குறையொன்றுமில்லை
(முதல்
பாகம்)
அத்தியாயம் 9
வேதம் என்ற சொல்லுக்கு உணர்த்துதல் என்று அர்த்தம். பரப்ரும்மத்தை உணர்த்துவதனாலே அது வேதம். இதையே தமிழில் "மறை" என்கிறோம். மறைப்பதனாலே அதற்கு மறை என்று பொருள்.
சமஸ்கிருத அர்த்தத்துக்கு தமிழ் அர்த்தம் முரணாக நமக்கு தோன்றுகிறதல்லவா? இந்த முரண்பாடு கண்டு நாம் பிரமித்துப் போய்விடக் கூடாது. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டதைத்தான் தமிழ் மேலும் வலியுறுத்திச் சொல்கிறது.
பரப்பிரும்மத்தை உணர்த்துவதனால் வேதம்.
பரப்பிரும்மத்தைத் தன்னுள்ளே மறைத்து வைத்ருப்பதனாலே அது மறை. வேதமானது யாருக்கு மறைக்கிறது யாருக்கு பரப்பிரும்மத்தைக் காட்டுகிறது? ஆசார்ய கடாக்ஷம் அற்றவருக்கு மறைக்கிறது. ஆசார்ய கடாக்ஷம் பெற்றவருக்கு பரப்பிரும்மத்தை அதுவே உணர்த்துகிறது.
பரப்பிரும்மத்தைத் தன்னுள்ளே மறைத்து வைத்ருப்பதனாலே அது மறை. வேதமானது யாருக்கு மறைக்கிறது யாருக்கு பரப்பிரும்மத்தைக் காட்டுகிறது? ஆசார்ய கடாக்ஷம் அற்றவருக்கு மறைக்கிறது. ஆசார்ய கடாக்ஷம் பெற்றவருக்கு பரப்பிரும்மத்தை அதுவே உணர்த்துகிறது.
பளிங்கு கற்களால் தயார் பண்ணப்பட்ட திவ்யமான ஒரு மாளிகையிலே நான்கு பக்கமும் தேதீப்யமாய் விளக்குகளை ஏற்றி வைத்து, அந்த மாளிகைக்கு இடையிலே நவநிதிகளையும் கொட்டினால், அது எப்படி தகதகாயமாய்ப் பிரகாசிக்குமோ, எல்லோருக்கும் எப்படிப் பளீரென்று புலப்படுமோ, அந்த மாதிரி... ஆசார்ய கடாக்ஷம் பெற்றவர் வேதத்தைப் பார்த்தாரானால், அதற்குள்ளே இருக்கக்கூடிய விஷயங்கள் கூட சுலபமாக அவருக்குப் புரியும். சாமானியர்களுக்கும் இந்த மாதிரி புரிய வைக்கக் கூடியது மகான்களின் அனுக்கிரஹம். இந்த வேதம் ஓதி யக்ஜம் செய்யப்படும்போது, பூரணமாய் ஆயுள் உண்டாகவும், இறுதிவரையிலே பார்வையும் செவிப்புலனும் சித்திக்கவும், மனசு சலிக்காமல் இருக்கவும், வாக்கிலே எப்போதும் தேன் சிரவிக்கவும் அனுக்கிரஹமாகிறது. வாக்குக்கான இந்திரியம் நாக்கு. அது பற்களைப் பார்த்துக் கேட்கிறது.
"கடுமையான விஷயங்களைப் பொடியாக்கி எனக்குக் கொடுக்கிறீர்களே, நான் உங்களுக்கு கடமைப்பட்டேனே. என்ன பண்ணினால் உங்களுக்குப் பிரதியுபகாரமாய் இருக்கும்? அதை நீங்கள் சொல்ல வேண்டும்".
அதற்கு முப்பத்திரண்டு பற்களுமா பதில் சொன்னதாம்... நீ ஒண்ணும் உபகாரம் பண்ண வேண்டாம். பகவான் உன்னை எப்படி வச்சிருக்கான்னு எண்ணிப்பாரு. அதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்.
எப்படி வச்சிருக்கான்? என்றது நாக்கு.
உன்னை உள்ளே வைத்து, எங்களை வெளியே வச்சிருக்கான். இதனோட தாத்பர்யம் என்ன? எங்களைத் தாண்டி நீ வெளியே வரக்கூடாது. கட்டுப்பட்டு இருக்கணும்றது பகவானின் சங்கல்பம். அப்படி இருந்துட்டா துன்பம் ஒண்ணுமில்லை.
பற்களின் இந்த பதிலைக் கேட்ட நாக்கு வருத்தப்பட்டது. என்னை இப்படி நிஷ்டூரமா சொல்கிறீர்களே, நான் வெளியில் வந்தால் என்ன?
