குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 45
மணி சொன்ன மணியான வார்த்தை இதுதான் - நாம் எப்போதும் ஹ்ருதயத்திலே வைத்துக் கொள்ள வேண்டிய வார்த்தை:
"ஹே பிரபு! ஜகன்னதா! சர்வலோக சரண்யா! தங்களுக்கு நிவேதனம் ஆகிக் கொண்டிருக்கும் பொது நான் பக்கத்தில் இருந்து அடிக்காமல் போனால் எனக்கு ஏது பிரயோஜனம்?"
பகவான் வெண்ணையை வாயில் போட்டுக் கொண்டதைத்தான் நிவேதனம் என்றது அந்த மணி!
"நான் ஸ்வரூப லாபம் பெற வேண்டாமா? நீங்கள் உண்ணும் நேரம் தேவதைகள் வரவேண்டும்; ராக்ஷஸர்கள் ஓட வேண்டும். அந்த பிரணவம் த்வனிக்க வேண்டும். அதனால் தான் அடித்தேன்". மணி அடிப்பது கூட பெரியோரிடத்திலே பழகி அடிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஒவ்வொருவிதமாக அடிப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
தூரத்தில் இருப்பவர்கள் கூட, மணி அடிக்கும் விதத்தைக் கொண்டே பகவானுக்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
மணி சொன்ன பதிலுக்கு மறு பேச்சு இல்லை பரமாத்மாவிடம்! குடுகுடுவென்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். ஊர்க் கடைசியிலே ஒரு வீடு. அந்த வீட்டுக்குள் போய்ப் புகுந்தான்.
எதிர்பாராத சமயத்திலே வந்து நிற்பதுதான் பகவானுடைய குணவிசே-ஷம்! வருவான் என்று நினைக்கும் நேரத்தில் வரமாட்டான்; வர மாட்டான் என இருக்கும்போது வந்து சேருவான்.
அப்படி எதிர்பாராமல் பகவான் நுழைந்த வீடு ததிபாண்டன் என்கிறவனுடைய வீடு. அந்த வீட்டுக்குள்ளே நுழைந்து ஒவ்வொரு பானையாக திறந்து பார்க்கிறது குழந்தை. எல்லாப் பானைகளிலும் தயிர் நிரம்பிக் காணப்படுகிறது. கோபிகாஸ்த்ரீகள் குழந்தையைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். கடைசியிலே பார்த்தால், ஒரு பானை காலியாக இருக்கிறது!
இந்தக் குழந்தை, அந்த காலி பானைமேலே ஏறி, உள்ளே தொப்பென்று குதித்து உட்கார்ந்து கொண்டது.
இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ததிபாண்டன்...
"ஓஹோ! இன்னைக்கு இந்தக் கண்ணனை விடக் கூடாது" என்று மனத்தில் தீர்மானம் பண்ணிக் கொண்டான். பானை மேலே மூடி போட்ட மாதிரி ஏறி உட்கார்ந்து விட்டான்!
யசோதையும் கோபிகாஸ்த்ரீகளும் அருகே வந்தார்கள். யசோதை கேட்டாள்:
"ததிபாண்டா! என் குழந்தை கிருஷ்ணன் இங்கே வந்தானா..?
அப்பட்டமான பொய்யை அழகாக சொல்கிறான் ததிபாண்டன்.
"உன் குழந்தை கிருஷ்ணனா? இந்தப் பக்கமே வரவில்லையே..! அவனை நான் பார்த்தே 6 மாதமாகிறதே!"
பொய் சொன்ன ததிபாண்டனுக்கு மோக்ஷம் கிடைத்தது! உண்மையைப் பேசிய தசரதனுக்கு நரகப்பிராயமான சுவர்க்கம்தான் கிடைத்தது!
தசரதைனைக் காட்டிலும் ததிபாண்டன் உயர்ந்தவன் என்பதைக் காட்டுகிறார்கள் வியாக்யானக்காரர்கள்:
"விகர்மா" என்றால் பொய் சொல்வது. ஆனால் சில நேரத்திலே, பொய் சொல்வதே கர்மாவாக ஆகிவிடுகிறது! இந்திந்த இடத்திலே பொய் சொல்லலாம் என்று சாஸ்திரமே விதித்திருக்கிறது.
உதாரணமாய், விவாக காலத்திலேயே பொய் சொல்லலாம் என்று இருக்கிறது. விவாக காலம் என்றால் நிச்சயத்தார்த்தத்திலேயிருந்தே பொய் சொல்லலாம் என்று அனுமதி கிடையாது! அந்தக் கல்யாணம் நடக்கவிருக்கிற கட்டத்திலே அது நின்று போய் விடுமோ என்கிற அபாயம் இருந்தால் சொல்லலாம்.
