குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 46ரங்கநாதரைப் பார்த்து அப்படி என்ன கேட்டார் என்று நினைக்கிறீர்கள்...?
"என்னைப் பார்த்து இதைப் பண்ணினியா, அதைப் பண்ணினியா? என்று கேட்கிறாயே.. அன்றைய தினம் ததிபாண்டன் வீட்டுப் பானைக்கு எப்படி மோக்ஷம் கொடுத்தாய்? அந்தப் பானை என்ன கர்மயோகம் பண்ணியதா, ஞான, பக்தி யோகம் பண்ணியதா? அதற்கு உன்னை வந்திக்க மனமுண்டா, இல்லை வணங்கத்தான் கைகள் உண்டா..? அந்த கடத்துக்கு மோக்ஷம் கொடுத்தாயே, அந்த விலை நான் பெற மாட்டேனா"? என்று கேட்டார்.
அந்தக் கேள்வி தான் ரங்கநாதனை அப்படி அசத்தியது!
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் பக்தர்கள் பகவானை அப்படிப் போட்டு பிணைக்கிறார்கள்! ஒரு தர்ம சூஷ்மத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி ததிபாண்டன் கதை, திரௌபதியைக் காத்த கதை என்று வரிசையாக அவன் சரித்திரத்தை மொத்தமும் அவன் எதிரிலே சொல்ல வேண்டும்.
நம் உலகிலே யாரவது எகிறிக் குதித்தால், "எனக்கு நீ யாருன்னு தெரியாதா? உங்கப்பா யாரு, உங்க தாத்தா யாரு? எல்லாம் எனக்குத் தெரியுமாக்கும்!" என நாம் பேசுவதில்லையா? அப்படிப் பேசினால் எதிராளியும் நமக்கு பணிந்து வருகிறார் இல்லையா...
அதே போல்தான் பகவான் எதிரில் நாம் அவ்வளவு சரித்திரத்தையும் ஒப்பிக்க கற்றுக் கொள்ளனும். அவன் லீலா ரசத்தை யார் யார் விரும்பி சிரவணம் பண்ணுகிறார்களோ அவர்களுடைய பயத்தைப் போக்கடித்து விடுகிறான்.
சங்கம், சக்கரம் முதலான பல ஆயுதங்களை ஏந்தியிருக்கிறான் எம்பெருமான். இவற்றுள் சங்கத்தின் பெருமையைச் சொல்லி முடியாது. "சொல்லாழி வெண் சங்கே" என்று சங்கத்தை அழைத்துத்தான் ஆண்டாள் பகவான் பெருமைகளைப் பாடினாள்.
சங்கத்தை அதர பல்லவத்தில் பொருத்தி பம் பம்மென்று முழங்குகிறான். அதிலிருந்து எழும் த்வனி, பீஷ்ம துரோணாச்சார்யர்களுக்குப் பிரணவமாகக் கேட்கிறதாம்!
சக்கரமாகிய சுதர்ஸனத்தைப் பிரயோகம் செய்தால் அது என்ன சாதிக்குமோ அதையே இந்தச் சங்கம் ஒலியினாலே சாதிக்கிறது.
சக்கரத்தாழ்வாரும் உயர்ந்தவர்தான். விஷ்ணு மார்க்கத்தைக் காட்டக் கூடியதனாலே அவருக்குச் சுதர்ஸனாழ்வார் என்றே பெயர்.
சங்கம், சக்கரம் தவிர கத்தி, கதை என்று பல ஆயுதங்களும் தரித்துக் காட்சி அளிக்கிறான் பகவான். நரசிம்ம அவதாரத்தின் போதோ நகத்தையே ஆயுதமாகக் கொண்டு விட்டான்.
சங்கம், சக்கரம், வில், கட்கம் என எதுவானாலும் கையால் பற்றியிருக்க வேண்டும். நகம் இருக்கிறதே.. அதை மட்டும் கையிலே பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை. அவன் உதறினாலும் அது கீழே விழாது. கூடவே இருக்கும்!
நவீனத்திலே நமக்கு எப்படி வியாமோகம் அதிகமோ அதே போல் பகவானுக்கும் ஈடுபாடு அதிகமாய் இருக்கிறது! நாராயணன் சக்கரத்தையே நவீனமாய் மாற்றி விட்டான். கை நகம் அதைத் தாங்குகிறது.
இந்தப் பெருமை மிகு கோலத்தோடு தோன்றுகிற நரசிம்மன் விஸ்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிறான்.
திவ்யாலங்காரங்களோடு காட்சி அளிக்கிற பகவான் தேவகி நந்தனன், அவனேதான் சங்கு - சக்ராயுதங்களோடு திருமலையிலே வாசம் செய்கிறான்.
ரங்கநாதரைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வர்ணிக்கும் திருப்பாணாழ்வார்,
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான்.." என்கிறார்.
மந்திபாய் வட வேங்கடம் - குரங்குகள் பாய்ந்து குதித்துத் திரியும் கிரி பர்வதங்கள். அவற்றுள் ஒன்றிற்கு ரிக்ஷபாசலம் என்று பெயர். அந்த பெயர் வரக்காரணமே ஒரு பிரத்யேகமான வைபவம்.
