குறையொன்றுமில்லை
(முதல்
பாகம்)
அத்தியாயம் 22
மட்டபல்லி க்ஷேத்திரத்தில் குகைக்குள்ளே வாசம் பண்ணுகிறான் நரசிம்ஹன். யாரேனும் ஒருத்தர் தீவட்டி எடுத்துப் போய் வழிகாட்டினால்தான் உள்ளே போகலாம். அந்த மாதிரி குகை... வேதாந்த குகைக்குள்ளே தத்துவமாய் அடங்கியிருப்பவனை ஓர் ஆசார்யரின் வழிகாட்டலில்தான் சேவிக்க முடியும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறான். அப்படி ஒருத்தர் வழிகாட்ட உள்ளே போய் விட்டோமானால், இன்றைக்கெல்லாம் சேவிக்கலாம். எம்பெருமான் வடிவழகைக் கண்டு ஸ்தோத்திரம் பண்ண எல்லா துன்பமும் போய்விடும் என்கிறது வேதம்.
எப்பொழுதும் பகவானின் பெருமையையே பேசணும் என்று வேதம் காட்டும் வழியைத்தான் ஆசார்யர்களும் காட்டுகிறார்கள். எம்பெருமானை உபாசனை பண்ணு - அப்படிப் பண்ண முடியாவிட்டால் அவனை இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே வரும் "விச்வம்" என்கிற சப்தத்தைச் சொல்லி அவன் பெருமையை நினை!
கடினமான கனத்தை (வேதம்) அத்யயனம் பண்ணி மகரிஷிகளைப் போல சிரமப்பட்டு, சரீரத்தை வருத்தி, ஊன் வாட வாட உண்ணாதிருந்து அவனை வேண்டின காலம் மாறி விட்டது.
இப்போது சிரமமில்லாமல் காரியம் செய்ய வலிகள் ஏற்பட்டிருக்கின்றன. அடியேன் பண்ணுகிற இந்த உபன்யாஸத்தையே எடுத்துக் கொள்வோம். இதிலே என்ன சிரமம். உடம்பு சிரமப் படாமலிருக்க, மின் விசிறி சுற்றுகிறது. குரல் எல்லோருக்கும் கேட்கும்படியா ஒலிபெருக்கி இருக்கிறது.
ஆனால் ஆதி காலத்திலே முனிவர்கள் பஞ்சாக்கினியின் மத்தியில் நின்று . பகவானை உபாஸித்திருக்கிறார்கள். நான்கு பக்கமும் நான்கு அக்னி தகிக்கும்; தலைக்கு மேலே சூரியன்; கடும் வெயில் காலம் - சித்திரை, வைகாசியிலே இது நடக்கும். குளிர் காலத்தில் தனுர் மாசத்திலே - கழுத்தளவு ஜலத்திலே நின்று கொண்டு உபாஸனை பண்ண வேண்டும்! நமது இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவையானதாலே அவற்றை நிக்ரஹம் பண்ணி, ஊன் வாட வாட உண்ணாதிருந்து உயிருக்குக் காவலிட்டு மஹரிஷிகள் எல்லாம் பகவானைக் கண்டார்கள்.
இப்போது அந்த சக்தியெல்லாம் நமக்கில்லை என்பது ரொம்ப ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. கால வெள்ளோட்டத்தில் வேக வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம்...
"அப்படியானால் வேத அத்யயனமே நடப்பதில்லையா? என்று கேட்டால், நடந்து கொண்டுதானிருக்கிறது. மகான்கள் பலர் அதைப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்மால் பண்ண முடியாது என்கிறவர்கள் சுலபமாய் அவனை இந்த விச்வ சப்தத்தினாலே ஆராதித்தால், ஒரு புஷ்பத்தை எடுத்துப் போட்டால்.. அந்த வேத உபாஸனையின் பயனைச் சுலபமாய் அடையலாம்.
விச்வ யோனி; விச்வத்துக்கெல்லாம் காரணமானவன் என்று அறியப்படுகிற அந்த நரசிம்ஹனை ஆராதித்தவர்கள் வேறு நினைப்பே மனத்தில் கொள்ளமாட்டார்கள்.
விச்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிறவன் நரசிம்ஹன் என்று பார்த்தோம். அந்த விச்வமாகிய பரபிரும்மம் ஒரு முறை அசுவமேத யாகத்துக்குப் போயிற்று! எங்கே...? நர்மதா நதி தீரத்திலே நடந்தது அந்த அசுவமேத யாகம்.
