Friday, April 4, 2014

PART - 1, Chapter - 38

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 38


போன அத்தியாயத்திலே ராமனை யோசனையிலே விட்டு விட்டு வந்தோம்!  இப்படிக்கூட யோசித்தானாம் ஸ்ரீராமன்! "சீதை பத்து  மாதம் சிறையில் இருந்தாளே. அதனால்தான் வால்மீகி இதை (ராமாயணத்தை) அவள்  சரித்திரம் என்று கொண்டாடினானோ..?  சிறையிருந்ததால் ஏற்பட்ட ஏற்றமோ இது..?  சிறையிருந்ததால் ஏற்பட்ட ஏற்றம்தான் என்பது சத்தியமானால், அடுத்த அவதாரத்தில் நாம் சிறையிலேயே பிறக்க வேண்டியதுதான்..!
இதையொட்டியே பகவான், கிருஷ்ணாவதரத்திலே சிறைச்சாலையிலேயே பிறந்தான்.  அந்த அவதாரத்தின் பெருமையெல்லாம் யாருக்கு..?  அவனுக்குத்தான்!
ராமாயணத்தில், சிறையிருந்தவளுடைய ஏற்றம் சொல்லப்படுகிறது.  மகாபாரதத்தில் தூது போனவனின் ஏற்றம்  சொல்லப்படுகிறது. அந்த அவதாரத்தில் (பாரதம்) பரமாத்மா ஈடில்லாத தூதுவனாய் விளங்கினான்.  இப்படி இரண்டு அவதாரங்களில் பகவான் நமக்கு தர்மத்தைக் காட்டியிருக்கிறான்.  ஆகையினால் புருஷகாரம் என்று சொன்னேனே.. சிபாரிசு, அதை மனத்தில் கொண்டு, நாமும் மகாலக்ஷ்மியினுடைய முன்னிலையில் பகவானிடத்திலே சரணாகதி பண்ணனும்.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பவை சதுர்வித புருஷார்த்தங்கள் - அதாவது மனிதர்கள் ஏற்றம் பெற வேண்டிய நான்கு விதமான புருஷார்த்தங்கள்.  இவற்றைத்தான் ராமாயணத்திலே அவதரித்தே விளக்கினான் பகவான்.
தர்ம,அர்த்த, காம, மோக்ஷம் என்கிற நான்கையும், ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களான நான்கு சகோதரர்கள் எடுத்துக்காட்டியிருக்கிரார்கள்.
தர்மம் - பகவான் ராமன்.  
அர்த்தமாய் இருக்கக்கூடியவன் இளையபெருமாள் லக்ஷ்மணன்.  
காமமாய் இருக்கக்கூடியவன் சத்ருக்னன்.  
மோக்ஷமாய் இருக்கக்கூடியவன் பரதன்.  
இப்படி நான்குவித புருஷார்த்தங்களை நான்கு பேர் காட்டிக் கொடுத்தார்கள்.
இவற்றுள், மூத்த சகோதரனனான தர்மத்துக்கு கெடுதல் ஏற்பட்டால், அர்த்தமும் இல்லை, காமமும் இல்லை, மோக்ஷமும் இல்லை!  அர்த்த, காம, மோக்ஷம் சித்திக்க வேண்டுமென்றால் தர்மம் நல்ல முறையிலே இருக்க வேண்டும்.  தர்மம் கெட்டது எனில் மற்ற எதுவுமே பயன் தராது.
இதில் அர்த்தம் - அதாவது பொருள் - இருக்கிறதே.. அது தர்மத்தை அண்டியே இருக்க வேண்டும்.  காமம் இருக்கிறதே.. ஆசை அல்லது.. இச்சை.. இது மோக்ஷத்தையொட்டியே இருக்க வேண்டும்.  ராமாயணத்தில் அப்படித்தான் இருக்கிறது என்பது கவனித்துப் பார்த்தால் புரியும்.
அர்த்தமான இளைய பெருமாள் லக்ஷ்மணன் எப்போதுமே ராமனை - தர்மத்தைவிட்டுப் பிரியாமல் இருந்தான்.  தர்ம வழியில்தான் பொருள் ஈட்டப்பட வேண்டும்.  தர்ம வழியில்தான் அது செலவழிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது இது. 
பரதனோடு கூடவே எப்போதும் இருந்தான் சத்ருக்னன் - காமம் அல்லது இச்சை, மோக்ஷத்தையொட்டியே இருக்க வேணும் என்பதைக் காட்டும் விதமாக..
சத்ருக்னன் குற்றமற்றவன்.         ராமபக்தி என்கிற குற்றத்தைச் செய்யாதவன். 

