Friday, April 18, 2014

PART - 1, Chapter - 42

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 42

சீதா பிராட்டி ராமனைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னாள்:
"என்னைக் காட்டுக்கு அழைத்துக் கொண்டு போக  மாட்டேன் என்கிறீர்களே.. காட்டிலே சிங்கம் இருக்கும், புலி இருக்கும் வேண்டாம் என்கிறீர்களே?  சிங்கத்திடமிருந்தும் புலியிடமிருந்தும் என்னைக் காப்பாற்ற முடியாத அல்ப வீரியரா நீங்கள்..?  சரி போகட்டும்! அதனால் நானொன்றும் தவறாக எண்ணமாட்டேன்.  என் தந்தை தான் உங்களைத் தப்பாகப் புரிந்து கொள்வார்.."  
மாமனார் எதிரில் கௌரவமாக, பிரகாசமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மாப்பிள்ளைக்கும் இருக்காதா?  மாப்பிள்ளை உயர்வாய் இருக்க வேணும் என்கிற எதிர்பார்ப்பு மாமனாருக்கும் இருக்கும் அல்லவா?
அதை மனதில் கொண்டு சீதா பிராட்டி பேசிவிட்டாள்.
உடனே பரமாத்மா அவளிடம் சண்டை போட வேண்டாமோ?  ஆனால் போடவில்லை.  ராமாயணம் கற்றுத் தருகிற தர்மம் என்னவென்றால், புருஷன் மனைவிக்குள்ளே சண்டை வந்து விட்டதென்றால், ஒருத்தர் குரல் கொஞ்சம் உயர்ந்து விட்டதென்றால், மற்றவர் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்.  அவரும் கூச்சல் போட்டால் சண்டை அதிகமாகிவிடும்!  ஆகவே, ராமன் எதுவும் பேசவில்லை.  சீதா பிராட்டியை அழைத்துக் கொண்டு போகத் தயாராகி விட்டான்
குடும்பத்தில் சண்டை கூடாது என்கிற தினசரி வாழ்க்கை தர்மத்தையும் இப்படி ராமாயணம் எடுத்துச் சொல்கிறது.

