Wednesday, October 31, 2012

PART-1, Chapter-4



குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 4

எம்பெருமான் திருநாமங்கள் அவன் பெருமைகளைக் காட்டிலும் மேலானது என்று சொன்னேன்... வேதமே சொல்கிறது.  "யக்ஜமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும்.  யக்ஜம் பண்ணின பலன் கிடைக்கும்"..  கலியுகத்திலே கடும் அனுஷ்டானங்களைக் கடைப் பிடித்து யக்ஜமெல்லாம் பண்ண முடியாதுன்னு வேதத்துக்கே தெரியும்.  கீதையின் கடைசிப் பேச்சாக வருவதை சரம ஸ்லோகம்னு சொல்றது. மகா மந்திரம் அது.  அது என்ன சொல்கிறது தெரியுமா..? "எல்லா தர்மங்களையும் நன்றாக விட்டு, என்னையே சரணமடைவாய்" என்கிறது.  தர்மங்களை விடுவது என்பது நித்ய கடமைகளான சந்தியாவந்தனம், மாத்யானிகம் போன்றவற்றை விட்டு விடுவதல்ல. நியமத்தோடு பண்ண முடியாத பெரிய யக்ஜங்களை விட்டு விடலாம் என்று அர்த்தம்.
இதற்கு இன்னொரு வியாக்யானமும் சொல்வதுண்டு.. கலியுகத்திலே எல்லா தர்மங்களும் நம்மை விட்டு தூர, தள்ளி அகன்று போய்விடுகின்றன. "இவனாலே யக்ஜமெல்லாம் முறைப்படி பண்ண முடியாது"  என்று அவற்றுக்குத் தெரியுமாம்!  அதனால்தான் நம் மேலே பரிவு கொண்டு, வீணான விஷயங்களிலே நாம் காலத்தைக் கழித்துவிட அனுமதிக்காமல் மாற்றுவழி சொல்லியிருக்கிறது.  யக்ஜம் பண்ணினால் என்ன திருப்தியை பகவான் அடைவானோ, அதே திருப்தியை அவன் திருநாமத்தை சொன்னால் அடைஞ்சுடுவான்.  எம்பெருமான் நாமங்களால் சமஸ்த யக்ஜ பலனும் நமக்குக் கிடைக்கும்.
பகவான் நாமா நமக்கு என்ன உபகாரம் பண்றது என்று கேட்டால் மூன்று விதமா உபகாரம் பண்றது.
திருஷ்ட பலம்
அதிருஷ்ட பலம்
திருஷ்டாதிருஷ்ட பலம் என்று மூன்று வகையான பலத்தைக் கொடுக்கிறது.  நேராக, கண் கூடாக எல்லோரும் பார்க்கும்படியான நேர் பலன்.   நேராக வந்து காரியத்தை நடத்திக் காடும் பெருமை, திருநாமத்துக்கு உண்டு.  இதைத்தான் திருஷ்ட பலம் என்கிறது.
திருஷ்ட பலத்துக்கு உதாரணமாக பாகவதத்த்திலே ஒரு சம்பவம் வருகிறது.
ஜாமி என்றால் நல்ல ஸ்த்ரீ என்று அர்த்தம்.  அஜாமி என்றால் அதற்கு நேர் எதிரானவர்!  அத்தகைய ஸ்த்ரீயின் சேர்க்கையுடையவனாக இருந்தான் அஜாமிளன். காட்டிலே தர்பை கொண்டு வர போனவன், அங்கு பார்த்த ஸ்த்ரீயுடன் தங்கி பத்து குழந்தைகளைப் பெற்றான். எண்பத்தெட்டு வயது நிறைந்த காலத்தில், அஜாமிளன் படுத்த படுக்கையானான்.  அந்த ஸ்த்ரீ அவனை கைவிட்டு விட்டாள்.  கவனிக்க யாருமில்லை.  அந்திம காலத்திலே மூன்று யம பட்டர்கள் வந்து அவன் பக்கத்திலே நிற்கிறார்கள். (வழக்கமாக இருவர் தான் வருவார்கள், ஆனால் அவன் "மகா பாபி" என்பதால் யமன் மூன்றாவதாக ஒரு ஆளை அனுப்பினானாம்)  நடுநடுங்கி, கதிகலங்கி போனானாம் அஜாமிளன்.  என்ன செய்வதென்று புரியாமல், சற்று தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த தனது பத்தாவது புதல்வனைக் கூப்பிட்டானாம்.

