குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 2
அதிக சம்ஸ்கிருத ஜானமில்லாத ஒருத்தர் ரொம்பவும் பக்தியோடு தினமும் 108 தடவை சொல்லி வந்தார். “பத்மநாபோ, மரப்பிரபு ”.
“பத்மநாபோ, அமரப்பிரபு” என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே அரசனே என்று அதற்கு அர்த்தம்.
ஆனால்
“மரப் பிரபு”. என்று தப்பாகப் பதம் பிரித்தவர் மரங்களுக்கு அரசனே
என்று அர்த்தம் பண்ணிக்கொண்டார். அந்த அர்த்தத்துக்கு ஏற்ப ஊர்
கோடியிலிருந்த அரச மரத்தைச் சுற்றி வந்து பத்மநாபோ மரப் பிரபு என்று
தினமும் 108 பிரதட்சணம் பண்ணினார்.
அந்த
வழியே போன ஒரு சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கி போயிட்டார்.
தவறாக உச்சரித்தவரை நிறுத்தினார், திருத்தினார். நீர் ரொம்ப உசந்த காரியம்
தான் பண்றீர். ஆனால் வாக்கு சரியில்லை. பத்மநாபோ, அமரப் பிரபு
அப்படின்னு சொல்லணும் என்று கூறி அர்ததத்தையும் விளக்கினார். தவறக
உச்சரித்தவர் ரொம்பவும் வேதனைப்பட்டு அடாடா, தெரியாமலே சொல்லிவிட்டேனே ..
எனக்குப் பாவம் சம்பவிக்குமா என்று கவலயுடன் கேட்டார்.
அதெல்லாம் சம்பவிக்காது. தெரியாமல் சொன்னதற்கு தோஷமில்லை. இனிமேல் அப்படிச் சொல்லாமல் சரியாகச் சொல்லு என்றார், திருத்தினார்.
மறுநாளிலிருந்து
திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார். முதலாமவர் மரப் பிரபு அல்ல என்பதால்
மரத்தைப் பிரதட்சணம் பண்ணுவதையும் நிறுத்தி விட்டார். வாசல் திண்ணையில்
உட்கார்ந்தபடியே பத்மநாபோ அமரப் பிரபு என்று சொல்லி வந்தார்.
அன்று
இரவு, திருத்திய வித்வானின் சொப்பனத்தில் பகவான் வந்தார். உம்மை யாரு
சம்ஸ்கிருதம் படிக்க சொன்னா? அப்படியே படிச்சதுதான் படிச்சீர் அந்த பக்தரை
யாரு திருத்தச் சொன்னா? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைப் பிரதட்சணம்
செய்யறதை நிறுத்திட்டார். அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா?
உமக்கு விஷ்ணு புராணம் தெரியாதா?
ஜ்யோதீம்ஷி விஷ்ணு:, புவனானி விஷ்ணு:, வநாணி விஷ்ணு: என்று பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா?
(ஜ்யோதீம்ஷி = ஒளி, புவனானி = உலகங்கள், வனானி = காடுகள்)
நீர்
திருத்திச் சொன்னதால் 108 பிரதட்சணங்கள் செய்யறதை அவர் நிறுத்தினார்.
திரும்பவும் போய் அவரிடத்திலே சொல்லும் மரப் பிரபு என்றே சொல்லச் சொல்லு
என்று கோபித்துக் கொண்டார் பகவான். குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும்
மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா? அது போல்தான் எல்லையற்ற கருணையுடைய
பகவானும் நம்மைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கேட்கிறான்.
ஒருவருக்கு “க்ரு” என்று சொல்ல வராது. “க” வரும் இடத்தில் எல்லாம “த” என்று உச்சரிப்பார். அவருக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்க முயன்றார் ஒரு வித்வான்.
ஸ்ரீ க்ருஷ்ணாய நம: என்பதற்கு பதில் ஸ்ரீ திருஷ்ணாய நம:
என்று தவறாகவே உச்சரித்தார் மாணவர். உமக்கு என்னால் சொல்லித் தர முடியாது
என்று சலித்துக் கொண்டார் வித்வான். அங்கே இன்னொரு வித்வான் வந்தார். அவர்
ஸ்ரீ த்ருஷ்னையே என்றே சொல்லட்டும் பாதகமில்லை என்றார் அந்த இரண்டாவது வித்வான்.
ஏன்?
ஸ்ரீ த்ருஷ்ணாய என்றால் ஸ்ரீயினிடத்திலே திருஷ்ணை உடையவன் என்று அர்த்தம்.
ஸ்ரீ (மகாலட்சுமி) திருஷ்ணை (அன்பு) அவர் சொல்வதும் பகவானையே குறிக்கும் என்றார்.
இந்தக்
கதைகளைச் சொல்வதாலே, மந்திரங்களை, பகவான் நாமத்தைத் தப்பும் தவறுமாகச்
சொல்லலாம் என்று அர்த்தம் இல்லை. அறியாமையாலும் இயலாமையாலும் அவ்வாறு
தவறாகச் சொன்னாலும் மனத்திலே அவன் நினைவு ஆத்மார்த்தமா இருந்தால் அதை அவன்
அப்படியே ஏற்பான் என்கிறதுக்காகச் சொன்னது.
