குறையொன்றுமில்லை
(முதல்
பாகம்)
அத்தியாயம் 11
தொடரும்...
அத்தியாயம் 11
ஒருத்தர் கை நீட்டி யாசிக்கிறார். பத்து ரூபாய் கேட்கும் அவருக்கு மற்றொருத்தர் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். ஆஹா, என்ன உதார ஹ்ருதயம்னு கொடுத்தவரை நாம் கொண்டாடுகிறோம். இதை பகவான் கீதையிலே அப்படியே மாத்திட்டார். என்கிட்டே கையை நீட்டிக் கேட்கிறீங்களே, என்ன உதார ஹ்ருதயம் உங்களுக்கு என்று கேட்பவரைச் சிலாகிக்கிறார்.
அவனிடத்திலே சென்று அவன்தான் சர்வம் என்று உணர்ந்து அவனைப் பார்த்துக் கை நீட்டுகிறவர்களை உயர்த்திச் சொல்கிறான் பகவான். இவர்கள் கேட்கா விட்டால் நான் யாருக்குக் கொடுப்பேன் என்கிறான். வேறொருவர் கை நீட்டினால் ஒழிய கொடுப்பவருக்குப் பெருமை உண்டோ? அப்படிக் கை நீட்டுகிறவர்களை உதாரா: என்று கொண்டாடுகிறான் பகவான். அவனையே பற்றுதல் என்கிற அறிவை நமக்குத் தருகிறான். அந்த அறிவை உண்டாக்கும் தன்மை உடையவன் யார் என்று கேட்டால்... விச்வ சப்தத்தினால் அறியப்படுகிரவன்; சர்வத்திலும் இருப்பவன் நமக்குச் சுலபமாய்க் கிடைக்கக் கூடியவன்; பரமாத்மா.
அவன் ரொம்பப் பெரியவன், அவன் கிட்டவே போக முடியாதுன்னு சொல்லி விட்டால், இந்த உபதேசம் எதற்கு? உபன்யாசம் எதற்கு? எல்லாத்தையும் நிறுத்துங்கோ என்று தான் சொல்லத் தோன்றும். ஆனால் எவ்வளவு தான் உயர்ந்தவன் என்றாலும் அவன் திருவடியை அணுகிவிட்டால் நம்மிடத்திலே அன்பு கொண்டு ஓடி வருகிறான். "அகலில் அகலும் அணுகில் அணுகும்" என்கிறார் நம்மாழ்வார்.
ஒரு கப்பல் நிறைய அரிசி மூட்டை அடுக்கியிருக்கு. அதைச் சாப்பிட வருகிறது ஒரு காகம். சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் கப்பல் புறப்பட்டு நடுக்கடலுக்கும் போய்விடுகிறது. அதை உணர்ந்த காகம் கரைக்குத் திரும்பி விடலாம் என்று எண்ணி கிழக்குத் திக்காகப் பறந்து நெடுந்தூரம் பறந்தும் கரை தென்படவில்லை. இனிமேல் பறக்க சக்தியில்லைன்னு கப்பலுக்கே திரும்பி விடுகிறது காகம். சற்றைக்கெல்லாம் திரும்பவும் பார்க்கிறது மேற்கு திக்கு நோக்கி... மீண்டும் திரும்புகிறது. இப்படியே நாலா திக்கிலும் பறந்து ஓடி, சோர்ந்து கப்பலுக்கே திரும்பிடறது.
நாம் அந்த காகம் மாதிரி. பரமாத்மா அந்தக் கப்பல் மாதிரி. "நீ எங்கதான் போவே.. எங்க போனாலும் இங்கே தானே வரணும்" என்று நாம் போவதைப் பார்த்துக் கொண்டு வாய் மூடி இருக்கிறான்.
ராமாயணத்திலே விபீஷண சரணாகதியை வர்ணிக்கும்போது "விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்" என்று சொல்லப்படவில்லை. "ராமனிருக்கும் இடம் வந்தான்" என்று தான் சொல்லி இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? வர வேண்டிய இடத்துக்கு அவன் வந்து சேர்ந்து விட்டான் என்று அர்த்தம். நாமும் அப்படித்தான் பகவானை விட்டுச் சென்றவர்களாக இருக்கிறோம் அவனிடத்தில் சேர வழி அனைத்தையும் அவனே தான் காட்டிக் கொடுக்கிறான்.