"நாராயணா"என்று அவன் தன் குழந்தையைத் தான் கூப்பிட்டான்.  கூப்பிட்டவுடனேயே, பீதாம்பரதாரியாக  சங்கு சக்கரத்தோடு எம்பெருமான் போன்றே, நான்கு பேர் வைகுண்டத்திலிருந்து வந்து யம தூதர்களை விரட்டினார்கள்.  அந்தக் கட்டத்திலே அஜாமிளன் எண்ணினான்.  "அடடா! இப்படிக் கடைசி காலத்திலே என் குழந்தையின் பேரைச் சொன்னதற்கே பகவான் ஓடி வந்து காப்பாற்றினானே! ஆயுள் முழுவதும் அவன் பெயரைச் சொல்லியிருந்தால் எத்தனை  கதிபாலன் அடைஞ்சிருப்பேன்"
அப்புறம் அஜாமிளன் கூட முக்தி அடைந்தான். அதனாலே "அவனைப்போல் நாமும் இருக்கலாமே" என்று எண்ணினால் அது நம் கையில் இல்லை.  நம் சரித்திரம் அஜாமிள சரித்திரம் ஆகாது.  அப்போதைக்கிப்போதே நாம் பகவான் நாமாவைச் சொல்லி வைக்கணும்.
ஒருத்தர் ரொம்ப உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாயிருந்தார். போகிற வழிக்கு அவருக்குப் புண்ணியம் கிடைக்கட்டுமே என்று அவருடைய கடைசிப் பிள்ளையைக் காட்டி "இவன் யாரு" என்று கேட்டார்கள் (அவர் கடைசிப் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர்)
"இவனா இவன் என் கடைசிப் பிள்ளை" என்று சொல்லிவிட்டு உயிரை விட்டுவிட்டார் அவர்.  அஜாமிளன் சரித்திரத்தைச் சொன்னது திருஷ்ட பலம் பற்றித் தெரிஞ்சுக்கறதுக்காக. எல்லோரும் அறியும் வண்ணம் நேராக உணர்த்தும் பலனை அவன் நாமத்தின் மூலம் பெறுகிறோம்.

அடுத்து, அதிருஷ்ட பலம்.  திரௌபதி சரணாகதி அடைந்த பொது அவளுக்குப் புடவை சுரந்தது அதிருஷ்ட பலத்துக்கு உதாரணம். அதாவது மறைந்து நின்று உதவக்கூடியது பகவான் திருநாமம்.

திருஷ்டா திருஷ்டா பலனுக்கு உதாரணம் கஜேந்திர மோக்ஷம். ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைத்ததுமே பகவான் அதிவேகமாக வந்து ரக்ஷித்திருக்கிறான்.  "ரங்கநாதா! உன்னை நமஸ்கரிக்கவில்லை   நான்.. அன்னைக்கு கஜேந்திரன் அழைத்ததும் ஓடி வந்தாயே, அந்த வேகத்துக்கு நமஸ்காரம் என்கிறார் பராசரபட்டர்.  அத்தனை வேகம்.

வேகமாக வந்ததுடன், முதலையிடமிருந்து கஜேந்திரனை விடுவித்தான். அந்த யானைக்கு மோக்ஷத்தையும் அளித்தான். உயிரைக் காப்பாற்றிய திருஷ்ட பலத்துடன் மோக்ஷத்தை அளித்த அதிருஷ்ட பலமும் சேர.. திருஷ்டா திருஷ்ட பலம் வாய்க்கப் பெற்றது.

அவனை மனசார நினைத்து அன்னம் எடுத்து ஹோமம் பண்ணுங்கள்; அப்படியில்லை என்றால் மனசார அவன் நாமத்தைச் சொல்லுங்கள்.  எம்பெருமான் அனுக்கிரகஹம் விஷேஷமாக  கிடைக்கும்.  இப்படி மூன்று வகையான பலன்களும் கிடைக்கும்.
திருநாமத்தைச் சொன்னால் மோக்ஷம் கிடைச்சுடுமா?  அது நேரே மோக்ஷம் வாங்கி தராது. சொல்லச் சொல்ல பக்தி ஏற்படப் பண்ணும்.  பக்தி உண்டாக உண்டாக, இந்த ஆத்மா அவனுடையதுன்னு நினைப்போம். அதை அவன் திருவடியிலே சமர்ப்பிப்போம். அதன் விளைவாக மோக்ஷம் கிடைக்கும்  இதுவே அவன் திருநாமம் நமக்குப் பண்ணக் கூடிய மிக உயர்ந்த உதவி.

