Wednesday, April 16, 2014

PART - 1, Chapter - 41

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 41

அர்த்த பஞ்சகம் - இது ராமாயணம் உணர்த்தும் இன்னொரு தர்மம்.  வேத, சாஸ்திர புராணங்கள் எல்லாமே அதன் மேல்தான் நிற்கின்றன.
நாம் அடைய வேண்டிய பரப்ரும்மத்தினுடைய ரூபம், வடிவழகு என்ன என்பது நமக்கு நன்றாகத் தெரிய வேண்டும்.  அதன் ஸ்வரூப, ரூப, குண விசே-ஷங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.  
அந்த பரப்ரும்மத்தை அடைய வேண்டிய ஆத்ம ஸ்வரூபத்தையும் - அதாவது நாம் யார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவனை அடைய வேண்டிய வழி எது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு அடைந்த பிறகு ஏற்படக்கூடிய பலன் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவனை அடையவிடாமல்  எது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து விஷயங்களின் (அர்த்த பஞ்சகம்) மேல்தான் வேதமே நிற்கிறது.
இந்த உலகம் இருக்கிறதே... ப்ரக்ருதி - இது பகவானைத் தெரிய விடாமல் கண்ணை மறைக்கிறது.
கோயிலில் திரை போடுவதற்குக் காரணம் என்ன? அவனுக்கும் நமக்கும் ப்ரக்ருதி  தடையாக இருக்கிறது என்பதைக் காட்டத்தான்.
அதனால்தான் "தெரதீயகராதா" என்று அந்த ஏழுமலையான் சன்னதியிலே நின்று பாடினார் தியாக ப்ரும்மம்.  அந்தத் திருவேங்கடமுடையான் உருவத்தை மறைத்த திரையைச் சொல்லலை அவர்.. அவனுக்கும் நமக்கும் ப்ரக்ருதியாகிய திரையைச் சொல்கிறார்.  அந்தத் திரையைத் திறக்கக் கூடாதா?  "உன்னை நான் என்னுள்ளே பார்க்கும் காலம் வருமா" என்று கேட்டார்.
ஆகவே, நாம் எம்பெருமானைப் பார்ப்பதற்குப் பெரிய தடையாக இருக்கிறது இந்த ப்ரக்ருதி சம்பந்தம்.
அவனை அடைவதற்கான உபாயம் பக்தி, சரணாகதி.. அவனை அடைந்த பிற்பாடு அவன் திருவடியிலேயே நித்ய கைங்கர்யம் பண்ணும் தன்மை உண்டாகும்.
சூரியன் இருக்கிறான்.  ஒளிக்கற்றையை உடையவனாகவும் இருக்கிறான். ஒளியே அவனாகவும் இருக்கிறான்.  அந்த மாதிரி இங்கே ஆத்மா, அறிவுடையதாகவும் இருக்கிறது -   அறிவாகவும் இருக்கிறது.  அதற்கு இருக்கும்படியான ஞானம் மிகவும் உயர்ந்தது.  அந்த ஞானம் பரவி மோக்ஷத்தை அடைந்துவிட்டால், எல்லாவற்றையும் இருக்கிற இடத்தில் இருந்தபடியே ஆத்மா உணர ஆரம்பிக்கும்.
ஆகவே ஆத்ம ஸ்வரூபத்தை உணர வேண்டும்.  அதைத்தான் ராமாயணம் நமக்கு நன்கு விளக்கிக் காட்டுகிறது. (அர்த்த பஞ்சகம்)

ஆகிஞ்சன்யம் என்பதும் ஒரு தர்மம்.  எவ்வளவு தான் நாம்  செய்தாலும் அது பகவானுடைய காருண்யத்துக்கு எதிரில் செல்லாது.   ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு ராஜ பதவி கேட்கிற மாதிரிதான் அது!  மேலும், பகவானிடத்திலே போய், "நான் அதைக் கொடுத்தேனே.. நீ இதைத் தரக்கூடாதா" என்று கேட்கலாமா?   "அன்றைய தினம் நூறு தேங்காய் உடைச்சேனே" என்று ஞாபகப் படுத்தலாமா..!
நாம் எதைத்தான் செய்தாலும் அவன் காருண்யத்திடத்திலே விலை செல்லாது.  அதை நாம் உணரவேண்டும்.
தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் - இவர்கள் எல்லோரும் சொல்லக்கூடிய விஷயத்தை நாம் பார்த்தோமானால், அந்தப் பாசுரங்களைப்  படித்தோமானால், பகவானுக்கெதிரிலே நாம் எதையும் விசே-ஷமாகச்  சொல்ல முடியாது என்பதுதான் தெரிகிறது. பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள்: "நின்னருளே புரிந்திருந்தேன்"  "உன் தயைக்கே நான் பாத்திரம்.. உன் கிருபைக்கே நான் பாத்திரம்.  இப்படி சொல்ல வேண்டுமே ஒழிய, நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன்" என்றெல்லாம் பகவானிடத்திலே பேரம் பண்ணக் கூடாது.

ஆகிஞ்சன்யம் என்பதையும் ராமாயணம் விளக்கிக் காட்டுகிறது.  சரித்திரத்தில் அது காணக் கிடைக்கிறது. விபீஷணன் அதை எடுத்துச் சொல்கிறான்.  பரதன் அதை எடுத்துச் சொல்கிறான்.  இவர்கள் இருவருமே தங்களிடம் எதுவுமே கைமுதல் இல்லை என்று பகவானுடைய சரணாரவிந்தத்தை ஆச்ரயித்தவர்கள்.  அது ஆகிஞ்சன்யம் எனப்படுகிறது.
ஆகிஞ்சன ஈசலாபம் என்பது மற்றும் ஒரு தர்மம்.  பரமாத்மாவை அடைதல் ஒரு தர்மம் என்று சொன்னேன்.  அது அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.  இடையிலே ஒருத்தர் இருக்க வேண்டும்.  அவர்தான் ஆசார்யர்.
ஆசார்யரின் துணையால் தான் அவன் நமக்குக் கிடைப்பான்;  நாம் அவனைச் சென்றடையலாம்.
ஆஞ்சநேயனுக்கு இங்கே ஆசார்ய ஸ்தானம் இருக்கிறது என்று சுவாமி தேசிகன் விவரிக்கிறார்.
ராமன் தன் திருக்கையில் அணிந்திருக்கும்படியான கணையாழி மோதிரத்தை ஆஞ்சநேயன்தான் எடுத்துப் போய்  சீதா பிராட்டியின் கையிலே வைக்கிறான்.
சீதையை அங்கே  ஜீவனாக நம் மனத்திலே உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  பகவத் அனுக்ரஹம் அந்த ஜீவனுக்குப் பூரணமாய் இருக்கிறது. 
மோதிரத்தை ஆஞ்சநேயன் அங்கு கொண்டுபோய்க் கொடுத்தவுடன், சீதாபிராட்டி என்கிற ஜீவனை எம்பெருமான் திருவடியிலே சேர்க்கும் பொறுப்பும் அவனுடையதாகிறது.
ஜீவனானது எப்போதும் பரமாத்மா திருவடியிலே தலைவணங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டத்தான் சீதாதேவி தன் சிரோபூஷணத்தை (தலை ஆபரணம்) ஆஞ்சநேயனிடம் கொடுத்து அனுப்பினாள்.
ராமனின் கைவிரல் மோதிரம் பரமாத்மாவின் அபய ஹஸ்தத்தைக் குறிக்கிறது.
சீதையின் சூடாமணி, தலைவணங்கிய நிலையைக் குறிக்கிறது.
இரண்டையும் நடத்தி வைத்தவன் ஆஞ்சநேயன்.