ரிஷபாசுரன் என்பவன் ரொம்ப துஷ்டன். மூன்று நேத்திரங்களுடைய நரசிம்ம சாளக்கிராமத்தை ஆராதிக்கிறான் அவன். அவனுடைய நிஷ்டையைச் சொல்லி முடியாது! அவ்வளவு சிரமப்பட்டு எம்பெருமானை தியானம் பண்ணுகிறான்.
அவனெதிரே பகவான் பிரத்யக்ஷமாகிறான். "உனக்கென்ன வேண்டும்? என்று கேட்கிறான்.
"உன்னோடு சண்டை போடணும்" என்கிறான் அவன்.
"அப்படியா? போடேன்"
குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படுகிற மாதிரி பகவான் கையால் குட்டுப்பட ஆசைப்பட்டான்!
பகவானும் அவன் தட்டுவதை எல்லாம் தாங்கிக் கொண்டு கடைசியில் அவனை அடித்தான்.
பிராணம் போகிற சமயம் - அப்போது அவன் சொல்கிறான்:
"பிராணன் போகிற சமயத்தில் எந்த மூர்த்தியைப் பார்த்தால் மோக்ஷமோ அந்த நரசிம்ஹ மூர்த்தியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கட்டாயம் மோக்ஷம்தான் வரப் போகிறது. நான் உன்னிடம் சண்டை போடணும் என்று கோரிய வரம் தவறுதான். உணர்கிறேன். எனக்கொரு வரம் அருளவேண்டும். இந்த இடத்திலே உன்னுடன் போராடி உயர்ந்த கதியை அடைந்ததாலே என் பெயர் இந்த மலைக்கு இருக்கட்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
பகவானும் "ததாஸ்து"! என்று சொல்ல, அந்த மலைக்கு ரிஷபாத்ரி என்று பெயர் வந்தது.
ரிஷபாசுரன் நரசிம்ஹ உபாசனை பண்ணிய இடம் அது. அது மட்டுமல்ல.. அங்கே நின்று கொண்டிருக்கிறானே திருவேங்கடமுடையான் - அவனும் நரசிம்மோபாசனை பண்ணிய இடம் அது!
இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஒரு விஷயத்தை ரொம்ப சமத்காரமாய்ச் சொல்வார்.
"ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடக்கவிருந்த நேரத்தில் தடை ஏற்பட்டது. மனைவியோடு போய் ரங்கநாதனை சேவித்து விட்டு வந்தவன் அவன். ஆனாலும் தடை!
ஆனால், குதிரை மேல் ஏறி மலைகளிலும் வனங்களிலும் திரிந்து கொண்டிருந்தானே.. அவன் நரசிம்ஹனை ஆராதித்தான்! அப்படி ஆராதித்த ஸ்ரீநிவாச பெருமாள் நித்யஸ்ரீயோடு விளங்குகிறான். மார்பில் ஸ்ரீயைத் தாங்கி நிற்கிறான்.
அவனுடைய திருக்கல்யாணத்தில் கூட முதல் நிவேதனம் அந்த நரசிம்ஹனுக்குத்தான் நடக்கிறது. வெங்கடாசல மாகாத்மியத்தில் வரும் அந்தக் கதையைக் கேளுங்கள்.
ஏகமாக பதார்த்தங்கள். அக்னி பகவானே வந்து தளிகை பண்ணுகிறான்.
அக்னி பகவான் தளிகை செய்தால் எப்படி இருக்கும்..?!
அன்னத்திலே ஏதாவது லோபம் இருந்தால் அதை உஷ்ணப்படுத்தி லோபத்தைப் போக்கிடலாம். அக்னியோட மகிமை அது. கெட்ட அன்னம் கூட நல்லதாகப் போய்விடுகிறது.
அந்த அக்னியே வந்து சமையல் பண்ணினால் எப்படி இருக்கும்! தளிகை முடிந்தது. நிவேதனம் பண்ண வேண்டும் இல்லையா? "யாருக்கு நிவேதனம் பண்ண வேண்டும்" என்று நான்முகன் மணவறையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீநிவாசனை கேட்கிறார். ஸ்ரீனிவாசன் அதற்கு, "அஹோபிலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹனுக்கு யதாவிதியாய் நிவேதனம் பண்ணுங்கள்" என்றார்.
யதாவிதி என்றால் - முறை - கிரமம். நரசிம்ஹ ஆராதனம் என்பது ரொம்ப கடினம். அதனால்தான் அஹோபிலத்து லக்ஷ்மி நரசிம்ஹனே முதல் சந்நியாசியாக வந்து, உயர்ந்த திருநாராயணபுரத்திலே அவதரித்த கேசவாச்சார்யார் என்பவருக்கு திருத்தண்டமும் காஷாயமும் கொடுத்து உபதேசம் செய்வித்தான்.
சந்நியாஸிகளால்தான் அவ்வளவு நியமமாக ஆராதனம் பண்ண முடியும் என்று காட்டத்தான் அப்படி நடைபெற்றது.
