Wednesday, August 21, 2013

Part - 1, Chapter - 20

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 20
 
ரசிம்ஹ அவதாரத்துக்குத் தனியான ஏற்றம் தருவது அவருடைய அத்யத்புத ரூபம்.

"ஸ்தம்பே   த்ருச்யதே" (ஸ்தம்பத்திலே, தூணிலே தெரியலையே) என்று ஹிரண்யகசிபு கேட்டபோது, 
"ஸ்தம்பேந  த்ருச்யதே" (ஸ்தம்பத்திலேதான் தெரிகிறான்) என்று பதில் சொல்கிறான் குழந்தை பிரஹலாதன்.
"எனக்கு தெரியாமல் உனக்குத் தெரிகிறானா? இரு!  இதோ உன் தலை வேறு, உடம்பு வேறுன்னு துண்டிக்கிறேன்.  அது பிரிஞ்சு போய்த் துடிக்கறச்சே தைப்பானா பார்ப்போம்" என்கிறான் அசுரன்.
"அந்த காரியம் அவன் பண்ண மாட்டான்" என்கிறான் பிரஹலாதன்.
"அவன் பண்ணமாட்டான் என்றால் நீ ஏன் அவனை ஆச்ரயிக்கிறாய்"?
"அங்கே ஸ்தம்பத்திலேஇருக்கிறவன் என்ன அவ்வளவு கடினாத்மாவா?.  நீ கத்தி எடுத்து வெட்டறேன்னு சொல்றியே.  அந்தக் கத்தியைக் கழுத்தருகே கொண்டு வர முடியுமா உன்னாலே.  அது வரை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?" என்கிறான் பிரஹலாதன்.
அவ்வளவு விச்வாசம் பகவானிடத்திலே!

அந்த மாதிரி பூரண விச்வாசம் வைத்தால்தான், "என்னை ரட்சிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது" என்று பகவானிடத்திலே உரிமை கொண்டாடலாம்.

விச்வாசம் பண்ணுவதற்கு முன்னே சரணாகதி பண்ணினால் எடுபடுமா?

யாகம் பண்ண ஒருவர் திரவிய உதவி செய்கிறார்.  நம்பிக்கை இல்லாமலேதான் செய்கிறார். ஆனால் யாகம் செய்து மழை பெய்த பிறகு அவருக்கு நம்பிக்கை வருகிறது.  சரணாகதி விஷயம் அப்படி இல்லை.  விச்வாசம் இல்லாமல் சரணாகதி பண்ணினால் பலிக்காது.

எம்பார் அவர்கள் காலட்சேப கோஷ்டியிலே இருந்த தமது சீடர்களுக்கு சொல்லுவார் "கர்ம, ஞான, பக்தி யோகம் எல்லாம் பண்ணுவது கஷ்டம்.  அதெல்லாம் பண்ணி அவஸ்தைப்படாமல் சரணாகதியை சுலபமாகப் பண்ணிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.  ஏனென்றால் சரணாகதிக்கு முன்னாடி மகாவிச்வாசம் என்று ஒன்று இருக்கே.  அது சுலபத்திலே வருவதில்லை.  அக்கம்பக்கத்திலே உள்ளவர்களிடம் ஏற்படும் விச்வாசம் கூட நமக்கு பகவானிடத்திலே வருவதில்லை.  கல எள்ளுக்கட்டு கல எண்ணெய் ஆன கதைதான்" என்பார்.
சொல்லிவிட்டுக் கதையையும் விளக்குவார்:

பூர்வ காலத்திலேயே ஓர் எண்ணெய் வியாபாரி இருந்தான்.  நித்யம் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தான் அவன்.  செக்கு ஆடி, எண்ணெய் பிழிந்து, வியாபாரம் செய்ய வேண்டும்.
ஒரு நாள் அவன் செக்கு இரண்டாக உடைந்து போயிற்று!  இன்னொரு செக்கு செய்வதற்கு மரத்தைத் தேடித் போனான்.  ஒரு பிரும்மாண்ட மரம் - செக்குக்கு ஏற்றது என்று நான்கு ஆட்களைக் கூப்பிட்டு மரத்தை வெட்டச் சொன்னான்.  நாலு ஆட்களும் தலைப் பாகையைக் கட்டிக் கொண்டு கோடாரியை எடுத்து ஓங்கிய நேரத்திலே...

