Thursday, April 10, 2014

PART - 1, Chapter - 39

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 39

"க்ஷ்மணா, உன் தந்தையை இழந்தாயடா" என்று ராமன் ஏன் பிரித்துப் பேசுகிறான்?
ஆசார்யர்களும் மகான்களும் இந்த பேச்சுக்குத் தரும் விளக்கத்தைப் பாருங்கள்:
ராமன் சொல்கிறானாம்: லக்ஷ்மணா, உன்னையும் அப்பா சிருஷ்டி பண்ணினார்.  நானும் அவருக்குப் பிறந்தேன்.  என்னோடு கூட வனவாசம் வந்திருக்கும் நீ எல்லா கைங்கர்யங்களையும் பண்ணிக் கொடுக்கிறாய்.  எப்படிப் பண்ணிக் கொடுக்கிறாய்?  ஒரு தந்தை தன் தனயனுக்கு என்னென்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்வாரோ.. அதைப் போல் செய்கிறாய்.  அதனால், நீ இருப்பதால், தந்தை இல்லாத குறையே எனக்குத் தெரியாது.  இப்போது அப்பா மறைவினாலே உனக்குத்தானட தந்தை இல்லாமல் போனார்" என்று சொல்கிறானாம்.
எத்தனை உயர்ந்த வாக்கியம் அது!  சகோதர வாத்சல்யமும் அதில் தெரிகிறது.  தந்தையினிடத்தில் பகவான் கொண்ட அன்பும் தெரிகிறது.  
"ஊரை விட்டு காட்டுக்குப் போனேன் என்கிற செய்தியைக் கேட்கத் தாங்காமலே பிராணனை விட்டாயே.. நீ உயிர் நீத்தது தெரிந்த பின்னரும் நான் உயிரோடு இருக்கிறேனே!  நீ  என்னிடத்தில் வைத்த அன்பு எங்கே?  நான் உன்னிடம் காட்டும் அன்பு எங்கே"? என்று ராமபிரான் வருத்தப்படுகிறான்.
"புத்ரன் தன்னைவிட்டுப் போனான் என்றால், பதினாலு ஆண்டுகாலம் சென்று திரும்பி வந்துவிடப் போகிறான்.  ஆனால், கொஞ்சம் கூடப் பிரிவாற்றாமை தாங்காமல் பிராணனை விடக்கூடிய தந்தை எத்தனை புத்ரர்களுக்கு உண்டு!  எனக்குக் கிடைத்தது மாதிரி தந்தை யாருக்குக் கிடைப்பார்"? என்று பேசுகிறான்.
அந்த ஒப்பற்ற தந்தைக்கும் நிகரானவன் லக்ஷ்மணன் என்று லக்ஷ்மணன் செய்த காரியத்தைக் கொண்டாடுகிறான்.
ராமனைப் பிரியாமல், கூடவே இருந்து விட்டதால் அபக்யாதியே ஏற்படலை லக்ஷ்மணனுக்கு.  
பரதன் அப்படி இல்லை.  கொஞ்ச காலம் ராமனைப் பிரிந்து கேகய நாட்டுக்குப் போனான்.  அவன் மாமா யுதாஜித் என்பவர் வந்து அவனை அழைத்துப் போனார்.  கொஞ்சம் பிரிந்த பரதனுக்குத் தீராப் பழி ஏற்பட்டு விட்டது.  அந்த சிரமத்தை அனுபவித்தான் பரதன்.
இந்த விஷயத்தை நாம் கிரஹிக்கணும் - லக்ஷ்மணன் பிரியாமல் இருந்ததால் அபகீர்த்தி இல்லை;  பரதன் சிறிது காலமே பிரிந்திருந்தாலும் தீராத பழி!  அதனால் இளையபெருமாள் (லக்ஷ்மணன்) செய்த காரியம் இருக்கிறதே - மிக உயர்ந்தது.   எல்லோராலும் செய்ய முடியாதது, சே-ஷத்துவம்.