நிவாம் என்பதும் ஒரு தர்மம்.  ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்தோமானால் அந்த க்ஷேத்திர சிறப்பைப் பெரியவர்கள் கொண்டாடுகிறார்கள்.  அந்த ரங்கநாதரை தினமும் சேவிக்கலாம் இல்லையா?  நித்தியம் கோவிலுக்குப் போக முடியவில்லை என்றாலும் அவன் வரும்போது சேவிக்கலாமே?
கோவில் இருக்கும்படியான தெருவில் நாம் இருப்பது கூட சிறப்பு.  பெரியோர்களை அண்டி நாம் இருக்க வேண்டும்.  நல்ல விஷயங்கள் காதில் விழுந்து கொண்டேயிருக்கும்.
ராமபிரான் எப்போதும் பெரியோர்களை நாடிச்  செல்வான். மகான்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிச் செல்வானாம்.  இது உத்தமமான ஒரு விஷயம்.
நிவாம் என்பதை உறுதிப்படுத்த இப்படி ராமனைப் பற்றி நான்கு சுலோகங்கள் சொல்கிறான் பரதன்.
அந்த சித்ரகூட பர்வதத்தில் லக்ஷ்மியோடு நாராயணன் இருக்கிறான்.  ஆதிசே-ஷனாகிய லக்ஷ்மணன் இருக்கிறான்.  வைகுண்டத்தில் பரமாத்மா இருப்பதைப் போல் இருக்கிறது!  வைகுண்டத்துக்குத் துல்லியமானது சித்ரகூடம்.
பரதன் சொல்கிறான்: ராமனைக் கிட்டே நெருங்கிச் சேவிக்கற வரையில் எனக்கு சாந்தி ஏற்படாது.  ராமனுடைய திருமுக மண்டலத்தை நெருங்கிச் சேவிக்கிற வரை எனக்குத் திருப்தி ஏற்படாது.  ராமனை அபிஷேகம் செய்கிறவரை எனக்குத் திருப்தி உண்டாகாது.  அந்த அபிஷேக தீர்த்தத்தை சிரஸிலே புரோஷிக்கிற வரையில் சாந்தி ஏற்படாது".
மோக்ஷ நிலையில் நான்கு சொல்லப்படுகிறது.  
சாலோக்யம்:  உரிய இடத்தை அடைவது.   ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை அடைந்து அங்கே இருந்தால் சாலோக்யம்.
சாமீப்யம்:   அப்படியென்றால் அருகாமை.  கோவிலுக்குள்ளேயே கைங்கர்யம்  செய்வது என்று கொள்ளலாம்.  பகவானுக்கு சமீபத்தில் வந்து விட்டாலும் அவரை சேவிக்கிற நிலை வரவில்லை.  அவரைச் சுற்றிச் சுற்றி வர முடிகிறது.
சாரூப்யம்: இது பகவானுக்கே கைங்கர்யம் செய்தல்.  அர்ச்சகர் இருக்கிறார்.  அவருடைய காரியம் இது.  ஆனால் அவர் உருகி, பகவானை சேவிக்க ஆரம்பித்தால் கோவிலுக்கு வருகிறவர்களுக்கு யார் சேவை பண்ணி வைப்பார்கள்!  ஆதலால், அவர் ரங்கநாதரை மறக்க வேண்டியவராகிறார்.  நெருங்கி இருந்தாலும் பார்க்க முடியவில்லை.
சாயுஜ்யம்:  அவனைப் பூரணமாக அனுபவித்தல் என்பது அந்த சாயுஜ்ய பதவி.  சாயுஜ்யம் என்றால் பகவானை பக்தன் அனுபவித்தல், பக்தனை பகவான் அனுபவித்தல் என்பது. இரண்டுமே அளவிலும் அனுபவித்தலிலும் சமமாயிருக்கும் என்று பெரியவர்கள் பணித்துள்ளார்கள்.
இது நன்றாகப் புரிய வேண்டுமானால் ஓர் உவமை சொல்லலாம். லௌகிக உதாரணம்!
ஒருத்தர் அரைப்படி புளியோதரை சாப்பிடுகிறார்.  இன்னொருத்தர் ஒரு படி சாப்பிடுகிறார்.  புளியோதரை என்கிற ருசியிலே இரண்டு பேர் சாப்பிட்டதும் சமாமாக இருந்தாலும் அளவில் வித்தியாசம் இருக்கிறது.
ஒருத்தர் அரைப்படி புளியோதரையும் இன்னொருத்தர் அரைப்படி சர்க்கரைப் பொங்கலும் சாப்பிடுகிறார்கள்.  இரண்டுமே அரைப்படி என்று அளவிலே சமானமாய் இருந்தாலும் ருசியிலே வித்தியாசம் இருக்கின்றது.
இருவர் தலா அரைப்படி சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டால்..?  அளவு, ருசி இரண்டுமே சமமாகிறது அல்லவா!  இதுதான் சாயுஜ்யம்!  பக்தனும் பகவானும் சமமான அனுபவம் பெறுதல்.
நிவாஸம், சாமீப்யம், சாலோக்யம், சாயுஜ்யம் என்கிற நான்கு நிலைகளும் பரதனுக்கு ஏற்பட்டன.  வனவாசத்தில் ராமன் இருந்த இடத்துக்கு (நிவாஸம்) ஓடோடி வந்தானாம் பரதன்.  அயோத்தி இருந்த திக்கைத் திரும்பிக்கூடப் பாராமல் வந்தானாம்.
மீண்டும் அயோத்திக்கே திரும்பினானே? என்று கேட்டால், அது பாரதந்த்ரியம் - பகவானுடைய ஆக்ஞைப்படி நடந்தான்.  தன்னுடைய விருப்பத்தினால் அவன் திரும்பவில்லை அயோத்திக்கு.

