குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 43
பூதேவியும் தேவதைகளும் சென்று எம்பெருமானிடத்திலே முறையிட்டார்கள். "இந்த உலகத்திலே பாரம் அதிகமாகப் போய்விட்டது. பரமாத்மாதான் ரக்ஷிக்கவேணும்"
பளு என்றால், நிறைய மரங்கள் வளர்ந்து விட்டதால் பளுவா? இல்லை மலைகளினால் பளுவா? இல்லை மனித சமூகத்தினாலேயா..?
இவையெல்லாம் பளுவேயில்லை பூமிக்கு. தினமும் பாவம் பண்ணியபடி பூமிமேலே சஞ்சாரம் பண்ணுகிறோமே, அதுதான் பளு!
இந்த பளுவைத்தான் போய் பகவானிடத்திலே எடுத்துச் சொன்னார்கள் தேவர்கள்.
அவன் தன் உடம்பிலிருந்து இரண்டு ரோமங்கள் - ஒன்று வெள்ளை, ஒன்று கருப்பு - எடுத்துக்காட்டி, "இவை இரண்டும் உங்கள் துயர் துடைக்கும்" என்று அனுக்கிரஹம் செய்தான்.
அவற்றுள் சுவேதம் (வெண்மை) பலராம அவதாரம். கிருஷ்ணம் (கருமை) கிருஷ்ணாவதாரம்! "இந்த இரண்டு ரூபமாய் நான் வந்து உங்கள் துயர் துடைக்கிறேன்" என்பதைத்தான் பரமாத்மா அப்படி உணர்த்தினான்.
விச்வஸ்ய பதி என்று கிருஷ்ணனைக் கொண்டாடுகிறோம்.
பகவான் நாராயணன்தான் வாசுதேவனை வந்து பிறந்தான். இந்த பலராம, கிருஷ்ண சப்தங்கள் இரண்டுமே விச்வ சப்தத்தினால் அறியப்படுகின்றன. இந்த விஷயத்தில் உபநிஷத் சொல்வது போலவே விஷ்ணு சஹஸ்ரநாமமும் சொல்கிறது. அதனால்தான் பெரியோர்களுக்கு சஹஸ்ரநாமத்திலே ஒரு ஈடுபாடு.
யார் பிரும்மம் என்று விசாரித்தால், தேவகி புத்ர: என்று சொல்கிறது உபநிஷத். அவன் புண்டரீகாட்சன். சர்வத்தையும் தாங்கக்கூடிய எம்பெருமான் அவன்.
வேத - வைதிகமான முறை கிருஷ்ணாவதாரத்திலே சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு யக்ஜமும் பண்ண வேண்டியதில்லை. இவன் (கிருஷ்ணன்) பிறந்தவாறும், வளர்ந்தவாறும் எண்ணினாலே போதும் - அதுவே யக்ஞப் பிரகரணம்.
யக்ஞத்துக்கு சில நியமங்கள் உண்டு. அரணியைக் கடைந்து அக்னி உண்டு பண்ண வேண்டும். அந்த நாளில் நியமமாய் வாழ்ந்தவர்கள் மந்த்ரத்தைச் சொல்லி கையைக் காண்பித்தாலே அக்னி உண்டாகிவிடும்.
அவ்வாறு உண்டாக்கிய அக்னியை ஒரு நதியைக் கடந்து கொண்டுவர வேண்டும். நதிக்கு வலப்புறத்திலே ஒரு யக்ஞவாடிகை அமைக்க வேண்டும். அந்த யக்ஞ வாடிகையிலே அக்னியை பிரதிஷ்டை பண்ண வேண்டும். அங்கே பல யாகங்கள் பண்ணி, வேறு இரண்டு யக்ஞ வாடிகைகளுக்கு அதே அக்னியைக் கொண்டு போக வேண்டும். அந்த மூன்று அக்னியிலும் நடுவிலே ஜொலிப்பவன் பரமாத்மா.
இப்படி விசே-ஷமாக யக்ஞம் பண்ணி அதை சேவித்தவர்களுக்கெல்லாம் பகவான் அனுக்கிரஹம் விசே-ஷமாக ஏற்படுகிறது.
ஆகையினாலே, கிருஷ்ணாவதாரமும், யக்ஞமும் ஒன்றுதான் என்று சுவாமி தேசிகன் சொல்கிறார் - இதை நாம் மனசிலே நினைத்து நினைத்துப் பார்க்க வேண்டும்.
தேவகி - வசுதேவர் என்கிற அரணிக் கட்டையிலிருந்து கிருஷ்ணன் என்கிற அக்னி உண்டானான். அக்னி என்கிற சப்தத்தினால் மறைத்துச் சொல்லப்படக் கூடியவன் பரமாத்மா.
அந்த அக்னியை வசுதேவர் சிரஸிலே எழுந்தருளப் பண்ணினார். ஆற்றைக் கடந்து வந்தார். முழங்கால் அளவுக்கு வடிந்து வருடிக்கொடுத்தாள் யமுனா நதி. ஆதிசே-ஷேன் ஆயிரம் சிரஸுகளால் குடைபிடித்தான்.
மறுகரை அடைந்து, நந்தகோபனுடைய திருமாளிகையிலே காருகபத்ய அக்னிகுண்டமாகிய நந்தகோபன் மாளிகையிலே, கிருஷ்ணனாகிய அக்னியைப் பிரதிஷ்டை செய்கிறார்.
கிருஷ்ணனுடைய பால லீலைகள் மொத்தமும் அந்த யாகத்திலே மந்திரமாகின்றன. பால லீலை முழுவதும் மந்திரார்த்தம்தான்! மந்திரமாக இருந்தால் புரிவதில்லை. லீலையாக இருந்தால் எல்லோருக்கும் புரிகிறது.
பத்து அச்வமேத யாகங்கள் பண்ணுகிறார் ஒருவர். நூறு என்றே வைத்துக் கொள்வோம். உயர்ந்த்த பிறவியை அடைகிறார். மறுபடியும் பூலோகத்திலே பிறக்கிறார். ஆனால் கிருஷ்ணனின் திருவடியை ஆச்ரயித்தவர்களுக்கு மறுமடியும் பூலோகத்தில் பிறப்பு உண்டோ..?
ஆகையினாலே, எல்லாவற்றைக் காட்டிலும் மேம்பட்டதாய் விளங்கக்கூடியது பகவத் சரித்திரமானதனாலே, வேதோக்தமாய் விளங்கக்கூடியதை பகவான் தானே நடத்திக் காட்டினதனாலே.. யக்ஞமே அங்கே இருப்பதனாலே, தேவகி நந்தன: என்று சொன்னாலே இந்த யக்ஞ ப்ரகரணமெல்லாம் நமக்கு நினைவு வர வேண்டும்.
அப்படி நினைவுக்கு வருமானால் கூடவே வருத்தமும் வரும். அந்த
யக்ஞமெல்லாம் நம்மால் பண்ண முடியவில்லையே என்கிற வருத்தம்.
உடனே பரமாத்மா நம்மை சமாதனப் படுத்துகிறான். "நீ வருத்தப்படாதே! உன்னைச் சகல பாவங்களில் இருந்தும் நான் விடுவித்து விடுவேன்" என்கிறான். அந்த அமிர்தமான வாக்கிலே நமக்குப் பூரணமான விச்வாஸம் இருந்து அவன் திருவடியைப் பற்ற வேண்டும்.
இதுவரை சொன்னது கர்ம காண்டம். அதற்கடுத்தது ஞான காண்டம் என்று ஒன்று உண்டு. வேதத்தில் பூர்வ பாகம் முழுவதும் கர்ம காண்டம்: பின் பாகம் மொத்தமும் பரப்ரும்மத்தை, அவனுடைய பெருமைகளைச் சொல்வது.
எம்பெருமானின் பெருமையை நேராகப் பேசும் உபநிஷத்தில் இருக்கிறது. அது என்னவென்றால், "அன்னவானாகவும் இவன் இருப்பான்; அன்னாதனாகவும் இருப்பான்" என்று நம்மை அனுக்கிரஹம் செய்யும் வாக்கியம்.
அன்னவான் - அன்னத்தை உடையவன். இருக்கிறது. அதில் விளைந்து வரும் தான்யம் மூட்டை மூட்டையாய் அவன் வீட்டை நிரப்புகிறது. உடனே வேதம் என்ன சொல்கிறது..? அன்னத்தைச் சாப்பிடக் கொடுத்து வைத்தவனாகவும் இரு.." என்கிறது.
"அன்னத்தை பெற்றால் மட்டும் போதாது. அதை அனுபவிக்கவும் செய்ய வேண்டும்" என்கிறது வேதம்.
உடனே நமக்குச் சந்தேகம் வரும் - இதைப்போய் வேதம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? வீட்டிலே பிரசாதம் தயார் பண்ணினால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதே. சொல்லிக் கொடுக்காமல் வரும் வித்தை இது ஒன்று தானே"?