ராமாயணத்திலே மூன்று இடங்களிலே சீதா கல்யாணம் நடக்கிறது!
இப்படிச் சொன்னால் ஆச்சர்யம் ஏற்படுகிறதல்லவா!
பால காண்டத்தில் நடந்த கல்யாணத்தை வால்மீகி விவரித்தார்.
அயோத்தியா காண்டம் முடிகிற பகுதியில், இன்னொரு  கல்யாணம்!  
எங்கே என்றால்.. அனுசூயையிடம் சீதா பிராட்டி தன்னுடைய வாக்கினாலேயே வர்ணிக்கிறாள்.  தன் கல்யாணம் நடந்த விதத்தைச்  சொல்கிறாள். அங்கே இரண்டாவது தடவையாக சீதா கல்யாணத்தைக் கேட்கிறோம். 
இந்த இரண்டு கல்யாணமும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்.  ஒருத்தருக்குக்  கல்யாணம் நடப்பதும் ஒருத்தர் தம் கல்யாணத்தை மற்றவரிடம் விவரிப்பதும் அதிசயமில்லை.
ஆனால், சுந்தர காண்டத்திலே நடந்த கல்யாணம் ஆத்ம  விவாகம்.  இந்த ஆத்மா அவனுடையது என்று சமர்ப்பிக்கிற நிலை.  அதை ஓர் ஆச்சார்யர் பக்கத்திலே இருந்துதான் நடத்த வேண்டும்.  அதைக் காட்டத்தான் சுந்தர காண்டத்திலே சீதாத்மாவை எம்பெருமானின் திருவடியிலே சேர்த்து வைத்தான்.

கிருதக்ருத்யத்வம் என்கிற ஓர் உயர்ந்த விஷயமும் ராமாயணத்திலே சொல்லப்படுகிறது.   கிருதக்ருத்யான் யாரென்றால் தனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்து முடித்தவர்கள்.  விபீஷண பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, கிருதக்ருத்யஸ்ததோ ராம: என்று பகவான் அழைக்கப்படுகிறார்.
ராமபிரான் கிருதக்ருத்யன் ஆனான். நான் சொன்ன உயர்ந்த தர்மத்தை நடத்திக் காட்டியவனான்.
இன்னுமொரு தர்மம் - இப்படியிப்படி இரு.. இப்படியிப்படி இராதே என்று எடுத்துச்  சொல்கிறது. 
அதாவது, வாலி-சுக்ரீவன் போல் இராதே;  ராம-லக்ஷ்மணரைபோல் இரு என்கிறது!
வாலி-சுக்ரீவ யுத்தம் நடக்கிறது.  அதைப் பார்த்துவிட்டு லக்ஷ்மணன் சகிக்க முடியாமல் தமையனிடம் வந்து கேட்கிறான்.  இப்படி அண்ணன்-தம்பி சண்டை போடறாளே.. இது நன்றாகவா இருக்கு?
அதற்கு ராமன் சொல்கிறான் பாருங்கள்:  நீ இவர்கள் சண்டை போடுவதை பார்த்து என்னிடம் வந்து கிட்கிறாயா?  இந்த குரங்கின் நிலை-விலங்கின் நிலை உனக்குப் பெரிதாகத் தெரிகிறதே.. இதைப் போல் மனிதர்களும் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?
சொன்னவன் ஒரு படி மேலே போய்ப் பேசுகிறான்:  நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?  எல்லாத் தம்பியும் பரதனைப் போல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?  அப்படி கிடையாது என்கிறான்.
உண்மையில் லக்ஷ்மணனிடம் பேசும்போது என்ன சொல்ல வேண்டும் பரமாத்மா?
எல்லோரும் உன்னைப் போல் என்று நினைத்தாயா? என்றல்லவா கேட்க வேண்டும்.
உன்னைப் போல் ஒரு தம்பி உண்டோ? என்று லக்ஷ்மணனை பரமாத்மா ஏன் ஸ்தோத்திரம் பண்ணவில்லை?  எங்கேயோ இருக்கிற பரதனைப் பற்றி ஏன் லக்ஷ்மணனிடத்திலே சொல்கிறான்?
லக்ஷ்மணனும், பரதனுடைய பெருமையை ராமன் பேசும்போது ஆனந்தமாய்க் கேட்கிறான்.  கொஞ்சம் கூட பொறாமையின்றிக் கேட்கிறான்.
கூடவே இருந்து இவ்வளவு கைங்கர்யம் பண்ணியிருக்கிறோம்.  நம்மைச் சொல்லாமல், எங்கோ இருக்கிற பரதனைச் சொல்கிறானே..! என்றொரு எண்ணம் லக்ஷ்மணனுக்கு வரவில்லை.
அந்த பரதனுடைய நிலை என்ன?  அந்தக் குழந்தை எத்தனை சிரமப்படுகிறான்?  பழிச் சொல்லுக்கு ஆளான பரதன், அர்த்த ராத்திரியில் சரயுவில் போய் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவானாம்!
ஏனென்றால், பகலில் மற்றவர்கள் ஸ்நானம் செய்யும் நேரத்தில் போனால், அண்ணாவைக் காட்டுக்கு அனுப்பினவனுக்கு இந்த மகாபாவிக்கு - ஸ்நானம் ஒரு கேடா? என்று யாராவது பேசி விடுவார்களோ என்கிற பயமாம்!
அப்படிப்பட்ட பரதனை நினைத்து நினைத்து பரமாத்மா பஞ்சவடியிலே   உருகினான்.     அவனையே உதாரணமாகச் சொன்னான்.
அந்தக் காலத்திலே ஒரு வழக்கம்.  அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு மத்தியஸ்தத்துக்கு வந்தால் மத்யஸ்தம் செய்பவர்கள் என்ன சண்டை என்று கேட்க மாட்டார்களாம்.  ராமயணத்திலிருந்து ஒரு சுலோகத்தைச் சொல்வார்களாம்.  சொன்னவுடனேயே, சண்டை போட்ட இரண்டு சகோதர்களும் கட்டிக்கொண்டு ஒற்றுமையாய்ப் போய்விடுவார்களாம்!
ராமாயணம் அந்த அளவுக்கு நம்மை காக்கிறது.  இப்படி இப்படி இரு.. என்று மட்டுமல்லாமல் இப்படியெல்லாம் இராதே என்றும் கற்றுத் தருகிறது.
(தொடரும்)

 
 
 



 