"நீ வெளியில் வந்தால் எங்களுக்குத்தான் கஷ்டம். எதிரேயுள்ளவன் உன் பேச்சைக் கேட்டு என்ன சொல்வான்? உன் நாக்கை அடக்குவேன் என்று சொல்வதில்லை எதிராளி. பல்லை உடைப்பேன் என்று தான் சொல்கிறான். அதனால் எங்களுக்குக் கட்டுப்பட்டு இரு" என்றன பற்கள்.
இது கலியுக தர்மம். கலியுகத்திலேதான் தப்பை ஒருத்தன் பண்ணினாலும் சிஷை இன்னொருத்தனுக்கு. எனவே நமக்கு வார்த்தைகள் மிகும்போதெல்லாம் இந்த சம்பாஷணை நினைவு வர வேண்டும். அடங்கிவிடுவோம்.
வாக்கு நமக்கு நல்லவிதமாய் அமையணும் என்றால், நாமாக அதைப் பெற்று விட முடியாது. யக்ஜங்கள் தான் நல்ல வாக்கை உண்டாக்கித் தர வேண்டும். வாக்கு மட்டுமல்ல, புலன்கள் யாவும், ஆத்மாவும் கூட யக்ஜத்தினாலே ரக்ஷிக்கப்படுகின்றன.
யக்ஜம் என்ற சொல்லால் எது மறைத்துச் சொல்லப்படுகிறது என்று பார்த்தால் அந்த பரமாத்மா தான் மறைத்துச் சொல்லப்படுகிறார். விஷ்ணுதான் யக்ஜன் - யக்ஜ சாதனன், யக்ஜரூபி, யக்ஜபுருஷன். எல்லாவற்றையும் அவன் உண்டாக்கித் தரட்டும் என்று வேதம் சொல்கிறது.
யக்ஜம் என்ற பதத்தினாலே நாம் அறிந்து கொள்பவர் பரமாத்மா. அதே போல்தான் மந்திரங்களுக்குத் துல்லியமாய் இருக்கக் கூடிய சஹஸ்ரநாமத்திலே, விச்வம் என்கிற சொல். வெளியே காணக்கூடிய உலகம் என்று கருத்து தென்பட்டாலும் அது நாராயணனையே உணர்த்துகிறது. விச்வ சப்தத்தினாலே உணர்த்தப்படுகிறவன் நாராயணனே.
"நாராயண" என்ற சொல்லுக்கு நாம் பொருள் உணர வேணும். விஷ்ணு புராணத்திலே "தீர்த்தம்", "ஜலம்", இவற்றுக்கு நாரங்கள் என்று அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.
"நாரம் ததாதி இதி நாரத".. பித்ரு தேவதைகளை ஏராளமாக தர்ப்பணம் பண்ணி ஆராதித்தார் என்பதாலே அவருக்கு நாரதர் என்று பெயர். தீர்த்தத்தை நிறைய, பித்ரு தேவதைகளுக்குக் கொடுத்தவர்.
நாரம் என்றால் பிரும்ம ஜானம் என்றும் ஓர் அர்த்தம் உண்டு. பிரும்ம ஜானத்தை அனவரகம் உபதேசித்தவர் நாரதர். பரப்ரும்மத்தைத் தவிர மற்றொரு விஷயம் பேசமாட்டார் அவர்.
சிருஷ்டிக் கிரமத்தில் தக்ஷபிரஜாபதி என்பவர் ஹரியச்வரர்கள் என்று விஷேசமாக பத்தாயிரம் பேரை சிருஷ்டி பண்ணினார். அந்த பத்தாயிரம் பேரையும் உட்கார வைத்து நாரதர், "இந்த சிருஷ்டி உலகம் எதுக்கு? பரப்ரும்மத்தை அடைய வேண்டாமா?" என்று உபதேசம் பண்ணினார். உடனே, அத்தனை பெரும் பரப்ரும்மத்தை தியானம் பண்ணி மோட்சத்துக்குப் போய் விட்டார்கள். சிருஷ்டியே நடக்கவில்லை. இன்னொரு ஆயிரம் பேரை சிருஷ்டித்தார்
தக்ஷபிரஜாபதி. நாரதர், அவர்களுக்கும் உபதேசம் பண்ண, அவர்களும்
மோட்சத்துக்குப் போனார்கள். பார்த்தார் தக்ஷபிரஜாபதி. "நாம் சிருஷ்டிகிறது, இவர் மோட்சத்துக்கு வழி பண்றதா? என்று கோபித்துக் கொண்டு நாரதருக்கு ஒரு சாபம் கொடுத்தார்.
