Saturday, April 19, 2014

PART - 1, Chapter - 43

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 43

பூதேவியும்  தேவதைகளும் சென்று எம்பெருமானிடத்திலே முறையிட்டார்கள்.   "இந்த உலகத்திலே பாரம் அதிகமாகப் போய்விட்டது.  பரமாத்மாதான் ரக்ஷிக்கவேணும்"
பளு என்றால், நிறைய மரங்கள் வளர்ந்து விட்டதால் பளுவா?  இல்லை மலைகளினால் பளுவா?  இல்லை மனித சமூகத்தினாலேயா..?
இவையெல்லாம் பளுவேயில்லை பூமிக்கு.  தினமும் பாவம் பண்ணியபடி பூமிமேலே சஞ்சாரம் பண்ணுகிறோமே, அதுதான் பளு!
இந்த பளுவைத்தான் போய் பகவானிடத்திலே எடுத்துச் சொன்னார்கள் தேவர்கள்.
அவன் தன் உடம்பிலிருந்து இரண்டு ரோமங்கள் - ஒன்று வெள்ளை, ஒன்று கருப்பு - எடுத்துக்காட்டி, "இவை இரண்டும் உங்கள் துயர் துடைக்கும்" என்று அனுக்கிரஹம் செய்தான்.
அவற்றுள் சுவேதம் (வெண்மை) பலராம அவதாரம்.  கிருஷ்ணம் (கருமை) கிருஷ்ணாவதாரம்!  "இந்த இரண்டு ரூபமாய் நான் வந்து உங்கள் துயர் துடைக்கிறேன்" என்பதைத்தான் பரமாத்மா அப்படி உணர்த்தினான்.
விச்வஸ்ய பதி என்று கிருஷ்ணனைக் கொண்டாடுகிறோம்.
பகவான் நாராயணன்தான் வாசுதேவனை வந்து பிறந்தான்.  இந்த பலராம, கிருஷ்ண சப்தங்கள் இரண்டுமே விச்வ சப்தத்தினால்  அறியப்படுகின்றன.  இந்த விஷயத்தில் உபநிஷத் சொல்வது போலவே விஷ்ணு சஹஸ்ரநாமமும் சொல்கிறது.  அதனால்தான் பெரியோர்களுக்கு சஹஸ்ரநாமத்திலே ஒரு ஈடுபாடு.
யார் பிரும்மம் என்று விசாரித்தால், தேவகி புத்ர: என்று சொல்கிறது உபநிஷத்.  அவன் புண்டரீகாட்சன்.  சர்வத்தையும் தாங்கக்கூடிய எம்பெருமான் அவன்.
வேத - வைதிகமான முறை கிருஷ்ணாவதாரத்திலே சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது.  ஒரு யக்ஜமும் பண்ண வேண்டியதில்லை.  இவன் (கிருஷ்ணன்) பிறந்தவாறும், வளர்ந்தவாறும் எண்ணினாலே போதும் - அதுவே யக்ஞப் பிரகரணம்.
யக்ஞத்துக்கு சில நியமங்கள் உண்டு.  அரணியைக் கடைந்து அக்னி உண்டு பண்ண வேண்டும்.  அந்த நாளில் நியமமாய் வாழ்ந்தவர்கள் மந்த்ரத்தைச் சொல்லி கையைக் காண்பித்தாலே அக்னி உண்டாகிவிடும்.
அவ்வாறு உண்டாக்கிய அக்னியை ஒரு நதியைக் கடந்து கொண்டுவர வேண்டும்.  நதிக்கு வலப்புறத்திலே ஒரு யக்ஞவாடிகை அமைக்க வேண்டும்.  அந்த யக்ஞ வாடிகையிலே அக்னியை பிரதிஷ்டை பண்ண வேண்டும்.  அங்கே பல யாகங்கள் பண்ணி, வேறு இரண்டு யக்ஞ வாடிகைகளுக்கு அதே அக்னியைக் கொண்டு போக வேண்டும்.  அந்த மூன்று அக்னியிலும் நடுவிலே ஜொலிப்பவன் பரமாத்மா.
இப்படி விசே-ஷமாக யக்ஞம் பண்ணி அதை சேவித்தவர்களுக்கெல்லாம் பகவான் அனுக்கிரஹம் விசே-ஷமாக ஏற்படுகிறது.
ஆகையினாலே, கிருஷ்ணாவதாரமும், யக்ஞமும் ஒன்றுதான் என்று சுவாமி தேசிகன் சொல்கிறார் - இதை நாம் மனசிலே நினைத்து நினைத்துப் பார்க்க வேண்டும்.  
தேவகி - வசுதேவர் என்கிற அரணிக் கட்டையிலிருந்து கிருஷ்ணன் என்கிற அக்னி உண்டானான்.  அக்னி என்கிற சப்தத்தினால் மறைத்துச் சொல்லப்படக் கூடியவன் பரமாத்மா.
அந்த அக்னியை வசுதேவர் சிரஸிலே எழுந்தருளப் பண்ணினார்.  ஆற்றைக் கடந்து  வந்தார். முழங்கால் அளவுக்கு வடிந்து வருடிக்கொடுத்தாள் யமுனா நதி.  ஆதிசே-ஷேன் ஆயிரம் சிரஸுகளால் குடைபிடித்தான்.
மறுகரை அடைந்து, நந்தகோபனுடைய திருமாளிகையிலே காருகபத்ய அக்னிகுண்டமாகிய நந்தகோபன் மாளிகையிலே, கிருஷ்ணனாகிய அக்னியைப் பிரதிஷ்டை செய்கிறார்.
கிருஷ்ணனுடைய பால லீலைகள் மொத்தமும் அந்த யாகத்திலே மந்திரமாகின்றன.  பால லீலை முழுவதும் மந்திரார்த்தம்தான்!  மந்திரமாக இருந்தால் புரிவதில்லை.  லீலையாக இருந்தால் எல்லோருக்கும் புரிகிறது.  
பத்து அச்வமேத யாகங்கள் பண்ணுகிறார் ஒருவர்.  நூறு என்றே வைத்துக் கொள்வோம்.  உயர்ந்த்த பிறவியை அடைகிறார்.  மறுபடியும் பூலோகத்திலே பிறக்கிறார்.  ஆனால் கிருஷ்ணனின் திருவடியை ஆச்ரயித்தவர்களுக்கு மறுமடியும் பூலோகத்தில் பிறப்பு உண்டோ..?
ஆகையினாலே, எல்லாவற்றைக் காட்டிலும் மேம்பட்டதாய் விளங்கக்கூடியது பகவத்  சரித்திரமானதனாலே, வேதோக்தமாய் விளங்கக்கூடியதை பகவான் தானே நடத்திக் காட்டினதனாலே.. யக்ஞமே அங்கே  இருப்பதனாலே, தேவகி நந்தன: என்று சொன்னாலே இந்த யக்ஞ ப்ரகரணமெல்லாம் நமக்கு நினைவு வர வேண்டும்.
அப்படி நினைவுக்கு வருமானால் கூடவே வருத்தமும் வரும்.  அந்த
யக்ஞமெல்லாம் நம்மால் பண்ண முடியவில்லையே என்கிற வருத்தம்.
உடனே பரமாத்மா நம்மை சமாதனப் படுத்துகிறான்.  "நீ வருத்தப்படாதே!  உன்னைச் சகல பாவங்களில் இருந்தும் நான் விடுவித்து விடுவேன்" என்கிறான்.   அந்த அமிர்தமான வாக்கிலே நமக்குப் பூரணமான விச்வாஸம் இருந்து அவன் திருவடியைப் பற்ற வேண்டும்.