Friday, April 11, 2014

PART - 1, Chapter - 40

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் -40
"சொர்க்கம்  நரகம் எல்லாம் நன்றாக உண்டு" என்று ஆரம்பித்து அவன் பதில் சொன்னான்.   ஆனால் அதெல்லாம் வேறு உலகம்  கிடையாது.  எல்லாம் இங்கே தான்.  நல்ல உணவு வேளா  வேளைக்குக் கிடைக்கிறது.  நன்றாக உடுத்தி, ஆனந்தமாக இருக்கிறார்கள் - அதுதான் சொர்க்கம்.   உணவுக்குத் திண்டாடிக் கொண்டு ஏழ்மையை அனுபவித்துத் திண்டாடும் ஸ்திதியில் இருந்தால், அதுவே நரகம்.  நரகமோ, சொர்க்கமோ - இங்கேதானேயொழிய, தனியாக சொர்க்கலோகம் என்றோ நரக லோகம் என்றோ கிடையாது" என்றான்.
சரி, உன் மதத்தில் மோக்ஷம் உண்டா?.  இது அடுத்த கேள்வி.
ஆஹா உண்டு!
எது மோக்ஷம்?
செத்துப் போவதுதான் மோக்ஷம் என்று ஒரு போடு போட்டான்!  ஆத்மாவையே அவன் ஒப்புக் கொள்ளவில்லை!
இது வேதத்துக்கு புறம்பான, அதர்மமான விஷயம் அல்லவா?
இந்த உலகமே தர்மத்துக்குக் கட்டுப்பட்டிருக்கிறது.  வேதமனைத்தும் தர்மசாரம்!  எனவே இப்படி வேதத்துக்குப் புறம்பாக எண்ணுவதே தப்பு என்பதைத்தான் ராமாயணம் காட்டுகிறது.
சரீரத்திலிருந்து வேறுப்பட்டுத் தனியானது ஆத்ம வஸ்து என்று வேத வேதாந்தங்கள் எடுத்துப் பேசுகின்றன.
தத் த்வம் அஸி  - ஜீவனாக இருக்கும்படியான நீ,  பரப்ரும்மமாய் இருக்கிறாய் - இது ஆதி சங்கர பகவத் பாதாள் அளித்த விளக்கம்.
இஞ்சிமேட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர்.    த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று பிரிவுகளையும் சிலாகித்து ஆச்சர்யமாய்ச் சொல்லியிருக்கிறார்.
இரண்டாயிருக்கும்படியான தன்மையைச் சொல்லுவது த்வைதம்.  ஜீவன் வேறு; பரமாத்மா வேறு என்கிறது.
இரண்டு என்கிற நிலை இல்லாமல் ஒன்றாகவே இருப்பதென்பது அத்வைதம்.  பரப்ரும்மமே நான் என்று உணரும் நிலை.
க்ஷீரத்திலிருந்து (பாலிலிருந்து) வெண்ணெய் வருகிறது.   அதை உருட்டி, திரும்பவும் பாலிலேயே போடுகிறோம்.  ஆனால் அது பாலில் கலக்குமா?  கலக்கவே கலக்காது! இது வேறு அது வேறு என்று ஸ்பஷ்டமாகத் தெரியவில்லையா?  அதோடு இது கலக்காது.
ஆத்ம  ஸ்வரூப ஞானம் ஏற்படும்போதும் இதே போல்தான் ஆகிறது.  பாலுக்குள் வெண்ணை மாதிரி உடலுக்குள் சிக்கியிருந்த ஆத்மா விடுதலையாகி தனி உருக்கொள்கிறது.  உடலே அதை தாங்கியிருந்தாலும் உடல் பற்றிய சிந்தனை போய்விடுகிறது.  ஆத்மாவை தியானம் செய்யும்போது, அந்த ஆத்மாதான் பரமாத்மா என்கிற நிலை ஏற்படுகிறது.  சுவயம்பிரகாசமாய் பிரகாசிக்கக்கூடிய  நிலை அது.

எதிரே பாம்பு நெளிவது போல வளைவு வளைவாகத் தெரிகிறது.  ஐயோ! என்று அலறினான் ஒருவன்.  ஆனால் அது ஆடாது, அசங்காது இருப்பதைக் கண்டு பாம்பு இல்லை என்று முடிவு செய்தான்.  பின்னே என்னவாயிருக்கும்?
யாரோ குடத்தில் ஜலம் எடுத்துப் போக, அந்தக் குடத்தில் ஓட்டை இருந்திருக்கிறது.  ஓட்டை வழியே சிந்திய நீர் குடமேந்தியவரின் நடைக்கு ஏற்ப வளைவு வளைவாக சிந்தியிருக்கிறது போலும் என்று எண்ணம் வருகிறது.
ஆனால், சூர்யா ரச்மி பட்டு இந்த ஜலம் உலர்ந்தது போகவில்லை.. சரிதான்!  பூமி அந்த இடத்தில் பிளவுபட்டிருக்கிறது போலும்.. அதனால் தான் இப்படித் தெரிகிறது. என்று மீண்டும் வேறு மாதிரி எண்ணம் வருகிறது.
இப்படி நினைத்துக் கொண்டே இருக்கும்போது அந்தப் பக்கமாய் வந்த ஒருவர் அந்தப் பாம்பு வடிவத்தை மிதித்தபடி வந்தார்.  
அவரிடம் கேட்கப் போக, உண்மை வெளிப்பட்டது - பாம்பும் அல்ல, நீர்கோடும் அல்ல; பூமியில் பிளவும் அல்ல.  வைக்கோலால் திரிக்கப்பட்ட ஒரு கயிறு அது!
வைக்கோல் திரி என்று தெரிந்ததும் நாம் முதலில் எண்ணியதெல்லாம் போய் விடுகிறதல்லவா?  அந்த மாதிரிதான் உண்மைப் பொருளைப் பார்த்த பிறகு மற்றதெல்லாம் மறைந்து போகும் - இது அத்வைத நோக்கு.
விஷிஷ்டாத்வைதம்.. புறப்பொருள் எல்லாமே அவன் சரீரமாஇத்தான் இருக்கிறது என்பது
விஷிஷ்டாத்வைதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆக, எந்த தத்துவார்த்த நிலையை எடுத்துக் கொண்டாலும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதை அது மறுக்கவில்லை;  ஏற்கவே செய்கிறது.
ஒன்று பேதமாகச் சொல்கிறது.  இன்னொன்று அபேதமாகச் சொல்கிறது.  மூண்றாவதோ எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிற அந்தராத்மாவைச்  சொல்கிறது.
பேத, அபேத ச்ருதிகள் தனித்தனியாய் இருப்பது நம் மனத்தைக்   குழப்புகிறது.ஆனால் ஆசார்யார்களுக்கு உண்மை புலப்பட்டது.  அதனால் மூன்று ரீதியான தத்துவங்கள் தோன்றி நின்றன.  மூன்றுமே சரீரத்திலிருந்து வேறுபட்டது ஆத்ம வஸ்து என்பதை ஏற்கின்றன.

