Tuesday, March 12, 2013

PART-1, Chapter-16

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 16

பொறுமையே உருவானவர் பூமிபிராட்டி.  நாம் எவ்வளவுதான் தப்பு பண்ணினாலும் அதை பகவானிடத்திலே சொல்ல மாட்டாளாம்!  நாம் ஒரு துளி நல்லது செய்தால் கூட அதைப் பெரிசுபடுத்தி அவனிடத்திலே சொல்வாளாம்!  அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு.
எம்பெருமான் அந்த பூமாதாவைத் திரும்பி பார்த்தான்.  "இந்த மகாலட்சுமி சொன்னதை எல்லாம் நீயும் கேட்டாய். இப்போது நீ போய் கீதைசாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்திலே உள்ளவர்களைத் திருத்துவாயா?" என்று கேட்டான்.
"அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் சுவாமி" என்றாளாம் பூமாதா!
மகாலட்சுமி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாத உடனே ஏற்றுக்கொண்டு விட்டாள் .
"நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கேன்" என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்!.
எப்போது போட்ட முடிச்சு அது?  வராஹ அவதாரத்திலே வராஹத்தின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, பகவான் சொன்ன மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்...

  • அவன் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்.
  • அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும்.
என்ற மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.
"இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக்கிறேன்" என்றால் பூமாதேவி.
எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்? என்றான் பகவான்.
"உங்களுடைய அனுக்கிரஹம் உதவும்" என்று புறப்பட்டு விட்டாள் தேவி.   விஷ்ணுசித்தரின் மகளாய் வந்து அவதரித்தாள்.  நம் திராவிட தேசத்துக்கே அந்த அவதாரம் பெருமை சேர்த்தது.
கல்பத்தின் ஆதியிலே கேட்ட வராஹ மூர்த்தியினுடைய வாக்கைத் தானே எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக துளசி கானகத்திலே அவதரித்தாள் பூதேவி.   பிறக்கும்போதே மேன்மையுடையவளாய், சுவாசனையுடன் ஆவிர்பவித்தாள்.  இரு மாலை கட்டினாள் - ஒரு மாலை பாமாலை; ஒரு மாலை பூமாலை. ஒன்றை பாடிச் சமர்பித்தாள்,  மற்றதைச் சூடிச் சமர்ப்பித்தாள்.  சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.
திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.  

அவற்றில் முதல் பத்து, "அவன் திருநாமத்தைச் சொல்லு" என்று உணர்த்துகின்றன. இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு" என்கிற பாசுரங்கள்.  
மூன்றாவது பத்தோ "அவன் திருவடியிலே ஆத்ம  சமர்ப்பணம் பண்ணு" என்று சொல்கின்றன.  ஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களாய்ப் பாடி, ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.
திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல.  அது ஒரு யாகம்.  ஆண்டாள் பண்ணிய வேள்வி அது.  வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.
வேள்வி செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திர சாதனம் உண்டு.  அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம்.  ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.
வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா?  ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
"ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.
"அம்பர  மூடறுத்து ஓங்கி உலகளந்த" என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பாடுகிறாள்.
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று மறுபடியும், இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள்.
ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.
ஆண்டாள் அழைத்தாள் என்று வந்து குதித்த பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலே மடிந்த திருவடியோடு காட்சி தருகிறான்!
பெரியாழ்வாரோ கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டு அழுகிறார்!  "ஒரு பெண்ணைப் பெற்றேன், அவளைச் செங்கண்மால் கொண்டு போனான், நான் என்ன பண்ணுவேன்" என்று அவருக்கு வேதனை.
ஆனால் ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாள்.  அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டல் இருக்கிறது.
வராஹமூர்த்தி சொன்னதை அனுசரித்து அவள் அவனை அடைந்ததுபோல நாமும் அவனை அடையலாம்.
"அவன் நமக்குப் பதி...நாம் அவனுக்கு பத்னி" என்ற பாவத்துடன் உத்தமமான சரணாகதி மார்க்கத்தை கடைப் பிடித்தோமானால், நாமும் அவனை அடையலாம்.
சரணாகதி மார்க்கத்துக்கு மூலமானவன் மகா வராஹ மூர்த்தி, மாஹ வராஹ: விச்வாத்மா!
இந்த வராஹ அவதாரத்திலே பகவானுடைய பூரணத்துவம் பேசப்படுகிறது;  சரணாகதி மார்க்கமும் பக்தி மார்க்கமும் உணர்த்தப்படுகின்றன.  அவற்றுக்கெல்லாம் மேலாக மிக உயர்ந்ததான யக்ஞ ப்  பிரகடனங்களை எல்லாம் இந்த அவதாரத்திலே காட்டி நின்றான் பகவான்.  அதனால் தான் இந்த அவதாரத்தை "விச்வாத்மா" என்றழைத்தது.
எத்தனை யக்ஞங்கள் உண்டோ அத்தனையையும் தன திருமேனியில் காட்டினான் வராஹ அவதாரத்தின்போது. நான்கு வேதங்களும் நான்கு கால்களாக அவன் நின்றான்.  எனவே வேதத்தின் பெருமையை இந்த அவதாரத்திலே காட்டியது போல வேறு எந்த அவதாரத்திலேயும் காட்டவில்லை.