துவரை சொன்னது கர்ம காண்டம்.  அதற்கடுத்தது ஞான காண்டம் என்று ஒன்று உண்டு.    வேதத்தில் பூர்வ பாகம் முழுவதும் கர்ம காண்டம்: பின் பாகம் மொத்தமும் பரப்ரும்மத்தை, அவனுடைய பெருமைகளைச் சொல்வது.
எம்பெருமானின் பெருமையை நேராகப் பேசும் உபநிஷத்தில்  இருக்கிறது.  அது என்னவென்றால், "அன்னவானாகவும் இவன் இருப்பான்;  அன்னாதனாகவும் இருப்பான்" என்று நம்மை அனுக்கிரஹம் செய்யும் வாக்கியம்.
அன்னவான் - அன்னத்தை உடையவன்.   இருக்கிறது.  அதில் விளைந்து வரும் தான்யம் மூட்டை மூட்டையாய் அவன் வீட்டை நிரப்புகிறது.  உடனே வேதம் என்ன சொல்கிறது..?  அன்னத்தைச் சாப்பிடக் கொடுத்து வைத்தவனாகவும் இரு.." என்கிறது.
"அன்னத்தை பெற்றால் மட்டும் போதாது.  அதை அனுபவிக்கவும் செய்ய வேண்டும்" என்கிறது வேதம்.
உடனே நமக்குச் சந்தேகம் வரும் - இதைப்போய் வேதம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?  வீட்டிலே பிரசாதம் தயார் பண்ணினால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதே.  சொல்லிக் கொடுக்காமல் வரும் வித்தை இது ஒன்று தானே"?
நித்யம் சாப்பிடுவதற்குக் கூட நியமம் சொல்கிறது வேதம்: சன்யாசி நித்யம் 8 கவளம் சாப்பிட வேண்டும்.  வானப்பிரஸ்தாச்ரமத்திலே இருப்போர் 16 கவளம் சாப்பிடலாம்;  கிரஹஸ்தாச்ரமார்கள் 32 கவளம்  உட்கொள்ளலாம். இதெல்லாம் ஒரு வேளைக்கு என்று நினைக்கக் கூடாது.  இரண்டு வேளைக்கும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டது இந்த அளவு.
"இப்படி நியமம் சொல்கிற வேதமே சாப்பிடக் கொடுத்து வைத்தவனாகவும் இரு" என்று ஏன் சொல்ல வேண்டும்..?
ஒருவன்னுக்கு சொந்த நிலத்தில் நிறைய தானியம் விளைந்து வந்தாலும், மருத்துவர் கையைப் பிடித்துப் பார்த்துச் சொல்கிறார்:  "சாப்பாட்டை அறவே குறைத்து விடு!  அதுவும் இரவில் அடியோடு உணவு கூடாது.." இப்படிப்பட்டவன் மூட்டை மூட்டையாய் அரிசி வந்து இறங்குவதைப் பார்ப்பதோடு திருப்தியாயிருக்க வேண்டியதுதான்!   அதனால் தான் "நன்றாக சாப்பிடக் கூடிய நிலை கடைசி வரை வைக்கட்டும்" என்று வேதம் சொல்கிறது.  இந்த உபநிஷத் வாக்கியம் கிருஷ்ணாவதாரத்திலே நன்றாகப் பொருந்தியிருக்கிறது.
எப்படி..?
 