அப்படிப்பட்ட திருநாமங்கள் அடங்கியதாலேதான் விஷ்ணு சகஸ்ர நாமத்தை ரொம்ப உயர்த்திச் சொன்னது.  வேதம் சொல்லி ஹோமம் வளர்க்கிறதுக்குப் பதிலாக இப்படி நாமங்களைச் சொன்னால் போதுமா என்று கேட்டால்... மூன்று வேதங்களின் சாரம் காயத்ரி என்கிற மகா மந்திரம்.  இந்த உத்தமமான மகா மந்திரத்தை விளக்கும்படியாக அமைந்திருக்கிறது விஷ்ணு சகஸ்ர நாமம். காயத்ரி மகாமந்திரத்தை தினமும் சொன்னவர்களுக்கு அசாத்தியமான ஆசீர்வாத பலம் உண்டு.  காகிநாடா பக்கத்திலே ஒரு சமஸ்தானத்து ராஜா, அவர் குழந்தைக்குப் புண்யாகவசனம்.  வேத வித்துக்களால் சபை நிரம்பியிருக்கும் சமயம் குழந்தை தவழ்ந்து போய் அரண்மனையில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து மாண்டு போய்விட்டது.  நடந்ததை மறைத்து விட்டாள் குழந்தையின் அம்மா.  துக்கம் சம்பவித்த இடத்திலே சாப்பிடக் கூடாது.  எல்லா வேத வித்துக்களும் பட்டினியாய்ப் போவார்களே என்ற எண்ணத்தில் குழந்தை இறந்ததைச் சொல்லாமல், மடியிலே அதை மறைத்து வைத்துக் கொண்டாள் ராணி.
புண்யாகவசனம் ஆகி, ஒவ்வொரு வேத விற்பன்னரும் கிட்டே வந்து குழந்தைக்கும் அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறார்கள்.  (ஆந்திரா தேசத்திலே அப்படித்தான் வழக்கம்)  கொஞ்ச நேரத்திலே குழந்தையின் கால் அசைகிறது.  ராணிக்கு ஒரே ஆச்சரியம்.  மாண்டு போன குழந்தை திரும்பவும் உயிர் பெற்றதே.  அந்த மாயம் எப்படி நிகழ்ந்தது என்றால், பெரியோர்களின் ஆசீர்வாத பலத்தாலே.  அவர்களுக்கு எப்படி பலம் வந்தது?.. காயத்ரி மகா மந்திரத்தை தினமும் சொன்னதாலே.  சாமானியர்கள் ஆசி சொன்னால் பலிக்குமா என்ன?.. அனவரதம் காயத்ரியை ஜபிப்பதனாலேதான் அந்த அதிகாரம் கிடைக்கும், வாக்கு பலிக்கும்.
ஒருவருக்கு உபநயனம் செய்விக்கிற காலத்தில், பிரம்மோபதேசத்தின்போது அப்பா, மாமா அல்லது வேறு உயர்ந்த அதிகாரி காயத்ரி மந்திரத்தை உபதேசம் பண்ணனும்.  உபதேசம் பண்ணுகிறவர் நித்யம் ஆயிரம் முறை காயத்ரி ஜபிப்பவராய் இருக்க வேண்டும். ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் தானே இரண்டாயிரம் ரூபாயை அவராலே கடனாகத் தர முடியும்.  அதுமாதிரி தான் இது.

காயத்ரிக்கு ஏன் சிறப்பு?.. காயத்ரியானவள் பிராத காலத்தில் சிவப்புப் பட்டு உடுத்தி  ரிக் வேதத்தை உச்சரிக்கிறாள்.  அவளே உச்சி காலத்தில் வெண்பட்டு உடுத்தி, யஜுர் வேதம் கூறும் சாவித்ரியாகக் காட்சி தருகிறாள்.   சாயங்காலத்தில் கருப்பு உடுத்தி, சாம வேதம் ஓதும் சரஸ்வதியாக இருக்கிறாள். இதில் ஒரு தர்ம சூட்சுமம் அடங்கியிருக்கிறது.  ஒரு நாள் பொழுதில் மூன்று வேதமும் பூரணமாகச் சொல்லி விடுகிறாள் காயத்ரி.  அவள் குழந்தைகளான நமக்குச் சிரமம் தராமல், அவள் சிரமப்படுகிறாள்.  நீங்கள் என்னைச் சொன்னால் போதும் என்கிறாள்.  அவள் சிரமத்தை எடுத்துக் கொண்டு நம் சிரமத்தைப் போக்குகிறாள்.. அவளைக் காட்டிலும் கருணை உள்ளவர்கள் யார் உண்டு?

விஷ்ணு சகஸ்ர நாமத்துக்கு வருவோம்.  கருணை வடிவான காயத்ரியின் முதல் எட்டு அக்ஷரத்தை விளக்க வந்தது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முதல் சுலோகத்தின் முதல் பாதம்.  அடுத்த எட்டு காயத்ரி அக்ஷரங்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தின் இரண்டாவது சுலோகத்திலே விளக்கம் பெறுகின்றன.  மூன்றாவது எட்டை விளக்க வந்தது சகஸ்ர நாமத்தின் மூன்றாவது சுலோகம்.  இந்த மூன்று சுலோகங்களுக்கு சர்வ மந்திரங்களுக்கும் சாரமான காயத்ரியை எடுத்துச் சொல்லுவதால் அவற்றுக்குச் சிறப்பு அதிகம்.  இந்த முதல் மூன்று சுலோகங்களுக்குள்ளே ஓர் அவதாரம் பேசப்படுகிறது.
விஷ்ணு சகஸ்ர நாமத்தை பீஷ்மர் சொல்ல, கிருஷ்ணன் கேட்கிறான்.  ஆனால் எதிரே உள்ள கிருஷ்ணரை ஸ்தோத்திரம் பண்ணவில்லை பீஷ்மர்.  நரஸிம்ஹ அவதாரத்தை தியானம் பண்ணுகிறார்.  விஷ்ணு சகஸ்ர நாமத்தின் ஆதியிலேயும் இடையிலேயும் கடைசியிலேயும் நரஸிம்ஹ அவதாரம் பற்றிச் சொல்லப்படுகிறது.  இந்த சிறப்பையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