ஒவ்வொரு நதிக்கும் ஒரு பெருமை உண்டு. நர்மதா நதியின் பெருமை கூர்ம புராணத்திலே பேசப்பட்டிருக்கிறது. சந்தியாவந்தனத்திலே இந்த நதி குறித்த தியானம் வருகிறது. நர்மதா நதியை தியானம் பண்ணினால் நம் பக்கத்திலே விஷ ஜந்துக்களே வராது.
பிரஹலாதனின் பிள்ளை விரோசனன். இந்த விரோசனின் மகன் வைரோசனன். இவனுடைய பிள்ளை மகாபலி. அவன் நர்மதா நதிக்கரையிலே அசுவமேத யாகம் பண்ணினான்.
அசுவமேத மகா மந்திரம் என்ற ஒன்று அந்த யாகத்தின்போது ஜபிக்கப்படும். அந்த மகா மந்திரத்தைக் கேட்டாலே மகாபுண்ணியம். அதனால்தான் இப்போது கலிகாலத்திலும் நம்மால் அசுவமேதயக்ஞம் பண்ண முடியாவிட்டாலும், அந்த மந்திரத்தை மட்டும் பாராயணம் பண்ணுவது தொடர்ந்து நடைபெறுகிறது.
சுவாமி தேசிகன், எல்லா மகான்களும் ஒருசேர ஏகாதசியன்று அசுவமேத மந்திரத்தைப் பாராயணம் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.
அஹோபில ஸ்ரீமத் அழகிய சிங்கர் அசுவமேத மந்திர பாராயணத்தை நடத்தி வைக்கிறார்.
இப்படியொரு மந்திரத்தை உள்ளடக்கிய யாகம் என்றால், அது எத்தனை சிரேயஸ் உண்டு பண்ணக்கூடியது!
இந்த அசுவமேத யாகம் என்பது ரொம்ப பெரிய கர்மா என்கிறது வேதம்.
ஓர் அரசன் (மகாபலி அல்ல.. வேறொருவன்..) சங்கல்பம் செய்து கொண்டு இதை நடத்திக் கொண்டிருக்கிறான். நடத்திவைக்கும் வேத வித்துக்கள் சர்வ சிரமங்களையும் அனுபவித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பூர்ணாஹூதிக்கு முன்னே அங்க ஹோமம் நடக்கிறது. 48 நாட்களாக சர்வ ஜாக்கிரதையாக ஹோமத்தை நடத்திய வேத விற்பன்னருக்கு அன்றைய தினம் தூக்கம் வந்து விட்டது! அவருடைய கை மட்டும் அனிச்சையாக திரவியங்களை எடுத்து, அனிச்சையாக அக்னியில் சேர்த்த வண்ணம் இருக்கிறது.
யாகம் நடத்தும் போது தூங்கக் கூடாது என்பது சாஸ்திரம். நடத்துபவரும் தூங்கக்கூடாது, அதைப் பார்ப்பவரும் தூங்ககூடாது. ஆனால், அப்போதுதான் கட்டாயமாகத் தூக்கம் வரும்! உணவு கொள்ளாமல் விரதமாக இருந்து யாகம் நடத்தும் போதே தூக்கம் வரும்! அதைக் கட்டுப்படுத்தித் தொடர வேண்டும்.
அரசன் பார்த்துக் கொண்டே இருக்கும்போது, யாகம் பண்ணுகிறவர் தூங்கினார்! அவரை எப்படி எழுப்பலாம் என்று பார்த்த மன்னன், செங்கோலால் அந்த வேத விற்பன்னரைத் தட்டுகிறான்..
அந்தத் தூக்கத்திலும் அவருக்கு ஸ்வப்னம் வந்திருக்கிறது! புலி துரத்துகிற மாதிரி ஸ்வப்னத்தில் வந்த மன்னன் செங்கோலைக் கொண்டு முதுகில் ஒரு குத்து குத்த, ஸ்வப்னத்தில் புலி அப்போது தான் அவர் மேல் பாய..
"ஹா! புலி!" என்று அலறியபடி பிரதான அக்னி குண்டத்திலே விழுந்து விட்டார். பஸ்மமாகப் போய் விட்டார்!
