெயித்து நிற்கிறான் என்றால், அப்போதே, அந்த கணத்திலேயே அவதார பலன் கிடைத்து விடுகிறதல்லவாராவண வதத்துக்காகத்தான் ராமாவதாரம் என்று யாராவது சொன்னால் அது இந்தக் கட்டத்திலேயே முடிந்து போகிறதல்லவா!
(தொடரும்) ...