குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 37
மஹாலட்சுமி, நமக்காக பகவானிடத்திலே சிபாரிசு செய்வதனாலே, அவன் சரணார விந்தத்தைப் பற்றி, அதன் மூலம் நாம் மகா விஷ்ணுவைப் பற்ற வேண்டும். லக்ஷ்மி இல்லாமல் நாராயணன் இல்லை. சூட்சுமமான "இரட்டை" உயர் நூல்கள். ஆதியிலிருந்தே அப்படித்தான் இருந்து வருகிறது லக்ஷ்மி நாராயண தத்துவம். ஆதலால், ஒன்றை இட்டே ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒன்றின் பெருமை ஒன்றின் இடத்திலே உள்ளது. நாராயணனின் பெருமை லக்ஷ்மியினிடத்திலும் உள்ளது.
இரண்டும் சேர்ந்திருக்கும்படியானதைத் தான் நாம் வரிக்க வேண்டும். ஸ்ரீ சூக்தம் இருக்கிறது - லக்ஷ்மியைக் குறித்த சூக்தம். ஆனால் அதில் உள்ள பிரார்த்தனை யாரிடத்திலே செய்யப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.
"ஹே ஜாதவேதா, மஹாவிஷ்ணு! உன்னுடைய தர்மபத்னியான மஹாலக்ஷ்மியை எப்போதும் என்னிடத்தில் இருக்கும்படியாக நீ பண்ணு.." ஸ்ரீ சூக்தம்தான் இது! பிரார்த்தனை மஹாவிஷ்ணுவினிடத்தில் இருக்கிறது. அவளை நம்முடன் இருக்கப் பண்ண வேண்டுமானால் அவனுடைய அனுமதி வேண்டுமில்லையா..? அதனால் தான் ஜாதவேதா!
நன்றாக கவனிக்க வேண்டும். இவனுடைய பெருமையை அங்கே சொல்ல வேண்டும். அங்கே இருக்கிற பெருமையை இவனிடத்திலே சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் பெருமை கிடைக்கும் என்கிறார்கள்.
இது ஏதோ அங்கே உள்ளதை இங்கே சொல்லி, இங்கே உள்ளதை அங்கே சொல்லி கலகம் விளைவிக்கிற விஷயமில்லை. ரொம்ப உத்தமமான நிலை!
இந்தப் பெருமையை அங்கேயும் அந்த பெருமையை இங்கேயும் எடுத்துச் சொன்னவர் யாரென்றால் ஆஞ்சநேயர். ஆசார்ய ஸ்தானத்தை வகிக்கிறார் இந்த ஆஞ்சநேயர்! அந்த ஆஞ்சநேயரிடத்தில்தான் தூத்யம் என்கிற தூது போகும் கலையைக் கற்றுக் கொண்டானாம் ராமன். அவ்வளவு உயர்ந்த முறையிலே, தூது போதல் என்பதை நடத்திக் காட்டினார் ஆஞ்சநேயர்.
ராமன் ஏன் ஆஞ்சனேயரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி... அடுத்த அவதாரத்த்தில் - கிருஷ்ணாவதாரத்தில் - தூது போக வேண்டியிருந்ததனாலே அதைக் கற்றானாம் பகவான்.
ஆஞ்சநேயரின் தூது பூரண பலனைக் கொடுத்தது. ஆனால், கிருஷ்ணனின் தூது பூரண பலனைக் கொடுக்கவில்லை! பகவான் காரியம் கூடத் தப்பிப் போகலாம் - ஆனால் ஆசார்யர்கள் பண்ணக் கூடிய காரியம் ஒரு நாளும் கெடாது என்பதை இந்த இரண்டு இதிகாசங்களும் காட்டிக் கொடுக்கின்றன.
இவ்வாறு ஆஞ்சநேயரின் ஆசார்ய ஸ்தானத்திலே இருப்பதை சங்கல்ப்ப சூர்யோதயம் என்கிற நூலில் சுவாமி தேசிகன் அதி ஆச்சர்யமாக விளக்கிக் காட்டுகிறார்.
அப்படிப்பட்ட ஏற்றமுடிய ஆஞ்சநேயன், ராமனுடைய எற்றங்களை எல்லாம் சீதையிடம் எடுத்துச் சொன்னான்.
