Friday, August 30, 2013

Part - 1, Chapter - 21

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 21
ல்லா புராணங்களும் போற்றும் அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.  எல்லா பக்தர்களும், புலவர்களும் துதிக்கும் அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
சரஸ்வதி நதி தீரத்திலே ரொம்ப சிந்தனையோடு - கவலையோடு அமர்ந்திருந்தார் வியாசர். நாரதர் அங்கே எழுந்தருளினார்.
"இவ்வளவு சிந்தை உமக்கு எதற்கு?" என்று வியாசரிடம் கேட்டார்.  சிதா - சிந்தா இரண்டிலே எது உயர்ந்தது என்று கேட்டால் "சிதா" உயர்ந்தது என்று சொல்லி விடலாம்.
சிதா என்றால் சிதை - விறகு - விராட்டிகளினால் ஆன படுக்கை!  சிந்தை என்பது மனத்திலே எழுகிற கவலை.  இந்த இரண்டிலே சிதையே உயர்ந்தது என்றால்...?  சிதையானது பிராணனற்ற சரீரத்தைத்தான் எரிக்கிறது.  சிந்தையோ பிராணனுள்ள சரீரத்தையே எரிக்கிறது!  அதனால் சிதையே தேவலாம்!
"இப்படிப்பட்ட சிந்தைக்கு இடம் கொடுக்கலாமா...?  அந்த சிந்தை போக வேணுமென்றால் ஸ்ரீ கிருஷ்ண புராணத்தை நீர் எழுத வேண்டும் என்று வியாசரிடம் சொன்னார் நாரதர். 
"இதுவரை எழுதின மகாபாரதத்திலே கிருஷ்ண புராணத்தை ஆங்காங்கே கோடி காண்பித்திருக்கிறீர்கள்.  அதை  விரிவாக, ஸ்பஷ்டமாக எடுத்துச் சொல்லவில்லை.  அவன் லீலையைச் சொல்லக் கூடிய ஒரு புராணத்தை இயற்றுங்கள்;  உமக்குத் தெளிவு பிறக்கும்" என்றார் நாரதர்.
அதற்காகவே ஸ்ரீமத் பாகவதம் இயற்றப்பட்டது.  கிருஷ்ணாவதாரத்துக்காகவே எழுந்த பாகவத  புராணத்திலே, "அற்புதமான அவதாரம்" என்று கிருஷ்ணரைச் சொல்கிறார் வியாசர்.  ஆனால் அவரே நரசிம்ஹனைச் சொல்கிறபோது "அதியத்புத அவதாரம்" என்று விளக்குகிறார்!