அழியாத பிரமாணம் கொண்டது வேதம்.  "ஓலைபடா கிளவி" என்று சொல்லப்படுவது, ஓலையிலே எழுதிவைத்துப் பாதுகாக்க முடியாதது.  உச்சரித்துத்தான் சொல்லித் தர வேண்டும்; கற்றுக் கொள்ள வேண்டும்.
ராஜமுந்திரியிலே ஜகன்நாத கனபாடிகள் என்பவர் ஒரு மாணவனுக்கு வேதம் சொல்லித் தர வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்டத்திலே "த்ஸு" என்கிற ஒழி நிறைய வர, அதை அவனால் திருப்பி சொல்ல முடியவில்லை  மாணவனை வீட்டுக்கு அனுப்பி விட்டார் ஒருநாள் வீதியிலே மாணவன் சைக்கிளைத் தள்ளியபடி வந்தான்.  பார்த்தார் கனபாடிகள்.
"சைக்கிள் டயரிலிருந்து காற்றைப்  பிடுங்கு" என்றார்.
"எதுக்கு" என்று விழித்தான்.
"நீ எடுத்துவிடேன் சொல்றேன்" என்றார்.
அப்படியே அவன் காற்றைப் பிடுங்கவும் "த்ஸு" "த்ஸு" என்ற ஒலியோடு அது வெளியேறியது.
"இப்படித்தான் உச்சரிக்கணும்" என்று அந்த ஒலியையே உதாரணமாகச் சொன்னார் கனபாடிகள்.
"குருவே" என்று விழுந்து சேவித்தான் மாணவன்.
"எதற்கு என்னைச் சேவிக்கிறாய்?  சைக்கிளைத்தான் நீ விழுந்து சேவிக்கணும்" என்றாராம் குரு.
வேத உச்சாரணம் எத்தனை கஷ்டமானது என்று உணர்த்த இந்தக் கதை.
வேதங்களிலே நான்கு வகை உண்டு என்பது தெரிந்திருக்கும்.  அதே போல் வேதத்துக்கான குணங்களும் நான்கு.
நித்யத்வம்.  எப்பொழுதும் இருக்கக்கூடியது, அழிவே இல்லாதது.  இயற்கையாகவே நித்யமானதாய், காலவெள்ளோட்டத்தினாலே பாதிப்பு இல்லாமல் நித்தியமாய் இருக்கும் குணம்.
அதற்குத்தான் எழுத்து வடிவு இல்லையே?  கம்பன், காளிதாசன் காவியம் போல் நூல் வடிவாய் இல்லையே என்றால்....பகவானின் மூச்சக் காற்றாய் இருப்பதே அதற்கு நித்தியத்துவம் தருகிறது.  அதற்கும் மேலே என்ன நித்யத்வம் வேண்டும்.
சப்த ப்ரம்மமாய்ப் பரமாத்மாவை - வேதத்தைப் பார்த்தார்கள் ரிஷிகள்.

இரண்டாவது குணம் அபௌருஷேயத்வம்.  வித்யாரண்யா சுவாமி எழுதுகிறார், வேதம் என்றால் என்ன?அத்துடன் சம்பந்தப்பட்டவர் யார்? அதன் பயன் என்ன? என்று கேட்கிறார்.

