Monday, August 12, 2013

Part - 1, Chapter - 19

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 19

நரசிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் என்று ஒன்று உண்டு.   முப்பத்திரண்டு அஷ்ரங்கள்.  ஒவ்வொரு அஷ்ரமும் ஒரு பிரும்ம வித்தையை நமக்கு உபதேசம் பண்ணக்கூடியது.  ஆகவே 32 பிரும்ம வித்தைகளாலும் ஆராதிக்கப்படுகிறவர் நரசிம்ஹர் என்று கொள்ளலாம். 
ஏதாவது ஒரு பிரும்ம வித்தையை நம்மால் கற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியுமா? என்றால்,  ஒன்றைக் கூட நம்மால் அனுஷ்டிக்க முடியாது.
ஆனால், நரசிம்ஹனைப் பார்த்து ஸ்ரீநரசிம்ஹாய நம: என்று ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை செய்ய முடியும்!  அந்த நரசிம்ஹனை தியானம் பண்ண முடியும்.  அப்படி தியானம் பண்ணிவிட்டால் எல்லா பிரும்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும்.  அத்தனை பிரும்ம வித்தைகளின் நிலைக்களன் அந்தப் பரமாத்மா தான்.
பூர்வ காலத்திலேயே ஜான சுருதி என்றொருவன் இருந்தான்.  வாரிவாரி வழங்கும் வள்ளன்மை மிக்கவன்.  எல்லோருக்கும் வாரிவாரிக் கொடுப்பான்.  தானம், தைரியம் போன்ற குணங்கள் இயல்பாக அமையனும்.  அவனுக்கு அது அமைந்திருந்தது.
ஏழு அடுக்கு உப்பரிகையிலே ஜான சுருதி படுத்துக் கொண்டிருந்தான்.  இரவு நேரம்....  இரண்டு பரதேசிகள் அவனுக்கு உபதேசிக்க எண்ணினார்கள்.
வானத்தில் ஒரு ஹம்ஸ கூட்டம் (அன்னப் பறவை) பறந்து போய்க்கொண்டிருந்தது.  தாங்களும் ஹம்ஸப் பறவைகளாக மாறி, கூட்டத்துடன் பறந்தனர்.   ஜான சுருதி படுத்திருந்த இடத்துக்கு நேர்மேலே வந்தபோது, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள்.
ஒரு பறவை சொன்னது: "மந்தமான பார்வையுடைய நண்பா! கீழே படுத்திருப்பவனைப் பார்த்தாயா? இவன் எப்பேர்ப்பட்டவன் என்று உனக்குத் தெரியுமா?"
மற்றது பதில் பேசியது:  இவனொன்றும் அப்படி உயர்ந்தவன் இல்லை.  ரைக்குவரைக்  காட்டிலும் இவன் எப்படி உயர்ந்தவனாக முடியும்?" 
உரையாடல் தொடர்ந்தது.
"அது யார் ரைக்குவர்?  
உனக்கு ரைக்குவரைத் தெரியாதா?  நான் காட்டுகிறேன், வா .."

படுத்திருந்த ஜான சுருதி எழுந்து விட்டான்.  தன்னைக் காட்டிலும் உயர்ந்த ரைக்குவரைத் தெரிந்து கொள்ள அவனுக்குப் போருக்க முடியாத ஆவல்.

தான் ஏழு அடுக்கு உப்பரிகையில் படுத்திருந்தால் ரைக்குவர்  பதினாலு அடுக்கிலே படுத்திருக்க வேண்டும் என்று எண்ணி, ஆட்களைக் கொண்டு நகரம் தோறும் தேடச் செய்தான்.  ஒரு நகரத்திலும் அவர் அகப்படவில்லை.  பிறகு  கிராமம்,குக்கிராமம் என்று தேடி, ஒரு வழியாக ரைக்குவரைக் கண்டு பிடித்தார்கள் .
எங்கே?
மிகச் சிறியதொரு குக்கிராமத்தில், ஒரு சேரியில் இருந்தார் ரைக்குவர்.  அங்கே ஒரு கட்டை வண்டி இருந்தது. அதிலே முதுகைத் தேய்த்தபடி நின்றார்!  அவர் உடல் முழுவதும்புளுத்து நெளியும் புண்கள்!
 