ஒருத்தன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு பசுவை வெட்டித்தள்ள ஓடுகிறான். அந்தப் பசு அம்மா என்றபடி ஆசிரமத்திலே நுழைந்து விட்டது. அங்கேயிருந்த முனிவரைப் பார்த்து, கத்தி ஏந்தியவன் கேட்கிறான்:
"பசு வந்ததா இந்தப் பக்கம்?"
"கண் பார்க்கும், ஆனால் பேசாது; வாய் பேசும், ஆனால் பார்க்காது" என்று பதில் சொல்கிறார்.
கொலை செய்ய வந்தவன், ஏதோ உளறுகிறது என்று புறப்பட்டுப் போய்விட்டான்.
இப்படி சாமர்த்தியமாய் பேசுவது ஒருவகை என்றால், ததிபாண்டனோ பொய்யே பேசினான். அவனுக்கு எப்படி மோக்ஷம் கிடைத்தது..?
சாமான்ய தர்மம், விசே-ஷ தர்மம் என்று இரண்டு வகை சொல்வார்கள். விசே-ஷ தர்மம் பண்ண வேண்டிய காலம் பக்கத்திலே வந்து விட்டால் சாமான்ய தர்மத்தை விட்டுவிட்டு அந்த விசே-ஷ தர்மத்தைத்தான் நாம் கடைப் பிடிக்க வேண்டும்.
வீதி புறப்பாடு நடக்கிறது. பகவான் 4 மணிக்குப் புறப்படுகிறான். வேத கோஷ்டி, எழுந்தருளப் பண்ணக்கூடியவர்கள், பரிசாரகர்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் அவனை எழுந்தருளப் பண்ணி வந்து கொண்டிருக்கிறார்கள்.
கோயிலுக்குப் போய்ச் சேர எட்டரை மணி ஆகும். ஒரு வீதியிலே பகவான் வந்து கொண்டிருக்கும்போது ஆறேகால் மணி ஆயிற்று..
என்ன சமயம் அது? சந்தியாவந்தனத்துக்கான சமயமல்லவா? உடனே, சுவாமியை, "இங்கேயே நின்னுகொண்டிரு.. நாங்கள் வந்து திரும்பவும் எழுந்தருளப் பண்ணுகிறோம்" என்று சொல்லலாமா? நடுத்தெருவிலே அவனை நிறுத்தி வைத்து விட்டு வரலாமா?
இதற்கு ஒரு வழியிருக்கிறது. பகவானைக் கொண்டு போய் கோவிலில் எழுந்தருளப் பண்ணியபிறகு, காலாதீத பிராயச்சித்தார்த்தமாக, இன்னொரு அர்க்கியத்தைக் கூடுதலாக விட்டு சந்தியாவந்தனத்தை முடிக்கலாம்.
இப்படியொரு விதிவிலக்கு இருக்கிறதனாலே நித்யம் இதையே பண்ணக்கூடாது! என்றைக்கு முடியாமல் போகிறதோ அன்றைக்கு மட்டும் பண்ணலாம்.
பகவானை எழுந்தருளப் பண்ணுகிற விசே-ஷ தர்மத்திலே நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, சந்தியாவந்தனம் என்பது சாமானிய தர்மமாகப் போய்விடுகிறது.
அந்த மாதிரிதான் விசே-ஷ தர்மத்தை பானைக்குள் இருக்கும் பகவானைக் காத்தலாகிய தர்மத்தைக் காப்பதற்காக, ததிபாண்டன் உண்மை பேசுதல் என்கிற சாமானிய தர்மத்தை கை விட்டான். "கிருஷ்ணனைப் பார்க்கவேயில்லையே" என்றான். அவனுக்கு மோக்ஷம் கிடைத்தது.
தசரதன் இருக்கிறானே.. அவன் என்ன செய்தான்..? விசே-ஷ தர்மமாகிய ராமனைக் காட்டுக்கு அனுப்பி, "கைகேயிக்குக் கொடுத்த வாக்கு" என்கிற சாமான்ய தர்மத்தைக் காத்தான். அவனுக்கு வெறும் சொர்க்கம்தான் கிடைத்தது. ததிபாண்டனுக்கோ மோக்ஷமே கிடைத்தது!
ததிபாண்டன் சொன்ன பொய்யைக் கேட்டு எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர்கள் போன பிற்பாடு, பானைக்குள் இருக்கும் குழந்தை ததிபாண்டனை ஒரு குத்து குத்துகிறது. "எத்தனை நாழி இப்படி உட்கார்ந்திருப்பாய்? எனக்கு மூச்சு வாங்குகிறது" என்கிறது குழந்தை.