இஷ்ட பிராப்தி; அநிஷ்ட நிவிருத்தி என்பார்கள்.  நம் உடல் ஆரோக்கியமாய் இருப்பதே இஷ்டம்.  பிராப்தி என்பது அப்படி அது அமையப் பெற்ற வரம்.  அநிஷ்டம் என்றால் உடலுக்குள் இருக்கும் வியாதி.
வைத்தியர் மருந்து கொடுத்தால் வியாதி போய்விடுகிறது.  அப்புறம் தளர்ச்சி வருகிறது. தளர்ச்சியைப் போக்க வேறு மருந்து தருகிறார். இப்படி சரீரத்துக்கு மருத்துவ சிகிச்சை பண்ணுகிறோம்.  எப்படி மருந்து உற்பத்தி நாள் முடிவு நாளோடு காட்சி அளிக்கிறதோ, அப்படி சரீரத்துக்குக் கூட இரண்டும் எழுதியிருக்கிறது.  ஆனால், முடிவு நாள் கண்ணுக்குத் தெரியாததாலே சௌக்யமாக நிம்மதியாக இருக்கிறோம். சரீரமும் மருந்தும் அழியக்கூடியவை.  ஆனால் ஆத்ம ரோகத்துக்கு நிவர்த்தியான வேத மருந்து அழிவற்ற வஸ்து.  அது பிறப்பு, இறப்பு இல்லாத நிலையை அடைவதற்கான மருந்தைச் சொல்கிறது. 

ஆனால், பரமாத்மாவே கூட இயற்றாதது அந்த வேதம்  எந்தவொரு புருஷனாலும் இயற்றப்படாதது: அபௌருஷேயத்வம்.
மூன்றாவது குணம்: அவிச்சின்னபரம் பராகதத்வம் - அதாவது ஒருவர் சொல்லி, இன்னொருவர் கேட்டு வழி வழியே வந்து கொண்டிருக்கும் குணம்.  சிரமப்பட்டு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது:  கற்றுக் கொள்ளவும் சிரமப்படவேண்டும்.
நான்காவது குணம்: அனந்தத்துவம்.  வேதம் மொத்தத்தையும் யாரும் கற்றுக் கொண்டு விட முடியாது.  வேதங்கள் அனந்தம்!
பரத்வாஜ மகரிஷி மிக இளமையிலேயே வேதம் கற்க ஆரம்பித்தார்.   96 வயது  ஆகிவிட்டது. ஆனால் முழுக்கக் கற்றுக் கொண்டு முடிந்தபாடில்லை.  எனவே, இந்திரனை நோக்கி தவமிருந்தார்.  அவன் அவர் முன் தோன்றி, "என்ன வேண்டும்?"  என்று கேட்டான்  "இன்னும் நூறு வயது வரை வாழ ஆயுள் வேண்டும்" என்றார்.  இந்திரனும் வரமளித்துப் போனான். அந்த ஆயுளும் 96   முடிந்தது.  ஆனாலும் வேதத்தை முழுதும் கற்க முடியவில்லை, பரத்வாஜரால்.   மறுபடியும் தபஸ், மறுபடியும் வரம் என்று மூன்று நூறு வருடங்கள் கடந்தன. நான்காவது முறை அவர் மீண்டும் வரம் கேட்டு விடுவாரே என்று அஞ்சி, இந்திரன் அவர் தவத்தைத் தொடங்கும் முன்பே பிரத்யட்சமாகி விட்டான்!  

