Saturday, October 26, 2013

PART -1, Chapter - 26

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 26

ஓலைப் பெட்டியில் இருந்த பூணூலை எடுத்து, மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் அந்த ஏழை பிராமணர்.  
"இந்த பூணூல் அப்படி என்ன எடை இருந்து விடப்போகிறது?  பாவம் இது கூடத் தெரியாமல் இவர் அதன் எடைக்கு நிகராகப் பொருள் கொடுத்தால் போதும் என்கிறாரே" என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டான் ராஜா.
ஒரு காசை எடுத்துத் தட்டிலே போட்டான்.  அந்தத் தட்டு கூடத் தாழவேயில்லை!  இரண்டு காசுகள் போட்டான்... பத்து... எவ்வளவு போட்ட போதும் அசையாமல் நின்றது.  தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி பூணூலுக்கு நிகராக எடை போட்டுப் பார்த்தான்.  அப்போதும் அதன் இணையை எட்ட முடியவில்லை.   இரத்தின கிரீடத்தை எடுத்து  வைத்தான். "என்னிடம் இருக்கிற மொத்தத்தையும் எடுத்து வச்சுட்டேன்" என்கிறான்.

உடனே அந்த நாட்டின் மந்திரி போய், ராஜாவின் காதோடு சொன்னான்; "அவசரப்பட வேண்டாம்!  இந்த பிராமணரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாளைக்குத் திரும்பவும் வரச் சொல்லுங்கள்..."
ராஜாவும் அந்த உத்தமரைப் பார்த்து, "நீங்கள் நாளைக்கு வந்தால் இந்த நூலுக்கு நிகரான எடையில் செல்வத்தைத் தருகிறேன்" என்றான்.
பிராமணர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தார்.  "இப்படி பூணூல் எடைக்கு மேல் வாங்கிக்கலை என்று சொல்லி விபரீதத்திலே மாட்டிக் கொண்டோமே" என்று அவருக்கு ஒரே பயம்.
அந்த பயத்துடனேயே புறப்பட்டுப் போனவர் மறுநாள், "சிரச்சேதம் பண்ணி விடுவானோ அரசன்...? என்கிற பயத்துடனேயே திரும்பி வந்தார்.

தராசு கொண்டு வரப்பட்டது.  பூணூலை வைத்தார் அந்தணர்.  ராஜ ஒரு காசை எடுத்துப் போட்டான்.  உடனே பூணூல் தட்டு மேலே போய்  விட்டது.
"அதே நூல்தான், அதே  தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நடந்தது?  நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது?  ராஜ மந்திரியை அழைத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.
மந்திரி அதற்கு விளக்கம் சொன்னான்.
நேற்று அவர் கொண்டு வந்தது யக்ஜோபவீதம்.  யக்ஜோபவீதம் பரமம் பவித்ரம்னு சொல்வதுண்டு.  மிகவும் புனிதமானது அது.  அதற்கு நிறை காண முயல்வதே தப்பு.  நமக்கெல்லாம் ஆத்மா என்று பெயர்.  பகவானை மட்டும் பரமாத்மா என்று "பரம" - "உத்தமமான"  என்கிற அடை மொழி சொல்லி அழைக்கிறோம்.  அதே அடைமொழி இந்த யக்ஜோபவீதத்துக்கும் சொல்லப்படுகிறது.  அவ்வளவு பவித்ரமானதாக அது இருந்ததினாலேதான் ராஜ்யத்தையே எடை கொண்டது.  ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய்  விட்டது.  அதனாலே சுலபமாக அதை எடை போட்டு விட்டோம்.
"ஏன் போனது அதனுடைய பவித்ரம்" என்று கேட்டான் அரசன்.
"பூணூலைத் திரிப்பவர்கள் (தரிப்பவர்களும்) நியமங்களில் இருந்து தவறவே கூடாது.  ஆனால், இந்தப் பெரியவர் தமது பயம் காரணமாக இன்றைக்கு அந்த நியமங்களைச் செய்யவில்லை.  அதனாலே தான் அதன் பவித்ரம் போனது"


நியமமாகச் செய்யப்படும் பூணூலின் மகிமையைச் சொல்வது இந்தக் கதை.  சர்வமேன்மை பொருந்திய பரம பவித்ரமான யக்ஜோபவீதம் பகவானுக்கு வாமன அவதாரத்தின் போது அணிவிக்கப்பட்டது.  சூரியனே அவருக்குப் பிரம்மோபதேசம் பண்ணினார் என்று சொன்னேனில்லையா...? பார்வதி தேவி  வந்து அவருக்கு முதல் பிட்சை இடுகிறாள்.  பலாச தண்டத்தை பகவானின் கையிலே தருகிறார்கள்.
பலாச தண்டம் என்பது என்ன...? தண்டம் என்பது சந்நியாசிகளின் கரத்தில் கொடுக்கப்படும் கோல்.   உபநயன காலத்தில் பலாச மரத்தின் கிளையை இப்படி 'வடு'வின் கையில் கொடுப்பதுண்டு.
ஏன் பலாச மரத்தின் கிளையைக் கொடுக்க வேண்டும்?  வேறு மரத்தின் கிளையைக் கொடுத்தால் என்ன என்று கேட்டால் அதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.
வேத வித்துக்கள் பலர் ஒரு சமயம் பாலச மரத்தடியில் கூடினார்கள்.  அங்கே அமர்ந்தபடி காயத்ரி மந்திரத்தை ஓதி அதன் மகிமையைப் பேசினார்கள்.  இதைக் கேட்டுக் கொண்டே இருந்த பலாச மரத்தின் வட்டமான இலைகள் மூன்று மூன்று கூறுகளை உடைய இலைகளாக வடிவத்தில் மாறிவிட்டன.  காயத்ரி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு.  அந்த மந்திரத்தைக் கேட்டதும் அதன் மூன்று பாகங்களையும் தன் இழையிலேயே காட்டியது பலாச மரம்!  அதனால்தான் பலாச தண்டத்தைக் கொடுக்கும் வழக்கம் உண்டாயிற்று.
"மாயா வாமனனே மதுசூத நீயருள்வாய்" என்று "வாமனனையும், மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்று கண்ணனையும் பாடுகிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மாயன்தான் மூவுலகளந்த திரிவிக்கிரமனாய் விச்வரூபம் எடுக்கவிருக்கிறான்.