"ராம பக்தி என்பது குற்றமா..?  அதெப்படி..? என்று எல்லோருக்குமே சந்தேகம் வரும்.  ராம பக்தியோடு நின்றால் அது குற்றம்.   ராமனுடைய சரணாரவிந்தத்திலே பக்தியுடையவர்களின் திருவடியில் பக்தி கொண்டவன் அவன்.  இது பாகவத பக்தி எனப்படும்.  பரதனுக்கு ராமன் அல்லால் தெய்வம் இல்லை.  அப்படிப்பட்ட பரதனை சத்ருக்னன் ஆச்சரயித்தான்.  ஆகையினால் இந்த பக்தி உயர்ந்தது.
பாகவதோத்தமர்களிடத்திலே அன்புடன் இருப்பது என்பது ரொம்ப கஷ்டம்.  சத்ருக்னாழ்வார் காட்டிய அந்த பரம நெறியைத்தான் மதுரகவியாழ்வாரும் பின்னாளில் காட்டி அருளினார்.
நம்மாழ்வாருடைய திருவடியைப் பற்றினார் மதுரகவியாழ்வார்.  துவாபர யுகத்திலே இருந்தவர் இந்த மதுரகவியாழ்வார்.  அப்போது பகவான் கிருஷ்ணன் துவாரகையில் இருந்தான்.  ஆனால் இவர் போய் ஒருநாள் கூட கிருஷ்ணனைச் சேவிக்கவில்லை.  கலியுகத்திலே நம்மாழ்வார் அவதரித்தபோதோ அந்த நம்மாழ்வாரின் திருவடியை இவர் (மதுரகவியாழ்வார்) போய்  பற்றினார்.  அவரைத் தவிர வேறொரு தெய்வம் தனக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்.
மதுரகவி ஆழ்வார் காட்டிய நெறி, சத்ருக்னாழ்வார் காட்டிய அதே நெறிதான்.
அயோத்தி பக்கத்திலே சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தார்
மதுரகவியாழ்வார்.  அப்போது தென் திக்கில் இருந்து ஒரு ஜோதி தெரிந்தது.  அதைப் பார்த்துக் கொண்டே மதுரகவியாழ்வார்  தென் திக்கை நோக்கி வந்தார்.  அது திருக்குருகூர் என்கிற இடத்திலே கொண்டு சேர்த்தது.  அங்கே புளியமரப் பொந்தில் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார்.  அதி தேஜஸ்வியாகக் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார்.  அங்கே போய்ச் சேர்ந்த மதுரகவியாழ்வார் அவரிடம் பேசினால்  காதிலே விழுமோ விழாதோ என்று சந்தேகப்பட்டு, ஒரு கல்லை எடுத்துக் கீழே  போட்டார். அது டக்கென்று கீழே விழுந்ததும் அந்த தேஜஸ்வி கண்ணைத் திறந்துப் பார்த்தார். உடனே ஒரு கேள்வியைக் கேட்டார் மதுரகவியாழ்வார்.
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்"..?
இதற்குப் பதிலாக என்ன சொன்னார் தெரியுமா..?
"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!" என்றார் அந்த பெரியவர்!
இதில் ஒரு அர்த்தம் பொதிந்து கிடக்கிறது.
"செத்தது" என்றால் சரீரம்.  "சிறியது" என்றால் ஆத்மா.  அதாவது சரீரத்தினுள்ளே இருக்கிற ஆத்மா எதைத் தின்று எங்கே கிடக்கும்..? என்று கேள்வி.
இதற்குச் சொல்லப்பட்ட பதிலுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டோமானால், "ஆசார்ய அனுக்கிரஹம் ஏற்படாத வரையில் ஆத்மாவானது தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு - அதாவது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லலுறும் (அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று அர்த்தம்).
சில விஷயங்களில் எல்லா ஆசார்யர்களும் ஒன்றே போல் பேசுவதை நாம் கவனிக்க வேண்டும்.  ஆதிசங்கரரும் இதையேதான் சொல்கிறார். "எவன் ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கிறபோதே தனது சரீரத்தைப் பிணமாக கருதுகிறானோ, அவன்தான் மோக்ஷத்துக்கு அதிகாரி.   சரீரத்துக்குப் பண்ணக்கூடிய அலங்காரம் எல்லாம் பிணத்துக்குப் பண்ணக்கூடிய  அலங்காரம்தான். இந்த சரீரம் அழியக் கூடியது.  அதனால்தான் இதற்குப் பண்ணக்கூடிய அலங்காரமும் அழியும்.  ஆத்மாவுக்குப் பண்ணக்கூடிய அலங்காரத்துக்கு பிரும்மாலங்காரம் என்று பெயர்.  அது அழியவே அழியாது. 
புளியமரப் பொந்தில் இருந்த மகான் இந்த பேருண்மையை சூசகமாய்ச் சொன்னதும் மதுரகவியாழ்வார் அவரையே தமக்கு தெய்வம் என்று கொண்டு விட்டார்.  "இன்றைய தினம் அன்பனானேன்" என்று பதினோரு பாசுரங்களில் அவ்வனுபவத்தைப் பாடினார்.  நாலாயிர திவ்யப்ப்ரபந்தங்களை ஒரு தட்டிலும் அந்தப் பதினோரு பாசுரங்களை மட்டும் இன்னொரு தட்டிலும் எடை போட்டோமானால்.. இந்த பதினொன்றே பளுவுடையதாக இருக்கும்!  
ஏனெனில் அது பகவத் பிரபாவம்:  இது பாகவத (குரு) பிரபாவம்:
பாகவத பிரபாவத்தைத்தான் சத்ருக்னன் காட்டினான்.  அவன் காட்டிய பரமநெறிதான் மதுரகவியாழ்வாருக்கு மூலமாக அமைந்தது.  
சதுர்வித புருஷார்த்தங்கள் ( தர்ம,அர்த்த, காம மோக்ஷம்) ராமாயணத்தில் நான்கு திவ்ய புருஷர்கள் மூலமாகத் தெரிகிறது என்று   சொன்னேன்.  பகவானே நான்கு வித புருஷார்த்தங்களுக்கும் உறைவிடமானவன்.  பகவான், ஆதிசே-ஷன், சுதர்சனம் (சக்கரம்), பாஞ்சஜன்யம் (சங்கு) என நான்கும் இந்த நாகுவித அர்த்தம் காட்டுபவை.