ன்னம் என்பது உபநிஷத் எதைச் சொல்கிறது என்றால், பரப்ரும்மத்தைச் சொல்கிறது.  பரமாத்மாதான் அன்னம் - அந்த அன்னத்தைப் பெற்றவனாகவும் இரு;  அன்னத்தை அனுபவிக்க வல்லவனாகவும் இரு என்பது உட்பொருள்.
தேவகி - வசுதேவர்  அன்னத்தைப் பெற்றார்கள் - அந்த கிருஷ்ணனைப் பெற்றார்கள்.  ஆனால், அவனை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லையே!  எல்ல பாக்கியமும் தெய்வ நங்கை யசோதை அல்லவா அடைந்தாள்!  நந்தகோபனும், யசோதையும் அன்னதர்கள்;  தேவகி - வாசுதேவன் அன்னவான்கள்.
"கிருஷ்ணன் அங்கு தோன்றி இங்கு வந்தான்" என்பதை உபநிஷத் எத்தனை அழகாகச் சொல்கிறது பாருங்கள்.
பகவானை அணுஅணுவாக அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  அதை இழந்துவிட்டோமானால் பெரிய வருத்தம்.  அந்த எம்பெருமானை ஒரு கணம் நினைக்காமல் போனாலும் பெரிய விசாரம் - எதையோ இழந்த மாதிரி.  அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டு, "ஒரு க்ஷணம் ஒரு யுகமாக இருக்கிறதே" என்று கோபிகாஸ்த்ரீகள் விசே-ஷமாக அனுபவித்திருக்கிறார்கள்.
தேவகி நந்தனனாகத் தோன்றியவன் சர்வ லோகத்துக்கும் காரண பூதன்;  சர்வ லோகத்துக்கும் நாதன்;  அவன் சரித்திரத்தை நினைத்தொமேயானால் பாவம் நம்மை விட்டுப் போய்விடும்.
ஆகையினால்தான் பரமாத்மா அந்த அவதாரத்தையும் அந்த லீலைகளையும் சேர்த்தே சொன்னான்.
எங்கே அவ்வாறு சொல்லியிருக்கிறான் என்று கேட்டால், பகவத் கீதையிலே நான்காவது அத்தியாயத்திலே:
"ஹே  அர்ஜுனா!  இந்தக் கர்ம யோகம் இப்போது உனக்குச் சொன்னேனே.. அதை இப்போதுதான் முதன் முதலாகச் சொன்னேன் என்று நினைக்காதே.  இதற்கு முன்னாடி அந்த சூரியனுக்கு இதைச் சொல்லியிருக்கிறேன்.  சூரியன் மனுவுக்குச் சொன்னான்.  மனு, அதை இஷ்வாகுவுக்குச் சொன்னான்.  இப்படி, ஒருவர் பின் ஒருவராகச்  சொல்லப்பட்டு, தரிக்கப்பட்டு, கால வெள்ளோட்டத்திலே அது நஷ்டத்தை அடைந்தது"..
"உயர்ந்த விஷயத்தை சொல்பவர்கள்  இல்லாததாலும், உயர்ந்த விஷங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு, சாமான்ய விஷயங்கள் உலகத்திலே நடையாட ஆரம்பித்தன.  உயர்ந்த விஷயங்களை சீடனுக்கோ அல்லது புத்ரனுக்கோதான் சொல்லலாம் - வேறு யாருக்கும் சொல்லக்கூடாது" என்கிறது சாஸ்திரம்.
"அதனால் உன்னை நான் இப்போது பரிபூரண சீடனாகவும், தோழனாகவும் ஏற்று இந்த உயர்ந்த விஷயத்தைச் சொன்னேன்.  இதை ரொம்ப பத்திரமாக நீ கொள்ள வேண்டும்" என்றான் பரமாத்மா.
அர்ஜுனன் சிரித்தான்.  "எதற்கு சிரிக்கிறாய்"? என்றார் பகவான்.
"உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.  நீ புளுகிலே வல்லவன் என்று - இப்போது தான் அதை பிரத்யக்ஷமாய்ப் பார்க்கிறேன்"..
பகவான் பார்த்தான் -"நான் பொய் சொல்கிறேனா?  எதையடா பொய் என்கிறாய்? என்று கேட்டான்.
உடனே அர்ஜுனன் சற்று பின்வாங்கி, "அதைச் சொல்கிற தைரியம் எனக்கு   இல்லை. பொய் என்று சொல்ல முடியாது - நீ சொல்வது எனக்குப் புரியவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்..? என்றான்.
பகவான் திரும்பவும் கேட்டான்: எது புரியவில்லை?
"இப்போது எனக்கு நீ சாரதியாய் இங்கே அமர்ந்திருக்கிறாய்.  இந்த 28வது கலியுகத்திலே என்னுடன் நீயும் பிறந்திருக்கிறாய்... 28 சதுர்யுகங்களுக்கு முன்பு அந்த சூரியனுக்கும் நீயே சொன்னதாகச் சொல்கிறாயே, அது எப்படிப் பொருந்தும்?  அப்போதும் நீ இருந்தாயா..?
இந்த இடத்திலே அர்ஜுனன் இப்படிக் கேட்டதாலே பரமாத்மா தன் சுபாவத்தைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  கர்ம யோகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவன் திசை மாறி விளக்கம் சொன்னான்:
"அர்ஜுனா! எனக்கும் எத்தனையோ ஜன்மாக்கள் கடந்தன.  உனக்கும்
எத்தனையோ ஜன்மாக்கள் கடந்தன.  முந்தைய ஜன்மாக்கள் என்னென்ன என்பதை நீ சொல்ல முடியுமா..?  ஆனால், என்னைக் கேள்.  என் ஜன்ம பரம்பரை அத்தனையையும் சொல்வேன்.  ஆகையினாலே, உன்னை வைத்து என்னை அளக்கிறாயே.. அது எப்படி சரியாகும்?  உன்னைக் கொண்டு என்னை எடை போடாதே!" என்றான்.

தனால் என்ன தெரிகிறது..? அவதார காலங்களிலும் பகவான் பரிபூரண ஞானியாக வந்து அவதரிக்கிறான்.  எப்போதும் பிரகாசிக்கும்படியான ஞானம் அவனுடையது.
அவனுடைய பிறப்புக்குக்  காரணம் கர்ம வினை அல்ல.  ஆத்ம மாயை!  ஆத்ம மாயை என்றால் "விருப்பம்" - அவனுடைய இச்சை என்று பொருள்.  எப்போது வந்து பிறக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது எல்லாம் வந்து பிறக்கிறான் - தர்மம் குறையும் போதெல்லாம் வந்து பிறக்கிறான்.
"ஒரு ஹிரன்ய கசிபு, ஒரு ராவணன் இருக்கும்போது பகவான் அவதாரம் பண்ணினானே.. இப்போது தற்குறிகளாக நிறையப் பேர் இருக்கிறார்களே... ஏன் அவன் அவதாரம் பண்ணக்கூடாது..? என்று கேள்வி கேட்கலாம்.
பதில் இருக்கிறது... 
(தொடரும்)
 
 