விச்வ சப்தத்துக்குரிய இந்த மாயன், நர்மதா நதி தீரத்திலே, பிரஹலாதனுடைய பேரனான பலி சக்ரவர்த்தி செய்த அசுவமேத யாகத்துக்கு வருகிறான்.
யக்ஞ சம்ரக்ஷகன் அந்த பரமாத்மா.  சிரார்த்த சம்ரக்ஷகன் என்றும் அவனைச் சொல்வதுண்டு.  சிரார்த்தம் பண்ணும்போது ஸ்ரீ மகாவிஷ்ணும் ஆவாஹயாமி என்று அவனை ஆவாஹனம் பண்ணுகிறோம்.  எனவே அவன் சிரார்த்த சம்ரக்ஷகன் ஆகிறான்.
சிரார்த்த சம்ரக்ஷகனாக மட்டுமா - அவன் இருக்கிறான்?  எல்லாவற்றுக்கும் சம்ரக்ஷகன் அவன்தான்  சர்வதா ரக்ஷகன்.  எப்போதும் ரக்ஷிக்கிறவன்.  சர்வத்ர ரக்ஷகன் - எங்கும் ரக்ஷிக்கிறவன்!
இதை உணர்த்த வேடிக்கைக் கதை ஒன்று சொல்வார்கள்.  ஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்;  "அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும்.  அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்" என்றார் அவர். 
25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை!  மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம்!  அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார்.  எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்...!  திரவிய ரக்ஷணம்.  இவரே ஒரு ரக்ஷகர்.  அப்புறம் பரமாத்மா...? சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.
இது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல்!  உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன்.  அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா...? நினைக்கத்தான் முடியுமா?  அவன் தான் நம்மை எப்போதும்  ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.
பராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் - பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.  உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்:  "வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா?  புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா?  எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்?  அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க!  ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே... பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்?"
"அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா" கேட்டார் பட்டர்.
"ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்"
பார்த்தார் பட்டர்.  "இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன்.  காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர்.  கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார்.  கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.
பட்டர் கேட்டார்:  "ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா?"
"சாப்பிட்டேன் "
"நன்றாக தூங்கினீரா"?
"தூங்கினேன்".
"எத்தனை மணிக்குப் படுத்தீர்"?
"9 மணிக்கு"
"எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது"?
"ஒரு ஒன்பதரை மணியிருக்கும்".
"எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் "?
"காலை நாலரை மணிக்கு"
"ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா"?
"தூக்கத்திலே யார்தான் உணர்வார்கள்"?
"இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா"?
"தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்"?
"தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம்.  துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம்.  இதில் இருந்து எல்லாம் ந
ம்மைக் காப்பாற்றி அந்த மாத்மா ரட்சிக்கவில்லையா?  இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா"? என்று கேட்டார் பராசர பட்டர். 












 
(தொடரும்)

Friday, October 18, 2013

PART -1, Chapter - 25

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 25

பிள்ளை ரொம்ப துஷ்டன், சதா அப்பா அம்மாவோடு சண்டை போடுகிறவன்.  அப்படிப்பட்ட பிள்ளையை அடி அடின்னு அடிச்சுட்டார் அப்பா! பையன் கோபத்தில் வீட்டை விட்டே போய்விட்டான்.  " அவன் எங்கே போய் அலைகிறானோ?  சாப்பாட்டுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறானோ...? என்று தாயார் கதறுகிறார்.
பசியெடுத்தா, தானா வீடு வந்து சேர்வான்.  ஏன் கவலைப்படறே"  என்று அப்பா சுலபமாகச் சொல்லி விடுகிறார்.
இந்த நேரத்திலே அந்த வீட்டுக்கு வந்தவர் ஒருத்தர், "உங்க பிள்ளையை அந்தச் சத்திரத்து வாசல்லே பார்த்தேன்" என்கிறார்.
உடனே அங்கே போய், குழந்தைக்குப் பசியாற்ற வேண்டும் என்று அம்மா நினைக்கிறாள்.  நேரடியாகப் போய்  உணவைக் கொடுத்தால், அவன் வாங்கிச் சாப்பிட மாட்டான் என்று தெரியும் அவளுக்கு. சத்திரத்து வாசலிலே இட்லி, தோசை போன்றவற்றை விற்கும் ஒரு கடையைப் போட்டாள்.  துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கே அடுப்படியில் உட்கார்ந்தபடி பலகார வியாபாரம் பண்ணினாள்.
மகன் வந்து சத்திரத்து வாசலிலே உட்கார்ந்தான்.  "அப்பா, உன்னைப் பார்த்தால் பசியாகத் தெரியறதே... ஏதாவது வாங்கிச் சாப்பிடேன்" என்றாள் அம்மா.   "என்கிட்டே பணமில்லையே" என்றான் மகன்.  "நிதானமாகக் கொடுக்கலாம்.  கையிலே பணம் கிடைக்கறச்சே கொடுத்தால் போதும்..."  மகன் பசியாறினான்!
மறைந்திருந்து அந்தத் தாயார் மகனுக்கு  ஊட்டினதுபோல, மகாலஷ்மி தாயார் நமக்கு மறைந்திருந்து கொடுக்கிறாள்.  பகவான் சொல்வதை நாம் கேட்காமல் போகும்போது அவன் நமக்கு தண்டம் கொடுக்கிறான்.  தாயார் பரிவு காட்டுகிறாள்.  பிறகு பகவானே நம்மை உய்விக்கறதுக்காக வேறு யார் மூலமாவது அனுக்கிரஹம் பண்ணி விடுகிறான்!  வேதம் சொல்கிறது - பகவான் நேரடியாக உதவாமல் வேறு ஒருத்தர் மூலமாகத்தான் செய்வார் என்று...