ராமாயணத்திலே தர்மத்தை பகவான் உணர்த்தியதாகச் சொன்னேன்.. மூன்று வித தர்மங்கள் உண்டு என்கின்றனர் பெரியோர்.
சே-ஷத்வம், பாரதந்த்ரியம், பாரதந்த்ரிய காஷ்ட என்று மூன்று விதமாக இந்த தர்மங்களைச் சொல்வர்.
சே-ஷத்வம் என்றால் "கட்டிப் பொன்போல" என்று பொருள்.
இளைய பெருமாள் லக்ஷ்மணன் செய்த கைங்கர்யம் சே-ஷத்வம் போன்றது - அப்படியே கடினம்.  இரவு பகல் கண்விழித்து, கூட இருந்தபடியே கைங்கர்யம் செய்வதென்பது ரொம்ப கஷ்டமான காரியம்.   அதை லக்ஷ்மணன் செய்தான்.   எல்லோராலேயும் செய்யக்கூடியது அன்று அது!
"இமைத்திலன் நயனம் என்றான்" என்று லக்ஷ்மணன் குறித்துச்  சொல்லப்படுகிறது.  எம்பெருமானும் சீதாபிராட்டியும் வனவாசத்தின் போது கண் துயில்கிறார்கள்.  அப்போது வெளியிலே நின்று இமைக்காமல் காவல் காத்தானே.. ராத்திரி பகல் வித்தியாசம் இல்லாமல் நின்று கண்ணை இப்பை காப்பதுபோல் காத்தானே.  கூடவே இருந்தானே..!
இந்த வனவாசத்தின்போதுதான் தசரதன் மாண்ட செய்தி பரதன் மூலமாக ராமனுக்கு எட்டுகிறது.  அப்போது அச்செய்தியை  லக்ஷ்மணனுக்கு எப்படி எடுத்துச் சொன்னான் என்பதைப் பார்க்கணும்.  அந்த வார்த்தைகளை நன்றாகக் கவனிக்க வேண்டும்.
"ஹே லக்ஷ்மணா! நீ உன் தந்தையை இந்தாயடா" என்றான்.
அடியேனுக்கு ஒரு கோணலான புத்தி!  ராமன் பேரிலேயும் தோஷம் சொல்ல வேண்டும் என்கிற ஆசை! அதனாலே இந்த இடத்தில் கோணலாக வியாக்யானம் பண்ணிக் காட்டுகிறேன்.
"லக்ஷ்மணா!  உன் தந்தையை நீ ந்தாயடா என்று ராமன் சொன்னதிலிருந்து என்ன தெரிகிறது.?  அப்பா தன்னைக் காட்டுக்கு போகச் சொன்னது குறித்து ராமனுக்கு ரொம்ப வருத்தம்.  வெறுப்பே வந்து விட்டது.  அதனால் தசரதனைத் தந்தையாக ராமன் பாவிக்கவில்லை.  
"லக்ஷ்மணா!  உன்அப்பா போய்விட்டார்" என்று சொன்ன வார்த்தை..!
- இப்படி அடியேனுடைய புத்தி நினைக்கிறது!
ஆனால், ஆசார்யர்களும் மகான்களும் தங்கள் வியாக்யானத்தில் எம்பெருமானுடைய புஷ்பம போன்ற திருவுள்ளத்தை நமக்குக் காட்டுகிறார்கள்.
என்ன வியாக்யானம் அது?  
எதை உத்தேசித்து ஸ்ரீ ராமன் அப்படிப் பேசினான்.
(தொடரும்)
 




No comments:

Post a Comment