அகம், என்றால் ஆத்மா.   நான் என்றால் எனது ஆத்மா;  சரீரம் அல்ல.. இந்த எண்ணம் நமக்கு வரவேண்டும்.  தெளிவாகத் தெரிய வேண்டும்.
பேச்சு வழக்கில் நாம் என்ன சொல்கிறோம்?
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும்.  சரீரமே ஆத்மாவாய் இருந்தால் நான் அது ரொம்பப் பிடிக்கும்.  நான் தலைவலிக்கிறது.  நான் கை குடைகிறது.  நான் மூக்கு ரொம்ப வலிக்கிறது - என்றெல்லாம்தான் சொல்ல வேண்டும்.
அப்படிச் சொல்வதில்லையே நாம்!  எனக்குத் தலை வலிக்கிறது.  எனக்குக் கை குடைகிறது என்று சரீரத்துக்குள் இருக்கும் நிலையைச் சுட்டியே சொல்கிறோம்.  இப்படி சரீரத்தில் அபிமானம் வைத்து நாம் பேசும்போதே என்ன தெரிகிறது?  சரீரத்திலிருந்து வேறுபட்டதான ஆத்மா ஒன்று இருக்கிறது என்று தெரிகிறதல்லவா!
நாம் என்பது சரீரமல்ல;  ஆத்மா.  நாராயணனையே அடைய வேண்டும்.  அவன் திருவடியையே அடைய வேண்டும்.  
அவன் கைங்கர்யத்துக்காக - நித்ய கைங்கர்யத்துக்காக அவன் திருவடியையே சேர வேண்டும் என்பதை உத்தேசித்துத்தான் - இத்தனையும் சொல்லப்படுகிறது.
அப்படியிருக்க, அந்த தத்துவம் வேதாந்தங்களை விட்டு விட்டு, நன்றாகச் சாப்பிடு, நெய்யைக் குத்திக்கொள், கடனை வாங்கு என்றெல்லாம் சொன்னால் எவ்வளவு தப்பான வார்த்தை!

இந்த மாதிரி அதர்மமான விஷயத்துக்கு ராமாயணத்திலே இடமில்லை.
தர்மத்தைப் பேசினான் பரமாத்மா.   பரதனுடைய கடமையை உணர்த்தினான்.
பாரதந்த்ரியம் - நீ அப்படிப் போய் இரு என்று சொன்னால் எதிர் கேள்வி கேட்காமல் செய்ய வேண்டும்.
பகவான் சொன்னான்.  அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பரதனும் நடந்தான்.  அதுதான் பாரதந்த்ரியம்.  சொன்னபடி நடக்கும் தர்மம்.

பாரதந்த்ரிய காஷ்டா என்று ஒரு தர்மம்.  அந்த பகவத் பக்தனான பரதனுடைய திருவடியிலே அசஞ்சலமான பக்தி கொண்டு நின்றானே சத்ருக்னன்.. அந்த நிலை பாரதந்த்ரிய காஷ்டா.
ராமாயணத்திலே எங்கேயாவது ஒரு சுலோகமாவது சத்ருக்னனனுக்கு உண்டா என்று கேட்டால், எங்கேயும் கிடையாது.  பரதனுடனேயே  போனான்.   பரதனுடனேயே வந்தான்.  அங்கங்கே அரை சுலோகம் அல்லது முக்கால் சுலோகம்தான் சத்ருக்னனுக்கு!
 இதில் இருந்து ஒரு தர்ம சூட்சுமத்தை நாம் கிரஹித்துக் கொள்ள வேண்டும்.  கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், சரணாகதி - இந்த நான்கையும்  ரொம்ப அழகாக விவரிக்கிறான்.
இதிலே  பாருங்கள்.  என்ன விவரித்தானோ அதை ராமாயணத்திலேயும் காட்டியவன் அவன்.
ராமாவதாரத்திலே லக்ஷ்மணன் மூலமாக கர்ம யோகத்தைக் காட்டினான்.  இதைத்தான் சுவாமி தேசிகன் பக்திக்கே பரம உதாரணமாக பாதுகா  சஹாஸ்ரத்தில் சொல்கிறார்.  பக்திக்கு முதல் உதாரணம் பரதன் என்கிறார்.
ஞான யோகத்தைக் காட்டியவன் சத்ருகன்.   சரணாகதிக்கு விளக்கமானவன் விபீஷணன்.
ஞான யோகம் பண்ணுகிறவர்கள் உலகிலே அதிகப் பிரசித்தமாக ஆகக்கூடாது.  அப்படி ஒருத்தர் இருக்கிறார் என்பதே வெளியே தெரியக் கூடாது.  எல்லாவற்றிலும் பிரசித்தமாக இருக்கக்கூடியவர்களை ஞானயோகி என்று சொல்ல முடியாது.  ஞான யோகம் பண்ணக் கூடியவனானதாலேதான் சத்ருக்னன் பிரசித்தமாகவில்லை.
ஞான யோகிகள் முக்கியமாக லவணஜயம் பெற வேண்டும்.  அதாவது உப்பை ஜெயிக்க வேண்டும்.  உப்பிலாமல் சாப்பிட வேண்டும் அவர்கள்.  அதனால் தான் லவணாசுரன் என்கிற அசுரனை ஜெயிக்க பரதன் கிளம்பிய போது. அவனை நிறுத்திவிட்டு சத்ருக்னனை அனுப்பினான் பரமாத்மா.  சத்ருக்னனும் போய்  லவணஜயம் கொண்டான்.  இப்படி தர்ம சூஷ்மமாக ராமாயணத்தில் எவ்வளவோ அடங்கி இருக்கிறது.

பாரதந்த்ரிய காஷ்டா  என்ற தர்மம் - சத்ருக்னன் அனுஷ்டித்த தர்மம்.  ரொம்பவும் கஷ்டமானது. பரதனுடைய நிழல் போல் இருந்து கைங்கர்யம் செய்தான் சத்ருக்னன்.  பரதன் கேகய நாட்டுக்குப் போக நாள்  பார்த்துச் சொன்னார்களாம் - அவனுடன் சத்ருக்னனும் போனான்.  அவனும் சக்ரவர்த்தி திருமகன்தானே.  ஆனால் அவனுக்கென நாள் எதுவும் பார்க்கப் படவில்லை!
சத்ருக்னன்..!  சத்ரு யாரென்றால், நம் இந்த்ரியங்கள் தான் சத்ரு.  அந்த சத்ருவை அடக்கியவன் அவன்.  பரதன் பின் போவதையே பரம புருஷார்த்தமாக நினைத்த மகான் அவன்.
ஆகையினால் சத்ருக்னாழ்வார் என்றே அவனுக்கு பெயர்.
(தொடரும்)

 
 
 
 
 
 
 


 

 
 

 
 



 
 
 