தொடரும் …

PART-1, Chapter-3

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 3

சஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் - திருப் பெயர்கள். பகவானுக்கு வெறும் ஆயிரம் பெயர்கள் தானா..? ஆயிரம் நாமங்கள் என்று வெறும் எண்ணிக்கையிலே மட்டும் சொல்ல வந்ததன்று. சஹஸ்ரம் என்பதற்கு "பலபல" என்றும் பொருள் உண்டு.  "பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே" என்று ஆழ்வார் சொல்கிறார்.  எல்லோரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.   "சஹஸ்ரநாமம்" என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது. ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை பண்ணிக் கொண்டிருந்த பொது, தம் சிஷ்யரை அழைத்து புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி சொன்னார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்கு திருவுள்ளம். அங்கேயிருந்து போனார் சிஷ்யர்.  அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம். "நான் இதைக் கேட்கலியே.. நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா.. நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே" என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார்.  திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது. அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிறார்.  "நான் சொல்வது என்ன? நீ செய்வது என்ன? "சுவாமி, நான் என்ன செய்வேன்.  அங்கே போய் லலிதா சஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு அதை வைச்சிடு, இதை எடுத்துண்டுபோன்னு சொல்கிறாள்.  நான் என்ன செய்வேன்" என்றார் சிஷ்யர். அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைக்கிறார்.  "அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..."  அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர். இப்படி லலிதையே போற்றும்படியான லலிதமான சஹஸ்ரநாமம், எல்லோரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது.  எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.  ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...? ஜானிகளுள் அக்ரகண்யரான பீஷ்மரால்... பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம்.  அம்புப் படுக்கையில் இருக்கிறார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சொல்கிறார் பகவான் கிருஷ்ணர் "அணையும் நெருப்பைப் போல இருக்கிறார் பீஷ்மர்.  அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ, அவர் சொல்வதைப் போய்க் கேள்" என்று தர்மபுத்திரரை அனுப்புகிறார்.

"ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே தர்மத்தைச் சொல்ல" என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.  
பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக்கூடிய மகான்கள் இருக்கணும். இந்த உண்மைக்கு சாட்சியாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு   சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள்.  அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.  அவன் சொன்னது கீதை - கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.  பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர்.  பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய  கண்ணாடி என்று பொருள்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்... அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை.  அத்தனையும் சுகுணங்கள்.
சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக்கூடக் காட்டவல்லது இல்லையா... அதைப் போலே சர்வ வியாபகனானவனை அந்த சின்ன திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்த பகவத் குணதர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹாஸ்ரநாமத்துக்கு  உரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.  ஆறு வித உயர்வுகளைச் சொல்கிறார்.

1. மகாபாரத சாரம்:
ரசாலு என்று ஆந்திர தேசத்திலே ஒருவகை மாம்பழம் வருவதுண்டு. வெயில் காலத்திலே வரும்.  அதைப் பிழிந்தால் மொத்தமும் ரசமே  கொட்டும். அதைப் போலவே மகாபாரதம் ஒரு பெரிய ரசாலு என்று வைத்துக் கொண்டால், அதைப் பிழிந்தால் வரக்கூடிய சாறு சஹஸ்ரநாமம்.  மகாபாரதக் கதை முழுவதும் அதில் இருக்கிறது.  மகாபாரதத்துக்கு அப்படி என்ன சிறப்பு...?  "சாப்பிட்டால் வடையே சாப்பிடணும், கேட்டால் மகாபாரதக் கதையே கேட்கணும்" என்கிற அர்த்தத்திலே ஒரு தெலுங்கு பழமொழி உண்டு.  தர்மத்தைச் சொல்வது மகாபாரதம்.   "மகா" பாரதம் என்று ஏன் அதற்குப் பெயர் உண்டாயிற்று...? பெரிதாக பளுவுடையதாக இருப்பதாலே அந்தப் பெயர்.. அளவிலும் பளு, புத்திக்கும் பளு.. சாமான்யனின் புத்திக்கு வடிவமாகச் சொல்லியிருக்கிறது.  தர்ம, அர்த்த, காம மோக்ஷம் என்ற சதுர்வித புருஷார்த்தத்திலேயும் தெளிவான  ஞானம் பிறக்க வழி, மகாபாரதம். வேத சாகரத்தை (சமுத்திரத்தை) வியாசரின் புத்தியாகிற மத்தினாலே கடைந்து பெற்ற உயர்ந்த வெண்ணெய் போன்றது மகாபாரதம்.  இப்படி வேத ஸாரமான  மகாபாரதத்தின் ஸாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம்.