Friday, April 18, 2014

PART - 1, Chapter - 42

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 42

சீதா பிராட்டி ராமனைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னாள்:
"என்னைக் காட்டுக்கு அழைத்துக் கொண்டு போக  மாட்டேன் என்கிறீர்களே.. காட்டிலே சிங்கம் இருக்கும், புலி இருக்கும் வேண்டாம் என்கிறீர்களே?  சிங்கத்திடமிருந்தும் புலியிடமிருந்தும் என்னைக் காப்பாற்ற முடியாத அல்ப வீரியரா நீங்கள்..?  சரி போகட்டும்! அதனால் நானொன்றும் தவறாக எண்ணமாட்டேன்.  என் தந்தை தான் உங்களைத் தப்பாகப் புரிந்து கொள்வார்.."  
மாமனார் எதிரில் கௌரவமாக, பிரகாசமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மாப்பிள்ளைக்கும் இருக்காதா?  மாப்பிள்ளை உயர்வாய் இருக்க வேணும் என்கிற எதிர்பார்ப்பு மாமனாருக்கும் இருக்கும் அல்லவா?
அதை மனதில் கொண்டு சீதா பிராட்டி பேசிவிட்டாள்.
உடனே பரமாத்மா அவளிடம் சண்டை போட வேண்டாமோ?  ஆனால் போடவில்லை.  ராமாயணம் கற்றுத் தருகிற தர்மம் என்னவென்றால், புருஷன் மனைவிக்குள்ளே சண்டை வந்து விட்டதென்றால், ஒருத்தர் குரல் கொஞ்சம் உயர்ந்து விட்டதென்றால், மற்றவர் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்.  அவரும் கூச்சல் போட்டால் சண்டை அதிகமாகிவிடும்!  ஆகவே, ராமன் எதுவும் பேசவில்லை.  சீதா பிராட்டியை அழைத்துக் கொண்டு போகத் தயாராகி விட்டான்
குடும்பத்தில் சண்டை கூடாது என்கிற தினசரி வாழ்க்கை தர்மத்தையும் இப்படி ராமாயணம் எடுத்துச் சொல்கிறது.

நிவாம் என்பதும் ஒரு தர்மம்.  ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்தோமானால் அந்த க்ஷேத்திர சிறப்பைப் பெரியவர்கள் கொண்டாடுகிறார்கள்.  அந்த ரங்கநாதரை தினமும் சேவிக்கலாம் இல்லையா?  நித்தியம் கோவிலுக்குப் போக முடியவில்லை என்றாலும் அவன் வரும்போது சேவிக்கலாமே?
கோவில் இருக்கும்படியான தெருவில் நாம் இருப்பது கூட சிறப்பு.  பெரியோர்களை அண்டி நாம் இருக்க வேண்டும்.  நல்ல விஷயங்கள் காதில் விழுந்து கொண்டேயிருக்கும்.
ராமபிரான் எப்போதும் பெரியோர்களை நாடிச்  செல்வான். மகான்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிச் செல்வானாம்.  இது உத்தமமான ஒரு விஷயம்.
நிவாம் என்பதை உறுதிப்படுத்த இப்படி ராமனைப் பற்றி நான்கு சுலோகங்கள் சொல்கிறான் பரதன்.
அந்த சித்ரகூட பர்வதத்தில் லக்ஷ்மியோடு நாராயணன் இருக்கிறான்.  ஆதிசே-ஷனாகிய லக்ஷ்மணன் இருக்கிறான்.  வைகுண்டத்தில் பரமாத்மா இருப்பதைப் போல் இருக்கிறது!  வைகுண்டத்துக்குத் துல்லியமானது சித்ரகூடம்.
பரதன் சொல்கிறான்: ராமனைக் கிட்டே நெருங்கிச் சேவிக்கற வரையில் எனக்கு சாந்தி ஏற்படாது.  ராமனுடைய திருமுக மண்டலத்தை நெருங்கிச் சேவிக்கிற வரை எனக்குத் திருப்தி ஏற்படாது.  ராமனை அபிஷேகம் செய்கிறவரை எனக்குத் திருப்தி உண்டாகாது.  அந்த அபிஷேக தீர்த்தத்தை சிரஸிலே புரோஷிக்கிற வரையில் சாந்தி ஏற்படாது".
மோக்ஷ நிலையில் நான்கு சொல்லப்படுகிறது.  
சாலோக்யம்:  உரிய இடத்தை அடைவது.   ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை அடைந்து அங்கே இருந்தால் சாலோக்யம்.
சாமீப்யம்:   அப்படியென்றால் அருகாமை.  கோவிலுக்குள்ளேயே கைங்கர்யம்  செய்வது என்று கொள்ளலாம்.  பகவானுக்கு சமீபத்தில் வந்து விட்டாலும் அவரை சேவிக்கிற நிலை வரவில்லை.  அவரைச் சுற்றிச் சுற்றி வர முடிகிறது.
சாரூப்யம்: இது பகவானுக்கே கைங்கர்யம் செய்தல்.  அர்ச்சகர் இருக்கிறார்.  அவருடைய காரியம் இது.  ஆனால் அவர் உருகி, பகவானை சேவிக்க ஆரம்பித்தால் கோவிலுக்கு வருகிறவர்களுக்கு யார் சேவை பண்ணி வைப்பார்கள்!  ஆதலால், அவர் ரங்கநாதரை மறக்க வேண்டியவராகிறார்.  நெருங்கி இருந்தாலும் பார்க்க முடியவில்லை.
சாயுஜ்யம்:  அவனைப் பூரணமாக அனுபவித்தல் என்பது அந்த சாயுஜ்ய பதவி.  சாயுஜ்யம் என்றால் பகவானை பக்தன் அனுபவித்தல், பக்தனை பகவான் அனுபவித்தல் என்பது. இரண்டுமே அளவிலும் அனுபவித்தலிலும் சமமாயிருக்கும் என்று பெரியவர்கள் பணித்துள்ளார்கள்.
இது நன்றாகப் புரிய வேண்டுமானால் ஓர் உவமை சொல்லலாம். லௌகிக உதாரணம்!
ஒருத்தர் அரைப்படி புளியோதரை சாப்பிடுகிறார்.  இன்னொருத்தர் ஒரு படி சாப்பிடுகிறார்.  புளியோதரை என்கிற ருசியிலே இரண்டு பேர் சாப்பிட்டதும் சமாமாக இருந்தாலும் அளவில் வித்தியாசம் இருக்கிறது.
ஒருத்தர் அரைப்படி புளியோதரையும் இன்னொருத்தர் அரைப்படி சர்க்கரைப் பொங்கலும் சாப்பிடுகிறார்கள்.  இரண்டுமே அரைப்படி என்று அளவிலே சமானமாய் இருந்தாலும் ருசியிலே வித்தியாசம் இருக்கின்றது.
இருவர் தலா அரைப்படி சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டால்..?  அளவு, ருசி இரண்டுமே சமமாகிறது அல்லவா!  இதுதான் சாயுஜ்யம்!  பக்தனும் பகவானும் சமமான அனுபவம் பெறுதல்.
நிவாஸம், சாமீப்யம், சாலோக்யம், சாயுஜ்யம் என்கிற நான்கு நிலைகளும் பரதனுக்கு ஏற்பட்டன.  வனவாசத்தில் ராமன் இருந்த இடத்துக்கு (நிவாஸம்) ஓடோடி வந்தானாம் பரதன்.  அயோத்தி இருந்த திக்கைத் திரும்பிக்கூடப் பாராமல் வந்தானாம்.
மீண்டும் அயோத்திக்கே திரும்பினானே? என்று கேட்டால், அது பாரதந்த்ரியம் - பகவானுடைய ஆக்ஞைப்படி நடந்தான்.  தன்னுடைய விருப்பத்தினால் அவன் திரும்பவில்லை அயோத்திக்கு.