மகாபலியின் அட்டகாசம் தாங்காமல் தேவர்கள் துன்பப்பட்டபோது, அதிதி அவனிடம் போய்  வேண்டினாள்.  பகவான் நினைத்திருந்தால் தானே நேரடியாக தேவர்களுக்கு உதவி இருக்கலாம்.  ஆனால், அவன் என்ன பண்ணினான்...? ஓர் உயர்ந்த விரதத்தைச் சொல்லி, அதைப் பண்ணினால் கஷ்டம் நிவர்த்தியாகும் என்றான்!
அந்த விரதத்தைச் செய்து பூஜை பண்ணினாள் அதிதி... அந்த விரதத்திலும், எல்லா யக்ஜங்களிலும் ஆராதிக்கப்படுகிறவன் அந்த நாராயணன் தானே!
பித்ரு தேவதைகளுக்கு நாம் ஆராதனை செய்தால் கூட அது அந்த நாரயனனுக்குத்தான் போய்ச் சேருகிறது.
சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கும் ராஜாவுக்கு சேவகன் சந்தனம் பூசுகிறான்;  பன்னீர் தெளிக்கிறான்.  அந்த ராஜா உடலை மறைத்து அங்கி அணிந்து கொண்டிருக்கிறார்.  அதற்கு மேலே பட்டு-பீதாம்பரம்.  அதற்கும் மேலே இன்னொரு அங்கி!  சேவகன் தடவுகிற சந்தனத்தை அந்த ஆடை, ஆபரணமா ஏற்கிறது?  உள்ளே இருக்கிற ஆத்மா தானே ஏற்கிறது!
அதுபோலத்தான், அதிதி செய்த விரதத்தின் பலன் பகவானையே போய்  அடைந்தது.  அவனே அதிதியின் மகனாய் அவதாரம் பண்ணினான்.
கல்யாண காலத்திலே ஒரு மந்திரம் சொல்வதுண்டு.  கோடி உடுத்தும்போது சொல்வது... இவரே எல்லா ஜன்மாவிலும் எனக்கு பர்த்தாவாக இருக்க வேண்டும் என்று வேண்டும் மந்திரம்.
அன்னியோன்ய தம்பதிகள்-சிந்தையிலும் செயலிலும் ஒன்றுபடுபவர்களின் வீட்டிலே, மஹாலக்ஷ்மி வாசம் செய்வாளாம்.

அன்னியோன்ய தம்பதி என்றால்...? சீதையையும் ராமரையும்தான் முதல் உதாரணமாகச் சொல்லுவார்கள்.
கோதாவரி தீரத்திலே ராமனும் சீதையும்  இருக்கும் நேரம்.  இருவரும் மௌனமாய் இருக்கிறார்கள்.  திடீரென்று ராமன் சிரித்தான்.  அவன் ஏன் சிரித்தான் என்று சீதபிராட்டிக்குச் சந்தேகம் வந்தது.  ஆனால் கேட்கத் தயக்கம்.  மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.  சற்று தூரம் நடந்து போனதும் சீதை சிரித்தாள்.  அதைப் பார்த்துவிட்டு ராமன் கேட்டான்.  "சீதா! எதற்குச் சிரிக்கிறாய் நீ"?   அவர் இப்படிக்  கேட்டதும் சீதைக்குத் தைரியம் வந்ததாம்.
"நீங்கள் எதற்குச் சிரித்தீர்கள்?  அதை முதலில் சொல்லுங்கள்" என்றாள்.
"நீதான் முதலில் சொல்ல வேண்டும்".  "அதோ அப்படிப்  பாருங்கள்".  சீதை சுட்டிய திசையில் ஒரு யானைக் கூட்டம்.  அந்த யானைகள்  எல்லாம் ராமனின் கம்பீரமான நடையைப் பார்த்து விட்டு, தங்களின் நடையை எண்ணி வெட்கம் கொண்டனவாம்.  "அதைக் கண்டுதான் சிரித்தேன்" என்றாள் சீதை.
உடனே ராமன் சொன்னான், "நானும் அதே காரணத்துக்காகத்தான் சிரித்தேன்.  சற்றுமுன் நாம் நடந்து வந்த பாதையில் அன்னப் பறவைகளின் கூட்டம் ஒன்று வெட்கித் தலைகுனிவதைக் கண்டேன்.  தாங்கள் நடை அழகிலே உன்னிடம் தோற்றுவிட்டதை எண்ணித்தான் அந்த அன்னப் பறவைகள் வெட்கமுற்றன என்பது தெரிந்தது.  அதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது".
அவனும் சிரித்தான்.  அவளும் சிரித்தாள்!  இருவருக்குமே மற்றவர் சிரித்ததற்கான காரணம் தெரியாது!  ஆனால் இருவருமே நடையைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.  இவர்கள் கருத்தொருமித்த தம்பதி என்றாகிறதல்லவா!
இப்படிக் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்தும் தம்பதிக்கு பகவான் அருள் செய்கிறான்.

யோக சித்தியை அடையும்படியான நிலையை ஒரு தம்பதி விரும்பினர்.  அதற்காக பகவானை நோக்கி இணையாக தபஸ் பண்ணினார்கள்.  பகவானும் அவர்கள் தவத்துக்கு இறங்கி காட்சி கொடுத்தான்.  ஆனால், பகவானுடைய பேரழகைப் பார்த்ததும் அந்த தம்பதியின் மனம் மாறிவிட்டது!  யோக சித்தியைக் கேட்பதற்குப் பதிலாக, "நீயே எங்களுக்குக் குழுந்தையாகப்  பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்டுவிட்டார்கள்.  பகவானும் அவர்களுக்கு அனுக்கிரஹம் பண்ணினான்.  அவர்களுக்குக் குழந்தையாய் அவதரித்தான்.  "பிரச்னிகர்பன்" என்று அவனுக்குப் பெயர் அந்த அவதாரத்திலே!
இப்படி வேண்டித் தவமிருந்து பெற்ற பிள்ளையாகத் தான் அதிதியின் கர்ப்பத்தில் வாமனனாக அவதிரித்தார் பகவான்.  அந்த அதிதியையேதான் பின்னால் தேவகியைப் பிறக்கச் செய்து, அவள் கர்ப்பத்திலே கிருஷ்ணனாக அவதரித்தார்.   (ஆகையினாலே,கிருஷ்ண அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வாமன அவதாரம்.)

ழ்வார்கள் வாக்கிலே வாமன அவதாரம் குறித்தும், கிருஷ்ண அவதாரம் குறித்தும் தான் நிறைய பாசுரங்கள் அமைந்துள்ளன.
வாமன அவதாரத்திலே பகவானுக்கு உபநயனம் நடக்கிறது!  சூரியனே வந்து குழந்தை வாமனனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசம் பண்ணுகிறார்!
இதைக் கேட்கவே எவ்வளவு அழகாய் இருக்கிறது.  அது சரி... பகவான் இங்கே பூமியில் வந்து இப்படி உபநயனம் பண்ணிக் கொண்டான் என்றால் அதற்கு என்ன காரணம்...?  அந்த சம்ஸ்காரம் தொடர்ந்து இங்கே நடக்கணும் என்பதற்காக!  
அந்த வாமன அவதாரத்தை நினைத்து வேண்டிக் கொண்டாலே குழந்தைகளுக்கு சீக்கிரமாய் உபநயனம் ஆகிவிடுமாம்.