வேதத்திலே புருஷ சூக்தமும், புராணங்களிலே விஷ்ணு புராணமும், பாரதத்திலே பகவத் கீதையும், தர்ம சாஸ்திரங்களிலே மனு ஸ்ம்ருதியும், ரொம்ப உயர்ந்தவை என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பட்ட புருஷ சூக்தத்திலே சொல்லப் படுபவன் தான் பரமாத்மா. புருஷ என்கிற சப்தத்துக்கு நான்கு வித அர்த்தமிட்டார்கள். புரி சயநாத் புருஷ: புரி என்றால் சரீரம். நம் சரீரத்திலே இருக்கிறான் பகவான். கீதையிலே பகவான் குந்தி புதல்வனிடம் சொல்கிறார் "இதம் சரீரம் கௌந்தேய" (குந்தி புதல்வா) க்ஷேத்ரம் = சரீரமே க்ஷேத்ரம்.
ஆகையினாலே ரொம்ப ஜாக்கிரதையாக அதைக் காக்க வேண்டும். இந்த சரீரம் எப்படிப்பட்டது? அதிகாலை நாலுமணிக்கு எழுந்திருக்கும் வழக்கத்தை உண்டு பண்ணி விட்டால், எந்த ஊருக்கு நாம் போனாலும், இது நாலு மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொள்ளும். நாம் எப்படி வளைக்கிறோமோ அப்படியெல்லாம் வளைந்து கொடுக்கும் நம் சரீரம். அதற்காக அதை எப்பாடு வேணுமானாலும் படுத்துவதா..?
பகவான் வாழும்படியான இந்த சரீரத்தை அழித்துக் கொள்ள நமக்கு உரிமை இல்லை. ரொம்ப ஜாக்கிரதையாக இதை ரட்சிக்கணும். சரீரத்தினுள்ளே ஆத்மா இருக்கிறதாலே அதை போஷித்து ரட்சிக்க வேண்டியுள்ளது.
ஒரு நல்ல பட்டு வஸ்திரம் துவைத்து உலரப் போட்ட வஸ்திரம். முள் புதரில் பறந்து போய் விழுந்து விடுகிறது. ஏகப்பட்ட முட்கள் சிக்கிக் கொண்டு நிற்கின்றன. பிடித்து இழுத்தால் கிழிந்து விடும். முள்ளுக்கு நெருப்பு வைத்தால் மொத்தமும் போய்விடும் அந்த நேரத்தில் என்ன வேண்டும் நமக்கு? ரொம்பப் பொறுமை வேண்டும். பொறுமை இருந்தால் ஒழிய அந்தப் பட்டு வஸ்திரத்தை நாம் பெற முடியாது. நிதானமாக ஒவ்வொரு முள்ளில் இருந்தும் நீக்கி எடுக்க வேண்டும் அதை.
அந்த மாதிரி, இந்த ஆத்மா என்கிற பட்டு வஸ்திரம் சரீரமாகிற முள் புதரிலே அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. திடீர்னு அதை இழுத்திட முடியுமா? ரொம்ப ஜாக்கிரதையாய், சாஸ்திரம் சொன்னபடி நின்று சரீரத்திலிருந்து ஆத்மா பிரியும்படியான அந்த உத்தமமான நிலையை, சாஸ்திர ரீதியாக நடத்தி வைக்க வேண்டும். கோணலான மார்க்கத்தில் போகக்கூடாது.
ஏனென்றால் நமக்குள்ளே எம்பெருமான் இருக்கிறான் - புரி சயநாத் புருஷ:
விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே பூதாத்மான்னு ஒரு நாமம் வருகிறது. பரம பவித்ரமான ஆத்மா, பாவனமான ஆத்மா.. என்று இதற்கு அர்த்தம். அப்படிப்பட்டவன் நமக்குள்ளே இருக்கிறான். அப்படியானால் இயல்பான ஒரு சந்தேகம் வருகிறது. நமக்குத் தலைவலி வந்தால் அவனுக்கும் வருமா? ஒரே சளி பிடித்து மூக்கை அடைக்கிறது. அவனுக்கும் அடைக்குமா? நமக்கு ஏற்படும்படியான விசார, விகாரங்களெல்லாம் அவனுக்கும் உண்டா என்கிற கவலை வந்து விடுகிறது. நமக்குள்ளே அவன் இருந்தாலும் இந்த சரீரத்துடன் சம்பந்தம் இல்லாமல் தான் இருக்கிறான்.
அப்படி அவன் இருக்கும்படியானது அவனுடைய அகடி தகடனா சாமர்த்தியம் என்பது. எல்லாம் வல்லவனான பரமாத்மாவுக்கு இது பெரிய விஷயமில்லை.