நித்யம் சாப்பிடுவதற்குக் கூட நியமம் சொல்கிறது வேதம்: சன்யாசி நித்யம் 8 கவளம் சாப்பிட வேண்டும். வானப்பிரஸ்தாச்ரமத்திலே இருப்போர் 16 கவளம் சாப்பிடலாம்; கிரஹஸ்தாச்ரமார்கள் 32 கவளம் உட்கொள்ளலாம். இதெல்லாம் ஒரு வேளைக்கு என்று நினைக்கக் கூடாது. இரண்டு வேளைக்கும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டது இந்த அளவு.
"இப்படி நியமம் சொல்கிற வேதமே சாப்பிடக் கொடுத்து வைத்தவனாகவும் இரு" என்று ஏன் சொல்ல வேண்டும்..?
ஒருவன்னுக்கு சொந்த நிலத்தில் நிறைய தானியம் விளைந்து வந்தாலும், மருத்துவர் கையைப் பிடித்துப் பார்த்துச் சொல்கிறார்: "சாப்பாட்டை அறவே குறைத்து விடு! அதுவும் இரவில் அடியோடு உணவு கூடாது.." இப்படிப்பட்டவன் மூட்டை மூட்டையாய் அரிசி வந்து இறங்குவதைப் பார்ப்பதோடு திருப்தியாயிருக்க வேண்டியதுதான்! அதனால் தான் "நன்றாக சாப்பிடக் கூடிய நிலை கடைசி வரை வைக்கட்டும்" என்று வேதம் சொல்கிறது. இந்த உபநிஷத் வாக்கியம் கிருஷ்ணாவதாரத்திலே நன்றாகப் பொருந்தியிருக்கிறது.
எப்படி..?
அன்னம் என்பது உபநிஷத் எதைச் சொல்கிறது என்றால், பரப்ரும்மத்தைச் சொல்கிறது. பரமாத்மாதான் அன்னம் - அந்த அன்னத்தைப் பெற்றவனாகவும் இரு; அன்னத்தை அனுபவிக்க வல்லவனாகவும் இரு என்பது உட்பொருள்.
தேவகி - வசுதேவர் அன்னத்தைப் பெற்றார்கள் - அந்த கிருஷ்ணனைப் பெற்றார்கள். ஆனால், அவனை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லையே! எல்ல பாக்கியமும் தெய்வ நங்கை யசோதை அல்லவா அடைந்தாள்! நந்தகோபனும், யசோதையும் அன்னதர்கள்; தேவகி - வாசுதேவன் அன்னவான்கள்.
"கிருஷ்ணன் அங்கு தோன்றி இங்கு வந்தான்" என்பதை உபநிஷத் எத்தனை அழகாகச் சொல்கிறது பாருங்கள்.
பகவானை அணுஅணுவாக அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதை இழந்துவிட்டோமானால் பெரிய வருத்தம். அந்த எம்பெருமானை ஒரு கணம் நினைக்காமல் போனாலும் பெரிய விசாரம் - எதையோ இழந்த மாதிரி. அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டு, "ஒரு க்ஷணம் ஒரு யுகமாக இருக்கிறதே" என்று கோபிகாஸ்த்ரீகள் விசே-ஷமாக அனுபவித்திருக்கிறார்கள்.
தேவகி நந்தனனாகத் தோன்றியவன் சர்வ லோகத்துக்கும் காரண பூதன்; சர்வ லோகத்துக்கும் நாதன்; அவன் சரித்திரத்தை நினைத்தொமேயானால் பாவம் நம்மை விட்டுப் போய்விடும்.
ஆகையினால்தான் பரமாத்மா அந்த அவதாரத்தையும் அந்த லீலைகளையும் சேர்த்தே சொன்னான்.
எங்கே அவ்வாறு சொல்லியிருக்கிறான் என்று கேட்டால், பகவத் கீதையிலே நான்காவது அத்தியாயத்திலே:
"ஹே அர்ஜுனா! இந்தக் கர்ம யோகம் இப்போது உனக்குச் சொன்னேனே.. அதை இப்போதுதான் முதன் முதலாகச் சொன்னேன் என்று நினைக்காதே. இதற்கு முன்னாடி அந்த சூரியனுக்கு இதைச் சொல்லியிருக்கிறேன். சூரியன் மனுவுக்குச் சொன்னான். மனு, அதை இஷ்வாகுவுக்குச் சொன்னான். இப்படி, ஒருவர் பின் ஒருவராகச் சொல்லப்பட்டு, தரிக்கப்பட்டு, கால வெள்ளோட்டத்திலே அது நஷ்டத்தை அடைந்தது"..