நாற்பது சம்ஸ்காரத்திலே மிக உயர்ந்த சம்ஸ்காரம் உபநயனம்தான்.  அந்த உபநயன மந்திரத்திலே என்ன போதிக்கப்படுகிறது?  "கர்மாவைப் பண்ணு", "பண்ணுகிறேன்" என்று பதில் சொல்ல வேண்டும் உபநயனம் செய்து கொள்ளும் சிறுவன்.  "ஆசார்யரிடம் அபிமானமாக இருக்கணும்".  "இருக்கிறேன்"... "ஆசார்யருக்குக் குடை பிடிக்கணும்", "பிடிக்கிறேன்.."  "ஆசார்யர் உயர்ந்த ஸ்தானத்திலே உட்கார்ந்தால் நீ கீழே உட்காரணும்... அவர் உட்காரு என்று சொன்னால் தான் உட்காரணும்", "செய்கிறேன்".  "ஆசார்யருக்கு ஆசார்யர் பக்கத்திலே இருந்தால் அவருக்கு முதல் வந்தனம் பண்ணனும்", பண்ணுகிறேன்".
இவ்வாறு வாழ்க்கை முறையை உபதேசிப்பதுதான் உபநயனம்.  அந்த சமயத்தில் அணிவிக்கப்படும் பூணூலும் பவித்ரமானது. 

பூர்வ காலத்திலே ஒரு மகான் பூணுல் திரிப்பதையே தொழிலாகச் செய்து வந்தார்.  அதைத்  தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.  மந்திரம் சொல்லித்  திரித்து, அதை பகவான் திருவடியிலே வைத்து எடுக்க வேண்டும்.  அப்புறம் ஓலைப் பெட்டியிலே பரம பவித்ரமாக அதை வைக்க வேண்டும்.  வெகு சிரத்தையாய் இதைப் பண்ணி வந்தார் அந்த மகான்.  யாராவது வந்து கேட்டால் அந்த யக்ஜோபவீதத்தை எடுத்துக் கொடுத்து அனுக்கிரஹம் பண்ணுவார்.
ஒரு நாள் அந்த மகானின் பத்னி அவரை வந்து சேவித்தாள்.  "நீங்கள் எப்போது பார்த்தாலும் இப்படிப் பூணூலைத் திரித்துக் கொண்டிருக்கிறீர்களே!  நம் குழந்தைக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா" என்று நினைவு ஊட்டினாள்.
"பக்கத்து தேசத்திலே ஒரு ராஜா, விஷேசமாய் எழுந்தருளியிருக்கிறார்.  அவரைப் போய் உதவி கேட்டால்  வாரிக் கொடுப்பார்.  ஒரு தடவை போய்ப் பார்க்கக் கூடாதா? என்று யோசனையையும் சொன்னாள்.
மனைவியிடம் அவர் உறுதியாக ஒன்றும் பதில் சொல்லவில்லை.  போய்த்தான் பார்ப்போமே என்று அரசனிடம் போனார்.  அவரிடமிருந்து பிரும்ம தேஜஸ் சொட்டுவதைப் பார்த்ததும் அந்த ராஜாவே எழுந்து நின்று விட்டார்.  முதலில் அவரை உட்கார வைத்தார்.
துரியோதனன்  சபையிலே, பகவான் கிருஷ்ணன் நுழையும்போது யாரும் நின்று மரியாதை செய்யக் கூடாது என்று சகுனி உத்தரவு போட்டிருந்தானாம்.  ஆனால் பகவான் நுழைந்ததும் துரியோதனன் தன்னை அறியாமலேயே தானே எழுந்து நின்றானாம்!  அவன் பின்னோடேயே துச்சாதனனும், கர்ணனும் அந்தச் சகுனியும் கூட எழுந்து நின்றார்களாம்! அப்படிப்பட்ட தேஜஸ் பகவானுடையது.
அந்த மாதிரி, ராஜாவும் அந்த மகானின் தேஜசுக்குக் கட்டுப்பட்டு எழுந்தார்.  அவரை அமர்த்தி, "சுவாமி, உங்களுக்கு என்ன வேண்டும்?  இவ்வளவு பிரும்ம தேஜஸோடு இருக்கிறீர்களே!  உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்..." என்றார்.
கேட்டு அறியாதவர் அந்த ஏழை.  எப்படிக் கேட்க வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை.  யோசித்து விட்டுச் சொன்னார் - "நான் ஒரு யஜோபவீதம் (பூணூல்) கொண்டு வந்திருக்கிறேன்.  அதன் எடைக்கு நிகராகத் தங்கம் கொடுத்தால் போதும்.. அதைக் கொண்டு என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவேன்.."
"அது போதுமா?  அதற்கு மேலே வேண்டாமா"?
"போதும்"

தராசைக் கொண்டு வரச் சொன்னான் ராஜா.

(தொடரும்)






Thursday, October 17, 2013

PART -1, Chapter - 24


குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
 
அத்தியாயம் 24
 
கவானைத் தம் முன்னே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய யோகியைப்  பார்க்க ஆளவந்தார் என்கிற ஆசார்யர் வந்தார்.  அவர் வந்த நேரத்திலே யோகி ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார்.  "சரி, இவர் யோக நிலை மாறட்டும், பிற்பாடு பேசலாம்" என்று அவர் பின்னாலே போய்  ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டார் ஆளவந்தார்.
அந்த சமயத்திலேதான் பகவானின் பார்வை யோகியின் பேரிலிருந்து ஆளவந்தார் பேரில் திரும்பியது.  "பகவான் தம் பக்கமிருந்து பார்வையைத் திருப்பி விட்டாரே!, என்கிற அதிர்ச்சியில் யோகியின் மோனம் கலைந்து போனது.  ஒருநாளும் பக்கம் நோக்கி அறியாத பகவான் இன்று பக்கம் நோக்கினது ஏன் என்று மகான் யோசித்து வர, "இங்கே சொட்டை நம்பி வம்சத்திலே வந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா"...? என்று பெருத்த குரலில் கேட்டார்!
அவர் அப்படி கேட்டதற்கு அர்த்தம் என்ன?
நாதமுனிகளின் மகன் சொட்டை நம்பி வம்சத்திலே பகவானுக்கு மிகுந்த அபிமானம் உண்டாம்.   அந்த வம்சத்தை சேர்ந்த யாரேனும் வந்தாலொழிய பகவானின் பார்வை திசை திரும்ப வழியில்லை என்பது யோகியின் கணிப்பு.
அந்த கணிப்பு சரியான கணிப்புத்தான்.  ஏனென்றால் அவர் பின்னாலே வந்து அமர்ந்த ஆளவந்தார் நாதமுனியின் பேரன் ஆவார்.
பகவானின் பார்வை தம் மேல் திரும்பியதும் அந்த ஆளவந்தார் என்ன சொன்னார் தெரியுமா...?
"நான் ரொம்ப சிறியவன்; எளியவன்.  ஆனால் என் உருவத்தைப் பாராதே.. பகவானே,
என்னுடைய தாத்தாவுக்காக என்னை கடாஷித்து அனுக்கிரஹம் பண்ண வேண்டும்..." என்று கேட்டுக் கொண்டாராம்.  