வ்வாறு ராமாயணத்திலே எங்கு தொட்டாலும் சாஸ்திரப் பேச்சே ஒழிய வேதத்துக்குப் புறம்பான விஷயம் எங்கேயும் கிடையாது.
வியஸனம் (மனத்துன்பம்) என்றுகூட ஒரு தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது.  
எல்லோரும் வியஸனப்பட்டே ஆக வேண்டும் என்பது நியதி.  வியஸனத்தைக் கொடுத்துத் தான் நம்மைத் திருத்துகிறான் பரமாத்மா.
துக்கம் வரும்போது "நமக்கு வராமல் வேறு யாருக்கு வரும்?  பகவான் அந்த துக்கத்தை அனுபவிக்க நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்" என அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  சுகம் வரும்போது துள்ளிக் குதிக்கவும் கூடாது;  துக்கம் வரும்போது துன்புற்று அழவும் கூடாது. துக்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  சுகத்தையும்
பொறுத்துக் கொள்ள வேண்டும்.
துக்கத்தைப் பொறுத்துக் கொள்ளலாம் சரி.  சுகத்தை..?  சுகத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் - சுகம், துக்கம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று பொருள்.  ராமபிரான் அப்படித்தான் அனுபவித்தான்.  காட்டுக்குப் போ என்ற போதும் சரி, இருந்து அரசாட்சி செய் என்றபோதும் சரி, ஒரேமாதிரிதான் இருந்தான்.
ராமன் சீதையைப் பிரிந்து "ஹா சீதே" என்று  அரற்றினானே, அதெல்லாமும் மகான்களுக்கும் வினம் உண்டு என்பதையே காட்டுகிறது.       அப்பேர்ப்பட்ட ராமபிரானுக்கே வியஸனம் வந்ததென்றால் நாம் எந்த மூலைக்கு?  நமக்கு வராமல் வேறு யாருக்கு வியஸனம் வரும்?
பகவானின் வியஸனத்துக்கு இன்னொரு கதைகூட சொல்வதுண்டு.  பூரி நகரத்திலே மட்டும் பகவான் ஜகன்னாத பெருமாள், சிலாரூபமாக இல்லாமல் ஒரு கட்டை வடிவத்திலே இருக்கிறார்.  இதற்கு ஒரு கதை.
பகவானுக்கு முதலில் பூமாதாவோடுதான் கல்யாணம் ஆயிற்று.  பரமசிவன் பார்வதியோடு வந்து தம்பதியை விருந்துக்கு அழைத்தார்.
கல்யாணமானவுடன் விருந்துக்கு அழைக்கும் பழக்கம் அப்போது ஆரம்பித்ததுதான்!
பூமாதேவியைப் பார்த்து, "போகலாமா"? என்கிறார் பகவான்.  அவள் சொல்கிறாள்:  "நீங்கள் போகும் இடத்துக்கெல்லாம் என்னால் கூடவே வர முடியாது. அசலா (அசையாதவள்) என்று பெயர் அல்லவா எனக்கு!   உங்களோடு நான் வந்தால் இந்த சராசரங்கள் அத்தனையும் என்னாவது!  நீங்கள் போய்  வாருங்கள், என்னால் வர முடியாது!"
பரமாத்மா எல்லா இடங்களுக்கும் தனியாகவே போய்  வருகிறான்.  அவனுக்கு அது ரொம்பவும் வெட்கத்தை அளித்ததாம்.  போகும் இடத்தில் எல்லாம் "பத்னி எங்கே?" என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை.
அதனால் சமுத்திர ராஜனின் மகளான லக்ஷ்மியை இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டான் பரமாத்மா.
என்ன ஆயிற்று?  மஹாலக்ஷ்மி ஓர் இடத்தில் தங்காமல் ஓடிக்கொண்டேயிருந்தாள்.  பகவானால் அவளோடு சேர்ந்து ஓடமுடியவில்லை.  மூச்சு வாங்கியதாம்.
"போதும் கல்யாணம்" என்று தீர்மானத்துக்கு வந்து, பிள்ளையினிடத்திலே சில நாள் போய்  இருக்கலாம் என்று கிளம்பினானாம். பிள்ளை என்றால் மன்மதன்.
மன்மதனிடத்திலே  ஒருத்தர் வந்தாராம்.  "இப்போதுதான் மன்மதன் பரமசிவனிடத்திலே அபசாரப்பட்டு, அவனுடைய நெற்றிக்கண்ணுக்கு ஆளாகி பஸ்மமாகிப் போனான்" என்று செய்தி சொன்னாராம்.
பகவானுக்குப் புத்திர சோகம் தாள முடியாமல் போய்விட்டதாம். மாமனார் கிரஹத்தில் போய் ஆறுதல் தேடலாம் என்று  பார்த்தாராம். மாமனார் கிரத்துக்குப் பத்தினியை அழைத்துக் கொண்டு போனால் கெளரவம்.. ஆனால்  இவன் நிலை வேறாக இருந்தது.  இருந்தாலும் பரவாயில்லை என்று புறப்பட்டுப் போனானாம். 
சமுத்திர ராஜனிடம் போனால், பெரிய அலை ஒன்று அடித்து பகவானைத் தூக்கித் தள்ளி விட்டதாம்.  "உள்ளே நுழையும் முன்பே இந்த மரியாதை!  இன்னும் உள்ளே போனால் என்ன நடக்கும்" என்று வருத்தப்பட்டுப் பின்வாங்கினான் பகவான்.
சற்று படுத்து ஓய்வெடுக்கலாம் என்று முடிவு பண்ணி, ஆதிசே-ஷனைப் படுக்கையாக்கி சயனித்தான்.  படுத்தால், ஆதிசே-ஷன் "புஸ் புஸ்" என்று விஷத்தைக் கக்குகிறான்.
பார்த்தான் பகவான்.  "சரி நமக்கு இனி உதவுவார் ஒருத்தரும் இல்லை.  காசிக்குப் போக வேண்டியதுதான்" என்று புறப்பட்டான்.   கருடாழ்வாரின் மேல் ஏறிப் போய்க்கொண்டிருந்தபோதே, பூரி என்கிற ஊரின் மேல் பறக்கையில் கீழே பூமியில் ஒரு பாம்பு ஊர்வது தெரிந்ததாம்.  அதைப் பார்த்த கருடன், "நாராயணா!  கீழே என் ஆகாரம் போகிறது.. அதைச் சாப்பிட நான் போகிறேன்.. உன்னை இங்கே இறக்கி விடுகிறேன்.  நீ நடந்து போய்க் கொண்டேயிரு.  நான் சாப்பிட்டு முடித்துவிட்டு வருகிறேன்" என்று பகவானை அப்படியே கைவிட்டு விட்டுப் போய்விட்டான்!
பகவானும் கருடாழ்வாரின் அந்த வார்த்தையைக் கேட்டு, "நம் நிலை இப்படி ஆகி விட்டதே" என்று தலையில் கை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டானாம்.
அப்படியே தன வீட்டுக் கஷ்டத்தை நினைத்து நினைத்து பகவான் கட்டையாகவே போய்விட்டானாம்! 
இதுதான் பூரியிலே அவன் அப்படிக் காட்சியளிப்பதன் பின்னணிக் கதை. 
இப்படியொரு கதை உருவானதே, வியஸனம்  என்பது யாரையும் விட்டு வைக்காது என்பதை நமக்கு உணர்த்தி சமாதானம் செய்யத்தான். 
பகவத் சரித்திரங்களும், இதிகாசங்களும் வியஸனம் வந்தால் சிரமப்படாதே என்று சொல்கின்றன.  
இந்த தர்மத்தையும் ராமாயணம் சொல்கிறது.  
அதற்கும் மேலே, 64 வகைக்   கலைகளையும் அது சொல்கிறது.!
இவை அனைத்தையும் பெரிய திருமலை நம்பிகள் திருமலை க்ஷேத்திரத்தில் ராமானுஜருக்கு உபதேசம் பண்ணினார்.  