Thursday, April 10, 2014

PART - 1, Chapter - 39

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 39

"லக்ஷ்மணா, உன் தந்தையை இழந்தாயடா" என்று ராமன் ஏன் பிரித்துப் பேசுகிறான்?
ஆசார்யர்களும் மகான்களும் இந்த பேச்சுக்குத் தரும் விளக்கத்தைப் பாருங்கள்:
ராமன் சொல்கிறானாம்: லக்ஷ்மணா, உன்னையும் அப்பா சிருஷ்டி பண்ணினார்.  நானும் அவருக்குப் பிறந்தேன்.  என்னோடு கூட வனவாசம் வந்திருக்கும் நீ எல்லா கைங்கர்யங்களையும் பண்ணிக் கொடுக்கிறாய்.  எப்படிப் பண்ணிக் கொடுக்கிறாய்?  ஒரு தந்தை தன் தனயனுக்கு என்னென்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்வாரோ.. அதைப் போல் செய்கிறாய்.  அதனால், நீ இருப்பதால், தந்தை இல்லாத குறையே எனக்குத் தெரியாது.  இப்போது அப்பா மறைவினாலே உனக்குத்தானடா தந்தை இல்லாமல் போனார்" என்று சொல்கிறானாம்.
எத்தனை உயர்ந்த வாக்கியம் அது!  சகோதர வாத்சல்யமும் அதில் தெரிகிறது.  தந்தையினிடத்தில் பகவான் கொண்ட அன்பும் தெரிகிறது.  
"ஊரை விட்டு காட்டுக்குப் போனேன் என்கிற செய்தியைக் கேட்கத் தாங்காமலே பிராணனை விட்டாயே.. நீ உயிர் நீத்தது தெரிந்த பின்னரும் நான் உயிரோடு இருக்கிறேனே!  நீ  என்னிடத்தில் வைத்த அன்பு எங்கே?  நான் உன்னிடம் காட்டும் அன்பு எங்கே"? என்று ராமபிரான் வருத்தப்படுகிறான்.
"புத்ரன் தன்னைவிட்டுப் போனான் என்றால், பதினாலு ஆண்டுகாலம் சென்று திரும்பி வந்துவிடப் போகிறான்.  ஆனால், கொஞ்சம் கூடப் பிரிவாற்றாமை தாங்காமல் பிராணனை விடக்கூடிய தந்தை எத்தனை புத்ரர்களுக்கு உண்டு!  எனக்குக் கிடைத்தது மாதிரி தந்தை யாருக்குக் கிடைப்பார்"? என்று பேசுகிறான்.
அந்த ஒப்பற்ற தந்தைக்கும் நிகரானவன் லக்ஷ்மணன் என்று லக்ஷ்மணன் செய்த காரியத்தைக் கொண்டாடுகிறான்.
ராமனைப் பிரியாமல், கூடவே இருந்து விட்டதால் அபக்யாதியே ஏற்படலை லக்ஷ்மணனுக்கு.  
பரதன் அப்படி இல்லை.  கொஞ்ச காலம் ராமனைப் பிரிந்து கேகய நாட்டுக்குப் போனான்.  அவன் மாமா யுதாஜித் என்பவர் வந்து அவனை அழைத்துப் போனார்.  கொஞ்சம் பிரிந்த பரதனுக்குத் தீராப் பழி ஏற்பட்டு விட்டது.  அந்த சிரமத்தை அனுபவித்தான் பரதன்.
இந்த விஷயத்தை நாம் கிரஹிக்கணும் - லக்ஷ்மணன் பிரியாமல் இருந்ததால் அபகீர்த்தி இல்லை;  பரதன் சிறிது காலமே பிரிந்திருந்தாலும் தீராத பழி!  அதனால் இளையபெருமாள் (லக்ஷ்மணன்) செய்த காரியம் இருக்கிறதே - மிக உயர்ந்தது.   எல்லோராலும் செய்ய முடியாதது, சே-ஷத்துவம்.

அடுத்தது பாரதந்த்ரியம்.    அது இன்னமும் கஷ்டம்!  இட்ட வழக்கை இருத்தல் என்பது பாரதந்த்ரியம்.  அசித் - அசையாத பொருளாய், அசேதன - அறிவற்ற பொருள் போல இருக்க வேண்டும்!
ஒரு புஷ்ப மாலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் - அதை அடியேன் எடுத்து இப்படி வைக்கிறேன்.  "நான் இங்கே இருக்க மாட்டேன்.  அங்கே போகிறேன்" என்று அந்த புஷ்ப  மாலை சொல்லுமா..? வைத்த இடத்திலேயே அல்லவா இருக்கும்!
வைத்தமாநிதி என்று ஒரு பெருமாளுக்குப் பெயர்.  திருக்குருகூரில் - ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்.  ஏன் மாநிதி அவன்..?  அவன் வைக்கப்பட்ட இடம் அது.  அந்த  போவானோ அவன்?  எப்போது போனாலும் அவனைச் சேவிக்கலாம்.  அந்த நிதியைப் பார்க்கலாம்.  "என்றைக்கு வேண்டுமானாலும் வா என்னைப் பார்க்க" என்கிறான்.
"இட்ட வழக்காய் இருத்தல்" என்பதை சம்புராமாயனத்தில் போஜராஜா ரொம்ப அழகைச் சொல்கிறார். ராமபிரான் பரதனுக்கு எடுத்துச் சொல்வதைச் சொல்கிறார் - "இங்கே உன்னாலும் என்னாலும் காப்பாற்றப்பட வேண்டியது தந்தையினுடைய வார்த்தை" என்று சொல்கிறார்.
பரதன் என்ன சொல்கிறான்?  "ஊருக்குத் திரும்பி விடுங்கள்" என்கிறான்.  அப்பாவின் ஆக்ஜை.  அதை மீறி வரமாட்டேன் என்கிறான் ராமன்.
"அப்பா சொன்னது இருக்கட்டும்.  நீதான் வந்து ராஜ்யப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.. வந்து விடு" என்று பரதன் அழைக்கிறான்.
அப்போது பரமாத்மா சொல்கிறான்.  பரதனுடைய வார்த்தையை விட தசரதனுடைய வார்த்தை முக்கியம் என்று..
"எனக்கு மட்டுமல்ல பரதா!  உனக்கும் அந்த வார்த்தை - தந்தை சொன்ன வார்த்தை முக்கியம்.  என்னை அப்பா 14 வருடம் காட்டுக்குப் போகச் சொன்னார்.  உன்னை 14 வருடம் பரிபாலனம் பண்ணச் சொன்னார்.  அவர் இருந்து, "ராமா, நீ போக வேண்டாம்;  திரும்பி வந்துவிடு: என்றால் வரலாம்.  ஆனால் இப்போதைய நிலையில் 14 வருடங்களுக்கு நீயும் எனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க முடியாது, நானும் அதை ஏற்க முடியாது" - இப்படி விசே-ஷமாக தர்மத்தை பரதனுக்கு எடுத்துச் சொன்னான் ராமன்.  இருக்கும் நிலையிலிருந்து மாறக் கூடாது என்கிற தர்மம்.
ராமாயணத்தில் தர்மத்தைக் குறித்து வரும் இந்த சர்க்கத்துக்கு ராமகீதா என்றே பெயர்.  எப்படி பகவத்கீதை சொல்லப்பட்டதோ, அந்த மாதிரி.  "அப்பா பரதா!  நீ கூப்பிட்டாய் என்று நான் வந்தால் அது தர்மமாகுமா?  ராஜ்யத்தில் காமம் கொண்டு வந்தேனானால் நியாயமாகுமா?  சிந்தனை பண்ணிப்பார்" என்கிறார் பகவான்.