இந்த உலகத்திலே பொதுவாக உறவுகளை உதறிவிட வேண்டும்.  தேக சம்பந்தம் கூடாது என்று நாம் பேசினாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விதிவிலக்கு இருக்கிறது.  உத்தம அதிகாரிகளின், ஆசார்யர்களின் தேக சம்பந்தம் நமக்கு அருள் செய்கிறது என்று ஏற்கிறோம்.
உயர்ந்த ஆசார்யரின் சம்பந்தம் மட்டும் ஏற்பட்டால் எப்பேர்ப்பட்ட உயர்நிலையையும் நாம் அடைந்து விடலாம்.
புண்யாத்மாக்களாயிருந்தாலும் சரி;  பாவாத்மாக்களாக இருந்தாலும் சரி, ஆசார்ய சம்பந்தம் பெற்றால்தான் உயர்ந்த கதியை அடையலாம்.
ஒரு காலத்திலே ஷத்ரபந்து என்று ஒருவன் இருந்தான்.  அவன் திருடுவதையே தொழிலாகக் கொண்டு இருந்தான்.  போகிற, வருகிறவர்களை அடித்துப் போடுவான்.  வழிப்பறி செய்து அவர்களுடிய செல்வத்தை எல்லாம் மூட்டை கட்டித்  தன் வீட்டுக்கு கொண்டு போவான்.  இப்படி அவன் திருட்டுத் தொழில் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள், நாரதர் தம் வீணையை மீட்டிக் கொண்டு அந்த வழியாய் வந்தார்.
"நீ இவ்வளவு தூரம் மூட்டை மூட்டையாய்க்  கட்டிக் கொண்டு போய்  மனைவி மக்களுக்கெல்லாம் கொடுக்கிறாயே... கூடவே இன்னொரு மூட்டை வருகிறதே, அது உனக்கு தெரியுமா...? என்று கேட்டார்.
அவன் மேலும் கீழும் பார்த்தான்.  "அதென்ன மூட்டை சுவாமி? நான் எடுத்துக் கொண்டு போகிற மூட்டையை தவிர வேறு மூட்டை நான் பார்த்ததேயில்லையே, ஒரு நாளும் பார்த்ததேயில்லையே" என்றான்.
நாரதர் சொன்னார்: "அது பார்க்கக்கூடிய மூட்டை இல்லை;  பாவம் என்கிற மூட்டை அது!  இந்தப் பண மூட்டையை எல்லாம் உன் வீட்டிலே கொண்டு போய்க்  கொடுக்கிறாய்;  மனைவி, மக்களும் சுற்றமும் அதைப் பங்குபோட்டுக் கொள்கிறார்கள்.  அவர்களிடம் போய்க் கேள்.  இந்த செல்வ மூட்டை போலவே பாவ மூட்டை ஒன்று இருக்கிறது.  அதையும் அவர்கள் பங்குபோட்டுக் கொள்ளத் தயாரா என்று கேளேன்" என்றார் "சரி சுவாமி; கேட்கிறேன்" என்று புறப்பட்டுப் போனான் அவன்.

ந்தக் கதையைப் படிக்கும்போதே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு.  இவ்வளவு தூரம் வழிப்பறி செய்கிற துராத்மா இப்படிப் பொறுமையாக இருந்து முனிவரின் உபதேசத்தைக் கேட்டு நடப்பானா;  முதலில் அவர் சொல்வதை அவன் பொறுமையாகக் கேட்க வேண்டும்;  அப்புறம் செயல்படுத்த வேண்டும்;  அதன் பிறகு பாடம் கற்றுத் திருந்த வேண்டும்.   இது சாத்தியமா...?
சாதுக்கள், மாகான்களின் தரிசனம், தொடர்பு எப்படிப்பட்டவரையும் மாற்ற முடியும் என்பதையே இக்கதை காட்டுகிறது.
ஒரே கணத்தில் ஷத்ரபந்து சிந்தனை வயப்பட்டான்.  மனம் தணிந்து, பத்னியிடம் போய்க் கேட்டான்.
"பாவ மூட்டையில் பங்கு எடுத்துக் கொள்வாயா"?
மனைவி சொன்னாள்: நீங்கள் பார்த்தா - அதாவது பாரத்தை தாங்குபவர்.  நியாயமாய்ச் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு,  நீங்கள் அக்கிரமமாக சம்பாதித்தால் அந்த பொருளிலே தான் எங்களுக்குப் பங்கே ஒழிய பாவத்திலே பங்கு கிடையாது: என்று சொல்லிவிட்டாள் அவன் குழந்தைகளும் அதையேதான் சொன்னார்கள்!
திரும்பி நாரதரிடம் வந்தான் திருடன்.  நாராயண மந்திரத்தை அவரிடத்திலே உபதேசமாகக் கேட்டான்.  அவனுக்கு மோக்ஷமே கிடைத்து விட்டது!
நாரதர் சம்பந்தம் மட்டும் அவனுக்கு வாய்த்திருக்காவிட்டால், இந்த பாக்கியம் கிடைத்திருக்குமா?