அசுவமேத யாகம் பண்ணினால் பிரும்மஹத்தி தோஷம் நீங்கும் என்கிறது வேதம். ஆனால், இந்த அரசனோ, அசுவமேத யாகம் பண்ணப் போய் பிரும்மஹத்தியை மூட்டை கட்டிக் கொண்டான்.
யாகத்திலே இப்படியெல்லாம் தவறுகள் நடந்தால் கர்த்தா நாசத்தை அடைவதுடன் பார்க்கிறவர்களும் கஷ்டத்தை அடைகிறார்கள்.
ஹோமத்திலே புகை இருக்கக்கூடாது. அக்னி ஜொலிக்காத போது மேலே ஹவிஸைப் போட்டுக் கொண்டேயிருக்கிறார் ஒருத்தர். இவ்வாறு போடுகிறவர் குருடராகிறார்! அதைப் பார்க்கிறவர்களுக்கும் பார்வை போகிறது!
ஹோம குண்டத்தில் நான்கு புறமும் தர்ப்பை போடுவது உண்டு. இப்படி நாலு பக்கமும் போடுகிற பரிஸ்தரணத்திலே முப்பது முக்கோடி தேவர்கள் உட்கார்கிறார்களாம். நமக்கும் இந்த தேவர்களுக்கும் இடையே பூதகணங்கள் உட்கார்ந்திருக்குமாம்.
அதனால்தான் பரிஸ்தரணத்துக்கு வெளியே எதுவாவது விழுந்து விட்டால் அதை அக்னியிலே சேர்க்கக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிச் சேர்த்தால் யாகம் கெட்டுப் போய்விடும். ஏனென்றால் இடம் தப்பி விழும் பொருள் பூதகணங்கள் உட்காரும் இடத்தில் விழுகிறது. அதைக்கூட பூதகணங்களுக்கேன்றே அப்படி விழும்படியாகப் பண்ணுவது அக்னி பகவான் தான்!
பூர்வ காலத்திலே மகரிஷிகள் ஹோம குண்டம் தயாரித்து, கையைக் காண்பித்தாலே அக்னி உண்டாகி விடும். இது மிகவும் உயர்ந்த நிலை; இரண்டாவது நிலை, அரணியைக் கடைந்து அக்னி உண்டாக்குவது; மூன்றாவது நிலை, ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி அடுப்பிலிருந்து தணல்கள் எடுத்து வந்தோ, கற்பூரத்தை ஏற்றியோ - அக்னி உண்டாக்குவது.
முறையாக பண்ணப்படும் யாகத்தில் மூன்று அக்னிகளுக்கிடையே பகவான் உபாசிக்கப்படுகிறான். அக்னிக்கு இடையிலே பரமாத்மா காட்சியளிக்கிறான்.
இப்படி முறையாகச் செய்யப்படும் அசுவமேத மகா யாகத்திலே உலக ஷேமத்தைப் பிரார்த்திக்கும் மந்திரம் இருக்கிறது. அதனால் தான் தெற்கே பித்ரு தேவதா காலங்களிலும், வடக்கே மாங்கல்ய தாரணத்தின் போதும் இதைச் சொல்கிறார்கள்.
தினமும் 1008 காயத்ரி சொல்வதால் இரண்டு புருவங்களுக்கும் மத்தியிலே தேஜஸ் உடையவர்களான வேத வித்துக்கள் இந்த அசுவமேத யாகத்தைச் செய்ய வேண்டும்.
சத்புத்ரன் பிறக்க வேண்டியும்,மழை வேண்டியும், தானியங்களின் விளைச்சல் வேண்டியும், இந்த யாகம் செய்யப்படுகிறது. உலகத்தில் உள்ள எல்லோருக்கும் யோக ஷேமம் வேண்டிச் செய்யப்படுகிறது.
யோகம் என்பது வேறு; ஷேமம் என்பது வேறு.
கிடைக்காதவை எல்லாம் கிடைப்பது யோகம்.
கிடைத்த செல்வங்கள் எல்லாம் தங்கி நிலைத்திருப்பது ஷேமம்.
உலகத்தில் அத்தனை பேருக்கும் யோகமும், ஷேமமும் உண்டாகட்டும் என்கிறது அந்த அசுவமேத யாகம். இப்படிப்பட்ட உசத்தியான யாகத்துக்குத்தான் அந்த விச்வம் போனது..!
(தொடரும்)
No comments:
Post a Comment