Tuesday, January 29, 2013

PART-1, Chapter-12

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 12

சர்க்கரைப் பொங்கல் உணர்த்தியது எப்படி?
விதண்டாவாதம் பண்ணிய சிஷ்யன் அதைச் சாப்பிட்டு முடித்தான்.  குரு இன்னொரு சிஷ்யனை அழைத்தார்.  துளி சீயக்காய்ப் பொடி கொண்டு வரச்சொன்னார்.  முதலாமவனிடம் அதைத் தரச் சொன்னார்.  தானும் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொண்டார்.  "சீயக்காய்ப் பொடி போட்டு அவன் கையை நன்னா அலம்பிண்டு வரட்டும்.. மற்றவர்களுக்கு அவன் சர்க்கரைப் பொங்கல் பரிமாறணும்" என்றார். அவனும் சீயக்காயைப் போட்டு கையை நன்றாக அலம்பிக்கொண்டு வந்தான்.  ஆசார்யர் அவனை அழைத்து தன் கையிலே இருந்த சீயக்காய்ப் பொடியைக் காண்பித்து, "கையை நீட்டு, சீயக்காய்ப் பொடி போடறேன்" என்றார். அதற்கு அவன் சொன்னான், "சுவாமி, கையிலே பிசுக்கில்லை.  சுத்தமாகிவிட்டது, போதும் சீயக்காய் இனி வேண்டாம்".  அப்போது குருநாதர் சொன்னார், "இது உன் கை பிசுக்குக்காக இல்லை, உன் வாயிலே, நாக்கிலே இருக்கிற பிசுக்கு போகறதுக்காகப் போடறேன்" என்றார்.  "கொஞ்சம் நாக்கிலே போட்டுத் தேயேன்".  "நாக்கிலே ஒட்டிக்கலையே சுவாமி".  
"இப்ப அந்த வேத வாக்கியம் உனக்குப் புரிகிறதா? என்றார் குரு. 
"புரிஞ்சுடுத்தே, புரிஞ்சுடுத்தே", என்று மாணவன் கீழே விழுந்து சேவித்தானாம்.  "ஒரு சின்ன எளிய பதார்த்தம் நெய்.  நம் கையிலே ஒட்டிக் கொள்வது போல், நாக்கிலே ஒட்டிக் கொள்வதில்லை.  அப்படி ஒட்டிக்கொண்டால் சீயக்காய்ப் பொடியை போட்டல்லவா தேய்க்கணும்.   ஒரு சாதாரண பதார்த்தமே இப்படி என்னும்போது எல்லாவற்றையும் காத்து ரட்சிக்கிற அந்த சர்வேசுவரனுக்கு இந்த சக்தி இராதா?  அவனை நாம் சாமான்யமாக எடை போடலாமா?  வேதம் இப்படிச் சொல்கிறது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று நீ சொல்வது பவ்யமா"? என்று ஆசார்யர் சிஷ்யனைப் பார்த்துக் கேட்டார்.  "நான் ஒப்புக் கொண்டேன் சுவாமி" என்றான் அவன்.
"இவ்வளவு தூரம் இதை வெளிப்படையாகக் காண்பித்துச் சொல்ல அவசியமில்லை.  வேதம் சொல்கிறது என்றால் நாம் அதை அப்படியே நம்பலாம்.  ஏனென்றால் அதில் பொய்யான வார்த்தை எதுவும் இல்லை.  பரமாத்மா எதிலும் ஒட்டிக் கொள்ளாமல், குண - தோஷங்கள் அற்றவனாக இருக்கிறான் என்பது வேதவாக்கு" என்று விளக்கினார் ஆசார்யர்.

சூர்ய ரச்மி ஒரு நதியிலே விழுகிறது.  அதே சூர்ய ரச்மி கோபுரத்திலே விழுகிறது. சாக்கடையிலும் விழுகிறது.  அந்த இடங்களுடைய குண தோஷங்கள் சூர்யா ரச்மியில் ஒட்டிக் கொள்கிறதா என்ன..? அதைப் போல தான், எம்பெருமான் எங்கே இருந்தாலும் அவன் இருப்பிடத்தின் குண தோஷங்கள் அவனிடத்தில் சேர்வதில்லை.  அதனால் தான் அவன் 
பூதாத்மா ஆகிறான்.  நமக்குள்ளே இருந்தாலும் நம்முடன் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.  