2. மகரிஷிகளாலே  நன்கு, பலமுறை கானம் பண்ணப்பட்டது:
ரிஷிகளுக்கும் நம்மைப் போன்ற நித்ய சம்சாரிகளுக்கும் வித்தியாசமில்லையா...? நம் பார்வை ஒரு வரையறைக்குட்பட்டது. மகரிஷிகளின் பார்வையோ உயர்ந்த ரீதியிலே வஸ்துவாகப் பார்க்காமல் அதன் உள்ளே இருக்கிற சக்தியைக் காணக்கூடியது.  உடல்மிசை உயிரெனக் கறந்து எங்கும் பரந்துளன் - உடலுக்குள் உயிர் மறைந்துள்ளது போல் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான் பரமாத்மா.  இதுக்கு ஒரு கதை...
சுக பிரும்ம மகரிஷி ஒரு தடாகக் கரை வழியே வேகமாக நடந்து போனார்.  அவர் அவதூதர். திருமேனியில் வஸ்திரம் கூட இல்லை. தடாகத்தில் சில அப்ஸர  ஸ்திரீகள் நீராடிக் கொண்டிருந்தனர்.  அத்தனை ஸ்திரீகளும் சுக பிரும்மரைப் பார்த்தனர்.  அவரும் அவர்களைப் பார்க்கிறார் - அவர் மனசில் எந்த விகாரமும் ஏற்படவில்லை.  அந்த ஸ்திரீகளும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொள்ளவில்லை.
சுகபிரும்மரைத் தொடர்ந்து வந்தார் அவர் தந்தையான வியாசர். "ஹே புத்ரா" என்று அழைத்தபடி வந்தார்.  அவர் குரலைக் கேட்டதுமே மான சம்ரக்ஷணம் செய்து கொண்டார்களாம்.  வியாசர் அந்த ஸ்திரீகளிடம் வந்தார். "நான் வயோதிகன்; அவனோ சின்னப் பையன்.. அப்படியும் என்னைக் கண்டதும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொண்டதேன்..? இது என்ன விபரீத ஆசாரம்?" என்று கேட்டார்.  "இந்த கேள்வியை உங்கள் பிள்ளை கேட்டாரா? எங்களைத் திரும்பிப் பார்த்தாரா? அவர் தன்மை எங்களுக்குத் தெரியும். நிற்கின்றதெல்லாம்  நெடுமால் என்று நினைப்பவர்; சர்வ பதார்த்தங்களிலும் பகவானைப் பார்க்கிறார்.  நீர் இன்னும் கீழ்ப்படியில் இருக்கிறீர்.  ஆகையினாலே உங்களைக் கண்டால் பயப்பட வேண்டியிருக்கிறது என்றார்களாம் அப்ஸர  ஸ்திரீகள்.  இதனால் வியாசரைக் குறைத்துச் சொன்னதாக அர்த்தம் ஆகாது. ஒருத்தரைக் குறைச்சுச் சொல்றமாதிரி சொல்லி அடுத்தவரை உயர்த்திச் சொல்றது.  இதை "நஹி நிந்தா ந்யாயம்" என்பார்கள்.  சுகபிரும்மரைப் போல் எதிலும் பகவானைப் பார்க்கும் ரிஷிகள், பகவான் நாமத்தைத் தனியே சொல்ல வேண்டியதில்லை... ஆனால் அப்படிப்பட்ட ரிஷிகளே விஷ்ணு சஹாஸ்ரநாமத்தைக் கானம் பண்ணுகிறார்கள்.  அனைத்து ரிஷிகளும் அபிப்ராய பேதமின்றி பண்ணுகிறார்கள்.   

3. பகவானாலே அடையாளம் காட்டப்பட்டது:
வியாசரை வேத வியாசர் என்று சொல்கிறோம். வேதத்தை விபஜிக்கிறவர் என்று பொருள். விபஜிக்கிறவர்..? பிரிக்கிறார்.
கலியுகத்திலேதான்   நால்   வேதங்களை   நான்கு   பிரிவினர் தனித்தனியே சொல்கிறார்கள்.   கிருத யுகத்திலே அப்படியில்லை.  எல்லா வேதங்களையும் பூர்ணமாகக்   கற்று உணர்ந்திருப்பார்கள்.  ரிக் வேதம் சொல்லும் என்றால் சொல்வார்கள்; சாம கானம் பண்ணும் என்றால் பண்ணுவார்கள்.. எல்லாவற்றையும் சேர்த்து தரித்தார்கள்.  இப்போது கலியுகமானதினாலே மந்த புத்தியும் மந்த பாக்யமும் உடையவர்களாயிருக்கிறோம்.
ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலேயும் அடுத்து வரப் போகிற கலியுகத்து மனிதர்களுக்கு உதவும்படியாகப் பரமாத்மாவே வியாசாவதாரம் பண்ணுகிறார்.  வேத சாரத்தை விபஜித்துக் காட்டுகிறார்.  பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்கு விபஜித்துத் தருகிறார்.  இப்படி வசிஷ்டர் ஒரு முறை வியாசாவதாரம் பண்ணியிருக்கிறார்.  பகவானே கருணை கொண்டு வேத வியாசராய் அவதரித்து வழங்கியது மஹா பாரதம்.  சாரம் பகவத் கீதை; அதன் சாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம்.  ரிஷிகள் கானம் பண்ணிய விஷ்ணு சகஸ்ர நாமத்தை பகவானே அடையாளம் காட்டியிருக்கிறார்.