இந்த ராம கீதாவைத்தான் நாம் மறக்காமல் ஹ்ருதயத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.  அதிலே அழகாகச் சொல்கிறார்:
"சமுத்திரத்திலே அலை அடித்துக் கொண்டே இருக்கிறது.  அந்த அலையில் ஒரு மரக்கட்டை  இந்த திக்கிலிருந்து அடித்துக் கொண்டு வரப்படுகிறது.  இன்னொரு மரக்கட்டை மற்றொரு திக்கில் இருந்து வருகிறது.  அந்த இரண்டும் அலைகளால் ஒன்று சேர்க்கப்பட்டு சமுத்திர ஜலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.  ஒரு நாள் பெரிய அலை ஒன்று வருகிறது.. அது வீசினதுமே இந்தக் கட்டை அப்படிப் போய்விடுகிறது.  அந்தக்கட்டை இன்னொருபுறம் போய்விடுகிறது!  இது போன இடம் தெரியலை;  அது போன இடமும் தெரியவில்லை.  அந்த மாதிரிதான் மனைவியோ, மக்களோ, புத்ரர்களோ, வீடோ, பொருளோ"...
"அப்படியானால் கணவன் - மனைவி என்கிற உறவுக்கு என்ன அர்த்தம்"? என்று கேள்வி வரும்.  
இந்த சம்சாரம் என்கிற ஜலதியில் புண்யம், பாவம் என்கிற அலைகள் ஓயாமல் இருந்து கொண்டேயிருக்கும்.  அதிலே இரண்டு ஆத்மாக்கள், கணவன் - மனைவி என்கிற உறவிலே அந்த வினைப் பயனை அனுபவிப்பதற்காக அந்த கர்மாவை அனுபவிப்பதற்காக சேர்த்து வைக்கப்படுகிறது.  ஒருநாள், காலம் என்கிற அலை, ம்ருத்யு - வந்து இரண்டையும் பிரிக்கிறது.  யாருக்கு யார் மனைவி?  யார் பார்த்தா?!  யார் தந்தை?  யார் பிள்ளை?  உத்தமமான அவனல்லவோ சர்வலோகப் பிதா.  அவனல்லவோ சர்வ லோக பார்த்தா.  காமதீனமாக ஏற்பட்டிருக்கிற இந்த விஷயத்தை நாம் சாஸ்வதமாக நினைக்கலாமா..?  எனவே சஞ்சலப்படாதே.  தர்மத்துக்கு நாம் தலைவணங்குவோம்.  நீ சொல்கிறபடி நான் வந்து விட்டால் தர்மத்தை எல்லாம் குலைத்தவனாகி விடுவேன்" என்கிறான் பரமாத்மா.

ஜாபாலி என்றொரு மகரிஷி.  அவர் கோணலாக, அதர்மமாகப்  பேசினார். என்ன பேசினார் என்றால், பூர்வ காலத்திலிருந்த ஒரு மதம் குறித்து.  அதற்கு லோகாயதிக மதம் என்று பெயர் - சார்வாக மதம் என்றும் சொல்வார்கள்.  
பேச்சு ரொம்ப நன்றாக இருக்கும் அந்த மதத்தில்.  அதன்படி பிரத்யக்ஷம் ஒன்றுதான் பிரமாணம்.  கண்ணுக்குத் தெரியாததெல்லாம் பிரமாணம் கிடையாது. 
வேதாந்த மதமோ இதற்கு நேர் எதிர்.  அதன்படி பிரத்தியக்ஷம், அனுமானம், சப்தம் என்கிற மூன்றும் பிரமாணம்.  சப்தம் என்பது வேதம்.
ஆனால், சார்வாக மதத்தில் பிரத்யக்ஷம் ஒன்றே பிரமாணம்.  கண்டதே  காட்சி; கொண்டதே கோலம் என்கிற ரீதியில் பேசினார்கள்.
"உயிர் இருக்கிற வரைக்கும் சௌக்கியமாய், சந்தோஷமாய் இருங்கள்" என்கிறார்கள்.  இதை யாராவது வேண்டாமென்பார்களா என்ன..?  சௌக்கியத்தைத் தானே எல்லோர்ரும் விரும்புவார்கள்!
சௌக்கியமாய் இருக்க  வேண்டுமானால் நன்றாகச் சாப்பிட வேண்டும்.  உபவாசம் வேண்டாம்.  ஏன் அந்த சிரமமெல்லாம் பட வேண்டும்?  யக்ஜம், யாகாதி கர்மங்கள் வேண்டாம்.  நன்றாக உடம்பை கொழுக் மொழுக்கென்று தேற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
உடம்பைக் கொழுக் மொழுக்கென்று தேற்றிக் கொள்ள வேண்டுமானால் நன்றாக சாப்பிடவேண்டும்.  நிறைய நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  நெய் வாங்கவோ பொருள் வேண்டுமே என்று விசாரம் வந்தது.
கவலை வேண்டாம்!  கடன் வாங்கு! என்றார்கள்.  கடனை வாங்கியாவது நெய்யைக் குடியுங்கள்.  தீர்த்தத்தை பருக்கிற மாதிரி நெய்யைப் பருகுங்கள்.   அதற்குத் தேவையான கடனை வாங்குங்கள்.... இப்படியொரு வழிகாட்டல்!
எதை கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ, அதையே பண்ணச் சொல்கிறார்கள் இவர்கள்.  கடனே வாங்கக் கூடாது.  கடன் வாங்குவது பரம பாவத்துக்கு வழிகோலும்.  அடுத்த ஜன்மத்திலே விபரீதமான கஷ்டங்கள் எல்லாம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.  
இவர்களோ கடனை வாங்கு;  நெய்யைக் குடி என்கிறார்கள்!  ஏன்..? எப்படியானாலும் சரீரம் பஸ்மமாகத் தானே போகிறது என்கிற எண்ணம்!  சரீரத்துக்குள்ளே, சரீரத்தைக் காட்டிலும் உத்தமமான ஆத்மா வஸ்து இருப்பதையே அவர்கள் கவனிக்கவில்லை.  
ஏனெனில் பரோக்ஷம் - கண்ணுக்குத் தெரியாததைக் கவனிக்காமல் இருக்கச் செய்கிறது. கண்ணுக்குத் தெரியாததைத்தான் கவனிக்கவில்லை... வேதம் சொல்கிறதே அதையாவது கவனிக்கக்கூடாதா... அதையும் ஏற்கவில்லை.
ஆதி சங்கர பகவத்பாதாள் சார்வாகனைப் பார்த்துக் கேட்டார் - இவ்வளவு தூரம் பேசுகிறாயே.. சொர்க்கம், நரகம் என்பதை உங்கள் மதம் ஏற்கவில்லையா?
அதிர்ச்சி தரும் பதில்தான் கிடைத்தது!
(தொடரும்)


 