அடியேன்
திருப்பதி போயிருந்த சமயம்... சுவாமி புஷ்கரணியில் ஸ்நானம் பண்ணப் போனேன்.
அப்போது அங்கே தென்னாலியில் இருந்து வந்த குடும்பம், முடி கொடுத்து
விட்டு ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தது. அந்தக் குடும்பத் தலைவர் முங்கி
எழுந்து தலைக்கு மேல் கைகூப்பி கோஹிந்தா கோஹிந்தா என்று பெருமானை அழைத்துக் கொண்டிருந்தார். கோஹிந்தா இல்லை, கோவிந்தான்னு சொல்லணும் என்று அவரை திருத்த அடியேன் எழுந்தேன். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் என்னை ஸ்தம்பித்துப் போகப் பண்ணின.
“ஏழுமலையானே
ஒவ்வொரு வருஷமும் இதே நாளில் உனக்கு வந்து முடிகொடுத்து விட்டு உன்னை
சேவிச்சுட்டுப் போகிறேன். போன வருஷம் போலவே இந்த வருஷமும் நான் சந்தோஷமா
இருக்க அனுக்கிரகம் பண்ணு” என்று உரக்க பிரார்த்தனை செய்தார் அந்த பக்தர்.
அவரை
திருத்தணும் என்று எழுந்தவன் உடன் அப்படியே உட்கார்ந்து விட்டேன். "போன
வருஷமும் அந்த பக்தர் கோஹிந்தா என்று தானே பகவானைக் கூப்பிட்டு இருப்பார்.
அதற்காக பகவான் அவருக்கு அனுக்கிரகம் பண்ணாமல் விட்டு விடவில்லையே ..
கோஹிந்தா என்று சொன்னதற்கே ஒரு வருஷம் ஆனந்தமாக அவர் இருந்திருக்கிறாரே.
இந்த வருஷமும் போன வருஷத்தைப் போன்றே சந்தோஷத்தைத் தானே பக்தர்
கேட்கிறார்". இதை உணர்ந்ததும், அவரைத் திருத்தணும் என்கிற என் எண்ணத்தை
மாற்றிக் கொண்டேன். எம்பெருமானுக்கு நம்மிடத்திலே என்ன வாத்சல்யம் (கருணை)
என்று சிலிர்ப்பு வந்தது.
பாண்டித்யம்
இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது
சங்கீர்த்தனம் பண்ணனும்னு போன வாரம் சொன்னது எப்படி சாத்தியப்படும்?
இதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே
வைத்திருக்கிறது.
பெருமாளை
எழுந்தருளப் பண்ணுகிறவர்களுக்குத் தோளிலே காய்த்துப் போயிருக்கும்.
அதுபோல் நாம் சங்கீர்தனத்தைப் பழக்கமகப் பண்ணிக் கொள்ளணும். "நாவிலேயே
தழும்பு எற்பட்டுப்போகும் அளவுக்கு திரு நாமத்தை உச்சாடனம் பண்ணனும்.
எத்தனை தடவைன்னு கேட்கக் கூடாது" என்கிறார், திருமங்கையாழ்வார்.
தழும்பு
எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால்.. அதற்குத்தான் நியமம்
ஏற்பட்டிருக்கிறது. எழுந்திருக்கும் பொது, துயிலெழும்போது "ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி"
என்று ஏழு தடவை சொல்ல வேண்டும். உரக்க, பெரிசா சொல்லணுமா? மனசுக்குள்ளே
சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால், பலன் நமக்கு மட்டும். பெரிசா
சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்டபடி எழுந்திருப்பார்கள்.
பரோபகரமாகவும் இருக்கும். வெளியிலே கிளம்பிப் போகும்போது "கேசவா" என்று
உச்சரிக்கணும். திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து
நம்மாழ்வார் பாடுகிறார் "கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன".. கேசவா என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும் போது கேசவா என்று அழைப்பது.
ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித்திருக்கிறார் "கேசவனைப் பாடவும், நீ கேட்டே கிடத்தியோ, தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்" என்கிறது
திருப்பாவை. "கேசவா கேசவா" என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ
அதை கேட்டும் கிடந்து உறங்குகிறாயே"... என்று துயில் எழுப்புகிறார்.
அடுத்தது
உணவு கொள்வதற்கு முன்னால் “கோவிந்தா” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட
வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன்
மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.
சிரமம் இல்லை, கஷ்டமான நியமம் இல்லை. ஹரி, கேசவா, கோவிந்தா, மாதவா
என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து
விட்டிருக்கிறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியும் இல்லாமலே நாம
சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது. ஆனால், சொல்கிற அந்த நேரத்திலே மனசு
அளவு கடந்த பக்தியிலே நிரம்பி இருக்கணும். "சொல்லிப் பார்ப்போமே, பலன்
இருக்கிறதாவென்று" அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக்கூடாது.
காரணம்,
அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை. "சர்வோத்தமஸ்ய கிருபையா".. சர்வ
உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான்,
கருணைதான். முதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக்
கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத் அனுபவத்தைக் கேட்கும். அந்த
மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய அமையப் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
தொடரும் …
Good work, keep posting. Thanks. Venkat
ReplyDeleteThanks a lot.
Delete