4. பீஷ்மரால் உயர்ந்ததாகக் கொண்டாடப்பட்டது:
ஆங்கிலத்திலே "superlative  degree"  என்றொரு வார்த்தை சொல்வதுண்டு. அதற்கு மேலாக ஒன்றும் கிடையாது.  ஒப்பு உயர்வு சொல்ல முடியாமல் பெருமை உடையது என்று பீஷ்மரே ஏற்று விஷ்ணு சகஸ்ர   நாமத்தை எடுத்து ஆண்டிருக்கிறார்.  "மகரிஷிகளால் கானம் பண்ணப் பட்ட பரம நாமம்" என்று போற்றி உகந்திருக்கிறார்.

5. நோய் தீர்க்க வல்லது:
வைத்ய சாஸ்திரமான சரக சம்ஹிதையிலே சொல்லியிருக்கிறது.  விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லக் கேட்டால்  வியாதிகள் போகும்!  முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வேடிக்கையாச் சொல்வார்.  "எல்லோரும் உபநிஷத்படி நடக்கிறார்கள் - மாத்திர பலத்தை நம்புகிறார்கள்" என்று.  உபநிஷத் சொல்லும் மாத்ரா பலம் -  வேத கோஷங்களின் ஒலி மாத்திரைகளுக்கு உள்ள சக்தியை.  நாம் நம்புவதோ மாத்திரை (tablet)  பலத்தை. அந்த நரசிம்ஹனே பலம் என்று நம்பி சஹாஸ்ரநாமத்தைப் பூரணமாய்ச் சொல்லி மூன்று தடவை தீர்த்தம் கொடுத்தால் தலைவலி போய்விடும். அந்திம காலத்தை தடுக்கக் கூடிய சக்தி கூட சகஸ்ர நாமத்துக்கு இருக்கிறது.

நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சகஸ்ர நாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் கிடையாது.  சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.

6. கீதைக்குத் துல்லியமாய் அர்த்தத்தை உடையதனாலே:
கீதைக்கு சமானமா ஏதாவது உலகத்திலே உண்டா  என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.  இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத் சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய பீஷ்மர் சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ர நாமம். பகவானை காட்டிலும் பீஷ்மர் உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.
துளி கூட மிச்சமின்றி அந்த ஆகாயம் முழுவதையும் காகிதமாக்கி, ஏழு சமுத்திர ஜலத்தையும் மையாக்கி எழுதினாலும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை விளக்க முடியாது.

தொடரும் …

Thursday, October 18, 2012

PART-1, Chapter-2

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 2

அதிக சம்ஸ்கிருத ஜானமில்லாத ஒருத்தர் ரொம்பவும் பக்தியோடு தினமும் 108 தடவை சொல்லி வந்தார்.  “பத்மநாபோ, மரப்பிரபு ”.
“பத்மநாபோ, அமரப்பிரபு” என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே அரசனே என்று  அதற்கு அர்த்தம்.
ஆனால் “மரப்  பிரபு”. என்று  தப்பாகப் பதம்  பிரித்தவர் மரங்களுக்கு அரசனே  என்று  அர்த்தம்  பண்ணிக்கொண்டார். அந்த அர்த்தத்துக்கு ஏற்ப ஊர் கோடியிலிருந்த அரச மரத்தைச் சுற்றி வந்து பத்மநாபோ  மரப்  பிரபு  என்று  தினமும் 108 பிரதட்சணம் பண்ணினார்.
அந்த  வழியே போன ஒரு சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கி போயிட்டார். தவறாக உச்சரித்தவரை நிறுத்தினார், திருத்தினார். நீர் ரொம்ப உசந்த காரியம் தான் பண்றீர். ஆனால்  வாக்கு சரியில்லை. பத்மநாபோ, அமரப் பிரபு  அப்படின்னு சொல்லணும் என்று  கூறி அர்ததத்தையும் விளக்கினார். தவறக உச்சரித்தவர் ரொம்பவும்  வேதனைப்பட்டு அடாடா, தெரியாமலே சொல்லிவிட்டேனே .. எனக்குப் பாவம் சம்பவிக்குமா என்று  கவலயுடன் கேட்டார்.  
அதெல்லாம் சம்பவிக்காது. தெரியாமல் சொன்னதற்கு தோஷமில்லை. இனிமேல் அப்படிச் சொல்லாமல் சரியாகச் சொல்லு என்றார், திருத்தினார்.
மறுநாளிலிருந்து திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார். முதலாமவர் மரப்  பிரபு  அல்ல என்பதால் மரத்தைப் பிரதட்சணம் பண்ணுவதையும் நிறுத்தி விட்டார். வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடியே பத்மநாபோ அமரப்  பிரபு என்று  சொல்லி  வந்தார்.
அன்று இரவு, திருத்திய வித்வானின் சொப்பனத்தில் பகவான் வந்தார்.  உம்மை யாரு சம்ஸ்கிருதம் படிக்க சொன்னா? அப்படியே படிச்சதுதான் படிச்சீர் அந்த பக்தரை யாரு திருத்தச் சொன்னா? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைப் பிரதட்சணம் செய்யறதை நிறுத்திட்டார். அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா? உமக்கு விஷ்ணு புராணம் தெரியாதா?
ஜ்யோதீம்ஷி விஷ்ணு:,  புவனானி விஷ்ணு:, வநாணி விஷ்ணு:  என்று  பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா?
(ஜ்யோதீம்ஷி  = ஒளி, புவனானி = உலகங்கள், வனானி = காடுகள்)