Friday, April 4, 2014

PART - 1, Chapter - 38

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 38


போன அத்தியாயத்திலே ராமனை யோசனையிலே விட்டு விட்டு வந்தோம்!  இப்படிக்கூட யோசித்தானாம் ஸ்ரீராமன்! "சீதை பத்து  மாதம் சிறையில் இருந்தாளே. அதனால்தான் வால்மீகி இதை (ராமாயணத்தை) அவள்  சரித்திரம் என்று கொண்டாடினானோ..?  சிறையிருந்ததால் ஏற்பட்ட ஏற்றமோ இது..?  சிறையிருந்ததால் ஏற்பட்ட ஏற்றம்தான் என்பது சத்தியமானால், அடுத்த அவதாரத்தில் நாம் சிறையிலேயே பிறக்க வேண்டியதுதான்..!
இதையொட்டியே பகவான், கிருஷ்ணாவதரத்திலே சிறைச்சாலையிலேயே பிறந்தான்.  அந்த அவதாரத்தின் பெருமையெல்லாம் யாருக்கு..?  அவனுக்குத்தான்!
ராமாயணத்தில், சிறையிருந்தவளுடைய ஏற்றம் சொல்லப்படுகிறது.  மகாபாரதத்தில் தூது போனவனின் ஏற்றம்  சொல்லப்படுகிறது. அந்த அவதாரத்தில் (பாரதம்) பரமாத்மா ஈடில்லாத தூதுவனாய் விளங்கினான்.  இப்படி இரண்டு அவதாரங்களில் பகவான் நமக்கு தர்மத்தைக் காட்டியிருக்கிறான்.  ஆகையினால் புருஷகாரம் என்று சொன்னேனே.. சிபாரிசு, அதை மனத்தில் கொண்டு, நாமும் மகாலக்ஷ்மியினுடைய முன்னிலையில் பகவானிடத்திலே சரணாகதி பண்ணனும்.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பவை சதுர்வித புருஷார்த்தங்கள் - அதாவது மனிதர்கள் ஏற்றம் பெற வேண்டிய நான்கு விதமான புருஷார்த்தங்கள்.  இவற்றைத்தான் ராமாயணத்திலே அவதரித்தே விளக்கினான் பகவான்.
தர்ம,அர்த்த, காம, மோக்ஷம் என்கிற நான்கையும், ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களான நான்கு சகோதரர்கள் எடுத்துக்காட்டியிருக்கிரார்கள்.
தர்மம் - பகவான் ராமன்.  
அர்த்தமாய் இருக்கக்கூடியவன் இளையபெருமாள் லக்ஷ்மணன்.  
காமமாய் இருக்கக்கூடியவன் சத்ருக்னன்.  
மோக்ஷமாய் இருக்கக்கூடியவன் பரதன்.  
இப்படி நான்குவித புருஷார்த்தங்களை நான்கு பேர் காட்டிக் கொடுத்தார்கள்.
இவற்றுள், மூத்த சகோதரனனான தர்மத்துக்கு கெடுதல் ஏற்பட்டால், அர்த்தமும் இல்லை, காமமும் இல்லை, மோக்ஷமும் இல்லை!  அர்த்த, காம, மோக்ஷம் சித்திக்க வேண்டுமென்றால் தர்மம் நல்ல முறையிலே இருக்க வேண்டும்.  தர்மம் கெட்டது எனில் மற்ற எதுவுமே பயன் தராது.
இதில் அர்த்தம் - அதாவது பொருள் - இருக்கிறதே.. அது தர்மத்தை அண்டியே இருக்க வேண்டும்.  காமம் இருக்கிறதே.. ஆசை அல்லது.. இச்சை.. இது மோக்ஷத்தையொட்டியே இருக்க வேண்டும்.  ராமாயணத்தில் அப்படித்தான் இருக்கிறது என்பது கவனித்துப் பார்த்தால் புரியும்.
அர்த்தமான இளைய பெருமாள் லக்ஷ்மணன் எப்போதுமே ராமனை - தர்மத்தைவிட்டுப் பிரியாமல் இருந்தான்.  தர்ம வழியில்தான் பொருள் ஈட்டப்பட வேண்டும்.  தர்ம வழியில்தான் அது செலவழிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது இது. 
பரதனோடு கூடவே எப்போதும் இருந்தான் சத்ருக்னன் - காமம் அல்லது இச்சை, மோக்ஷத்தையொட்டியே இருக்க வேணும் என்பதைக் காட்டும் விதமாக..
சத்ருக்னன் குற்றமற்றவன்.         ராமபக்தி என்கிற குற்றத்தைச் செய்யாதவன். 