சஹஸ்ரநாம பாஷ்யத்திலே பராசர பட்டர் ரொம்ப அழகாக எழுதுகிறார்.  அதை இன்னொரு உபமானமாகச் சொல்லலாம். 
ஒரு பள்ளியிலே உபாத்யாயர் மாணவனிடம், வீட்டுப் பாடம் எழுதிண்டு வந்தாயா என்று கேட்கிறார்.  எல்லோரும் எழுதி வந்திருக்க, அவன் மட்டும்  எழுதவில்லை. அவருக்குக் கோபம் வந்தது. நீளமான பிரம்பை எடுத்தார்.  இரண்டு கையையும் நீட்டச்  சொன்னார்.  இந்த கையிலே ஆறடி, இன்னொரு கையிலே ஆறடி ஓங்கி அடித்தார்.  வலியிலே துடிக்கிறான் அவன்.  அடுத்த அடிக்குக் கையை நீட்ட அவனால் முடியவில்லை.  அடித்த அந்த பிரம்பு இருக்கிறதே.. அதனுடைய சம்பந்தம் பள்ளி ஆசிரியருக்கும் உண்டு, பையனுக்கும் உண்டு. பிரம்பின் இந்த நுனியை அவர் பிடித்துக் கொண்டிருக்கிறார்.  அந்த நுனி அவன் கையில் விழுகிறது.  ஆனால் அடிக்கின்ற ஆசிரியருக்கு ஏதாவது நோவு, கிலேசம், கஷ்டம் என்பது உண்டோ? இல்லவே இல்லை. ஆனால் அடிப்படும்படியான மாணவன் துடிக்கிறான்.  
அந்த மாதிரி பரமாத்மா பிரம்பைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான்.  பரமாத்மா இருக்கிற இந்த சரீரம் என்பது பரமாத்மா இருக்கிற இடமாகவும் உள்ளது.  ஆனால் கிலேசங்கள் எதுவும் அவனுக்கு இல்லை.  அதைத்தான் புருஷ சூக்தம் தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட புருஷன்தான் விச்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிறான்.
சர்வ பதார்த்தங்களுக்குள்ளே அவன் இருந்தாலும் அவற்றுடைய குண தோஷங்கள் எல்லாம் ஒட்டிக் கொள்ளதவனாக அவன் இருக்கிறான்.  உத்தமோத்தமனான எம்பெருமானுடைய அந்தப் பெருமையைத்தான் புரி சயநாத்; என்றது.  
அடுத்து பஹு தானத்.  கேட்கும் வரமெல்லாம் கொடுப்பான்.  வாரி வழங்குவான்.  மோட்சத்தையே கொடுப்பான்.  மோட்ச்ததையே கொடுக்கும்படியான எம்பெருமான் இந்த லோகத்து சந்தோஷங்களை எல்லாம் கொடுத்து மோட்சத்தையும் கொடுப்பான்.
அதனால் தான் சாஸ்திரங்கள், அவனிடத்திலே போய்  எதையும் கேட்காதே, என்று நம்மை சிக்ஷிக்கின்றன.  நாம் கேட்டால் ஏதாவது அல்பமான பொருளைக் கேட்போம்.  அவனோ வாரி வாரி வழங்கக் கூடியவன்.  அதனால், அவனிடத்திலே யாசிக்காதே. கட்டாயம் அவன் கொடுப்பான்.  பரிபூரணமாக விச்வாசிக்க (நம்ப) வேண்டும், அவ்வளவுதான்.    