உபநிஷத் நம் சீரத்தையே ஒரு மரமாகச் சொல்கிறது. (இதையே கீதையில் பதினைந்தாம் அத்தியாயத்திலும் பார்க்கலாம்) அந்த சரீர மரத்தின் இடது பக்கத்திலே நிறைய கிளைகள். அதிலே இரண்டு பக்ஷிகள் உட்கார்ந்திருக்கின்றன. ஒரு பறவைக்குத் திடமான இறக்கைகள் இருக்கின்றன. இன்னொரு பறவைக்கு அதெல்லாம் கிடையாது. இரண்டும் பக்கத்து - பக்கத்திலே தான் உட்கார்ந்திருக்கின்றன. இந்த உடம்புக்கு ஏற்படக் கூடிய சுகம், துக்கம் ரோகங்கள் எல்லாம் இறக்கை இல்லாத பறவை இருக்கே... அதுக்கும் பூரணமாய் ஒட்டிக்கொள் கிறது. ஆனால் அதன் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிற பறவைக்கு எதுவும் ஒட்டிக் கொள்வதில்லை. எவன் பரமாத்மாவை தியானம் பண்ணுகிறானோ அவன் இதைப்போல ஒன்றும் ஒட்டிக் கொள்ளாமல் கதி அடைவான் என்பது பலசுருதி (விளக்கம்).
இந்த விஷயத்தை குருகுலத்திலே ஒரு கார்த்திகை மாசம் உபாத்யாயர் சொல்லிக் கொண்டிருதார்.
எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பார்களா? அதிலே ஒரு மாணவன் எழுந்தான் "ஆசார்யரே இந்த விஷயத்தில் எனக்கு ரொம்ப பெரிய சந்தேகம்" என்றான். இந்த மாதிரி இரண்டு பறவைகள், ஒரு பறவைக்கு மட்டும் ஓட்டும் இன்னொன்றுக்கு ஒட்டாதுன்னா நான் நம்ப மாட்டேன்" என்றான். உபாத்யாயர் பார்த்தார். "நானா அப்படிச் சொல்கிறேன்? ஆயிரம் தாய் தந்தையருக்குச் சமானமாக நம்மிடம் அன்பு கொண்டிருக்கிற சாஸ்திரம் - வேதம் அல்லவா அப்படிச் சொல்கிறது. நீ விதண்டாவாதம் பண்ணலாமா"? என்றார்.
"அப்படியே வேதம் சொன்னாலும் அதை நான் ஏற்று கொள்ளத் த இதையே யாராயில்லை. ஏதாவது ஆதாரம் காண்பிக்கணும் நீங்கள். இல்லாவிட்டால் நான் நம்ப மாட்டேன்" என்றான் மாணவன். இன்னொரு குருவாக இருந்தால் மாணவனை அடித்திருப்பார், ஆனால் இவர் ரொம்ப சாத்வீகர், அடிக்கவில்லை. "உட்காரு" என்று மாணவனை அமர்த்தி விட்டார். "இப்ப நீ கேட்கிற விஷயம் எனக்குப் புரியவில்லை, அப்புறமா விளக்கறேன்" என்றார்.
அன்றையிலிருந்து அத்தப் பையனுக்கு கர்வம் அதிகமாயிடுத்து. "நான் கேள்வி கேட்டு ஆசார்யனுக்கு பதில் சொல்லத் தெரியலை", அப்படின்னு ஒரு கர்வம். எல்லோரிடமும் இதையே போய்ச் சொன்னான். குருவோ பொறுமைக்கு நிலைக்களனாய் இருந்தார்.
மார்கழி மாசம் வந்தது. திருப்பாவை இருபத்தேழாவது பாசுரம் படிக்க வேண்டிய நாள். அது எல்லோருக்கும் ரொம்பப் பிடித்தமான பாசுரம். ஏனென்றால் இரண்டாவது பாசுரம் மாதிரி அது விரதம் இருக்கச் சொல்வதில்லை. பாத்திரத்தின் மேலே ஒரு முழத்துக்கு நெய் மிதக்கிற மாதிரி சர்க்கரைப் பொங்கல் தயார் பண்ணி, எல்லோரும் கூடியிருந்து அதை அனுபவிக்கச் சொல்கிறது. அந்த நெய் முழங்கை வழியே வழிந்து ஓட, அதை இன்னொருத்தர் ஏந்திக் கொள்ள, அவர் கையிலிருந்தும் வழிந்தோட மேலும் ஒருத்தர் கை நீட்டி ஏந்தணுமாம். அப்படிப்பட்ட சர்க்கரைப் பொங்கல் அன்றைக்கு குருகுலத்திலே தயாரானது.
விதண்டாவாதம் பண்ணிய மாணவனை அழைத்து நிறைய சர்க்கரைப் பொங்கலை வாரிக் கொடுத்தார் குரு. அவனுக்கு ரொம்ப சந்தோசம். ஆசார்யரே கொடுக்கிறாரே, இன்னொரு கை எடுத்துப் போட்டார். "நன்றாகச் சாப்பிடு" என்றார். திருப்தியாகச் சாப்பிட்ட அந்த மாணவனுக்கு அந்த சர்க்கரைப் பொங்கலே ஞானத்தை உண்டாக்கியது.
அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment