Friday, October 18, 2013

PART -1, Chapter - 25

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 25

பிள்ளை ரொம்ப துஷ்டன், சதா அப்பா அம்மாவோடு சண்டை போடுகிறவன்.  அப்படிப்பட்ட பிள்ளையை அடி அடின்னு அடிச்சுட்டார் அப்பா! பையன் கோபத்தில் வீட்டை விட்டே போய்விட்டான்.  " அவன் எங்கே போய் அலைகிறானோ?  சாப்பாட்டுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறானோ...? என்று தாயார் கதறுகிறார்.
பசியெடுத்தா, தானா வீடு வந்து சேர்வான்.  ஏன் கவலைப்படறே"  என்று அப்பா சுலபமாகச் சொல்லி விடுகிறார்.
இந்த நேரத்திலே அந்த வீட்டுக்கு வந்தவர் ஒருத்தர், "உங்க பிள்ளையை அந்தச் சத்திரத்து வாசல்லே பார்த்தேன்" என்கிறார்.
உடனே அங்கே போய், குழந்தைக்குப் பசியாற்ற வேண்டும் என்று அம்மா நினைக்கிறாள்.  நேரடியாகப் போய்  உணவைக் கொடுத்தால், அவன் வாங்கிச் சாப்பிட மாட்டான் என்று தெரியும் அவளுக்கு. சத்திரத்து வாசலிலே இட்லி, தோசை போன்றவற்றை விற்கும் ஒரு கடையைப் போட்டாள்.  துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கே அடுப்படியில் உட்கார்ந்தபடி பலகார வியாபாரம் பண்ணினாள்.
மகன் வந்து சத்திரத்து வாசலிலே உட்கார்ந்தான்.  "அப்பா, உன்னைப் பார்த்தால் பசியாகத் தெரியறதே... ஏதாவது வாங்கிச் சாப்பிடேன்" என்றாள் அம்மா.   "என்கிட்டே பணமில்லையே" என்றான் மகன்.  "நிதானமாகக் கொடுக்கலாம்.  கையிலே பணம் கிடைக்கறச்சே கொடுத்தால் போதும்..."  மகன் பசியாறினான்!
மறைந்திருந்து அந்தத் தாயார் மகனுக்கு  ஊட்டினதுபோல, மகாலஷ்மி தாயார் நமக்கு மறைந்திருந்து கொடுக்கிறாள்.  பகவான் சொல்வதை நாம் கேட்காமல் போகும்போது அவன் நமக்கு தண்டம் கொடுக்கிறான்.  தாயார் பரிவு காட்டுகிறாள்.  பிறகு பகவானே நம்மை உய்விக்கறதுக்காக வேறு யார் மூலமாவது அனுக்கிரஹம் பண்ணி விடுகிறான்!  வேதம் சொல்கிறது - பகவான் நேரடியாக உதவாமல் வேறு ஒருத்தர் மூலமாகத்தான் செய்வார் என்று...

மகாபலியின் அட்டகாசம் தாங்காமல் தேவர்கள் துன்பப்பட்டபோது, அதிதி அவனிடம் போய்  வேண்டினாள்.  பகவான் நினைத்திருந்தால் தானே நேரடியாக தேவர்களுக்கு உதவி இருக்கலாம்.  ஆனால், அவன் என்ன பண்ணினான்...? ஓர் உயர்ந்த விரதத்தைச் சொல்லி, அதைப் பண்ணினால் கஷ்டம் நிவர்த்தியாகும் என்றான்!
அந்த விரதத்தைச் செய்து பூஜை பண்ணினாள் அதிதி... அந்த விரதத்திலும், எல்லா யக்ஜங்களிலும் ஆராதிக்கப்படுகிறவன் அந்த நாராயணன் தானே!
பித்ரு தேவதைகளுக்கு நாம் ஆராதனை செய்தால் கூட அது அந்த நாரயனனுக்குத்தான் போய்ச் சேருகிறது.
சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கும் ராஜாவுக்கு சேவகன் சந்தனம் பூசுகிறான்;  பன்னீர் தெளிக்கிறான்.  அந்த ராஜா உடலை மறைத்து அங்கி அணிந்து கொண்டிருக்கிறார்.  அதற்கு மேலே பட்டு-பீதாம்பரம்.  அதற்கும் மேலே இன்னொரு அங்கி!  சேவகன் தடவுகிற சந்தனத்தை அந்த ஆடை, ஆபரணமா ஏற்கிறது?  உள்ளே இருக்கிற ஆத்மா தானே ஏற்கிறது!
அதுபோலத்தான், அதிதி செய்த விரதத்தின் பலன் பகவானையே போய்  அடைந்தது.  அவனே அதிதியின் மகனாய் அவதாரம் பண்ணினான்.
கல்யாண காலத்திலே ஒரு மந்திரம் சொல்வதுண்டு.  கோடி உடுத்தும்போது சொல்வது... இவரே எல்லா ஜன்மாவிலும் எனக்கு பர்த்தாவாக இருக்க வேண்டும் என்று வேண்டும் மந்திரம்.
அன்னியோன்ய தம்பதிகள்-சிந்தையிலும் செயலிலும் ஒன்றுபடுபவர்களின் வீட்டிலே, மஹாலக்ஷ்மி வாசம் செய்வாளாம்.

அன்னியோன்ய தம்பதி என்றால்...? சீதையையும் ராமரையும்தான் முதல் உதாரணமாகச் சொல்லுவார்கள்.
கோதாவரி தீரத்திலே ராமனும் சீதையும்  இருக்கும் நேரம்.  இருவரும் மௌனமாய் இருக்கிறார்கள்.  திடீரென்று ராமன் சிரித்தான்.  அவன் ஏன் சிரித்தான் என்று சீதபிராட்டிக்குச் சந்தேகம் வந்தது.  ஆனால் கேட்கத் தயக்கம்.  மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.  சற்று தூரம் நடந்து போனதும் சீதை சிரித்தாள்.  அதைப் பார்த்துவிட்டு ராமன் கேட்டான்.  "சீதா! எதற்குச் சிரிக்கிறாய் நீ"?   அவர் இப்படிக்  கேட்டதும் சீதைக்குத் தைரியம் வந்ததாம்.
"நீங்கள் எதற்குச் சிரித்தீர்கள்?  அதை முதலில் சொல்லுங்கள்" என்றாள்.
"நீதான் முதலில் சொல்ல வேண்டும்".  "அதோ அப்படிப்  பாருங்கள்".  சீதை சுட்டிய திசையில் ஒரு யானைக் கூட்டம்.  அந்த யானைகள்  எல்லாம் ராமனின் கம்பீரமான நடையைப் பார்த்து விட்டு, தங்களின் நடையை எண்ணி வெட்கம் கொண்டனவாம்.  "அதைக் கண்டுதான் சிரித்தேன்" என்றாள் சீதை.
உடனே ராமன் சொன்னான், "நானும் அதே காரணத்துக்காகத்தான் சிரித்தேன்.  சற்றுமுன் நாம் நடந்து வந்த பாதையில் அன்னப் பறவைகளின் கூட்டம் ஒன்று வெட்கித் தலைகுனிவதைக் கண்டேன்.  தாங்கள் நடை அழகிலே உன்னிடம் தோற்றுவிட்டதை எண்ணித்தான் அந்த அன்னப் பறவைகள் வெட்கமுற்றன என்பது தெரிந்தது.  அதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது".
அவனும் சிரித்தான்.  அவளும் சிரித்தாள்!  இருவருக்குமே மற்றவர் சிரித்ததற்கான காரணம் தெரியாது!  ஆனால் இருவருமே நடையைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.  இவர்கள் கருத்தொருமித்த தம்பதி என்றாகிறதல்லவா!
இப்படிக் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்தும் தம்பதிக்கு பகவான் அருள் செய்கிறான்.

யோக சித்தியை அடையும்படியான நிலையை ஒரு தம்பதி விரும்பினர்.  அதற்காக பகவானை நோக்கி இணையாக தபஸ் பண்ணினார்கள்.  பகவானும் அவர்கள் தவத்துக்கு இறங்கி காட்சி கொடுத்தான்.  ஆனால், பகவானுடைய பேரழகைப் பார்த்ததும் அந்த தம்பதியின் மனம் மாறிவிட்டது!  யோக சித்தியைக் கேட்பதற்குப் பதிலாக, "நீயே எங்களுக்குக் குழுந்தையாகப்  பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்டுவிட்டார்கள்.  பகவானும் அவர்களுக்கு அனுக்கிரஹம் பண்ணினான்.  அவர்களுக்குக் குழந்தையாய் அவதரித்தான்.  "பிரச்னிகர்பன்" என்று அவனுக்குப் பெயர் அந்த அவதாரத்திலே!
இப்படி வேண்டித் தவமிருந்து பெற்ற பிள்ளையாகத் தான் அதிதியின் கர்ப்பத்தில் வாமனனாக அவதிரித்தார் பகவான்.  அந்த அதிதியையேதான் பின்னால் தேவகியைப் பிறக்கச் செய்து, அவள் கர்ப்பத்திலே கிருஷ்ணனாக அவதரித்தார்.   (ஆகையினாலே,கிருஷ்ண அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வாமன அவதாரம்.)

ழ்வார்கள் வாக்கிலே வாமன அவதாரம் குறித்தும், கிருஷ்ண அவதாரம் குறித்தும் தான் நிறைய பாசுரங்கள் அமைந்துள்ளன.
வாமன அவதாரத்திலே பகவானுக்கு உபநயனம் நடக்கிறது!  சூரியனே வந்து குழந்தை வாமனனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசம் பண்ணுகிறார்!
இதைக் கேட்கவே எவ்வளவு அழகாய் இருக்கிறது.  அது சரி... பகவான் இங்கே பூமியில் வந்து இப்படி உபநயனம் பண்ணிக் கொண்டான் என்றால் அதற்கு என்ன காரணம்...?  அந்த சம்ஸ்காரம் தொடர்ந்து இங்கே நடக்கணும் என்பதற்காக!  
அந்த வாமன அவதாரத்தை நினைத்து வேண்டிக் கொண்டாலே குழந்தைகளுக்கு சீக்கிரமாய் உபநயனம் ஆகிவிடுமாம்.