வ்வாறு ராமாயணத்திலே எங்கு தொட்டாலும் சாஸ்திரப் பேச்சே ஒழிய வேதத்துக்குப் புறம்பான விஷயம் எங்கேயும் கிடையாது.
வியஸனம் (மனத்துன்பம்) என்றுகூட ஒரு தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது.  
எல்லோரும் வியஸனப்பட்டே ஆக வேண்டும் என்பது நியதி.  வியஸனத்தைக் கொடுத்துத் தான் நம்மைத் திருத்துகிறான் பரமாத்மா.
துக்கம் வரும்போது "நமக்கு வராமல் வேறு யாருக்கு வரும்?  பகவான் அந்த துக்கத்தை அனுபவிக்க நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்" என அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  சுகம் வரும்போது துள்ளிக் குதிக்கவும் கூடாது;  துக்கம் வரும்போது துன்புற்று அழவும் கூடாது. துக்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  சுகத்தையும்
பொறுத்துக் கொள்ள வேண்டும்.
துக்கத்தைப் பொறுத்துக் கொள்ளலாம் சரி.  சுகத்தை..?  சுகத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் - சுகம், துக்கம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று பொருள்.  ராமபிரான் அப்படித்தான் அனுபவித்தான்.  காட்டுக்குப் போ என்ற போதும் சரி, இருந்து அரசாட்சி செய் என்றபோதும் சரி, ஒரேமாதிரிதான் இருந்தான்.
ராமன் சீதையைப் பிரிந்து "ஹா சீதே" என்று  அரற்றினானே, அதெல்லாமும் மகான்களுக்கும் வினம் உண்டு என்பதையே காட்டுகிறது.       அப்பேர்ப்பட்ட ராமபிரானுக்கே வியஸனம் வந்ததென்றால் நாம் எந்த மூலைக்கு?  நமக்கு வராமல் வேறு யாருக்கு வியஸனம் வரும்?
பகவானின் வியஸனத்துக்கு இன்னொரு கதைகூட சொல்வதுண்டு.  பூரி நகரத்திலே மட்டும் பகவான் ஜகன்னாத பெருமாள், சிலாரூபமாக இல்லாமல் ஒரு கட்டை வடிவத்திலே இருக்கிறார்.  இதற்கு ஒரு கதை.
பகவானுக்கு முதலில் பூமாதாவோடுதான் கல்யாணம் ஆயிற்று.  பரமசிவன் பார்வதியோடு வந்து தம்பதியை விருந்துக்கு அழைத்தார்.
கல்யாணமானவுடன் விருந்துக்கு அழைக்கும் பழக்கம் அப்போது ஆரம்பித்ததுதான்!
பூமாதேவியைப் பார்த்து, "போகலாமா"? என்கிறார் பகவான்.  அவள் சொல்கிறாள்:  "நீங்கள் போகும் இடத்துக்கெல்லாம் என்னால் கூடவே வர முடியாது. அசலா (அசையாதவள்) என்று பெயர் அல்லவா எனக்கு!   உங்களோடு நான் வந்தால் இந்த சராசரங்கள் அத்தனையும் என்னாவது!  நீங்கள் போய்  வாருங்கள், என்னால் வர முடியாது!"
பரமாத்மா எல்லா இடங்களுக்கும் தனியாகவே போய்  வருகிறான்.  அவனுக்கு அது ரொம்பவும் வெட்கத்தை அளித்ததாம்.  போகும் இடத்தில் எல்லாம் "பத்னி எங்கே?" என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை.
அதனால் சமுத்திர ராஜனின் மகளான லக்ஷ்மியை இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டான் பரமாத்மா.
என்ன ஆயிற்று?  மஹாலக்ஷ்மி ஓர் இடத்தில் தங்காமல் ஓடிக்கொண்டேயிருந்தாள்.  பகவானால் அவளோடு சேர்ந்து ஓடமுடியவில்லை.  மூச்சு வாங்கியதாம்.