அந்த மரத்தில் இருந்து பொத்தென்று ஒன்று குதித்து எண்ணெய் வியாபாரியின் திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.  "இந்த மரத்தை வெட்டாதே!  இதில் ரொம்ப நாட்களாக நான் இருக்கிறேன்.  இதை வெட்டினாயானால் எனக்கு வாசம் செய்ய வேறு இடம் இல்லாமல் போய்விடும்" என்றது.

எண்ணெய் வியாபாரி யோசித்தான்.  அவன் யோசிப்பதைப் பார்த்து அது சொன்னது:
"இந்த எண்ணெய் வியாபாரம் உனக்கு எதுக்கு கையெல்லாம் எண்ணெய் ஒட்டிக் கொண்டு, சங்கடமில்லையா...  நீ எள்ளு வியாபாரம் செய்யலாமே? அதுக்கு நான் உதவி செய்கிறேன்.  தினமும் சூர்ய அஸ்தமன வேளையிலே உன் வீட்டு வாசலில், ஒரு கல எள்ளு ஆகும்படியான அளவுக்கு எள்ளுக் கட்டிக் (எள் விளைந்த கதிர்கள்) கொண்டு வந்து போடுகிறேன்" என்றது.
இவ்வளவு தூரம் அது பேசிய பிறகு அவன் கேட்டான். "இத்தனை அக்கறையாகச் சொல்கிறாயே, நீ யார்"?  "நான் இந்த மரத்திலே ரொம்ப நாட்களாக இருக்கிற பிசாசு" என்றது அது.
நடுநடுங்கிப் போய் விட்டான்.  முதலில் அதனிடம் பேசப் பயபடாதவன் பிசாசு என்றதும் பயந்து விட்டான்.  ஆனால் அது அவன் திருவடியை பிடித்துக் கொண்டு தொடர்ந்து கெஞ்சுவதைப் பார்க்க அவனுக்குத் தைரியம் வந்து விட்டது.
"சரி, மரத்தை வெட்டவில்லை.  ஆனால் சொன்னபடிக்கு நீ எள்கட்டு கொண்டு போடாவிட்டால், நான் என்ன செய்ய" என்றான்.  "நான் என்ன மனிதனா, ஒரு சொல் சொல்லிவிட்டு அதைச் செய்யாமல் போறதுக்கு?.  துர்தேவதையானாலும் கொடுத்த வாக்கைக் காப்பேன்" என்றது.  
துர்தேவதைகளும் பரிகசிக்கிற அளவுக்கு நமது நிலை ஆகியிருப்பதைப் பாருங்கள்.

ண்ணெய் வியாபாரி பிசாசு சொன்னதை ஒப்புக்கொண்டு மரத்தை வெட்டாமல் போனான்.
சொன்னது போலவே ஒரு களம் எள் ஆகும்படியான எள்ளுக்கட்டை தினமும் ஆறு மணிக்கு கொண்டு போட்டது பிசாசு.

போகப் போக ஆறு  மணி என்பது ஆறரை ஆயிற்று - அப்புறம் ஏழு .. ஏழரை .. .என்றாகி.. ஒரு நாள் இரவு 1 மணிக்கு கொண்டு  வந்து எள்ளுக்கட்டைப்  போட்டது!

ஏன் என்று பார்த்தால் .. பிசாசுக்கு எள் பயிரிட முடியுமா...?  யார் யாரோ பயிரிட்டதை அறுத்துக் கொண்டு வந்து அது போட்டு விடுகிறது.  நிரந்தரமாக எள் பயிர் செய்பவர்கள் கிடைப்பார்களா என்ன...?  அதனாலே அந்த எள்ளுக்காக பிசாசு பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை!.  நாலா திக்கிலும் போய்த்  தேடி  அவஸ்தைப் படுகிறது.   ஒரு நாள் இரவு 2 மணிக்கு எள்ளுக்கட்டை கொண்டு வந்து போட்டுவிட்டு அது யோசிக்க ஆரம்பித்தது.