தக்ஷபிரஜாபதி. நாரதர், அவர்களுக்கும் உபதேசம் பண்ண, அவர்களும்
மோட்சத்துக்குப் போனார்கள். பார்த்தார் தக்ஷபிரஜாபதி. "நாம் சிருஷ்டிகிறது, இவர் மோட்சத்துக்கு வழி பண்றதா? என்று கோபித்துக் கொண்டு நாரதருக்கு ஒரு சாபம் கொடுத்தார்.
"நின்றவா நில்லா நெஞ்சம் போல்" அவர் அலைந்த வண்ணம் இருக்கக்கடவது என்று சாபம். மனசு எப்படி ஓர் இடத்திலே நிற்காதோ.. அப்படி நிற்காமல் போய்க் கொண்டேயிருக்க வேண்டும் என்று சாபம்.
அதனால்தான் நாரதர் ஒரு கணம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டார். அவர் ஒரு நிமிஷம் தங்கினால், அங்கிருப்பவருக்கு மோக்ஷ சித்திதான்.
நாரம் என்றால் தீர்த்தம் என்று சொல்லப்போக, தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் செய்த நாரதரின் கதையைச் சொன்னேன். தீர்த்தத்தை எவனொருவன் படுக்கையாக - தன் இருப்பிடமாகக் கொண்டானோ.. அவனுக்கு நாராயணன் என்று பெயர்.
ஒருவர் சமத்காரமாக பகவானை ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார் - சிலேடை என்று அதைச் சொல்வது.
பூர்வ காலத்திலே பழையது சாப்பிடுவது என்றொரு வழக்கம். சாதம் சேர்ந்து போயிருந்தால் அதை எடுத்து ஜலத்திலே போட்டுடறது. விடியற்காலையிலே அந்த சாதத்தை எடுத்துப் பிழிந்து போட்டுவிட்டு, அந்த ஜலத்திலே உப்பு சேர்த்து ஒருத்தர் சாப்பிட்டாரானால், காலை வெயிலைத் தாங்கக்கூடிய சக்தி உண்டாகிறது. குறிப்பா விவசாயிகள், வயல் வேலைக்குப் போகிறவர்கள் இப்படிச் செய்வதுண்டு. (இந்த விவசாயிகளுக்கு போக பாக்யங்களைத் தரச் சொல்லி கேட்கிற ஒரு பிரார்த்தனை கூட பிராதஹ்கால சந்தியாவந்தனத்த்திலே உண்டு.)
சாதத்துத் தீர்த்தத்தைச் சாப்பிட்டால் வெயிலைத் தாங்கற சக்தி வரும். இது பழையது சாப்பிட்ட உடம்பு. ஒண்ணும் பண்ணிக்க முடியாது என்று கூடச் சொல்வார்கள். இந்த பழையதும் பகவானும் ஒண்ணு என்றான் ஒருத்தன். இது பழையது. அவனும் புராண புருஷன். இது எங்கே படுத்து இருக்கிறது? ராத்திரி முழுதும் சாதம் ஜலத்திலே படுத்திருக்கிறது. அவனும் ஜலத்திலே படுத்திருக்கிறான். அதனாலே ஜலே சயனம்.
என்னை உள்ளபடியே உணர்கிறவர்கள் ஒரு சிலரே என்றான் பரமாத்மா. கீதையிலே பழையதின் பெருமையும் அதை அனுபவித்துணர்ந்த சிலருக்கே தெரியும்.
பழையதை எப்போ சாப்பிட வேண்டும்? அதிகாலையிலே. எம்பெருமானையும் அதிகாலையிலே தியானம் பண்ண வேண்டும். பழைய சாதத்தைப் போல் பரமாத்மாவும் நாரங்கள் சூழ இருக்கிறான். எனவே அவன் நாராயணன்.
சேதனம் - அசேதனம். அதாவது அசையும் பொருள், அசையாத பொருள் என்ற இரண்டு விதமான பொருள்களிலேயும் இருப்பவன் நாராயாணன். அது அந்தப் பெயருக்கு இன்னொரு விளக்கம். சித் ஆகவும் அசித் ஆகவும் இருப்பவன் அவனே. சித் என்பது நமது அறிவான ஜீவாத்மா அசித்-அசேதன அறிவற்ற பதார்த்தங்கள். உலகில் எத்தனையோ ஜீவன்கள் உள்ளன. மனிதனுக்குள்ளே இருக்கும் ஜீவன் ஒரு சாக்கடைப் புழுவுக்குள்ளும் இருக்கிறது. ரொம்ப பரமாணுவான உயிர்களுக்குள்ளேயும் இருக்கு. அதைக் கண்ணாலே பார்க்க முடியுமா என்றால் பார்க்க முடியாது என்கிறது உபநிஷத்.