அதற்கு அவன் சொல்கிறான்: "ஹே கிருஷ்ணா! உனக்கு இந்தப் பானையிலேயிருந்து மோக்ஷம் வேண்டுமானால் எனக்கு நீ மோக்ஷம் தர வேண்டும்".
"உனக்கு மோக்ஷமா"?
"ஆமாம். இந்தப் பிறவியாகிற பானையில் இருந்து எனக்கு மோக்ஷம் வேண்டும்"
இதைக் கேட்டு குழந்தை சொல்கிறது:
"உனக்கு மட்டும் என்னடா மோக்ஷம்? அந்தப் பானைக்கும் சேர்த்துக் கொடுப்பேனாக்கும் மோக்ஷம்!"
"பானைக்கும் சேர்த்துக் கொடுப்பாயா.."?
"ஆமாம்" என்று எழுந்தான் பகவான்.
சொன்னவுடனே, சொன்ன வண்ணம் செய்யும் பெருமான் அவன். புஷ்பக விமானம் வருகிறது. ததிபாண்டனோடு கூட அந்தப் பானையும் ஏறிக்கொண்டது விமானத்திலே! வைகுண்டத்துக்குப் போனது.
இப்போதும் நாம் வைகுண்டத்த்துக்குப் போனால் அந்தப் பானையைப் பார்க்கலாம்!
ஸ்ரீரங்கத்திலே பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்கு இந்தப் பானை மோக்ஷமடைந்த சரித்திரம் நடையாடுகிறது.
அர்ச்சனைத் தட்டை கீழே வைத்து விட்டு, "ரங்கநாதா! எனக்கு மோக்ஷம் கொடேன்" என்று கேட்கிறார்!
அந்த ரங்கநாதனும் அவரோடு பேசுகிறான். "பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே.. உனக்கு என்ன இன்றைய தினம் மோக்ஷத்திலே அதிக ருசி.."?
"இன்றைக்கே போக வேண்டும் போலிருக்கிறதே சுவாமி" என்கிறார் அவர்.
"அப்படியானால், நீர் என்ன கர்மயோகம் பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாது"
"ஞானயோகம் பண்ணியிருக்கிறீரோ"?
"அறவே ஞான சூன்யம் நான்"
"பக்தி யோகம் பண்ணியிருக்கிறீரா"?
"அந்தப் பக்கமே போனதில்லை"
"சரணாகதி பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாதே"
"இதெல்லாம் எப்படியாவது போகட்டும். என் பக்தனுக்கு ஒரு நாளாவது அன்னமிட்டிருக்கிறீரா"?
"இல்லையே"
"என் பக்தன் தங்க இடம் கொடுத்திருக்கிறீரா"?
"இல்லை"
"எதற்கெடுத்தாலும் இல்லையே, இல்லையே என்கிறீரே"? என்று ரங்கநாதனுக்கு கோபம் வந்ததாம். படுத்துக் கொண்டிருந்த பெருமாள் எழுந்து உட்கார்ந்தார்.
அப்படி ரங்கநாதர் உட்கார்ந்த கோலத்தில் சேவித்தவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும்தான். நாமெல்லாம் சயனத் திருக்கோலம்தானே பார்த்திருக்கிறோம்!
"என்ன அக்கிரமம்! மோக்ஷத்தை நீர் இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே! மோக்ஷம் என்றால் ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்தீரோ? எதையாவது கேட்டால் "இல்லையே, தெரியாது" என்கிறீர். எதற்காவது "ஆமாம், பண்ணியுள்ளேன்" என்று பதில் சொன்னால்தானே மோக்ஷம் தரலாம். ஒன்றுமே பண்ணாத உமக்கு மோக்ஷத்தை எப்படிக் கொடுப்பது?"
இதைக் கேட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்குக் கோபம் வந்து விட்டது! இடுப்பில் வஸ்திரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டார். ரங்கநாதரிடம் அச்சமயம் அவர் கேட்ட கேள்வி இருக்கிறதே..?
அந்தக் கேள்வியைக் கேட்டு மீண்டும் படுத்த ரங்கநாதன் படுத்தவன்தான்! இன்று வரைக்கும் அவன் எழுந்திருக்கவேயில்லை!
அப்படியென்ன கேட்டாரம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..?
ஒரு அத்தியாயம் பொறுங்கள், சொல்கிறேன்.
(தொடரும்)
No comments:
Post a Comment