"ராமபிரானுக்குத் தூக்கமே வராது. எப்போதாவது ஒரு சமயம், அவனையும் அறியாமல் அப்படி கண்ணை இழுக்கும். உடனே விழித்துக் கொள்வான். என்ன சொல்லிக் கொண்டு எழுந்திருப்பான்..? "சீதா சீதா" என்று அழைத்தபடியே எழுந்திருப்பான். அம்மா, எப்போதும் உங்களுடைய நினைவாகவே இருக்கிறான். அதைத் தவிர வேறொன்றுமில்லை" என்று ராமனுடைய பெருமைகளை அங்கே போய்ச் சொன்னான்.
சீதையினுடைய பெருமை மொத்தமும் இங்கே வந்து சொன்னான். அதனால் அவனுக்கு என்ன பலன்..? இப்படி உத்தமமான முறையில் இரண்டு பேர் மனத்தையும் சேர்த்து வைத்தானே.. அந்த ஆஞ்சநேயனுக்குப் பெரிய வெகுமானம் கிடைத்தது. அப்படியே எம்பெருமான் ராமன் கட்டி அணைத்துக் கொண்டு ஆனந்த பாஷ்பத்தினாலே ஆஞ்சநேயனை மஞ்சனமாட்டி விட்டான். உயர்ந்த ரீதியிலே அவனை அப்படியே குளிப்பாட்டி விட்டான். வேறு யாருக்கு இதைப் போன்ற இன்பம் கிடைக்கும்...?
கடைசியில் எல்லோரும் கிளம்பிப் போகும்போது,"வைகுண்டத்துக்கு வருகிறாயா..? என்று ராமன் ஆஞ்சநேயனிடம் கேட்டானாம்.
"அங்கே இராமாயண பிரவசனம் உண்டா"? என்று கேட்டாராம் ஆஞ்சநேயர்.
"அங்கே சுவாமியாக பகவான் உட்கார்ந்திருப்பான் - மகாவிஷ்ணு - அதைத்தான் சேவிக்க வேண்டும்" என்றார்கள்.
அந்த எம்பெருமான் ராமனைத்தவிர மற்றொன்றை நினையாத, அந்த வடிவழகைத் தவிர மற்றொன்றைப் பார்க்காத உத்தமன் ஆஞ்சநேயன்!
இந்த இஷ்ட தெய்வ ஆராதனையின் மேன்மை குறித்து வேதமே சொல்கிறது.
ரொம்ப ரொம்ப பூர்வ பரம்பரையில் இருந்து வரக்கூடிய விக்ரஹ ஆராதனை ஒரு கிரஹத்திலே நடக்கிறது. பூஜை பண்ணுகிறார் ஒருத்தர். ஆனால் அங்கே ஏகமாய் தாரித்ரியம்! சொல்லத்தரமன்று அந்த ஏழ்மை. ஒவ்வொரு நாளும் நடப்பதே ரொம்ப சிரமமாக இருக்கிறது.
ஒரு நாள் அந்த கிரஹத்துக்கு ஒருத்தர் வந்தார். "இந்த விக்ரஹம் உங்களுக்கு எதற்கு.. இதை எடுத்து வீதியிலே போட்டுவிடும். இதைப் பூஜை பண்ணுவதால்தான் உங்களுக்கு தாரித்ரியம் வடியாமல் இருக்கிறது. நான் ஒரு விக்ரஹம் கொடுக்கிறேன். அதை வைத்துக் கொண்டு பூஜை பண்ணுங்கள்" என்று பழைய விக்ரஹங்களை தூர எடுத்து வைக்கச் சொல்லிவிட்டார். ஒரு புது விக்ரஹத்தையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்!
புதிதாக வந்த மூர்த்தியை வைத்துக் கொண்டு பூஜை பண்ண ஆரம்பித்தார் அந்த கிரஹஸ்தர். இன்னும் தாரித்ரியம் அதிகமாய்ப் போய்விட்டதாம்!
"ஏன் அப்படி ஆயிற்று"? என்று கதை கேட்கிற நமக்கு ஒரு சந்தேகம் உதிக்கிறது.
புதிதாக வந்திருக்கும் தெய்வம் ஒரு நல்ல பயனைக் கொடுக்கக் கூடாதோ..? அது கொடுக்க மாட்டேன் என்கிறது! ஏன் கொடுக்கவில்லை..?
"தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா என்று தலைமுறை தலைமுறையாக வந்த மூர்த்திக்கே இந்த கிரஹத்தில் கதியில்லை; தூக்கித் தெருவிலே போட்டுவிட்டான்! நாளைக்கு நம்மையும் தூக்கிபோடும்படி யாராவது சொன்னால், போட்டுத் தானே விடுவான்! ஆகையினால் இவனுக்கு ஸ்திரமான ஒரு பிரக்ஞை இல்லை - தன்னுடைய பாப விமோசனத்துக்காக சிரமப்படுகிறோம் என்கிற ஞானமில்லை. அதனால் தான் நம்முடைய சக்தியை இவன் அளவிடுகிறான். தெய்வத்துக்கு சக்தி இல்லை என்று அவன் நினைக்கலாமா".. - புதிய தெய்வம் இப்படி எண்ணமிட்டே முடிவுக்கு வந்ததாம்!
ஹ்ருதயத்திலே ராமனைத் தவிர வேறு யாரையும் நினையாத ஆஞ்சநேயனுக்கு, மஹாலக்ஷ்மியின் அனுக்கிரஹம் ஏற்பட்டது. அதே மாதிரி ராமனுடைய அனுக்கிரஹமும் ஏற்பட்டது.
ஆனால், ராமனையும் சீதையையும் பிரித்தவளான சூர்ப்பனகை, மூக்கறுபட்டு காதறுபட்டு பங்கப்பட்டுப் போனாள். ராவணனோ, சீதையைப் பற்றினான்; கிளையோடு மாண்டான்!
இரண்டு பேரையும் - ராமன், சீதை - வணங்கினான் விபீஷணன். ராஜ்யத்தோடும் சகல போக்யத்தொடும் விளங்கினான்.
ஆகையால், ஒரு நாளும் இந்தத் தம்பதிகளை நாம் பிரிக்கக்கூடாது.
இஞ்சிமேட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர் சொல்லுவார்:
நமக்கு ஆசார்யன், அவருக்கு ஆசார்யன், அவருக்கு ஆசார்யன் என்று பரம்பரையை நாம் வகுத்துக்கொண்டே போனோமானால் லக்ஷ்மியோடு கூடிய நாராயணனின் திருவடிகளில் போய் அது முடியும். அவனைத்தான் நாம் பற்ற வேண்டும் என்கிற தர்மத்தை வால்மீகி ராமாயணம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இரட்டை என்றாலே ரொம்பவும் சிறப்பு வாய்ந்தது. மந்த்ரத்திலே கூட இரட்டை மந்த்ரம் என்று ஒன்று உண்டு. த்வய மந்த்ரம் என்று பெயர்.
பகவான் வைகுண்டத்திலேயே அதை உபதேசம் பண்ணினார் - மகாலக்ஷ்மிக்கே உபதேசம் பண்ணினார்.
மஹாலக்ஷ்மி அதை விஸ்வக்சேனருக்கு உபதேசம் பண்ணினார்.
விஸ்வக்சேனர்தான் பூலோகத்தில் நம்மாழ்வாராய்ப் பிறந்தார். அவர் திருவாய்மொழியிலே இந்த த்வய மந்த்ரத்தை பூரணமாய் விவரித்தார்.
ராமாயணம் மொத்தமும் த்வய விவரணம்தான். இது சீதையினுடைய சரித்திரம் - உயர்ந்த சரித்திரம் - என்று வால்மீகி கொண்டாடியிருக்கிறார். அதிலே பகவானுக்குக் கூட கொஞ்சம் வருத்தம் என்று வேடிக்கையாய்ச் சொல்வார்கள்.
"மரமே கண்டாயா ? மட்டையே கண்டாயா?
ஹா சீதே! ஹே சீதே! என்று தேடி அலைந்தோமே - நாமல்லவா அலைந்தோம். இதை சீதை சரித்திரம் என்று வால்மீகி எழுதிவிட்டுப் போய்விட்டாரே! எதனால் இருக்கும்" என்று யோசனை பண்ணினானாம் பகவான்.
நாமும் யோசிப்போம் - அடுத்த அத்தியாயம் வரைக்கும்.(தொடரும்) ...
aapadaam apahartaaram daataaram sarvasaMpadaam |
lokaabhiraamam shriiraamam bhuuyo bhuuyo namaamyaham ||
lokaabhiraamam shriiraamam bhuuyo bhuuyo namaamyaham ||
"I bow again and again to Sri Rama Who removes
(all) obstacles, grants all wealth and pleases all."