"உமக்கு நான்காவது ஆயுளைக் கொடுத்தால் அதைக் கொண்டு என்ன செய்வதாக இருக்கிறீர்?" என்று கேட்டான் இந்திரன்.  
"என்ன கேட்கிறாய் இந்திரா நீ!  பிரம்மசர்யம் அனுஷ்டித்து வேதம் பயில்வதைத் தவிர வேறு காரியம் எனக்கு இல்லை" என்றார்.
உடனே இந்திரன் பூ: புவ: சுவ: என்று மூன்று மந்திரங்களினாலே மூன்று பர்வதங்களை (மலைகளை) உண்டாக்கினான்.
"இதோ தெரிகின்ற மூன்று மலைகளும் வேதங்கள்" என்றான் பரத்வாஜரை நோக்கி.
பரத்வாஜருக்கு ஒரே  சந்தோஷம். தம் மூன்று பிறவிகளில் மூன்று மலைகளான வேதங்களைக் கற்று விட்டதாக நினைத்து, "இந்திரா, இது மொத்தமும் எனக்கு வந்து விட்டதா...?" என்றார்.
"உமக்கு வந்ததை காட்டட்டுமா? என்றான் இந்திரன்.  "ஒவ்வொரு மலையிலிருந்தும் ஒரு பிடி மண்ணை எடுத்துப் போட்டு, "300 வருஷ காலத்திலே அத்யயனம் பண்ணினது இந்த மூன்று கைப் பிடி.  இன்னும் எத்தனை நூறு வயசு எடுத்தால் இந்த மூன்று மலைகளையும் உம்மாலே கரைக்க முடியும்" என்றான்.
நடுங்கிப் போய் விட்டார் பரத்வாஜர்! 
"கற்றது கைமண் அளவு" என்ற வசனம் இப்படி வேதத்தைக் குறித்துச் சொன்ன கதையினாலே வந்ததுதான்!
ஆக அனந்தத்துவம் - முடிவில்லாத தன்மை என்பது வேதத்தின் இன்னொரு குணம்.
இப்படி நான்கு குணமுடைய நால்வேதங்களை நான்கு கால்களாகக் கொண்டு வராஹமூர்த்தி நிற்கிறான் என்றால் நாம் அவனைக் குறித்து என்ன சொல்ல முடியும்?  அதைச் சொல்லிவிட்டால் பரம சந்தோஷம் அடைவான் வராஹமூர்த்தி.

தொடரும்...














Saturday, March 9, 2013

PART-1, Chapter-15

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 15

அவதாரங்கள் எல்லாம் முடிந்து பரமாத்மா ஆனந்தமாக வைகுண்டத்திலே உட்கார்ந்திருக்கார்.  தேவர்கள், முனிவர்கள் சூழ, பெரிய சதஸ் அங்கே... அப்படிப் பல நாள் உட்கார்ந்திருந்தவர் பூமியைப் பார்க்கிறார். பூமியைப் பார்த்ததும் அவருக்கு வருத்தம் வந்ததாம்.  ஏனென்றால் அவ்வளவு அக்கிரமங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தன!
"கிருஷ்ணாவதாரம் பண்ணினோமே.  அப்போ கீதையைச் சொல்லிவிட்டு வந்தோமே. அதைச் சொல்லிவிட்டு வந்த பிற்பாடு கூட இன்னமும் உலகத்திலே அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறதே... அப்படியென்றால் நாம் சொன்ன கீதை பிரயோஜனமில்லாமல் அல்லவா போய்  விட்டது" என்று ரொம்ப வருத்தம் பரமாத்மாவுக்கு.
"நாம் சொன்னது போதவில்லை போலிருக்கிறது.  நம் வாக்கு சரியில்லை போலும்;  அதனாலே வேறு வாக்கைக் கொண்டு அதே கருத்தை உலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்" என்று முடிவு செய்தான்.
பக்கத்தில் இருக்கும் மகாலக்ஷ்மியைப்  பார்த்துச்  சொன்னான்!  "லக்ஷ்மி! நீ போய் பூலோகத்திலே பிறந்து, கீதையிலே நான் என்ன சொல்லி உபதேசம் செய்தேனோ, அதையே சொல்லித் திருத்தக் கடவாய்" என்றான்.

பூலோகத்திலே அவதாரம் பண்ணின காலத்திலே மகாலக்ஷ்மியாலே பகவானை ஒன்றும் தட்டிக் கேட்க முடியல்லையாம்.  இப்போது, வைகுண்டத்திலே, பகவான், லக்ஷ்மியினிடத்திலே ஏகாந்தத்திலே அகப்பட்டுக் கொண்டு விட்டான்!  நினத்ததை எல்லாம் கேட்க அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.  கேட்கலானாள்:

"என்ன அக்கிரமம்! என்னைப் போய்  அவதரிக்க சொல்லுகிறீர்களே, இது நியாயமா? உங்களோடு கூட வந்தபோதே எனக்குக் கௌரவம் இல்லை.  இன்னும் தனியாக வேறு போகச் சொல்லுகிறீர்களே.. இது நியாயமா?  ராமாவதாரத்திலே உங்கள் கூட வந்தேன்.  எங்கேயாவது சுகம் என்பது எனக்கு அதில் இருந்ததா? அயோத்தியிலே கொஞ்சம் நாள் இருந்தது போல் தோன்றுகிறது.  அதற்கப்புறம் ரொம்ப சிரமம்,  காட்டிலே வாழ்ந்து.  இதெல்லாம் போகட்டும் என்றால் காமாசுரன் ராவணன் என்னைக் கண்டவாறு பேசினான்.  அதைக் கூட சகித்துக் கொள்ளலாம் போலாக்கி விட்டது உங்கள் செயல்.  அத்தனை பேர் நடுவிலே என்னை நிறுத்தி மேலே தேவதைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே... என்னைக் கொண்டு வந்து நிறுத்தி நீங்கள் பேசினீர்களே, அதை நினைத்தால் தான் துக்கம் தாளாமல் போகிறது..."