ஜான சுருதியினால் நம்ப முடியவில்லை.  இவரைத் தவிர வேறு ரைக்குவர் கிடையாது என்றதும், இரண்டு யானைகள் மீது தங்கத் தாம்பாளத்தில் பட்டு, பீதாம்பரம், செல்வம் என்று குவித்து எடுத்து வருகிறான்.  அத்தனையையும் அவர் முன் சமர்ப்பித்து அனுக்கிரஹம் பண்ணப் பிரார்த்திக்கிறான்.  
"ஒரு புழுவுக்குச் சமம்" என்று தம் உடம்பிலிருக்கும் ஒரு புழுவைக் காட்டிச் சொல்கிறார் ரைக்குவர்.  உன் நிலைக்கு இதெல்லாம் உயர்வாகத் தெரிகிறது.  நான் இருக்கும் நிலைக்கு நீயும் வந்தால், என்னைப் போல்தான் நீயும் இவற்றைப் பார்ப்பாய்" என்றார்.
"இவ்வளவு செல்வத்தையும் புழுவாய் நினைக்கும் ஒரு நிலை இருக்கிறதா? என்று வியக்கிறான் ஜான சுருதி.  
"ஏன் இல்லை?"
"அப்படியானால், அதை அடைய நான் என்ன பண்ண வேண்டும்?"
இப்படிக் கேட்ட ஜான சுருதியிடம் ரைக்குவர் யாரை உபாசிக்கச் சொல்லி உபதேசம் பண்ணினார் என்றால்... நரசிம்ஹனையே உபாசிக்கும்படி உபதேசித்தார்!  அவனும் அவர் சொல்படி நரசிம்ஹனை உபாசித்து மோக்ஷத்தை அடைந்தான்.

ஆக, யார் தன்னை உபாசிக்கிறார்களோ அவர்களுக்குப் பலனைக் கொடுக்கக் கூடியவன் நரசிம்ஹன்.
"அடித்த கை - பிடித்த பெருமாள்" என்று பெயர் அவனுக்கு!  "எங்கடா"? என்று அடித்துக் கூப்பிட்டால், "இதோ" என்று வந்து நம் கையைப் பிடித்துக் கொள்வான்.  வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா!