விச்வமூர்த்தியாகிய - விச்வ சப்தத்தை உணர்த்துகிற - ரகுநந்தன் காட்டியவைதான் ராமாயணத்திலே சொல்லப்பட்ட தர்மங்கள்.
(தொடரும்)


 
  
 

 


Wednesday, April 16, 2014

PART - 1, Chapter - 41

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 41

அர்த்த பஞ்சகம் - இது ராமாயணம் உணர்த்தும் இன்னொரு தர்மம்.  வேத, சாஸ்திர புராணங்கள் எல்லாமே அதன் மேல்தான் நிற்கின்றன.
நாம் அடைய வேண்டிய பரப்ரும்மத்தினுடைய ரூபம், வடிவழகு என்ன என்பது நமக்கு நன்றாகத் தெரிய வேண்டும்.  அதன் ஸ்வரூப, ரூப, குண விசே-ஷங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.  
அந்த பரப்ரும்மத்தை அடைய வேண்டிய ஆத்ம ஸ்வரூபத்தையும் - அதாவது நாம் யார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவனை அடைய வேண்டிய வழி எது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு அடைந்த பிறகு ஏற்படக்கூடிய பலன் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவனை அடையவிடாமல்  எது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து விஷயங்களின் (அர்த்த பஞ்சகம்) மேல்தான் வேதமே நிற்கிறது.
இந்த உலகம் இருக்கிறதே... ப்க்ருதி - இது பகவானைத் தெரிய விடாமல் கண்ணை மறைக்கிறது.
கோயிலில் திரை போடுவதற்குக் காரணம் என்ன? அவனுக்கும் நமக்கும் ப்க்ருதி  தடையாக இருக்கிறது என்பதைக் காட்டத்தான்.
அதனால்தான் "தெரதீயகராதா" என்று அந்த ஏழுமலையான் சன்னதியிலே நின்று பாடினார் தியாக ப்ரும்மம்.  அந்தத் திருவேங்கடமுடையான் உருவத்தை மறைத்த திரையைச் சொல்லலை அவர்.. அவனுக்கும் நமக்கும் ப்க்ருதியாகிய திரையைச் சொல்கிறார்.  அந்தத் திரையைத் திறக்கக் கூடாதா?  "உன்னை நான் என்னுள்ளே பார்க்கும் காலம் வருமா" என்று கேட்டார்.
ஆகவே, நாம் எம்பெருமானைப் பார்ப்பதற்குப் பெரிய தடையாக இருக்கிறது இந்த ப்க்ருதி சம்பந்தம்.
அவனை அடைவதற்கான உபாயம் பக்தி, சரணாகதி.. அவனை அடைந்த பிற்பாடு அவன் திருவடியிலேயே நித்ய கைங்கர்யம் பண்ணும் தன்மை உண்டாகும்.
சூரியன் இருக்கிறான்.  ஒளிக்கற்றையை உடையவனாகவும் இருக்கிறான். ஒளியே அவனாகவும் இருக்கிறான்.  அந்த மாதிரி இங்கே ஆத்மா, அறிவுடையதாகவும் இருக்கிறது -   அறிவாகவும் இருக்கிறது.  அதற்கு இருக்கும்படியான ஞானம் மிகவும் உயர்ந்தது.  அந்த ஞானம் பரவி மோக்ஷத்தை அடைந்துவிட்டால், எல்லாவற்றையும் இருக்கிற இடத்தில் இருந்தபடியே ஆத்மா உணர ஆரம்பிக்கும்.
ஆகவே ஆத்ம ஸ்வரூபத்தை உணர வேண்டும்.  அதைத்தான் ராமாயணம் நமக்கு நன்கு விளக்கிக் காட்டுகிறது. (அர்த்த பஞ்சகம்)