நாற்பது சம்ஸ்காரத்திலே மிக உயர்ந்த சம்ஸ்காரம் உபநயனம்தான்.  அந்த உபநயன மந்திரத்திலே என்ன போதிக்கப்படுகிறது?  "கர்மாவைப் பண்ணு", "பண்ணுகிறேன்" என்று பதில் சொல்ல வேண்டும் உபநயனம் செய்து கொள்ளும் சிறுவன்.  "ஆசார்யரிடம் அபிமானமாக இருக்கணும்".  "இருக்கிறேன்"... "ஆசார்யருக்குக் குடை பிடிக்கணும்", "பிடிக்கிறேன்.."  "ஆசார்யர் உயர்ந்த ஸ்தானத்திலே உட்கார்ந்தால் நீ கீழே உட்காரணும்... அவர் உட்காரு என்று சொன்னால் தான் உட்காரணும்", "செய்கிறேன்".  "ஆசார்யருக்கு ஆசார்யர் பக்கத்திலே இருந்தால் அவருக்கு முதல் வந்தனம் பண்ணனும்", பண்ணுகிறேன்".
இவ்வாறு வாழ்க்கை முறையை உபதேசிப்பதுதான் உபநயனம்.  அந்த சமயத்தில் அணிவிக்கப்படும் பூணூலும் பவித்ரமானது. 

பூர்வ காலத்திலே ஒரு மகான் பூணுல் திரிப்பதையே தொழிலாகச் செய்து வந்தார்.  அதைத்  தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.  மந்திரம் சொல்லித்  திரித்து, அதை பகவான் திருவடியிலே வைத்து எடுக்க வேண்டும்.  அப்புறம் ஓலைப் பெட்டியிலே பரம பவித்ரமாக அதை வைக்க வேண்டும்.  வெகு சிரத்தையாய் இதைப் பண்ணி வந்தார் அந்த மகான்.  யாராவது வந்து கேட்டால் அந்த யக்ஜோபவீதத்தை எடுத்துக் கொடுத்து அனுக்கிரஹம் பண்ணுவார்.
ஒரு நாள் அந்த மகானின் பத்னி அவரை வந்து சேவித்தாள்.  "நீங்கள் எப்போது பார்த்தாலும் இப்படிப் பூணூலைத் திரித்துக் கொண்டிருக்கிறீர்களே!  நம் குழந்தைக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா" என்று நினைவு ஊட்டினாள்.
"பக்கத்து தேசத்திலே ஒரு ராஜா, விஷேசமாய் எழுந்தருளியிருக்கிறார்.  அவரைப் போய் உதவி கேட்டால்  வாரிக் கொடுப்பார்.  ஒரு தடவை போய்ப் பார்க்கக் கூடாதா? என்று யோசனையையும் சொன்னாள்.
மனைவியிடம் அவர் உறுதியாக ஒன்றும் பதில் சொல்லவில்லை.  போய்த்தான் பார்ப்போமே என்று அரசனிடம் போனார்.  அவரிடமிருந்து பிரும்ம தேஜஸ் சொட்டுவதைப் பார்த்ததும் அந்த ராஜாவே எழுந்து நின்று விட்டார்.  முதலில் அவரை உட்கார வைத்தார்.
துரியோதனன்  சபையிலே, பகவான் கிருஷ்ணன் நுழையும்போது யாரும் நின்று மரியாதை செய்யக் கூடாது என்று சகுனி உத்தரவு போட்டிருந்தானாம்.  ஆனால் பகவான் நுழைந்ததும் துரியோதனன் தன்னை அறியாமலேயே தானே எழுந்து நின்றானாம்!  அவன் பின்னோடேயே துச்சாதனனும், கர்ணனும் அந்தச் சகுனியும் கூட எழுந்து நின்றார்களாம்! அப்படிப்பட்ட தேஜஸ் பகவானுடையது.
அந்த மாதிரி, ராஜாவும் அந்த மகானின் தேஜசுக்குக் கட்டுப்பட்டு எழுந்தார்.  அவரை அமர்த்தி, "சுவாமி, உங்களுக்கு என்ன வேண்டும்?  இவ்வளவு பிரும்ம தேஜஸோடு இருக்கிறீர்களே!  உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்..." என்றார்.
கேட்டு அறியாதவர் அந்த ஏழை.  எப்படிக் கேட்க வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை.  யோசித்து விட்டுச் சொன்னார் - "நான் ஒரு யஜோபவீதம் (பூணூல்) கொண்டு வந்திருக்கிறேன்.  அதன் எடைக்கு நிகராகத் தங்கம் கொடுத்தால் போதும்.. அதைக் கொண்டு என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவேன்.."
"அது போதுமா?  அதற்கு மேலே வேண்டாமா"?
"போதும்"

தராசைக் கொண்டு வரச் சொன்னான் ராஜா.

(தொடரும்)






No comments:

Post a Comment