விச்வத்துக்குக் காரணமானவனும் வேதாந்தத்திலே சொல்லப்பட்ட வித்யைகளுக்குப் பொருளாய்  இருக்கக் கூடியவனும் நரசிம்ஹன்தான்.
அப்படிப்பட்டவனை வெறும் உக்ர ரூபியாக இல்லாமல், லக்ஷ்மியோடு கூடிய லக்ஷ்மி நரசிம்ஹனாக  நாம் உபாசிக்க வேண்டும்.
ஈஸ்வரனே ஆச்சர்யமாய், நரசிம்ஹனை உபாசிக்கும் படியான மந்திரத்தைச்  சொல்கிறார். அதை யார் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஆரோக்கியம், வித்யை, செல்வம் எல்லாம் சம்பவிக்கும்.
முக்கண்ணனே முக்கண்ணனின் பெருமையைச் சொல்லும் இந்த ஸ்தோத்திரம் அஹிர் புத்ரிய சம்ஹிதை என்பதில் உள்ளது.
எனவே,எல்ல அவதாரங்களிலும் உயர்ந்தது நரசிம்ஹ அவதாரம் எனக் கொள்ளலாம்.  இதை உபசாரமாகவோ, அதிசயோக்தியாகவோ சொல்லவில்லை.. காரணமிருக்கிறது!
நரசிம்ஹ அவதாரம் எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், ஹிரண்ய கசிபுவை சம்ஹரிப்பதற்காக ஏற்பட்டது என்று சாதாரணமாய் பதில் கிடைக்கும்.
ஆனால் ஹிரண்ய சம்ஹாரத்துக்காக ஏற்பட்டது அல்ல இந்த அவதாரம்.
சரி, பிரஹலாதனை காப்பதற்காக எற்பட்டதா இந்த அவதாரம் என்றால் அதுவும் இல்லை.
அக்கினியில் தூக்கிப்போடும்போதும், மலையில் இருந்து உருட்டும் போதும், சமுத்திரத்தில் எறிந்த போதும், யானையைக் கொண்டு இடறச் செய்த போதும், விஷப் பாம்புகளிடையே விடப்பட்ட போதும் பிரஹலாதனை யார் காப்பாற்றினார்கள்?
அப்போதெல்லாம் அவதரிக்காத நரசிம்ஹன், பிரஹலாதனின் வார்த்தையைக் காப்பாற்றத்தான் அவதரிக்கிறான்!
"எங்குமுளன் கண்ணன், அவன் இல்லாத இடம் கிடையாது" என்று பிரஹலாதன் சொன்னபோது அதை உண்மையாக்க பரமாத்மா அவசரத் திருக்கோலம் பூண்டு சர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்தான்!
இப்படி அவனை அவதரிக்க செய்த பிரஹலாதனே அவன் பெருமையைப் பேசுகிறான்.
அவசர அவசரமாகப் போட்டுக் கொண்ட அவதாரமாம்.  யோசித்து எடுத்த ராமாவதாரம் போல் அன்றி, தேவதைகளின் பிரார்த்தனைகளுக்கிரங்கி தோன்றிய கிருஷ்ணாவதாரம் போல் அன்றி, நினைத்த மாத்திரத்தில் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
அவசரத் திருக்கோலம் என்றாலும் அதுதான் மிகவும் அழகான அவதாரமாக அமைந்திருக்கிறது!
மிக ஏற்பாடாக விருந்து சமைக்கும் போது எல்லாம் பிரமாதமாக அமைவதில்லை.  ஆனால், ஊரிலிருந்து வரும் திடீர் விருந்தினருக்கு அவசரமாய்த் தயாரிக்கப்படும் எளிய உணவு அற்புதமாக அமைகிறது!
நரசிம்ஹ அவதாரம் இந்த அவசர உபசரணை மாதிரி... 
அதன் அழகைச் சொல்லி முடியாது.
பிரஹலாதனின் வாக்கை மட்டுமின்றி பிரும்மாவின் வாக்கைக் காப்பதற்காகவும் எடுக்கப்பட்டது நரசிம்ஹ அவதாரம்.
ஹிரன்யகசிபுவுக்கு எசகுபிசகான நிபந்தனைகள் அடங்கிய வரத்தைக் கொடுத்தவர் அவர்தானே...
"இரவிலும், பகலிலும், மனிதராலும், மிருகத்தாலும் எனக்கு அழிவு வரக்கூடாது" என்றெல்லாம் கேட்டான் அல்லவா.
பிரும்மா கொடுத்த அத்தனை வாக்கையும் காப்பாற்றிக் கொடுத்து, அதே சமயத்தில் ஹிரண்யகசிபுவை சம்ஹாரமும் பண்ணப் பரிவுடன் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
பிரும்மா வாக்குக் கொடுத்துவிட்டால் என்ன? என்று அதை மீறும் வல்லமையும், உரிமையும் பகவானுக்கு இல்லையா என்ன? ஆனால் அவன் பிரும்மாவின் வாக்கைக் காப்பாற்றிக் கொடுக்க பிரயத்தனத்துடன் அவதரித்தான்.  ஏன்..?
அந்த வாக்கு மீறப்பட்டால்,  பிரும்மாவின் வரம் செல்லாது என்று ஆகிவிடும்!  அப்புறம்  ஸ்தோத்திரம் பண்ணுவார்களா?  ஏற்கெனவே அவருக்கு ஸ்தோத்திரமும் கோயிலும் குறைவு... அவர் தொடர்பான மந்திரங்களை தொனிகுறைத்துத்தான் சொல்ல வேண்டும் என்று வாக்கு தேவதையின் சாபம் வேறு இருக்கிறது.
ஒரு ஊரில் உபன்யாசகர் இராமாயண உபன்யாசம் 48 நாள்  முடித்து, வீட்டுக்குக் கிளம்புகிறார்.  உபன்யாசத்தை ஏற்பாடு செய்தவருக்குச் சந்தேகம்.
"சுவாமி, இந்த 48 நாட்களும் ராமன், ராமன் என்றும் ராவணன், ராவணன் என்றும் ராக்ஷசன், ராக்ஷசன் என்றும் சொல்லிக் கொண்டேயிருந்தீர்.  
இதிலே ராக்ஷசன் யார் ? ராமனா ? ராவணனா? என்று கேட்டாராம்.
உபன்யாசகர் தமது மூட்டைகளைக் கட்டுவதை நிறுத்திவிட்டார்.
சந்தேகப் பேர்வழி தொடர்ந்து கேட்டார்.
இப்ப கேட்ட சந்தேகம் இந்த 48 நாட்களா உண்டானதுதான். அதற்கும் மேல், ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.  பிரும்மவுக்கு நம் தேசத்தில் ஏன் கோயில்களே இல்லை?
உபன்யாசகர் சொன்னாராம்.
"உம்மையும் படைச்சு, எம்மையும் படைச்சு, உம்மெதிரே எம்மை 48 நாள் உபன்யாசம் பண்ண வைத்தாரே அந்த பிரும்மா!  அதனாலேதான் அவருக்குக் கோயிலே இல்லை போலும்...
ஆக, பிரும்மவுக்கு ஏற்கெனவே ஸ்தோத்திரமும் கோயில்களும் குறைவு.  இந்த நிலையிலே, பகவான் அவரை மதிக்கலைன்னா...   வேறு யார் மதிப்பார்கள்?  அதனால்தான் பிரும்மாவின் வாக்கைக் காப்பாற்ற நரசிம்ஹ அவதாரம் எடுத்தான்.

நாராயணின் நாபியில் இருந்து உருவானவன் நான்முகன்.  அவன் நாபிக் கமலத்தில் தான் அமர்ந்திருப்பதை உணர்வதற்கே அவனுக்கு ரொம்ப நாட்கள் ஆயிற்றாம்.  ஆயிரம் கோடி யுகங்கள் தவம் பண்ணி, நாராயணனே நமக்கு மூலம் என்று உணர்ந்தான் பிரும்மா.  அந்த தேவதைக்கு ஒரு அகௌரவம் வரக்கூடாது என்கிற பரிவினால் அவன் கொடுத்த வரத்துக்கு எந்த வித பங்கமும் இல்லாமல், "அகடிதகடனா" சாமர்த்தியத்தோடு அவதரித்தான் பகவான்.  

அவனுக்கு எத்தனை காருண்யம் பாருங்கள்.

(தொடரும்)













 

 






No comments:

Post a Comment