அப்படியானால் கிரஹஸ்தாசிரமத்துக்காரர்களுக்கு அது எவ்வளவு சிரமம் என்று எண்ணிப் பாருங்கள்!
அஹோபிலத்திலே அந்த ஸ்ரீநிவாச பெருமாளே நரசிம்ஹனைக் கைகூப்பி சேவிக்கிற அழகை இன்றைக்கும் பார்க்கலாம்.
கல்யாண காலத்தில் சிறந்த மூர்த்தியாக தியானம் பண்ணக்கூடியவன் அந்த நரசிம்ஹன். ஒரு கோயிலில் ராமன், கண்ணன், நரசிம்ஹன் என்று வெவ்வேறு மூர்த்திகள் இருந்தால் முதல் நிவேதனம் நரசிம்ஹனுக்குத் தான் நடக்கும். அப்படியேதான் ஸ்ரீநிவாச கல்யாணத்தின் போதும் நடந்தது.
சஹஸ்ரநாமத்திலே "ஸ்ரீ ஸ்ரீ" என்று 14 முறை வரக்கூடிய ஒரு கட்டம் வருகிறது. அதைப் பூர்த்தியாக விவரித்தாலே வெங்கடாசல மகாத்மியம் விவரித்த மாதிரி ஸ்ரீநிவாச கல்யாணம் வரை முழுவதையும் அந்த சப்தத்தினாலே சம்பாதிக்க முடியும்!
எப்படி நடக்கிறது அவன் கல்யாணம்..?
இந்த ஸ்ரீநிவாச அவதாரத்திலே, பரமாத்மா அவனையே நினைத்து ஏங்கக்கூடிய பத்மாவதியின் கிரஹத்துக்குப் போகிறான். ஆகாச ராஜனின் புதல்வி பத்மாவதி.
அந்த ஆகாச ராஜன் கிரஹத்துக்கு பகவான் எந்த வே-ஷத்தில் போனான் தெரியுமோ..?
குறத்தி வே-ஷத்தில் போகிறான்! வே-ஷம் போடுவதிலே வல்லவன் அவன்! குறத்தியாய் வே-ஷம் போட்ட பரமாத்மா வந்த அழகே அழகு! வெறுமனே பார்க்கும் போதே அவன் சுந்தரன் தான்.. இப்படி வே-ஷத்தைப் போட்டுக் கொண்டு வந்தால் உலகமே மயங்கி நிற்கிறது!
ஆகாச ராஜனும் அவன் தர்ம பத்னியும் பார்த்து விட்டு உள்ளே அழைத்துக் கொண்டு போகிறார்கள்.
"நீ எந்த ஊர் குறத்தி"? என்று கேட்கிறாள் பத்மாவதி.
முத்துமலை, குடகு மலை என்று ஒரு மலை விடாமல் விவரிக்கிறான் பகவான்.
"யார் யாருக்கு குறி சொல்லியிருக்கிறாய்"?
"நான் சாமான்ய குறத்தி அல்ல. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் இசைந்த குறி சொன்னேன்". "இந்திரனும் இந்திராணியும் மெச்சிக் கொண்டார்கள் என்னை"
என்று பாடிக் காட்டி திருமூர்த்திக்கே குறி சொன்ன கதையை விவரிக்கிறான்.
"உங்கள் நாட்டிலே க்ஷேம லாபங்கள் எப்படி" என்கிறாள் பத்மாவதி.
நாட்டிலே நிலவும் சுபிட்சத்த்தை சொல்கிறாள் குறத்தி.
"யாருக்கும் பகைமை என்பதே கிடையாது. புலியும் பசுவும் ஒரே நீரோடையில் நீர் குடிக்கும். வாழை மரம் கிழக்குப் பக்கமாக குலை தள்ளும். பலா மேற்கு பக்கமாக உற்பவிக்கும்" - இதெல்லாம் லோகத்தின் க்ஷேமத்தைக் காட்டக் கூடிய அறிகுறிகள்"
இதையெல்லாம் கேட்ட பிறகு, பத்மாவதியை குறத்தியின் பக்கத்தில் உட்கார வைத்துக் கையைப் பார்க்க சொல்கிறார்கள்.
சொன்னால்... அப்போதைக்கப்போதே கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் பகவான் அந்தக் கையை!
பத்மாவதி தன் மனதுக்கு உகந்தவனைக் கைப்பிடிப்பாள் என்று சூசகமாகச் சொல்கிறான்.
அவன் அவ்வாறு பத்மாவதிக்குச் சொன்ன குறி சப்தத்தைக் கேட்கிற அத்தனை பேர் கிரஹத்திலும் கல்யாணத்துக்குத் தடையிருந்தால் நீங்கிப் போகுமாம்.
இவ்வளவு நாட்களாக எத்தனையோ வேத,வேதாந்த, சத் விஷயங்களைப் பற்றிப் பேசினோம். ஆனால், அத்தனையைக் காட்டிலும் பகவானுடைய குறத்துக்கு இருக்கிற பலனைப் பாருங்கள்!
எளிமையை மதிக்கவும் வந்திக்கவும் கற்றுத் தருகிறான் அவன்.
(தொடரும்)
No comments:
Post a Comment