"போதும் கல்யாணம்" என்று தீர்மானத்துக்கு வந்து, பிள்ளையினிடத்திலே சில நாள் போய்  இருக்கலாம் என்று கிளம்பினானாம். பிள்ளை என்றால் மன்மதன்.
மன்மதனிடத்திலே  ஒருத்தர் வந்தாராம்.  "இப்போதுதான் மன்மதன் பரமசிவனிடத்திலே அபசாரப்பட்டு, அவனுடைய நெற்றிக்கண்ணுக்கு ஆளாகி பஸ்மமாகிப் போனான்" என்று செய்தி சொன்னாராம்.
பகவானுக்குப் புத்திர சோகம் தாள முடியாமல் போய்விட்டதாம். மாமனார் கிரஹத்தில் போய் ஆறுதல் தேடலாம் என்று  பார்த்தாராம். மாமனார் கிரத்துக்குப் பத்தினியை அழைத்துக் கொண்டு போனால் கெளரவம்.. ஆனால்  இவன் நிலை வேறாக இருந்தது.  இருந்தாலும் பரவாயில்லை என்று புறப்பட்டுப் போனானாம். 
சமுத்திர ராஜனிடம் போனால், பெரிய அலை ஒன்று அடித்து பகவானைத் தூக்கித் தள்ளி விட்டதாம்.  "உள்ளே நுழையும் முன்பே இந்த மரியாதை!  இன்னும் உள்ளே போனால் என்ன நடக்கும்" என்று வருத்தப்பட்டுப் பின்வாங்கினான் பகவான்.
சற்று படுத்து ஓய்வெடுக்கலாம் என்று முடிவு பண்ணி, ஆதிசே-ஷனைப் படுக்கையாக்கி சயனித்தான்.  படுத்தால், ஆதிசே-ஷன் "புஸ் புஸ்" என்று விஷத்தைக் கக்குகிறான்.
பார்த்தான் பகவான்.  "சரி நமக்கு இனி உதவுவார் ஒருத்தரும் இல்லை.  காசிக்குப் போக வேண்டியதுதான்" என்று புறப்பட்டான்.   கருடாழ்வாரின் மேல் ஏறிப் போய்க்கொண்டிருந்தபோதே, பூரி என்கிற ஊரின் மேல் பறக்கையில் கீழே பூமியில் ஒரு பாம்பு ஊர்வது தெரிந்ததாம்.  அதைப் பார்த்த கருடன், "நாராயணா!  கீழே என் ஆகாரம் போகிறது.. அதைச் சாப்பிட நான் போகிறேன்.. உன்னை இங்கே இறக்கி விடுகிறேன்.  நீ நடந்து போய்க் கொண்டேயிரு.  நான் சாப்பிட்டு முடித்துவிட்டு வருகிறேன்" என்று பகவானை அப்படியே கைவிட்டு விட்டுப் போய்விட்டான்!
பகவானும் கருடாழ்வாரின் அந்த வார்த்தையைக் கேட்டு, "நம் நிலை இப்படி ஆகி விட்டதே" என்று தலையில் கை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டானாம்.
அப்படியே தன வீட்டுக் கஷ்டத்தை நினைத்து நினைத்து பகவான் கட்டையாகவே போய்விட்டானாம்! 
இதுதான் பூரியிலே அவன் அப்படிக் காட்சியளிப்பதன் பின்னணிக் கதை. 
இப்படியொரு கதை உருவானதே, வியஸனம்  என்பது யாரையும் விட்டு வைக்காது என்பதை நமக்கு உணர்த்தி சமாதானம் செய்யத்தான். 
பகவத் சரித்திரங்களும், இதிகாசங்களும் வியஸனம் வந்தால் சிரமப்படாதே என்று சொல்கின்றன.  
இந்த தர்மத்தையும் ராமாயணம் சொல்கிறது.  
அதற்கும் மேலே, 64 வகைக்   கலைகளையும் அது சொல்கிறது.!
இவை அனைத்தையும் பெரிய திருமலை நம்பிகள் திருமலை க்ஷேத்திரத்தில் ராமானுஜருக்கு உபதேசம் பண்ணினார்.  

விச்வமூர்த்தியாகிய - விச்வ சப்தத்தை உணர்த்துகிற - ரகுநந்தன் காட்டியவைதான் ராமாயணத்திலே சொல்லப்பட்ட தர்மங்கள்.
(தொடரும்)


 
  
 

 


No comments:

Post a Comment