"உயர்ந்த விஷயத்தை சொல்பவர்கள் இல்லாததாலும், உயர்ந்த விஷங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு, சாமான்ய விஷயங்கள் உலகத்திலே நடையாட ஆரம்பித்தன. உயர்ந்த விஷயங்களை சீடனுக்கோ அல்லது புத்ரனுக்கோதான் சொல்லலாம் - வேறு யாருக்கும் சொல்லக்கூடாது" என்கிறது சாஸ்திரம்.
"அதனால் உன்னை நான் இப்போது பரிபூரண சீடனாகவும், தோழனாகவும் ஏற்று இந்த உயர்ந்த விஷயத்தைச் சொன்னேன். இதை ரொம்ப பத்திரமாக நீ கொள்ள வேண்டும்" என்றான் பரமாத்மா.
அர்ஜுனன் சிரித்தான். "எதற்கு சிரிக்கிறாய்"? என்றார் பகவான்.
"உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நீ புளுகிலே வல்லவன் என்று - இப்போது தான் அதை பிரத்யக்ஷமாய்ப் பார்க்கிறேன்"..
பகவான் பார்த்தான் -"நான் பொய் சொல்கிறேனா? எதையடா பொய் என்கிறாய்? என்று கேட்டான்.
உடனே அர்ஜுனன் சற்று பின்வாங்கி, "அதைச் சொல்கிற தைரியம் எனக்கு இல்லை. பொய் என்று சொல்ல முடியாது - நீ சொல்வது எனக்குப் புரியவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்..? என்றான்.
பகவான் திரும்பவும் கேட்டான்: எது புரியவில்லை?
"இப்போது எனக்கு நீ சாரதியாய் இங்கே அமர்ந்திருக்கிறாய். இந்த 28வது கலியுகத்திலே என்னுடன் நீயும் பிறந்திருக்கிறாய்... 28 சதுர்யுகங்களுக்கு முன்பு அந்த சூரியனுக்கும் நீயே சொன்னதாகச் சொல்கிறாயே, அது எப்படிப் பொருந்தும்? அப்போதும் நீ இருந்தாயா..?
இந்த இடத்திலே அர்ஜுனன் இப்படிக் கேட்டதாலே பரமாத்மா தன் சுபாவத்தைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கர்ம யோகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவன் திசை மாறி விளக்கம் சொன்னான்:
"அர்ஜுனா! எனக்கும் எத்தனையோ ஜன்மாக்கள் கடந்தன. உனக்கும்
எத்தனையோ ஜன்மாக்கள் கடந்தன. முந்தைய ஜன்மாக்கள் என்னென்ன என்பதை நீ சொல்ல முடியுமா..? ஆனால், என்னைக் கேள். என் ஜன்ம பரம்பரை அத்தனையையும் சொல்வேன். ஆகையினாலே, உன்னை வைத்து என்னை அளக்கிறாயே.. அது எப்படி சரியாகும்? உன்னைக் கொண்டு என்னை எடை போடாதே!" என்றான்.
எத்தனையோ ஜன்மாக்கள் கடந்தன. முந்தைய ஜன்மாக்கள் என்னென்ன என்பதை நீ சொல்ல முடியுமா..? ஆனால், என்னைக் கேள். என் ஜன்ம பரம்பரை அத்தனையையும் சொல்வேன். ஆகையினாலே, உன்னை வைத்து என்னை அளக்கிறாயே.. அது எப்படி சரியாகும்? உன்னைக் கொண்டு என்னை எடை போடாதே!" என்றான்.
இதனால் என்ன தெரிகிறது..? அவதார காலங்களிலும் பகவான் பரிபூரண ஞானியாக வந்து அவதரிக்கிறான். எப்போதும் பிரகாசிக்கும்படியான ஞானம் அவனுடையது.
அவனுடைய பிறப்புக்குக் காரணம் கர்ம வினை அல்ல. ஆத்ம மாயை! ஆத்ம மாயை என்றால் "விருப்பம்" - அவனுடைய இச்சை என்று பொருள். எப்போது வந்து பிறக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது எல்லாம் வந்து பிறக்கிறான் - தர்மம் குறையும் போதெல்லாம் வந்து பிறக்கிறான்.
"ஒரு ஹிரன்ய கசிபு, ஒரு ராவணன் இருக்கும்போது பகவான் அவதாரம் பண்ணினானே.. இப்போது தற்குறிகளாக நிறையப் பேர் இருக்கிறார்களே... ஏன் அவன் அவதாரம் பண்ணக்கூடாது..? என்று கேள்வி கேட்கலாம்.
பதில் இருக்கிறது...
(தொடரும்)