புண்டரீகர் என்று ஒருத்தர்.  "அனந்த பத்மநாபனை எங்கே பார்க்கலாம்" என்று கேட்டாராம் அவர்.   சமுத்திரத்திலே தான் அவர் இருப்பார் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.  உடனே புண்டரீகர் சமுத்திரத்துக்குள்ளேயே நடந்து போக ஆரம்பித்தார்!.   கழுத்து வரை ஜலம் வந்து விட்டது.  மேலே போக முடியாத நிலை.
பார்த்தார் புண்டரீகர்... சமுத்திர ஜாலம் முழுவதையும் இறைத்து எடுத்துவிடலாம் என்று இறைக்க ஆரம்பித்தார்!  அப்போதும் நாரதர்தான் அங்கு வந்து கை கொடுத்தார்.
"இதை இந்தக் காரியத்தை உடனே நிறுத்து,  இப்படி ஜலத்தை இறைத்து அவனைப் பார்க்க முடியாது,  என்னுடன் வா" என்று திருக்கடன்மலை (மகாபலிபுரம்) என்கிற ஷேத்திரத்துக்கு புண்டரீகரை அழைத்துப் போனார் நாரதர்.
அங்கே பார்த்த பெருமாளின் கோலத்தைக்  கண்டு ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார் புண்டரீகர்.  வரக்கூடியவர்களை, "வாருங்கள், வாருங்கள்" என்று வரவேற்கும் தோற்றம், அங்கே எம்பெருமானுக்கு.  அதைக் கண்டு மகிழ்ந்து ஆயிரம் தாமரைப் புஷ்பங்களாலே அர்ச்சனை பண்ணினார் புண்டரீகர்.
கோணலான மார்க்கத்திலே போனவரை மாற்றி, குறுக்கு வழியிலே பகவானிடத்திலே கொண்டு சேர்த்து விட்டார் நாரதர்.  ஆகையால், ஆசார்ய சம்பந்தம் மட்டும் இருந்து விட்டால் எப்பேர்ப்பட்டவரும் உயர்கதி அடையலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ப்படி வழிகாட்டி உயர்கதி அடையச் செய்யவல்ல ஆசார்யர்களுள் ஒருவராக இருந்தார் சுக்ராச்சார்யார்.
மாண்டு போனவர்களைக் கூட எழுப்பி உட்கார வைக்கும் சக்தி அவருக்கு இருந்தது!
"சுகர தசை"என்று சொல்கிறோம்.  அந்த கால கட்டம் ஒருவரது வாழ்க்கையிலே அமைந்தால் எல்லா உயர்வுகளும் அவனுக்கு அந்த நேரத்திலே ஏற்படும்.  அனுகூலமான காலம் அது!
அது போலதான் சுக்ராச்சார்யாரை குருவாகக் கொண்டவ்வனுக்கு அனுகூலங்கள்  அவருக்கு எல்லா மந்திரங்களும் தெரிந்து இருந்தன.  அவற்றிலே ஒரு மந்திரம் ம்ருத சஞ்சீவனி மந்திரம் என்று சொல்லப்படுகிறது.  இது சுக்ராச்சாரியாருக்கு ரொம்ப நன்றாகத் தெரியுமாம்.  தேவ குருவான பிரஹஸ்பதிக்குக் கூட தெரியாதாம் இந்த மந்திரம்.   மாண்டு போனவர்களையும் பிழைக்க வைக்கவல்ல மந்திரம் அது.
இப்படிச் சொன்னால், ஒரு சந்தேகம் வரும்.  மாண்டு போனவர்களை எழுப்புவது ஒரு மந்திரத்தால் சாத்தியமானால் அந்த மந்திரத்தை அறிந்தவர்கள் அதைச் சொல்லி பலபேரின் துயரைப் போக்கலாமே.  அடியேன் போன்றோர் உபன்யாசம் பண்ணுவதற்குப் பதில் இந்த உபகாரத்தைப் பண்ணலாமே என்று கேட்கத் தோன்றும்.
ஒரு விஷயத்தை நன்றாக நாம் கவனிக்க வேண்டும்.  மந்திரம் பலருக்கு தெரிந்து இருந்தாலும் அது பலித்தது சுக்ராசார்யாருக்கு மட்டும் தான்.  வேறு ஒருத்தருக்கும் அது பலிக்கவில்லை!
காரணம்...?
இந்த மந்திரத்தை மிகவும் சிரமப்பட்டு சித்தி செய்துகொண்டார் அவர்.
இப்போது அதே மந்திரத்தை நாம் சொன்னால் கணம் போதவில்லை!  சக்தி போதவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
"இந்திரா ஆச்ராவாயா" என்று யாகம் பண்ணும் போது இந்திரனை அழைப்பதுண்டு.  அப்படி மும்முறை அழைத்தும் அவன் நேரில் வரவில்லையானால் யக்ஜத்தையே முடித்துக் கொள்ள வேண்டுமாம்!  ஏனென்றால், முறையாக முழு மனசுடன் கூப்பிட்டால் அவன் வந்தே தீருவான்.  அவன் வராவிட்டால், போதுமான பலத்துடன் நாம் அழைக்கவில்லை என்றே அர்த்தமாகிறது!
 
பிரும்ம வித்துக்களும் பெரிய மகான்களும் மந்திரத்திலே பூர்ண சித்தி அடைந்தவர்களும் கூப்பிட்டால் தேவதைகள் எதிரில் காட்சி அளிப்பார்கள். மந்திரங்களின் பரிபூரண பலனை அவர்கள் அடைவிப்பார்கள்.  அப்படிப்பட்ட மகான்கள் வரிசையில் வந்தவர் சுக்ராச்சார்யார்.  என்ன ஆச்சர்யம்!  அந்த யக்ஜத்தின் ஹோம குண்டத்தில் இருந்து வில், அம்புராத்தூணி என்று விதவிதமான ஆயுதங்களும் கவசங்களும் வெளிப்பட்டன.  "இவற்றை வைத்துக் கொண்டு நீ உயர்நிலை அடைவாய்" என்று பலி சக்ரவர்த்தியிடம் அவற்றைக் கொடுத்து மந்திரம் ஓதி அனுப்பினார் சுக்ராச்சார்யார்.
 
 அந்த ஆயுதங்களைக் கொண்டு தேவலோகத்தையே சூன்யமாக்கினான் மகாபலி.  அப்படி சமஸ்த தேவதைகளையும் நடுங்கச் செய்யும் சாமார்த்தியம் ஆசார்ய அனுக்கிரகத்தினாலே மகாபலி சக்ரவர்த்திக்கு கிடைத்தது.