இந்த வேலையை தினமும் பண்ணுகிறோமே.. எதற்காகப் பண்ணுகிறோம்?  குடியிருந்த அந்த மரத்தை ரக்ஷிக்கத்தானே பண்ணுகிறோம்.  ஆனால் இந்த வியாபாரியிடம் வாக்கைக் கொடுத்த பிறகு ஒரு நாள் கூட அந்த மரத்திலே போய் உட்கார முடியலையே... இந்த நிலையை விட அவன் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு போகவே அனுமதித்திருக்கலாம் போலிருக்கிறதே...!
3 மாத காலமாக வீணான காரியத்தை அல்லவோ நாம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்... இன்றைக்கு எப்படியாவது ஒரு நிமிஷமாவது அந்த மரத்திலே போய் உட்கார வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டது.

ப்படி பிசாசுக்கு வந்த  விவேகம் மனிதனுக்கு வருமா? என்று கேள்வி எழுப்புவார் எம்பார்!
மனிதன் உட்கார்ந்து அறியான்!  எத்தனை நாள் ஆனாலும் தேக சஞ்சாரம் பண்ணுவதற்கே சரியாயிருக்கிறதே... எப்போது மனிதனுக்கு விவேகம் வருமோ? என்பார்.

இன்றைக்கு எப்படியாவது நேரத்திலே போய் உட்காரணும் என்று தீர்மானித்த பிசாசு அந்த மரத்திடம் போனது.  அங்கே போனால்... அந்த மரத்திலே வேறொன்று உட்கார்ந்திருந்தது!  நூதனமான புதுப் பிசாசு அது!
புதுப் பிசாசைப் பார்த்துப் பழைய பிசாசு, "நீ யார்?" என்று கேட்டது.
புதுப் பிசாசு சொன்னது: "உன்னைப் போல ஒரு பைத்தியம் உண்டா?  மனுஷனைப் பிடித்துக் கொண்டு பிசாசு ஆட்டும் என்பார்கள்.  உன்னைப் பிடித்துக்கொண்டு அந்த மனுஷன் ஆட்டுகிறானே...!  உன்னைப் போல அசடு உண்டா?  நீ போன பிறகு மூன்று மாதமாக இந்த மரத்திலே வசித்து வருகிறேன்,  இப்போது நீ வந்திருக்கிறாய், உன்னை விரட்டி அடிக்க நான் தயாராயில்லை.  ஒன்று செய்கிறேன் - அந்த என்னை வியாபாரியை கொன்றுவிட்டு வருகிறேன்.  அதன் பிறகு எனக்கும் இந்த மரத்திலே இருக்க நீ இடம் கொடுப்பாயா? என்றது.

"அந்த காரியத்தை நீ பண்ணினால், நீயும் நானும் சௌக்கியமாக இருக்கலாம்".
"சரிதான்" என்று கிளம்பிய புதுப் பிசாசு, நேராக எண்ணெய் வியாபாரி வீட்டின் புழக்கடைக்கு போனது.  அங்கே  இரண்டு மாட்டுக் கொட்டகைகள் இருந்தது.  ஒன்றில் 20  இருந்தன.  இன்னொன்றில் ஒரே ஒரு மாடு தனித்து இருந்தது.  அந்த இரண்டாவது கொட்டகையிலே போய் உயரத்திலே உட்கார்ந்து கொண்டது புதுப் பிசாசு.  விடியற்காலை எண்ணெய் வியாபாரி கொட்டகைப் பக்கம் வந்தால் அவனை அமுக்கிக் கொன்று விடலாம் என்று காத்துக் கொண்டிருந்தது.