பசுவின் வால் நுனியில் உள்ள கேசத்தில் ஒரே ஒரு கேசத்தை எடுத்துக் கொள். அதை நூறு கூறுபோடு. ரோமத்தை நூறு கூறு போட முடியுமா? என்று கேள்வி கேட்கக் கூடாது. மனசாலேயே கூறு போடு என்கிறது உபநிஷத். அப்படி நூறு கூறு போட்டதில் கிடைக்கும் ஒரு இழையை எடுத்து மறுபடியும் நூறு கூறு போடு. இப்படிப் போட்டுக் கொண்டே போனால் இறுதியில் கிடைக்கக் கூடியதுதான் ஜீவன் என்கிறது உபநிஷத்.
இந்த காலத்திலே மைக்ராஸ்கோப் என்கிற கருவியைக் கொண்டு பல நுண்ணிய விஷயங்களையெல்லாம் பார்க்கிறார்கள். ஆனால் அதைக் கொண்டு ஆத்மாவை பார்க்க முடியுமா? முடியவே முடியாது. காரணம், அதற்கு இருக்கிற ஜானம் எங்கும் பரந்து விரிந்திருக்கும். இதற்கு ஒரு கதை சொல்லலாம்.
வியாசர் உட்கார்ந்திருந்தார். ஒரு சின்ன புழு, ரொம்ப அல்பமான புழு - தன் உடம்பைக் கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு போயிற்று. வியாசர் வாயை மூடிக் கொண்டு இராமல் இந்தப் புழுவோடு பேசுகிறார். ஏ புழுவே! புழுவே! என்ன இவ்வளவு வேகம்? எங்கே போகிறாய் என்று கேட்கிறார். அந்தப் புழு அவரைத் திரும்பிப் பார்த்துச் சொல்கிறது. அதோ பாரும்! அங்கே இரண்டு காளை மாடு பூட்டப்பட்ட வண்டி வேகமாக வருகிறது. அந்த வண்டி இந்தப் பாதையிலே வேகமாகப் போகப் போகிறது. அது என் மீது ஏறினால் அநியாயமா நான் மாண்டு போய் விடுவேன். ஆகையினாலே அந்த வண்டி வந்து சேர்வதற்குள்ளே வேகமாகப் போகிறேன் என்றது புழு. வியாசர் அதோடு விடாமல், "அந்த வண்டி உன் மேலே ஏறட்டுமே. நீ போனால்தான் என்ன" என்று கேட்டாராம். வியாசரே, "என்ன சொன்னீர், மறுபடியும் சொல்லும்". நீ போனால் போயேன்னு சொன்னேன், என்ன இப்போது"? "உமக்கு என்னைக் கண்டால் அசூயை, அதனால் தான் அப்படிச் சொல்கிறீர்". "
என்ன அசூயை"?
"நான் என்ன சந்தியாவந்தனம் பண்ணணுமா? மாத்தியானிகம் பண்ணணுமா, உபன்யாசம் கேட்கணுமா, இல்லை நான் என்ன பெண்ணுக்கு கல்யாணம் பண்ணணுமா, பையனுக்கு உபநயனம் பண்ணனுமா, நான் என்ன பந்து பரிபாலனம் பண்ணணுமா? ஆசார்யனை சேவிக்கணுமா? இதையெல்லாம் நான் செய்ய அவசியமில்லையே என்று உமக்கு அசூயை" என்றது புழு.
இந்த கதையாலே இரண்டு விஷயங்கள் உணர்த்தப்படுகின்றன.
ஒன்று - சக்தி சாமர்த்தியத்தைக் கொடுத்து, அறிவைக் கொடுத்து, சாஸ்திரத்தைக் கொடுத்து வைக்கப்பட்டிருக்கு நமக்கு. அப்படிப்பட்ட நாமே நமக்கு விதித்தக் காரியங்களைச் செய்யவிட்டால், அந்தப் புழுவைக் காட்டிலும் நாம் மட்டமாகப் போய் விடுகிறோம்.
இரண்டு - புழுவுக்குள்ளேயும் இருக்கக்கூடிய ஆத்மா மிக நுண்ணியது. எவ்வளவு அல்பமான வஸ்துவானாலும் அதற்குள்ளேயும் அந்தராத்மா..பரமாத்மா இருக்கிறான்.
சித்..அசித் பதார்த்தங்கள் அனைத்திலும் பரமாத்மா இருக்கிறான். சித்-அசித் சேர்ந்து அமைவனதான் நாரங்கள். நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன் நாராயணன். அந்த நாரங்கள் - அதாவது சேதன - அசேதன பதார்த்தங்கள் எவனிடத்திலே உறைகின்றனவோ அவன் என்றும் இன்னொரு பொருள் சொல்லலாம் நாராயண சப்தத்துக்கு.
No comments:
Post a Comment