"ராம பக்தி என்பது குற்றமா..?  அதெப்படி..? என்று எல்லோருக்குமே சந்தேகம் வரும்.  ராம பக்தியோடு நின்றால் அது குற்றம்.   ராமனுடைய சரணாரவிந்தத்திலே பக்தியுடையவர்களின் திருவடியில் பக்தி கொண்டவன் அவன்.  இது பாகவத பக்தி எனப்படும்.  பரதனுக்கு ராமன் அல்லால் தெய்வம் இல்லை.  அப்படிப்பட்ட பரதனை சத்ருக்னன் ஆச்சரயித்தான்.  ஆகையினால் இந்த பக்தி உயர்ந்தது.
பாகவதோத்தமர்களிடத்திலே அன்புடன் இருப்பது என்பது ரொம்ப கஷ்டம்.  சத்ருக்னாழ்வார் காட்டிய அந்த பரம நெறியைத்தான் மதுரகவியாழ்வாரும் பின்னாளில் காட்டி அருளினார்.
நம்மாழ்வாருடைய திருவடியைப் பற்றினார் மதுரகவியாழ்வார்.  துவாபர யுகத்திலே இருந்தவர் இந்த மதுரகவியாழ்வார்.  அப்போது பகவான் கிருஷ்ணன் துவாரகையில் இருந்தான்.  ஆனால் இவர் போய் ஒருநாள் கூட கிருஷ்ணனைச் சேவிக்கவில்லை.  கலியுகத்திலே நம்மாழ்வார் அவதரித்தபோதோ அந்த நம்மாழ்வாரின் திருவடியை இவர் (மதுரகவியாழ்வார்) போய்  பற்றினார்.  அவரைத் தவிர வேறொரு தெய்வம் தனக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்.
மதுரகவி ஆழ்வார் காட்டிய நெறி, சத்ருக்னாழ்வார் காட்டிய அதே நெறிதான்.
அயோத்தி பக்கத்திலே சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தார்
மதுரகவியாழ்வார்.  அப்போது தென் திக்கில் இருந்து ஒரு ஜோதி தெரிந்தது.  அதைப் பார்த்துக் கொண்டே மதுரகவியாழ்வார்  தென் திக்கை நோக்கி வந்தார்.  அது திருக்குருகூர் என்கிற இடத்திலே கொண்டு சேர்த்தது.  அங்கே புளியமரப் பொந்தில் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார்.  அதி தேஜஸ்வியாகக் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார்.  அங்கே போய்ச் சேர்ந்த மதுரகவியாழ்வார் அவரிடம் பேசினால்  காதிலே விழுமோ விழாதோ என்று சந்தேகப்பட்டு, ஒரு கல்லை எடுத்துக் கீழே  போட்டார். அது டக்கென்று கீழே விழுந்ததும் அந்த தேஜஸ்வி கண்ணைத் திறந்துப் பார்த்தார். உடனே ஒரு கேள்வியைக் கேட்டார் மதுரகவியாழ்வார்.
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்"..?
இதற்குப் பதிலாக என்ன சொன்னார் தெரியுமா..?
"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!" என்றார் அந்த பெரியவர்!
இதில் ஒரு அர்த்தம் பொதிந்து கிடக்கிறது.
"செத்தது" என்றால் சரீரம்.  "சிறியது" என்றால் ஆத்மா.  அதாவது சரீரத்தினுள்ளே இருக்கிற ஆத்மா எதைத் தின்று எங்கே கிடக்கும்..? என்று கேள்வி.
இதற்குச் சொல்லப்பட்ட பதிலுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டோமானால், "ஆசார்ய அனுக்கிரஹம் ஏற்படாத வரையில் ஆத்மாவானது தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு - அதாவது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லலுறும் (அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று அர்த்தம்).
சில விஷயங்களில் எல்லா ஆசார்யர்களும் ஒன்றே போல் பேசுவதை நாம் கவனிக்க வேண்டும்.  ஆதிசங்கரரும் இதையேதான் சொல்கிறார். "எவன் ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கிறபோதே தனது சரீரத்தைப் பிணமாக கருதுகிறானோ, அவன்தான் மோக்ஷத்துக்கு அதிகாரி.   சரீரத்துக்குப் பண்ணக்கூடிய அலங்காரம் எல்லாம் பிணத்துக்குப் பண்ணக்கூடிய  அலங்காரம்தான். இந்த சரீரம் அழியக் கூடியது.  அதனால்தான் இதற்குப் பண்ணக்கூடிய அலங்காரமும் அழியும்.  ஆத்மாவுக்குப் பண்ணக்கூடிய அலங்காரத்துக்கு பிரும்மாலங்காரம் என்று பெயர்.  அது அழியவே அழியாது. 
புளியமரப் பொந்தில் இருந்த மகான் இந்த பேருண்மையை சூசகமாய்ச் சொன்னதும் மதுரகவியாழ்வார் அவரையே தமக்கு தெய்வம் என்று கொண்டு விட்டார்.  "இன்றைய தினம் அன்பனானேன்" என்று பதினோரு பாசுரங்களில் அவ்வனுபவத்தைப் பாடினார்.  நாலாயிர திவ்யப்ப்ரபந்தங்களை ஒரு தட்டிலும் அந்தப் பதினோரு பாசுரங்களை மட்டும் இன்னொரு தட்டிலும் எடை போட்டோமானால்.. இந்த பதினொன்றே பளுவுடையதாக இருக்கும்!  
ஏனெனில் அது பகவத் பிரபாவம்:  இது பாகவத (குரு) பிரபாவம்:
பாகவத பிரபாவத்தைத்தான் சத்ருக்னன் காட்டினான்.  அவன் காட்டிய பரமநெறிதான் மதுரகவியாழ்வாருக்கு மூலமாக அமைந்தது.  
சதுர்வித புருஷார்த்தங்கள் ( தர்ம,அர்த்த, காம மோக்ஷம்) ராமாயணத்தில் நான்கு திவ்ய புருஷர்கள் மூலமாகத் தெரிகிறது என்று   சொன்னேன்.  பகவானே நான்கு வித புருஷார்த்தங்களுக்கும் உறைவிடமானவன்.  பகவான், ஆதிசே-ஷன், சுதர்சனம் (சக்கரம்), பாஞ்சஜன்யம் (சங்கு) என நான்கும் இந்த நாகுவித அர்த்தம் காட்டுபவை.

ராமாயணத்திலே தர்மத்தை பகவான் உணர்த்தியதாகச் சொன்னேன்.. மூன்று வித தர்மங்கள் உண்டு என்கின்றனர் பெரியோர்.
சே-ஷத்வம், பாரதந்த்ரியம், பாரதந்த்ரிய காஷ்ட என்று மூன்று விதமாக இந்த தர்மங்களைச் சொல்வர்.
சே-ஷத்வம் என்றால் "கட்டிப் பொன்போல" என்று பொருள்.
இளைய பெருமாள் லக்ஷ்மணன் செய்த கைங்கர்யம் சே-ஷத்வம் போன்றது - அப்படியே கடினம்.  இரவு பகல் கண்விழித்து, கூட இருந்தபடியே கைங்கர்யம் செய்வதென்பது ரொம்ப கஷ்டமான காரியம்.   அதை லக்ஷ்மணன் செய்தான்.   எல்லோராலேயும் செய்யக்கூடியது அன்று அது!
"இமைத்திலன் நயனம் என்றான்" என்று லக்ஷ்மணன் குறித்துச்  சொல்லப்படுகிறது.  எம்பெருமானும் சீதாபிராட்டியும் வனவாசத்தின் போது கண் துயில்கிறார்கள்.  அப்போது வெளியிலே நின்று இமைக்காமல் காவல் காத்தானே.. ராத்திரி பகல் வித்தியாசம் இல்லாமல் நின்று கண்ணை இரப்பை காப்பதுபோல் காத்தானே.  கூடவே இருந்தானே..!
இந்த வனவாசத்தின்போதுதான் தசரதன் மாண்ட செய்தி பரதன் மூலமாக ராமனுக்கு எட்டுகிறது.  அப்போது அச்செய்தியை  லக்ஷ்மணனுக்கு எப்படி எடுத்துச் சொன்னான் என்பதைப் பார்க்கணும்.  அந்த வார்த்தைகளை நன்றாகக் கவனிக்க வேண்டும்.
"ஹே லக்ஷ்மணா! நீ உன் தந்தையை இழந்தாயடா" என்றான்.
அடியேனுக்கு ஒரு கோணலான புத்தி!  ராமன் பேரிலேயும் தோஷம் சொல்ல வேண்டும் என்கிற ஆசை! அதனாலே இந்த இடத்தில் கோணலாக வியாக்யானம் பண்ணிக் காட்டுகிறேன்.
"லக்ஷ்மணா!  உன் தந்தையை நீ இழந்தாயடா என்று ராமன் சொன்னதிலிருந்து என்ன தெரிகிறது.?  அப்பா தன்னைக் காட்டுக்கு போகச் சொன்னது குறித்து ராமனுக்கு ரொம்ப வருத்தம்.  வெறுப்பே வந்து விட்டது.  அதனால் தசரதனைத் தந்தையாக ராமன் பாவிக்கவில்லை.  
"லக்ஷ்மணா!  உன்அப்பா போய்விட்டார்" என்று சொன்ன வார்த்தை..!
- இப்படி அடியேனுடைய புத்தி நினைக்கிறது!
ஆனால், ஆசார்யர்களும் மகான்களும் தங்கள் வியாக்யானத்தில் எம்பெருமானுடைய புஷ்பம போன்ற திருவுள்ளத்தை நமக்குக் காட்டுகிறார்கள்.
என்ன வியாக்யானம் அது?  
எதை உத்தேசித்து ஸ்ரீ ராமன் அப்படிப் பேசினான்.
(தொடரும்)