ஆனால் விடிந்து நேரமாகியும் எண்ணெய் வியாபாரி மாட்டுக் கொட்டகைக்கு வரவே இல்லை.  ஒரு அரச மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டு மாடுகளுக்கு லாடம் அடிக்கும் வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.  ஒவ்வொரு மாடாகப் பிடித்து அழைத்து  பணியாட்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.
"அதோ அந்தக் கொட்டகையிலே இருக்கிற புதுப் பிசாசைப் பிடித்துக் கொண்டு வா!" என்று ஒரு கட்டளை  வரவும் நடுநடுங்கிப் போய்  விட்டது புதுப் பிசாசு!

எண்ணெய் வியாபாரி குறிப்பிட்டது தனியே கட்டியிருந்த மாட்டை.  அது சந்தையிலே பிடித்த புது மாடு.  முரண்டு பண்ணி மற்ற மாடுகளை இடித்ததால் தனியே கட்டி வைத்திருந்தான்.
நிஜப் பிசாசோ, தன்னைத்தான் எண்ணெய் வியாபாரி பிடித்து லாடம் அடித்துவிடுவான் என்று பயந்தது!  ஓடிப் போய்  அவன் திருவடிகளில் விழுந்து, "என்னை ஒன்றும் பண்ணிவிடாதே"! என்று கெஞ்சியது.
"நீ  யாரு" என்று கேட்டான் அவன்.  "நான் தான் புதுப் பிசாசு"
"புதுப் பிசாசா?" 
"என்னை ஒன்றும் செய்யாமல் விட்டாயானால் அந்தப் பழைய பிசாசைக் காட்டிலும் உனக்குச் சகாயமாய் இருப்பேன்.  அது ஒரு களம் எள்ளு ஆகும்படியான எள்ளுக்கட்டை தினமும் உனக்குக்  கொண்டு போட்டது.  நான் ஒரு களம் எண்ணெயே பிழிந்தெடுக்கும் அளவுக்கான எள்ளுக்கட்டை தினமும் கொண்டு போடறேன்..."
"கட்டாயம் போடுவாயா..?
"கட்டாயம் போடுவேன்"..
"அப்படியானால் போ!.. என்றான் எண்ணெய் வியாபாரி.
தலையை சொறிந்தபடி போய் பழைய பிசாசைப் பார்த்தது புதுப் பிசாசு!
"என்ன, போன காரியம் முடிந்ததா?" என்று அது கேட்க, இது நடந்த கதையைச் சொல்ல... "நான் ஒப்புக் கொண்டதைக் காட்டிலும்  அதிகமாக அல்லவா நீ ஒப்புக் கொண்டிருக்கிறாய்.. உனக்கெங்கே இந்த மரத்துக்கு வர நேரம் இருக்கப் போகிறது" என்றது அது.

லம் எள்ளு கலம் எண்ணெய் ஆனகதை இதுதான்.

கர்ம யோகமும் ஞான யோகமும் கடினமானவை. சுலபமாகப் பண்ணிவிடலாம் என்று நாம் எண்ணினால் இந்த கலம் எண்ணெய் போல ஒரு  விஷயம் குறுக்கே வருகிறது.  அந்த விஷயம் தான் மகா விச்வாசம்!  கலம் எண்ணெய்க்கான எள்ளுக்கட்டை தினமும் அடைவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு  கஷ்டம் சரணாகதிக்கான மகா விச்வாசத்தை  எய்துவது.

பகவான் எதிரே இருக்கிறான் என்ற பாவனையில்  தூபம், தீபம், நைவேத்தியம் என்று சமர்ப்பிக்கிறோம்.  அவன் வாஸ்தவத்தில் அங்கே உட்கார்ந்திருக்கிறான், நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற எண்ணம் வர வேண்டாமா?  பூரணமான விச்வாசம் வர வேண்டாமா?  அது  சிரமம்.

அந்த விச்வாசம் பிரஹலாதனுக்கு இருந்தது.  அதனாலேதான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்னதுபோல உறுதியுடன் அவனால் பேச முடிந்தது!














தொடரும்...

No comments:

Post a Comment