கிஞ்சன்யம் என்பதும் ஒரு தர்மம்.  எவ்வளவு தான் நாம்  செய்தாலும் அது பகவானுடைய காருண்யத்துக்கு எதிரில் செல்லாது.   ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு ராஜ பதவி கேட்கிற மாதிரிதான் அது!  மேலும், பகவானிடத்திலே போய், "நான் அதைக் கொடுத்தேனே.. நீ இதைத் தரக்கூடாதா" என்று கேட்கலாமா?   "அன்றைய தினம் நூறு தேங்காய் உடைச்சேனே" என்று ஞாபகப் படுத்தலாமா..!
நாம் எதைத்தான் செய்தாலும் அவன் காருண்யத்திடத்திலே விலை செல்லாது.  அதை நாம் உணரவேண்டும்.
தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் - இவர்கள் எல்லோரும் சொல்லக்கூடிய விஷயத்தை நாம் பார்த்தோமானால், அந்தப் பாசுரங்களைப்  படித்தோமானால், பகவானுக்கெதிரிலே நாம் எதையும் விசே-ஷமாகச்  சொல்ல முடியாது என்பதுதான் தெரிகிறது. பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள்: "நின்னருளே புரிந்திருந்தேன்"  "உன் தயைக்கே நான் பாத்திரம்.. உன் கிருபைக்கே நான் பாத்திரம்.  இப்படி சொல்ல வேண்டுமே ஒழிய, நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன்" என்றெல்லாம் பகவானிடத்திலே பேரம் பண்ணக் கூடாது.

கிஞ்சன்யம் என்பதையும் ராமாயணம் விளக்கிக் காட்டுகிறது.  சரித்திரத்தில் அது காணக் கிடைக்கிறது. விபீஷணன் அதை எடுத்துச் சொல்கிறான்.  பரதன் அதை எடுத்துச் சொல்கிறான்.  இவர்கள் இருவருமே தங்களிடம் எதுவுமே கைமுதல் இல்லை என்று பகவானுடைய சரணாரவிந்தத்தை ஆச்ரயித்தவர்கள்.  அது கிஞ்சன்யம் எனப்படுகிறது.
கிஞ்சன ஈசலாபம் என்பது மற்றும் ஒரு தர்மம்.  பரமாத்மாவை அடைதல் ஒரு தர்மம் என்று சொன்னேன்.  அது அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.  இடையிலே ஒருத்தர் இருக்க வேண்டும்.  அவர்தான் ஆசார்யர்.
ஆசார்யரின் துணையால் தான் அவன் நமக்குக் கிடைப்பான்;  நாம் அவனைச் சென்றடையலாம்.
ஆஞ்சநேயனுக்கு இங்கே ஆசார்ய ஸ்தானம் இருக்கிறது என்று சுவாமி தேசிகன் விவரிக்கிறார்.
ராமன் தன் திருக்கையில் அணிந்திருக்கும்படியான கணையாழி மோதிரத்தை ஆஞ்சநேயன்தான் எடுத்துப் போய்  சீதா பிராட்டியின் கையிலே வைக்கிறான்.
சீதையை அங்கே  ஜீவனாக நம் மனத்திலே உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  பகவத் அனுக்ரஹம் அந்த ஜீவனுக்குப் பூரணமாய் இருக்கிறது. 
மோதிரத்தை ஆஞ்சநேயன் அங்கு கொண்டுபோய்க் கொடுத்தவுடன், சீதாபிராட்டி என்கிற ஜீவனை எம்பெருமான் திருவடியிலே சேர்க்கும் பொறுப்பும் அவனுடையதாகிறது.
ஜீவனானது எப்போதும் பரமாத்மா திருவடியிலே தலைவணங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டத்தான் சீதாதேவி தன் சிரோபூஷத்தை (தலை ஆபரணம்) ஆஞ்சநேயனிடம் கொடுத்து அனுப்பினாள்.
ராமனின் கைவிரல் மோதிரம் பரமாத்மாவின் அபய ஹஸ்தத்தைக் குறிக்கிறது.
சீதையின் சூடாமணி, தலைவணங்கிய நிலையைக் குறிக்கிறது.
இரண்டையும் நடத்தி வைத்தவன் ஆஞ்சநேயன்.