ருக்மிணி பிராட்டி, கண்ணனுக்கு ஓலை எழுதுகிறாள்.  அதிலே ஏழு இடங்களில் பகவானை  அழைக்கிறாள்.  ஓரிடத்திலே கூட "கிருஷ்ணா" என்று அவனைக் கூப்பிடவில்லை. ஏன்...?
"கிருஷ்ணன் பொய் சொல்கிறவன்;  புளுகிலே வல்லவன்" என்றெல்லாம் கோபிகாஸ்த்ரீகள் அவனைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.   "பொய் அவதாரம்" ஆனதினாலே கிருஷ்ணனைக் கூப்பிட்டால் காரியம் ஆகாது!  பொய்யில்லாத பெருமான் யாரென்றால் நரசிம்ஹன்தான்!  அழைத்தவுடனே வந்து ரக்ஷிக்கக் கூடியவன்.  எனவே ருக்மிணியின் இதயம் கவர்ந்த அவதாரமாகிறது இந்த அவதாரம். 
ராமாவதாரத்திலேயும் மாரீசன் ராமனை "நரசிம்ஹா" என்று அழைக்கிறான்.  ஆஞ்சநேயரும் இலங்கையிலே சீதா தேவியிடம் "அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?  என் முதுகிலே ராமன் வருவான்.  நரசிம்ஹனைப் போல வருவான்" என்கிறார்.
ராமாவதாரத்திலே எங்கு தொட்டாலும் இப்படி நரசிம்ஹ பலம் தெரிகிறது.  
மகாபாரத ஸாரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே, விச்வ சப்தத்தினாலே, விச்வயோனி என்று நரசிம்ஹனைக் காட்டினதாலே... நரசிம்ஹன்தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஸாரம் என்று காட்டியிருக்கிறார்கள்.  விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுதுமே பாரதத்தின் ஸாரம் என்பதாலே மகாபாரதம் மொத்தமும் நரசிம்ஹனையே கொண்டாடுகிறது என்று தெரிகிறது.
பத்மாவதி கல்யாணத்திலே ஒரு காட்சி.  தாயார் மணவறையிலே மணக்கோலத்திலே அமர்ந்திருக்கிறார்.  எல்லா  உணவு வகைகளும் தயாராகி  நிரம்பியிருக்கிறது.  ரிஷிகள்,  உணவு கொள்ளக்  காத்திருக்கிறார்கள்.  உணவை யாருக்கு நிவேதனம் செய்துவிட்டுப் பரிமாறுவது  எழுகிறது.  
பகவானிடமே கேட்கிறார்கள். "அஹோபில ஷேத்திரத்திலே உள்ள நரசிம்ஹனுக்கு நிவேதனம் செய்து உணவு விநியோகிக்கப்படட்டும்" என்று சொல்கிறார் ஸ்ரீநிவாஸபெருமாள்.  அதனால்தான் ஸ்ரீநிவாஸர் நரசிம்ஹருக்குக்   கைகூப்பி வணங்குவதை இன்னமும் அஹோபில ஷேத்திரத்திலே பார்க்கலாம்.  ஸ்ரீ ராமனாலும், ஸ்ரீநிவாஸபெருமாளினாலும் வணங்கப்பட்டவர் என்பதாலே நரசிம்ஹனை  பெரிய பெரிய பெருமாள் என்று அழைக்கிறோம்.
பெரியாழ்வார் பல்லாண்டு பாடுகிறபோது "அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை" என்று பாடுகிறார்.    அன்று அவன் உக்கிரமூர்த்தியாக இருந்ததாலே யாரும் அருகே போய்ப் பல்லாண்டு பாட முடியவில்லை.  அந்த குறைதீர, பிற்காலத்தில் பாடினார்.
அஹோபில ஷேத்திரத்திலேஅவன் அழகைப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
ஹிரண்யனை சம்ஹாரம் பண்ணியவன் அங்கே காட்சியளிக்கிறான். ஆழ்வார் பார்க்கிறபோது அவருக்கு என்ன தெரிகிறதாம் அங்கே...?  சிம்ஹங்கள் எல்லாம் யானைகளை அடித்துத் தின்றுவிட்டு,  தந்தங்களை வகைப்படுத்தி  வைத்திருக்கிறதாம்.  ஒவ்வொரு தந்தமாக  கொண்டு வந்து நரசிம்ஹனின் திருவடியிலே  இட்டு ஓம் நரசிம்ஹாய நம: என்று அர்ச்சனை பண்ணுகிறதாம். சிம்ஹம் சிம்ஹத்தை அர்ச்சனை பண்ணும் காட்சி சிங்கவேள் குன்றத்திலே!
திருமங்கையாழ்வாரின் அழகிய பாசுரம் ஒன்றிலே நரசிம்ஹனைப் பாடாத பாட்டும் ஒரு பாட்டா? அவனைப் பேசாத நாவும் ஒரு நாவா?  அவன் புகழ் கேளாத செவியும் ஒரு செவியாகுமா? என்று கேட்கிறார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலே கம்பராமாயண அரங்கேற்று மண்டபம் தெரியும்.  அங்கே கம்பர் யுத்த காண்டம் ஆரம்பிக்கும்போது இரணியன்  வதைப்படலத்தைச் சொன்னாராம்.  விபீஷணன் ராவணனுக்கு  பண்ணுகிறான்:   "இப்படி எல்லாம் தீமை செய்யாதே!  இரணியனை அழித்த நரசிம்ஹன் தான் ராமனாக அவதரித்திருக்கிறான். அவனை எதிர்த்து அழிவைத் தேடிக் கொள்ளாதே" என்று நரசிம்ஹ அவதார கதையைச் சொல்கிறான்...
அரங்கேற்று மண்டபத்தில் இருந்த மகான்கள், பண்டிதர்களெல்லாம் ஆட்சேபித்தார்களாம்.  வால்மீகியின் மூலத்திலே இரணியன் வதைப் படலம் கிடையாது. எனவே, கம்பராமாயணத்திலும் அது இருக்கக் கூடாது.  அதை நீக்கி விட்டு கம்பர் தம் ராமாயணத்தை  அரங்கேற்றலாம் என்றார்களாம்.
கம்பனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.  அப்போது  வித்வான்கள், "இந்த புராணத்தின் தெய்வீக அம்சம் என்ன என்பதைக் காட்டினால் இதை ஒப்புக் கொள்கிறோம்" என்றார்கள்.
கம்பர், அழகிய சிங்கர் சன்னதிக்கு எதிரிலே போய் நின்று கொண்டார்.  "ஒன்றை உரைக்கில் ஒன்றேயாம்" என்ற செய்யுளில் ஆரம்பித்துப் பாட ஆரம்பித்தார். "ஆரடா சிரித்தாய்? என்ற சொல் வந்த  கட்டத்திலே, உள்ளுக்குள்ளே விக்ரஹ ரூபியாய் இருக்கும் பெருமான்  சிரித்து, தலையை ஆட்டி, இருகைகளையும் தூக்கி, "நான் ஏற்கிறேன்" என்று இரணியன் வதைப் படலத்தை ஏற்றானாம்.  ஆகையினாலே, இரணியன் வதைப் படலம் கம்பராமாயணத்திலே இடம்பெற்று அரங்கேறியது.  பகவானே அங்கீகரித்த அவதாரமாகிறது நரசிம்ஹ அவதாரம்.
நம்மாழ்வார் வாக்கிலே வருவதைப் பாருங்கள்.  "அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவன்" என்கிறார்.  நினைத்த இடத்தில் நினைத்த கணத்தில் தோன்றியவனின் காருண்யத்தைச் சொல்கிறார்.  "என் சிங்கப் பிரான்" என்று அவனை  அழைக்கிறார். அந்தப் பாசுரத்தை பிறர் சொல்லும்போது, அனைவருமே அவரவர் நரசிம்ஹனை அபிமானிக்கும்படியாகச் செய்து விட்டார் நம்மாழ்வார்.
காஞ்சி வரதராஜ பெருமாளைப் பார்த்து நரசிம்ஹா என்கிறார் சுவாமி தேசிகன்.  உலகத்தின் எல்லா பதார்த்தங்களிலுமே நிறைந்திருக்கிறான் அவன்.  என்றாலும் அவன் வெளிப்பட்டது ஒரு ஸ்தம்பத்தில் இருந்து தான்.  குழந்தை பிரஹலாதன் எந்த இடத்தைக் காட்டுவானோ? என்று காருண்யத்துடன் எல்லா இடத்திலும் நிறைந்து இருந்தான்.  எங்கு தட்டினாலும் உடனே வர சித்தமாயிருந்தான்.
வேதத்தைப் போல், கருணையும் தயையும் அதிகம் இந்த அவதாரத்திலே!