அக்னிப் பிரவேசத்தைப் பற்றித்தான் இவ்வாறு பேசினாலள் மகாலட்சுமி.  அக்னியை மூட்டச் சொல்லி லக்ஷ்மணனுக்கு சீதா தேவி கட்டளை பிறப்பித்தபோது, அவன் அண்ணாவின் முகத்தை அனுமதி தேடி நோக்கினானாம்.  அப்போது ராமன் வாய் திறந்து கூடப் பேசாமல் புருவத்தை நெறித்தே அதற்குப் பதில் சொன்னாராம்!

அக்னி பிரவேசம் முடிந்து வைதேகியை வெளியிலே எடுத்து வந்த பிற்பாடு, "என் சீதை ரொம்ப நல்லவள். இந்த உலகத்துக்காகத்தான் அவளை அப்படி அக்னிப் பிரவேசம் பண்ண வைத்தேன்" என்று ராமன் சொன்னதை நினைவூட்டி இப்போது மகாலட்சுமி பேசுகிறாள்.
"காமாதுரன் ராவணன் பேசியது இருக்கட்டும்.  அன்று நீங்கள் என்னை அத்தனை பாடுபடுத்தி, அவ்வளவு தூரம் பரீட்சை பண்ணிய பிறகும் நிறைமாத கர்ப்பிணியாக என்னைத் தனியே காட்டிலே விட்டு விட்டீர்களே! நான் மற்றவர்களால் பட்டதை விடவும் உங்களால் பட்டதே அதிக அவஸ்தை"

பகவான் பார்த்தான்.  மகாலட்சுமி இன்னமும் நிறுத்திக்கிற வழியாக இல்லை.  ஒரு கமா(,)  போட்டு... அப்படி இலேசாக நிறுத்தியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.  அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று பார்த்தான்.  அதற்கப்புறம் ஏகமாக துக்கம் வந்து விட்டதாம் லக்ஷ்மிக்கு.

"இந்த ராமாவதாரமே பரவாயில்லை போலிருக்கிறது,  அதற்கடுத்த அவதாரத்தை நினைத்துப் பார்க்கும் போது".. என்று மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
அவளுடைய இந்த பேச்சுக்கு என்ன அர்த்தம் என்பது போல் பகவான், கண்களை அகல விரித்துப் பார்க்கிறான்!
"ராமாவதாரத்திலே நீங்கள் எனக்குத்தான் என்று இருந்தது.  கிருஷ்ணாவதாரத்திலே அதுவும் போய்  விட்டது. அதிலும் அந்த சத்யபாமா இருந்தாளே... எத்தனையோ பேர் உங்கள்  மேல் பிரேமை கொண்டிருந்தாலும் உங்களைத் தன் முந்தானையிலே முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ளணும் என்று எண்ணம் அவளுக்கு!  இந்த சத்யபாமாவோடு ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் போராடிப்  போராடி... உங்களை என் கிரஹத்துக்கு அழைத்துக் கொண்டு வருவதற்குள் நான் பட்டபாடு..."