ராமாயணத்திலே மூன்று இடங்களிலே சீதா கல்யாணம் நடக்கிறது!
இப்படிச் சொன்னால் ஆச்சர்யம் ஏற்படுகிறதல்லவா!
பால காண்டத்தில் நடந்த கல்யாணத்தை வால்மீகி விவரித்தார்.
அயோத்தியா காண்டம் முடிகிற பகுதியில், இன்னொரு  கல்யாணம்!  
ங்கே என்றால்.. அனுசூயையிடம் சீதா பிராட்டி தன்னுடைய வாக்கினாலேயே வர்ணிக்கிறாள்.  தன் கல்யாணம் நடந்த விதத்தைச்  சொல்கிறாள். அங்கே இரண்டாவது தடவையாக சீத கல்யாணத்தைக் கேட்கிறோம். 
இந்த இரண்டு கல்யாணமும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்.  ஒருத்தருக்குக்  கல்யாணம் நடப்பதும் ஒருத்தர் தம் கல்யாணத்தை மற்றவரிடம் விவரிப்பதும் அதிசயமில்லை.
ஆனால், சுந்தர காண்டத்திலே நடந்த கல்யாணம் ஆத்ம  விவாகம்.  இந்த ஆத்மா அவனுடையது என்று சமர்ப்பிக்கிற நிலை.  அதை ர் ஆச்சார்யர் பக்கத்திலே இருந்துதான் நடத்த வேண்டும்.  அதைக் காட்டத்தான் சுந்தர காண்டத்திலே சீதாத்மாவை எம்பெருமானின் திருவடியிலே சேர்த்து வைத்தான்.

கிருதக்ருத்யத்வம் என்கிற ஓர் உயர்ந்த விஷயமும் ராமாயணத்திலே சொல்லப்படுகிறது.   கிருதக்ருத்யான் யாரென்றால் தனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்து முடித்தவர்கள்.  விபீஷண பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, கிருதக்ருத்யஸ்ததோ ராம: என்று பகவான் அழைக்கப்படுகிறார்.
ராமபிரான் கிருதக்ருத்யன் ஆனான். நான் சொன்ன உயர்ந்த தர்மத்தை நடத்திக் காட்டியவனான்.
இன்னுமொரு தர்மம் - இப்படியிப்படி இரு.. இப்படியிப்படி இராதே என்று எடுத்துச்  சொல்கிறது. 
அதாவது, வாலி-சுக்ரீவன் போல் இராதே;  ராம-லக்ஷ்மரைபோல் இரு என்கிறது!
வாலி-சுக்ரீவ யுத்தம் நடக்கிறது.  அதைப் பார்த்துவிட்டு லக்ஷ்மணன் சகிக்க முடியாமல் தமையனிடம் வந்து கேட்கிறான்.  இப்படி அண்ணன்-தம்பி சண்டை போடறாளே.. இது நன்றாகவா இருக்கு?
அதற்கு ராமன் சொல்கிறான் பாருங்கள்:  நீ இவர்கள் சண்டை போடுவதை பார்த்து என்னிடம் வந்து கிட்கிறாயா?  இந்த குரங்கின் நிலை-விலங்கின் நிலை உனக்குப் பெரிதாகத் தெரிகிறதே.. இதைப் போல் மனிதர்களும் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?
சொன்னவன் ஒரு படி மேலே போய்ப் பேசுகிறான்:  நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?  எல்லாத் தம்பியும் பரதனைப் போல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?  அப்படி கிடையாது என்கிறான்.
உண்மையில் லக்ஷ்மணனிடம் பேசும்போது என்ன சொல்ல வேண்டும் பரமாத்மா?
எல்லோரும் உன்னைப் போல் என்று நினைத்தாயா? என்றல்லவா கேட்க வேண்டும்.
உன்னைப் போல் ஒரு தம்பி உண்டோ? என்று லக்ஷ்மணனை பரமாத்மா ஏன் ஸ்தோத்திரம் பண்ணவில்லை?  எங்கேயோ இருக்கிற பரதனைப் பற்றி ஏன் லக்ஷ்மனிடத்திலே சொல்கிறான்?
லக்ஷ்மணனும், பரதனுடைய பெருமையை ராமன் பேசும்போது ஆனந்தமாய்க் கேட்கிறான்.  கொஞ்சம் கூட பொறாமையின்றிக் கேட்கிறான்.
கூடவே இருந்து இவ்வளவு கைங்கர்யம் பண்ணியிருக்கிறோம்.  நம்மைச் சொல்லாமல், எங்கோ இருக்கிற பரதனைச் சொல்கிறானே..! என்றொரு எண்ணம் லக்ஷ்மணனுக்கு வரவில்லை.
அந்த பரதனுடைய நிலை என்ன?  அந்தக் குழந்தை எத்தனை சிரமப்படுகிறான்?  பழிச் சொல்லுக்கு ஆளான பரதன், அர்த்த ராத்திரியில் சரயுவில் போய் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவானாம்!
ஏனென்றால், பகலில் மற்றவர்கள் ஸ்நானம் செய்யும் நேரத்தில் போனால், அண்ணாவைக் காட்டுக்கு அனுப்பினவனுக்கு இந்த மகாபாவிக்கு - ஸ்நானம் ஒரு கேடா? என்று யாராவது பேசி விடுவார்களோ என்கிற பயமாம்!
அப்படிப்பட்ட பரதனை நினைத்து நினைத்து பரமாத்மா பஞ்சவடியிலே   உருகினான்.     அவனையே உதாரணமாகச் சொன்னான்.
அந்தக் காலத்திலே ஒரு வழக்கம்.  அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு மத்தியஸ்தத்துக்கு வந்தால் மத்யஸ்தம் செய்பவர்கள் என்ன சண்டை என்று கேட்க மாட்டார்களாம்.  ராமயத்திலிருந்து ஒரு சுலோகத்தைச் சொல்வார்களாம்.  சொன்னவுடனேயே, சண்டை போட்ட இரண்டு சகோதர்களும் கட்டிக்கொண்டு ஒற்றுமையாய்ப் போய்விடுவார்களாம்!
ராமாயணம் அந்த அளவுக்கு நம்மை காக்கிறது.  இப்படி இப்படி இரு.. என்று மட்டுமல்லாமல் இப்படியெல்லாம் இராதே என்றும் கற்றுத் தருகிறது.
(தொடரும்)