டுத்தது பாரதந்த்ரியம்.    அது இன்னமும் கஷ்டம்!  இட்ட வழக்கை இருத்தல் என்பது பாரதந்த்ரியம்.  அசித் - அசையாத பொருளாய், அசேதன - அறிவற்ற பொருள் போல இருக்க வேண்டும்!
ஒரு புஷ்ப மாலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் - அதை அடியேன் எடுத்து இப்படி வைக்கிறேன்.  "நான் இங்கே இருக்க மாட்டேன்.  அங்கே போகிறேன்" என்று அந்த புஷ்ப  மாலை சொல்லுமா..? வைத்த இடத்திலேயே அல்லவா இருக்கும்!
வைத்தமாநிதி என்று ஒரு பெருமாளுக்குப் பெயர்.  திருக்குருகூரில் - ஆழ்வார்திருகரியில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்.  ஏன் மாநிதி அவன்..?  அவன் வைக்கப்பட்ட இடம் அது.  அந்த  போவானோ அவன்?  எப்போது போனாலும் அவனைச் சேவிக்கலாம்.  அந்த நிதியைப் பார்க்கலாம்.  "என்றைக்கு வேண்டுமானாலும் வா என்னைப் பார்க்க" என்கிறான்.
"இட்ட வழக்காய் இருத்தல்" என்பதை சம்புராமாயனத்தில் போஜராஜா ரொம்ப அழகைச் சொல்கிறார். ராமபிரான் பரதனுக்கு எடுத்துச் சொல்வதைச் சொல்கிறார் - "இங்கே உன்னாலும் என்னாலும் காப்பாற்றப்பட வேண்டியது தந்தையினுடைய வார்த்தை" என்று சொல்கிறார்.
தன் என்ன சொல்கிறான்?  "ஊருக்குத் திரும்பி விடுங்கள்" என்கிறான்.  அப்பாவின் ஆக்ஜை.  அதை மீறி வரமாட்டேன் என்கிறான் ராமன்.
"அப்பா சொன்னது இருக்கட்டும்.  நீதான் வந்து ராஜ்யப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.. வந்து விடு" என்று பரதன் அழைக்கிறான்.
அப்போது பரமாத்மா சொல்கிறான்.  பரதனுடைய வார்த்தையை விட தசரதனுடைய வார்த்தை முக்கியம் என்று..
"எனக்கு மட்டுமல்ல பரதா!  உனக்கும் அந்த வார்த்தை - தந்தை சொன்ன வார்த்தை முக்கியம்.  என்னை அப்பா 14 வருடம் காட்டுக்குப் போகச் சொன்னார்.  உன்னை 14 வருடம் பரிபாலனம் பண்ணச் சொன்னார்.  அவர் இருந்து, "ராமா, நீ போக வேண்டாம்;  திரும்பி வந்துவிடு: என்றால் வரலாம்.  ஆனால் இப்போதைய நிலையில் 14 வருடங்களுக்கு நீயும் எனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க முடியாது, நானும் அதை ஏற்க முடியாது" - இப்படி விசே-ஷமாக தர்மத்தை பரதனுக்கு எடுத்துச் சொன்னான் ராமன்.  இருக்கும் நிலையிலிருந்து மாறக் கூடாது என்கிற தர்மம்.
ராமாயணத்தில் தர்மத்தைக் குறித்து வரும் இந்த சர்க்கத்துக்கு ராமகீதா என்றே பெயர்.  எப்படி பகவத்கீதை சொல்லப்பட்டதோ, அந்த மாதிரி.  "அப்பா பரதா!  நீ கூப்பிட்டாய் என்று நான் வந்தால் அது தர்மமாகுமா?  ராஜ்யத்தில் காமம் கொண்டு வந்தேனானால் நியாயமாகுமா?  சிந்தனை பண்ணிப்பார்" என்கிறார் பகவான்.

ந்த ராம கீதாவைத்தான் நாம் மறக்காமல் ஹ்ருதயத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.  அதிலே அழகாகச் சொல்கிறார்:
"சமுத்திரத்திலே அலை அடித்துக் கொண்டே இருக்கிறது.  அந்த அலையில் ஒரு மரக்கட்டை  இந்த திக்கிலிருந்து அடித்துக் கொண்டு வரப்படுகிறது.  இன்னொரு மரக்கட்டை மற்றொரு திக்கில் இருந்து வருகிறது.  அந்த இரண்டும் அலைகளால் ஒன்று சேர்க்கப்பட்டு சமுத்திர ஜலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.  ஒரு நாள் பெரிய அலை ஒன்று வருகிறது.. அது வீசினதுமே இந்தக் கட்டை அப்படிப் போய்விடுகிறது.  அந்தக்கட்டை இன்னொருபுறம் போய்விடுகிறது!  இது போன இடம் தெரியலை;  அது போன இடமும் தெரியவில்லை.  அந்த மாதிரிதான் மனைவியோ, மக்களோ, புத்ரர்களோ, வீடோ, பொருளோ"...
"அப்படியானால் கணவன் - மனைவி என்கிற உறவுக்கு என்ன அர்த்தம்"? என்று கேள்வி வரும்.  
இந்த சம்சாரம் என்கிற ஜலதியில் புண்யம், பாவம் என்கிற அலைகள் ஓயாமல் இருந்து கொண்டேயிருக்கும்.  அதிலே இரண்டு ஆத்மாக்கள், கணவன் - மனைவி என்கிற உறவிலே அந்த வினைப் பயனை அனுபவிப்பதற்காக அந்த கர்மாவை அனுபவிப்பதற்காக சேர்த்து வைக்கப்படுகிறது.  ஒருநாள், காலம் என்கிற அலை, ம்ருத்யு - வந்து இரண்டையும் பிரிக்கிறது.  யாருக்கு யார் மனைவி?  யார் பார்த்தா?!  யார் தந்தை?  யார் பிள்ளை?  உத்தமமான அவனல்லவோ சர்வலோகப் பிதா.  அவனல்லவோ சர்வ லோக பார்த்தா.  காமதீனமாக ஏற்பட்டிருக்கிற இந்த விஷயத்தை நாம் சாஸ்வதமாக நினைக்கலாமா..?  எனவே சஞ்சலப்படாதே.  தர்மத்துக்கு நாம் தலைவணங்குவோம்.  நீ சொல்கிறபடி நான் வந்து விட்டால் தர்மத்தை எல்லாம் குலைத்தவனாகி விடுவேன்" என்கிறான் பரமாத்மா.