(தொடரும்)



Saturday, October 12, 2013

PART -1, Chapter - 23

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 23

விச்வ சப்தத்தினால் அறியப்படக்கூடியவன் வாமனன் என்கிறார்கள் வித்வான்கள்.
வித்வான் என்பவர் யார்...? எந்த மந்திரத்தினால் ஒரு தேவதை பேசப்படுகிறதோ அந்த தேவதையை எதிரில் கொண்டு வந்து நிறுத்தக்கூடியவன் வித்வான்.  மந்திரங்களை வெறுமனே ஒப்பிப்பவன் வித்வான் அல்ல...  பரப்பிரும்மத்தைக் கொண்டு வருவாயா...? காட்டுவாயா...?  அவ்வாறு கொண்டு வந்து காட்டக்கூடியவன் வித்வான்.
நாம் அப்படியில்லை.  பெரியவர்கள் சொல்லித் தந்த மந்திரங்களைத் திருப்பிச் சொல்கிறோம், அவ்வளவுதான்.  அந்தக் காலத்திலேயே அவர்கள் அனுஷ்டித்ததைப் போல் கடும் விரதங்கள் நோன்புகளை நாம் அனுஷ்டிப்பதில்லை.  எல்லா பதார்த்தங்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அன்றைக்கு அந்த வித்வான்கள் உபாசித்து, தேவதைகளைக் கொண்டு வந்து நிறுத்தி வரம் கேட்டார்கள்  அப்படியே கிடைத்து, சுபிட்சம் நிலவியது.
அப்படிப்பட்ட வித்வானின் உபாசனையினாலே பகவான் சர்வவியாபியாய், விச்வவியாபியாய் திரிவிக்கிரமனாய்  அவதாரமெடுத்துப் பரவி நின்றான்.  அந்த விச்வத்தை ஆவிர்பவித்து எவர் யக்ஞம் செய்கிறாரோ அவருக்குப் பூரண பலம் கிடைக்கிறது. 
க்ஞம் செய்ய பலவித ரித்விஜ்கள் இருப்பார்கள்.  அவர்களுக்கு தட்சிணை கொடுக்கப்பட வேண்டும்.  அதைக் கொடுத்தால்தான் யக்ஞம் பூர்த்தியாகிறது.  யக்ஞம் செய்பவர்கள்  எல்லாம் விசாரமில்லாமல் இருக்க வேண்டுமல்லவா...?  அது என்னாச்சு?  இது என்னாச்சு? என்று எண்ணம் வந்தால் யக்ஞம் கெட்டுப் போய்விடும்.
ஆகையினாலே, யக்ஞத்துக்கு ரித்விஜ்களை அழைக்கும்போது, ஒரு பகுதி தட்சிணையை இப்போதே கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியே அழைப்பார்களாம்.  அதை வாங்கி அவர்களும் கிரஹத்திலே வைத்து விட்டு வந்து யக்ஞத்தை நடத்திவிட்டு பிறகு பூரண தட்சிணை வாங்கிக் கொள்வார்களாம்.
லௌகிகத்திலே இதைத்தான் அட்வான்ஸ் என்று சொல்கிறோம்.!
இப்படியிப்படி யக்ஞ கர்மா நடத்த வேண்டும் என்று ஆபஸ்தம்பர் சொல்கிறார்.  எதை தட்சிணையாகக் கொடுக்க வேண்டும் என்றால் குள்ளமான பசுவை கன்றோடு கொடுக்க வேண்டுமாம்!
ஏன்? உயரமான பசுவைக் கொடுக்கக் கூடாதா என்றால், பகவான் வாமன ரூபியான எம்பெருமானை நாம் நினைப்பதற்காகத்தான்  குள்ளமான பசுவாகப் பார்த்து தட்சிணையாகக் கொடு என்கிறது வேதம்!
ஆகையினாலே குள்ளமான பசுவைக்  கொடுக்க வேண்டும்.  அப்படிக் கொடுக்கும் ஒரு பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை வருஷங்கள், இவனுக்கு (கொடுப்பவனுக்கு) சுவர்க்க லோகத்திலே வாசம் கிடைக்குமாம். 
இவ்வாறு குள்ளப் பசுவால் நினைவூட்டப்படுகிற வாமன ரூபியாணவனே உலகத்தை அளந்தவனும் ஆகிறான்.  உலகை அளந்தவனே என்று திரும்பத் திரும்ப அவனைக் கொண்டாடுகிறது வேதம்.  
நர்மதை நதி தீரத்துக்கு விச்வம் போனது என்று சொன்னேன் அல்லவா...? அது வாமன ரூபனாய்த்தான் அங்கே முதலில் எழுந்தருளியது.

வாமன அவதாரம் விச்வ சப்தத்தினால் அறியப்படுகிறது என்று அதன் உயர்வுகளை எடுத்துச் சொல்லும்போது நரசிம்ஹ அவதாரத்தை உயர்ந்ததுன்னு சொன்னீர்களே என்று கேள்வி வரும்.  இனிமேல் சொல்ல போகிற ராமர், கிருஷ்ணர் அவதாரங்களையும் அப்படித்தான் உயர்ந்தவையாகச் சொல்லப்  போகிறேன்.  அதனாலே, வாமன அவதாரமே மகிமை குறைந்தது போய்  விடாது.  எல்லா அவதாரங்களுமே உயர்ந்தவைதாம்.
வாமன அவதாரத்துக்கு வருவோம்.  அந்த அவதார மகிமையைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஆசார்ய (குரு) மகிமை பற்றித்  தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆசார்யரைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை  என்கிறார் சுவாமி தேசிகன்.   பகவானை எப்படியெல்லாம் உபாசிக்கிறோமோ அப்படியெல்லாம் ஆசார்யனையும் உபாசிக்க வேண்டும் என்கிறது உபநிஷத்.
ஆசார்யன் என்றால் யார்...?
நிறைய சாஸ்திரத்தைப் படித்தவர் ஆசார்யன்.  எல்ல வித்யா ஸ்தானங்களும் அவர் நுனி நாக்கிலேயே தாண்டவமாடும்.  எதைக் கேட்டாலும் சொல்லக்கூடியவர்.  நல்ல வாக்கு உடையவர்.
வி
த்யை என்பது நிரந்தரமானது.  பொருள் (செல்வம்) அப்படி இல்லை.  வரும் - போகும்.  நாளை வரப்போகும் செல்வத்தை நம்பி இன்று ஒரு காரியம் பண்ண முடிகிறதா?
இப்படிப்பட்ட நிரந்தரமான வித்யைகள் நிரம்பப் பெற்றதனால் மட்டுமே ஒருவர் ஆசார்ய ஸ்தானம் வகித்து விட முடியாது.  தாம் எடுத்துச் சொல்லும் விஷயங்களை அனுஷ்டிப்பவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.  அப்படி அனுஷ்டிக்காதவர் ஆசார்யராக இருக்கவே முடியாது.
"கிருஷ்ணம் வந்தே ஜகத் கு
ரும்" என்று பிரார்த்தனை பண்ணுகிறோம்.  ஜகத்துக்கெல்லாம் குரு அவன்.  எல்லா சாஸ்திரங்களிலும் குருவாக, பரமாசார்யனாகச் சொல்லப்படுகிறவன் நாராயணன்.   அந்த நாராயணன் கூட கீதாசாரியனாக கிருஷ்ணாவதாரத்திலே உபதேசம் செய்ததை அப்படியே ராமவதாரத்திலே நடத்திக் காட்டினான். 
எனவே, கற்றதை அனுஷ்டித்து நடத்திக் காட்டி பிறருக்கு உபதேசிப்பவ
ன்தான் ஆசார்யன்.  அவர் எதை மனத்தால் நினைக்கிறாரோ அதையே நாவால் சொல்ல வேண்டும்.  எதை நாவால் சொல்கிறாரோ அதையே நடத்திக் காட்ட வேண்டும்.
உடல் ஆரோக்கியத்துக்காக எத்தனையோ மருந்துகளைச் சாப்பிடுகிறோம்.    ஆனால், அதெல்லாம் மருந்தில்லை என்கிறது சாஸ்திரம்.  பின்னே எது நல்ல மருந்து...?
நினைவு, சொல், செயல் என்று மூன்றும் ஒன்றாக வாழ்க்கை நடத்துவதே உயர்ந்த மருந்து.  அப்படியில்லாமல் நினைப்பது ஒன்று, சொல் வேறு, நடப்பது வேறு என்று இருந்தால்... அப்படிப்பபட்டவர்கள் துராத்மாக்கள்!  மகாத்மாக்களுக்கு இந்த மூன்றும் - சிந்தை, சொல், செயல் - ஒன்றுபட்டிருக்கும்.
அப்படிப்பட்ட மகாத்மாக்களை ஆசார்யராக அடைவதால் நமக்கு என்ன பலன்...?  அதற்கு ஒரு கதை சொல்கிறேன்.