அந்த ருக்மிணி...சத்யபாமா கதையைக் கொஞ்சம் பார்ப்போம்:
நாரத மகரிஷி வீணையை வாசித்துக் கொண்டு ருக்மிணியின் கிரஹத்துக்கு வந்து விட்டார்.  ருக்மிணி துளசி பூஜை பண்ணியபடி இருந்தாள்.  "ருக்மிணி!  நீ இப்படி இருக்கிறாயே.  உலகத்திலே உன்னைப் போல் ஓர் அபலை உண்டா? என்று கேட்டார் நாரதர்.
"சுவாமி, என்ன சொல்லுகிறீர்கள்?"
நாளைக்கு ஒரு நாளாவது உன் பர்த்தாவை அழைத்துக் கொண்டு வந்து உன் கிரஹத்திலே இருக்க செய்ய வேண்டாமா நீ?  இப்படி நீ அவனை நாளைய தினத்துக்காகவாவது அழையாமல் இருப்பது நியாயமா?" என்று கேட்டார் நாரதர்.
"நாளைக்கு என்ன சுவாமி?" வியப்புடன் கேட்டாள் ருக்மிணி.
"இது கூட தெரியாமல் இருக்கியே!  என்னை மாதிரி ஒருத்தர் உனக்கு எடுத்துச் சொல்லாமல் இருந்தால் என்னவாகியிருக்கும்!  நாளைக்கு உன் பிறந்த நாள் அல்லவா?  அன்றைய தினம் பர்த்தா கூட இருக்க வேண்டாமா?  நாளைக்குக் கூடவா சத்யபாமா கிரஹத்திலே அவன் இருக்கிறது"
"நாரத கலஹப்ரிய" என்று நாரதரைப் பற்றி வசனம் சொல்வதுண்டு.  கலகம் செய்வதிலே நாட்டம் உடையவன் என்று அர்த்தம்.  அவர் தமக்குப் பிரியமான வேலையைச் செய்து விட்டார்.
"உடனே ருக்மிணி, "இப்பவே போய்  பகவானை அழைச்சுண்டு வந்துடறேன்" என்று புறப்பட்டாள். வேத கோஷங்களும் வாத்திய கோஷங்களும் சூழ பகவானை அழைக்க அவள் போகிறாள். 
ருக்மிணி போய்  சேர்வதற்குள் நாரதார் சத்யபாமாவினுடிய கிரகுஅத்துக்குப் புறப்பட்டுப் போய்  விட்டார்.  அங்கே சத்யபாமாவைப் பார்த்து, "உன்னைப் போலே ஓர் அபலை உண்டா?" என்றார்.
"ஏன் சுவாமி அப்படி சொல்லுகிறீர்கள்" என்றாள்  சத்யபாமா.
"இந்த ருக்மிணிக்கு உன் பேரில் ரொம்ப அசூயை.  வேண்டுமென்றே நாளைக்கு நாள் பார்த்து அந்த கிருஷ்ணனை உன்னிடத்திலேயிருந்து பிரிக்க வேண்டுமென்று அவள் வந்து கொண்டிருக்கிறாள்.  நாளைக்கு உன் புருஷன் அவசியம் உன்னோடு இருக்க வேண்டாமா?"
"நாளைக்கு என்ன சிறப்பு சுவாமி?" வியப்புடன் கேட்டாள் ருக்மிணி.
"இது கூடத்  தெரியாமல் இருக்கிறாயே.   நீ கல்யாணம் பண்ணிக் கொண்ட நாள் அல்லவா  .. அன்றைக்கு நீ பர்த்தாவோடு இருக்க வேண்டாமா?  அந்த நாளைக் கொண்டாட வேண்டாமா?"
"அந்த நாளைக் கொண்டாடணும்னு  உண்டா சுவாமி?"
"அப்படி வழக்கம் இல்லாமப் போனால்தான் என்ன.. நீ தான் அதை ஆரம்பித்து வையேன்" என்றார் நாரதர்.  ஆகையினாலே அன்னைக்கு ஆரம்பித்தது இன்னைக்கும் நடக்கிறது.
"சரி" என்றாள், சத்யபாமா.
அந்த நேரம் பார்த்து ருக்மிணி அங்கே வந்தால்  அவளைப் பார்த்து விட்ட சத்யபாமா உள்ளே போய்விட்டாள். உள்ளே கிருஷ்ணன் படுத்திருக்கிறான்.  பாமா போய் பகவானின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.  "வாய் திறந்து பேசவே கூடாது" என்று அவனுக்குக் கட்டளை போட்டுவிட்டாள். 
ருக்மிணி பகவானைப் பிரதட்சணம் பண்ணி வந்து நமஸ்காரம் பண்ணினாள்.  தன் வேண்டுகோளைச் சொன்னாள்.  பேசவே முடியலையாம் பகவானுக்கு!  இப்படியும் பேச முடியலை.. வரேன் என்று சொல்ல முடியவில்லை; போக மாட்டேன் என்றும் சொல்ல முடியல.. அங்கேயும் பேச முடியவில்லை.
வேதாந்த விஷயங்களை  எல்லாம் ஏதோ கேலி பேச்சு பேசுகிற மாதிரி இலகுவாகப் பேசிய பரமாத்மா, அவ்வளவு உபநிஷத் விஷயங்களையும் கீதையாகக் கொட்டிய பரமாத்மா, பேச்சடைத்து நிற்கிறாராம்.  பதில் சொல்ல முடியாமல் அவஸ்தைப் படுகிறாராம்.