ஒரு சரித்திரத்திலே இந்த உண்மை தெரிகிறது.
குசேலர், பகவானைப் பார்க்க வருகிறார். பகவான் கிருஷ்ணன் பண்ணுகிற உபசாரத்திலே கூசிப் போய்  உட்கார்ந்திருக்கிறார்.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சிசுருஷை பண்ண, சாஷாத் மகாலஷ்மியே  விசுருகிறாள்.  
சுற்றியிருப்பவர்கள், "இந்த பிராமணன் ஜன்மாந்திரத்திலே என்ன புண்ணியம் பண்ணினானோ! இப்படி ஒரு யோகம் அனுபவிக்கிறாரே...மகாலஷ்மியே விசுருகிறாளே" என்று ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள்.   குசேலரோ பிரமித்துப்போய் பிம்பம் மாதிரி, சிலை மாதிரி உட்கார்ந்திருக்கிறார்.  மகாலஷ்மி பகவானிடம் கேட்கிறார், "இந்த பிராமணர் எந்தத் திக்கிலிருந்து வந்தார்?"   யாரவது நம் வீட்டுக்கு வந்தால், "இவர் எந்த ஊரிலிருந்து வந்தார்"என்று தான் கேப்போம்.  கிழக்கா, மேற்கா என்று திக்கை யாராவது கேட்பாரோ, மகாலஷ்சுமி கேட்கிறாள்.  கபட நாடக சூத்ரதாரியான பகவான் அவள் குறிப்பை நன்றாக உணர்ந்தான்.   உடனே இரண்டு கைகளையும் விரித்து "இந்தப் பக்கம்" என்று அழுத்தி ஜாடை காட்ட, அந்த திக்கை மகாலஷ்மி நோக்க, அஷ்ட ஐஸ்வர்யங்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்த திக்கை நோக்கி போயினவாம்.  
இரவெல்லாம் நண்பர்கள் கிருஷ்ணனும் குசேலனும் பழைய கதைகள் பேசி மகிழ்ந்தார்களாம். விடிந்து எழுந்ததும் குசேலருக்குப் போகவும் மனமில்லை, கிருஷ்ணனுக்கு அனுப்பவும் மனமில்லை.  ஆனால்  புறப்பட்டாயிற்று.  ஒரு ரூபாயாவது தட்சிணைக் கொடுக்க வேண்டாமோ,  ஒன்றும் கொடுக்கவில்லை பகவான்.     குசேலர் தம் வீட்டை நோக்கி வருகிறார்.  சின்ன வயதிலே நடந்ததெல்லாம் கிருஷ்ணன் ஞாபகத்துக்குக் கொண்டு வந்தானே, என்று நினைத்த வண்ணம் வரும்போது, நூறு வேத வித்துக்கள் எதிரே பூரண கும்பத்தோடு  நின்றார்கள்.  குசேலர் பின்னால் திரும்பி பார்க்கிறார்.  பூரண கும்ப மரியாதைக்குரிய பெரியவர் யாரேனும் வருகிறார்களா? என்று.  "சுவாமிக்குத்தான்", என்கிறார்கள் வேத வித்துக்கள்.  பூரண கும்பத்தைத் தொட்டுவிட்டு ஊருக்கு உள்ளே போகிறார்.  இந்த ஊரா என்று சந்தேகம் வந்து விடுகிறது அவருக்கு.  குடிசையத் தேடுகிறார்.  தேவேந்திர பவனம் போல், ஒரு பவனத்திளிருந்து ராணி வந்து அவரை செவிக்கிறாள்.  அட்சதைத் தட்டு நீட்டப்படுகிறது.  தர்மபத்தினியின் பெயர் சுட்சாமா (பசியினால் ஒடுங்கியவள் என்று அர்த்தம்).  
அட்சதையை எடுத்து சுட்சாமாவுக்குத் தூவி, "தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசீர்வதிக்கிறார் குசேலர்.   பத்தினி பதருகிறாள், "சுவாமி, இப்படிச் சொல்லலாமா? என்கிறாள்.  

"தீர்க்க சுமங்கலி" என்று சொன்னால் அது என்ன தப்பான ஆசியா?  கிடையாது.  ஆனால் கணவன் தன் பத்தினியை அப்படி ஆசி பண்ணக் கூடாது.  அது தன் தலையிலேயே அட்சதையைப் போட்டுக் கொள்கிறமாதிரி.   இந்த சின்ன சாஸ்திரம் குசேலருக்குத் தெரியாதா.  64 சாஸ்திரங்களையும் 64 நாட்களில் கிருஷ்ணனுடன் சேர்ந்து பயின்றவராயிற்றே. அவருக்குத் தெரியாமல் இருக்குமா, தெரியும்.  ஆனால், வந்து நமஸ்கரித்தவள் யாரோ ராணி என்று நினைத்துக் கொண்டுவிட்டார்.
மகாலஷ்மி கடாஷம் வேண்டும் என்று குசேலர் கேட்டாரா?  இல்லை!.  ஆனால் எப்படிப்பட்ட ஐஸ்வர்யம் கிடைத்தது.    
அப்படிக் கொடுப்பதுதான் அவன் குணம்.  பஹு தானத் புருஷ: அவன் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் நம்மாலே தாங்க முடியாது.

புராணாத்வாத் புருஷ: புராணாம் என்றால் ரொம்ப பழமையானவன்.  பழமையிலேயே புதுமையானவன்.  அவனுடைய ஆதி எது என்று நமக்குத் தெரியுமா?
பூர்ணாத்வாத் புருஷ:  எல்லாம் நிறைவானவன்.  குறைவே இல்லாது சர்வமும் நிறைந்து விளங்கக் கூடியவன் என்று அழகான இந்த புருஷ சப்தத்துக்கு நான்கு பொருள் சொன்னார்கள்.
விச்வ சப்தத்தினாலே சொல்லப்படக்கூடிய புருஷனாகிற அந்த எம்பெருமானை ஆச்ரயித்து (வணங்கி) எல்லோருமே ஜீவிக்கிறோம்.

தொடரும்...

 
 


 

   



No comments:

Post a Comment