ஜாபாலி என்றொரு மகரிஷி.  அவர் கோணலாக, அதர்மமாகப்  பேசினார். என்ன பேசினார் என்றால், பூர்வ காலத்திலிருந்த ஒரு மதம் குறித்து.  அதற்கு லோகாயதிக மதம் என்று பெயர் - சார்வாக மதம் என்றும் சொல்வார்கள்.  
பேச்சு ரொம்ப நன்றாக இருக்கும் அந்த மதத்தில்.  அதன்படி பிரத்யக்ஷம் ஒன்றுதான் பிரமாணம்.  கண்ணுக்குத் தெரியாததெல்லாம் பிரமாணம் கிடையாது. 
வேதாந்த மதமோ இதற்கு நேர் எதிர்.  அதன்படி பிரத்தியக்ஷம், அனுமானம், சப்தம் என்கிற மூன்றும் பிரமாணம்.  சப்தம் என்பது வேதம்.
ஆனால், சார்வாக மதத்தில் பிரத்யக்ஷம் ஒன்றே பிரமாணம்.  கண்டதே  காட்சி; கொண்டதே கோலம் என்கிற ரீதியில் பேசினார்கள்.
"உயிர் இருக்கிற வரைக்கும் சௌக்கியமாய், சந்தோஷமாய் இருங்கள்" என்கிறார்கள்.  இதை யாராவது வேண்டாமென்பார்களா என்ன..?  சௌக்கியத்தைத் தானே எல்லோர்ரும் விரும்புவார்கள்!
சௌக்கியமாய் இருக்க  வேண்டுமானால் நன்றாகச் சாப்பிட வேண்டும்.  உபவாசம் வேண்டாம்.  ஏன் அந்த சிரமமெல்லாம் பட வேண்டும்?  யக்ஜம், யாகாதி கர்மங்கள் வேண்டாம்.  நன்றாக உடம்பை கொழுக் மொழுக்கென்று தேற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
உடம்பைக் கொழுக் மொழுக்கென்று தேற்றிக் கொள்ள வேண்டுமானால் நன்றாக சாப்பிடவேண்டும்.  நிறைய நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  நெய் வாங்கவோ பொருள் வேண்டுமே என்று விசாரம் வந்தது.
கவலை வேண்டாம்!  கடன் வாங்கு! என்றார்கள்.  கடனை வாங்கியாவது நெய்யைக் குடியுங்கள்.  தீர்த்தத்தை பருக்கிற மாதிரி நெய்யைப் பருகுங்கள்.   அதற்குத் தேவையான கடனை வாங்குங்கள்.... இப்படியொரு வழிகாட்டல்!
எதை கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ, அதையே பண்ணச் சொல்கிறார்கள் இவர்கள்.  கடனே வாங்கக் கூடாது.  கடன் வாங்குவது பரம பாவத்துக்கு வழிகோலும்.  அடுத்த ஜன்மத்திலே விபரீதமான கஷ்டங்கள் எல்லாம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.  
இவர்களோ கடனை வாங்கு;  நெய்யைக் குடி என்கிறார்கள்!  ஏன்..? எப்படியானாலும் சரீரம் பஸ்மமாகத் தானே போகிறது என்கிற எண்ணம்!  சரீரத்துக்குள்ளே, சரீரத்தைக் காட்டிலும் உத்தமமான ஆத்மா வஸ்து இருப்பதையே அவர்கள் கவனிக்கவில்லை.  
ஏனெனில் பரோக்ஷம் - கண்ணுக்குத் தெரியாததைக் கவனிக்காமல் இருக்கச் செய்கிறது. கண்ணுக்குத் தெரியாததைத்தான் கவனிக்கவில்லை... வேதம் சொல்கிறதே அதையாவது கவனிக்கக்கூடாதா... அதையும் ஏற்கவில்லை.
ஆதி சங்கர பகவத்பாதாள் சார்வாகனைப் பார்த்துக் கேட்டார் - இவ்வளவு தூரம் பேசுகிறாயே.. சொர்க்கம், நரகம் என்பதை உங்கள் மதம் ஏற்கவில்லையா?
அதிர்ச்சி தரும் பதில்தான் கிடைத்தது!
(தொடரும்)


 




No comments:

Post a Comment