அளந்திட்ட தூணை அவன் தட்ட
ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர் சிங்க உருவாய்
உளந்தொட்டு இரணியன் ஒண்மார்வகலம் 
பிளந்திட்ட கைகளால் சப்பாணி...
என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
அளந்திட்ட தூண்!   தங்கச் செங்கல் கொண்டு ரத்தினங்கள் இழைத்த ஸ்தம்பமாம் அது.  குழந்தை பிரஹலாதனை இழுத்து வந்து, பிரத்யேகமாய் அதைக் காட்டி கேட்டானாம் ஹிரண்யன்.  தானே அருகில் இருந்து கட்டுவித்த தூணில் நாராயணன் இருக்க முடியாது என்ற தீர்மானம் அவனுக்கு!
"ஏன் இருக்க முடியாது" என்று கேட்டது குழந்தை.  உடனே அந்த இடத்திலிருந்து ஆவிர்பவித்தான் பரமாத்மா.   சிம்ஹமாய் - நரம்கலந்த சிம்ஹமாய்த் தோன்றினான்.
ஏன் சிம்ஹமாய்த் தோன்ற வேண்டும்?  புலியாக வரக்கூடாதா? என்றால், நாம் நினைக்கிற, விரும்புகிற ரூபத்தில் தோன்றுகிறவன் அவன்.  குழந்தை பிரஹலாதனை மடியில் உட்கார்த்திக் கொண்டு இரணியன் கேட்கிறான்:
"உலகிலேயே மிகவும் சாது யார்? என்று.
அப்போது பிரஹலாதன் "இதைத்தான் சாது என்று நினைக்கிறேன்.. என நரசிம்ஹனைச் சொன்னானாம்.  எனவேதான் அந்தக் குழந்தை விரும்பிய ரூபத்திலே எம்பெருமான் தோன்றினார்.

"இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாநுதலே" என்று நம்மாழ்வார் பாடுகிறார்.   இவரது ஆசையைப் பாருங்கள்.  வைகுண்டத்திலே போனால் பரவாசுதேவனாக ஆதிசே-ஷன்  கர்ப்பத்தில்... ஒரு கால் மடித்து, ஒரு காலை ஒயிலாகத் தொங்க விட்ட நிலையில் நாராயணனைப் பார்க்கலாம்.  ஆனால் ஆழ்வாரோ அங்கேயும் நரசிம்ஹனையே பார்க்க வேண்டும் என்கிறார்!
சொட்டை நம்பி என்று ஒருவர் ஸ்ரீரங்கத்திலே இருந்தார்.  அவருடைய அந்திம காலம் நெருங்கியபோது சிஷ்யர்கள் எல்லாம் சூழ்ந்திருந்து கேட்டார்கள்: "இப்போது உங்கள் மனத்திலே என்ன நினைப்பு ஓடுகிறது, நினைப்பதை சொல்லுங்கள்" என்றார்கள்.  
அதற்கு அவர் சொன்னார்: எனக்கு நல்ல ஆசார்ய சம்பந்தம்: மோக்ஷத்தைக் கட்டாயம் அடைந்துவிடுவேன்.  திரும்பி வருதல் இல்லாத சாசுவத நிலையை அடைவேன், வைகுண்டம் கட்டாயம் போவேன்.  ஆனால், வைகுண்டத்துக்குப் போய்ப் பார்ப்பேன்.. அங்கிருக்கும்படியான  பரமாத்மா,   நம் க்ஷேத்திர ரங்கநாதரைப் போல் இல்லாவிட்டால் முறித்துக் கொண்டு வந்துவிடுவேன்..!
சொட்டை நம்பி வைகுண்டத்திலேயும் ரங்கநாதரையே சேவிக்க விரும்பிய மாதிரி, ஆழ்வார் மோஹத்திலும் நரசிம்ஹ மூர்த்தியையே சேவிக்க விரும்புகிறார்.

அந்த மூர்த்தியைச் சேவித்தவருக்கு வேறு மூர்த்தியை சேவிக்கப் பிடிக்குமோ?

(தொடரும்)

  


No comments:

Post a Comment