திருப்பதி மலையை எல்லோரும் பார்த்திருக்கிறோம்.  இங்கே ஒரு சிகரம்; அங்கே ஒரு சிகரம்.  ஒரு சின்ன எறும்பு... ஒரு சிகரத்தில் ஊர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.  அதற்கு, அதோ.. அந்த மலைச் சிகரத்துக்குப் போக வேண்டும் என்று ஆசை!
எவ்வளவு அல்பமான ஜீவன் அந்த எறும்பு!  ஒரு மலைச் சிகரத்தில் இருந்து மற்றொன்றுக்கு ஏறிப் போவதற்குரிய அங்கங்களோ, அவயங்களோ அதற்கு இல்லை.  ஆனால் அதுவும் அந்த சிகரத்தை அடைந்தது.  எப்படி...?
எப்படியென்றால், ஒரு சிங்கம் அந்த இடத்திலே மலைக்கு மலை தாவி ஓடிக் கொண்டிருந்தது. எறும்பு, தான் நினைத்த மாதிரியே சிங்கமும் இந்த சிகரத்திலிருந்து அந்த சிகரத்துக்குப் போக இருப்பதைப் பார்த்தது.  உடனே இதுதான் சமயம் என்று அங்கே இருந்து போய்,  அந்த சிங்கத்தின் சரீரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.  சிங்கம் சிகரத்துக்குச் சிகரம் தாண்டியபோது, எறும்பும் தாண்டி விட்டது.
ஆகையினாலே, ஓர் ஆசார்யனின் திருவடியை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோமானால், சம்சார சாகரத்தை அவர் தாண்டும்போது நாமும் கூடவே தாண்டி விடுகிறோம்!  அந்த மாதிரி ஒரு உயர்ந்த கதியை நமக்கு அடைவிக்கக் கூடியவர்கள் தான் ஆசார்யர்கள்.
தனத்தை உடையவனை தனவான் என்கிறோம்  குணம் உடையவனை குணவான் என்கிறோம்.  ஆனால், எப்படிப் பட்டவனும் ஆசார்ய சம்பந்தத்தோடு தான் இருக்க வேண்டும்.  அது மட்டும் இல்லாமல் போனால் வேறேது இருந்தும் பயனில்லை.
 

ஆசார்யவான் புருஷோ வேத - ஒரு நாளும் தனித்து இராதே.  ஆசார்ய சம்பந்தத்தோடுதான் நீ இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
ஆகாசத்தில் பிரகாசிக்கிறானே சூரியன்...அவன் கிரணங்கள் பட்டதுமே தாமரை புஷ்பமானது விகசிக்கிறது.  எப்படி விகசிக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
ஒரு பெரிய தாடகத்திலே தீர்த்தம் நிறைய இருந்தால், சூர்ய ரச்மி பட்டவுடனேயே தாமரை விகசிக்கிறது.  ஆனால், தாடகத்திலே தீர்த்தமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்;  சூர்ய ரச்மி வந்து பட்டால்...? அந்தத் தாமரையானது வாடி வதந்கித்தான் போகுமே ஒழிய விகசித்து மலராது!
அப்போ, தாமரை மலர்வதற்கு முக்கியமான பொருள் தீர்த்தம்.  தீர்த்தத்திலே இருக்கிற தாமரையை மலரச் செய்பவன் சூர்யன்.  அதுபோல ஆசார்ய சம்பந்த்தத்தைப் பெற்ற ஜீவனை பரமாத்மா அனுகிரஹித்து விகசிக்கச் செய்வான்.  தாமர - ஜீவன்.  தீர்த்தம் -
ஆசார்யன்.  சூர்யன் - பரமாத்மா.  தீர்த்த சம்பந்தம் போலே, எப்போதும் ஆசார்ய சம்பந்த்தம் வேண்டும்.  மோஷம் பெறுவதற்கு இந்த சம்பந்தம் கட்டாயம் வேண்டும்.
யோகத்திலே கெட்டிக்காரரான ஒரு ஆசார்யர் இருந்தார்.  சமாதி நிலையிலே அவர் அமர்ந்தாரானால் எம்பெருமானை நேருக்கு நேரே பார்க்கக்கூடியவர்.  ஒரு நாள் அப்படி அவர் யோகத்திலே இருந்தார்.  பகவானை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே இருந்தார்.  ஆனால், வழக்கமாக இவர் பார்வையை நேருக்கு நேராகச் சந்தித்த பகவானின் நோக்கு அன்று மட்டும் வேறு திசையில் திரும்பி இருந்தது. அந்த யோகிக்கு இந்த மாற்றத்தைக் குறித்து வியப்பும் விசாரமும் உண்டாயிற்று. 


பகவானின் பார்வை மாறியதற்குக் காரணம் என்ன..?
(தொடரும்)