இந்தக் காட்சியைத் தொலைவிலிருந்து பார்த்தபடி நாரதர் கைகூப்புகிறார்.   ஏனெனில் வைகுண்டத்துக்குப் போனால் இந்த காட்சியெல்லாம் பார்க்க முடியாது. அங்கே பகவான் சுவாமியாக.. மகாவிஷ்ணுவாக அல்லவா உட்கார்ந்திருப்பார்.   இந்த மாதிரி லீலைகள்  எல்லாம் காணக் கிடைக்காதே அங்கே.  எனவே அந்த லீலையைப் பார்த்து, நாரதர் கைகூப்பி ஆனந்தித்து சேவிக்கிறார்.

புளாங்கிதமாய் நின்ற நாரதரை பகவான் பார்த்தார்.  ரொம்பக் கோபம் வந்துவிட்டது அவருக்கு.  இவ்வளவு தூரம் சிண்டு முடியும் வேலையைச் செய்துவிட்டு சேவித்தபடி நிற்கிறாரே என்று கோபம்.  அவரையே பிரச்னைக்குத் தீர்வு கேட்போம் என்று முடிவு செய்து கேட்டார்.

"நாரதரே,  பிறந்த நாள் அன்று தன்னுடன் இருக்க வேண்டுமென்று விதர்ப்ப தேசத்து ராஜகுமாரி ருக்மிணி சொல்கிறாள்  நாளைக்குத் திருமண நாள், என்னுடன் இருங்கள், என்று என் சத்யபாமா சொல்கிறாள்.  இப்போ நான் எங்கே போகட்டும்?  அங்கேயா? இங்கேயா? இவ்வளவுக்கும் காரணமாயிருந்த நீரே பதில் சொல்லும்" என்றார்.
அதற்கு நாரதர் சொன்னார், "இந்தச் சண்டையை எல்லாம் என்னால் தீர்த்து வைக்க முடியாது.  ஒரு மனைவி கணவனுக்குள்ளே சண்டையென்றாலும் பரவாயில்லை.. அதுவோ பல மனைவி தகராறு.  என்னைப் பார்த்துக் கேட்கிறாயே கிருஷ்ணா.  உலகத்திலே எனக்கு இந்த விஷயம் பற்றி ஏதாவது அனுபவம் உண்டா?" என்றார்.
அந்தக் கட்டத்தில் பகவான் பட்ட அவஸ்தையை சொல்லி முடியாது.  எப்படியோ சத்யபாமாவை வஞ்சித்து விட்டு, ஒருத்தருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கிளம்பிப் போகிறான். 

இந்த வரலாறை எல்லாம் (ராமவதாரம் கிருஷ்ணாவதாரம்) நினைவுப்படுத்தி பகவானுக்குச் சொன்னாளாம் மகாலட்சுமி.   சொல்லி விட்டு, "இவ்வளவு கஷ்டங்கள் நான் ஏற்கெனவே பட்டது போதாதா?  என்னைப் போய் திரும்பவும் அவதாரம் பண்ணச் சொல்கிறீர்களா; அதுவும் தனியாக!  நான் போக மாட்டேன்" என்று மறுத்து விட்டாளாம் மகாலட்சுமி.
மகாலட்சுமி சொன்ன சரித்திரத்தை எல்லாம் கேட்டு வைகுண்டத்தில் இருந்தவர்கள் ஆனந்தித்தார்களாம். அவள் வாக்கில் இருந்து வருபவை எத்தனை ஆனந்தம் அளிக்கும்.
ஆனால், பகவானுக்குத் தன் காரியம் ஆகவேண்டும் இல்லையா.. அவன் இப்படித் திரும்பியிருந்த பார்வையை அப்படித் திருப்பி பூமித் தாயாரை நோக்கினான். மகாலக்ஷ்மியிடம் சொன்னதை அப்படியே அவளிடம் சொன்னான்.  அவள் பதில் வேறு விதமாய் இருந்தது.

தொடரும்...