நீர் திருத்திச் சொன்னதால் 108  பிரதட்சணங்கள் செய்யறதை அவர் நிறுத்தினார்.  திரும்பவும் போய் அவரிடத்திலே சொல்லும் மரப் பிரபு என்றே சொல்லச் சொல்லு என்று கோபித்துக் கொண்டார் பகவான். குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா? அது போல்தான் எல்லையற்ற கருணையுடைய பகவானும் நம்மைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கேட்கிறான்.



ஒருவருக்கு “க்ரு” என்று சொல்ல வராது. “க” வரும் இடத்தில் எல்லாம “த” என்று உச்சரிப்பார். அவருக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்க முயன்றார் ஒரு வித்வான்.
ஸ்ரீ க்ருஷ்ணாய நம: என்பதற்கு பதில் ஸ்ரீ திருஷ்ணாய நம: என்று தவறாகவே உச்சரித்தார் மாணவர். உமக்கு என்னால் சொல்லித் தர முடியாது என்று சலித்துக் கொண்டார் வித்வான். அங்கே இன்னொரு வித்வான் வந்தார். அவர் ஸ்ரீ த்ருஷ்னையே என்றே சொல்லட்டும் பாதகமில்லை என்றார் அந்த இரண்டாவது வித்வான்.
ஏன்?
ஸ்ரீ த்ருஷ்ணாய என்றால் ஸ்ரீயினிடத்திலே திருஷ்ணை உடையவன் என்று அர்த்தம்.
ஸ்ரீ (மகாலட்சுமி) திருஷ்ணை (அன்பு) அவர் சொல்வதும் பகவானையே குறிக்கும் என்றார்.
இந்தக் கதைகளைச் சொல்வதாலே, மந்திரங்களை, பகவான் நாமத்தைத் தப்பும் தவறுமாகச் சொல்லலாம் என்று அர்த்தம் இல்லை.  அறியாமையாலும் இயலாமையாலும் அவ்வாறு தவறாகச் சொன்னாலும் மனத்திலே அவன் நினைவு ஆத்மார்த்தமா இருந்தால் அதை அவன் அப்படியே ஏற்பான் என்கிறதுக்காகச் சொன்னது.
அடியேன் திருப்பதி போயிருந்த சமயம்... சுவாமி புஷ்கரணியில் ஸ்நானம் பண்ணப் போனேன்.  அப்போது அங்கே  தென்னாலியில் இருந்து வந்த குடும்பம், முடி கொடுத்து விட்டு ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தது.  அந்தக் குடும்பத் தலைவர் முங்கி எழுந்து தலைக்கு மேல் கைகூப்பி கோஹிந்தா கோஹிந்தா என்று பெருமானை அழைத்துக் கொண்டிருந்தார். கோஹிந்தா இல்லை, கோவிந்தான்னு சொல்லணும் என்று அவரை திருத்த அடியேன் எழுந்தேன். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் என்னை ஸ்தம்பித்துப் போகப் பண்ணின.
“ஏழுமலையானே ஒவ்வொரு வருஷமும் இதே நாளில் உனக்கு வந்து முடிகொடுத்து விட்டு உன்னை சேவிச்சுட்டுப் போகிறேன். போன வருஷம் போலவே இந்த வருஷமும் நான் சந்தோஷமா இருக்க அனுக்கிரகம் பண்ணு” என்று  உரக்க பிரார்த்தனை செய்தார் அந்த பக்தர்.
அவரை திருத்தணும் என்று எழுந்தவன் உடன் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.  "போன வருஷமும் அந்த பக்தர் கோஹிந்தா என்று தானே பகவானைக் கூப்பிட்டு இருப்பார். அதற்காக பகவான் அவருக்கு அனுக்கிரகம் பண்ணாமல் விட்டு விடவில்லையே .. கோஹிந்தா என்று சொன்னதற்கே ஒரு வருஷம் ஆனந்தமாக அவர் இருந்திருக்கிறாரே. இந்த வருஷமும் போன வருஷத்தைப் போன்றே சந்தோஷத்தைத் தானே பக்தர் கேட்கிறார்".  இதை உணர்ந்ததும், அவரைத் திருத்தணும் என்கிற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். எம்பெருமானுக்கு நம்மிடத்திலே என்ன வாத்சல்யம் (கருணை) என்று சிலிர்ப்பு வந்தது.


பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது சங்கீர்த்தனம் பண்ணனும்னு போன வாரம் சொன்னது எப்படி சாத்தியப்படும்?  இதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே வைத்திருக்கிறது.



பெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறவர்களுக்குத் தோளிலே காய்த்துப் போயிருக்கும். அதுபோல் நாம் சங்கீர்தனத்தைப் பழக்கமகப் பண்ணிக் கொள்ளணும். "நாவிலேயே தழும்பு எற்பட்டுப்போகும் அளவுக்கு திரு நாமத்தை உச்சாடனம் பண்ணனும். எத்தனை தடவைன்னு கேட்கக் கூடாது" என்கிறார், திருமங்கையாழ்வார்.

தழும்பு எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால்.. அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது. எழுந்திருக்கும் பொது, துயிலெழும்போது "ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி" என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.  உரக்க, பெரிசா சொல்லணுமா? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால், பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்டபடி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும். வெளியிலே கிளம்பிப் போகும்போது "கேசவா" என்று உச்சரிக்கணும்.  திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார் "கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன".. கேசவா என்று சொன்னால் இடர்கள் எல்லாம்  கெடுமாம்.  அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும் போது கேசவா என்று அழைப்பது.
ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித்திருக்கிறார் "கேசவனைப் பாடவும், நீ கேட்டே கிடத்தியோ, தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்" என்கிறது திருப்பாவை.  "கேசவா கேசவா" என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம்.  நீ அதை கேட்டும் கிடந்து உறங்குகிறாயே"... என்று துயில் எழுப்புகிறார்.
அடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் “கோவிந்தா” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப்  பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.

சிரமம் இல்லை, கஷ்டமான நியமம் இல்லை. ஹரி, கேசவா, கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கிறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியும் இல்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது.  ஆனால், சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பி இருக்கணும். "சொல்லிப் பார்ப்போமே, பலன் இருக்கிறதாவென்று" அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக்கூடாது.
காரணம், அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை.  "சர்வோத்தமஸ்ய  கிருபையா"..  சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான், கருணைதான்.  முதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக் கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத் அனுபவத்தைக் கேட்கும். அந்த மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய அமையப் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

தொடரும் …


Friday, October 5, 2012

PART-1, Chapter-1






குறையொன்றுமில்லை (முதல் பாகம் )

அத்தியாயம் 1

யமுனை நதி புண்ணியத்தை தேடி கொண்டது.  கோதவரியோ களங்கத்தை தேடிக்கொண்டது.  எப்படி என்கிறீர்களா?

"தூய பெருநீர் யமுனை துறைவனை" என்று பாடிய ஆண்டாள், கண்ணனுடைய அவதார காலத்தில் உபகாரம் பண்ணின யமுனை நதிக்கு நற்சான்றிதழ் தருகின்றார்.  என்ன உபகாரம்?
வசுதேவர் கண்ணனை தூக்கிக்கொண்டு நந்தகோகுலத்துக்கு போகையில், அவர் கேட்காமலேயே இடுப்பளவுக்கு வடித்து வழி விட்டது அந்த யமுனை நதி.  புண்ணியத்தை, தூய்மையை தேடிக்கொண்டது.

ஆனால் கோதாவரி நதியோ களங்கத்தை தேடிக்கொண்டது.  எப்படி? ஸ்ரீ ராமாவதாரத்தின்போது  ராவணன் சீதாபிராட்டியை அபகரித்து போகிறான்.  அப்போது பிராட்டி கதறி அழுகிறார் "ஹே கோதாவரி, நீயும் பெண் நானும் பெண். எனக்கு நேரும் துன்பத்தை  நீ இப்படி பார்த்துக்கொண்டு இருக்கியே, என் பர்த்தா வந்து என்னை தேடுவார். அப்போதாவது சொல்லு ராவணன் என்னை அபகரித்துப் போனான் என்று தவறாமல் சொல்லு".

ராமன் வந்து தேடியபோது "சீதையை கண்டீர்களா"? என்று மரம் மட்டையிடம் எல்லாம் கேட்டபோது கோதாவரி பதிலே சொல்லவில்லையாம்.  ஒரு அலை கூட அடிக்கலை. ராவணனிடம் இருந்த பயத்தினால் பேசாமல் இருந்து விட்டாள்.

உண்மை தெரிந்தவர்கள், உரிய சமயங்களிலே அதை சொல்ல வேண்டும் - வெளிபடுத்த வேண்டும்.  அப்படியில்லாமல் "நமக்கு அதில் நேரடி சம்பந்தமில்லைன்னு" வாய் பொத்தி இருந்துட்டா களங்கம் வந்துடும். அப்பேர்ப்பட்ட களங்கம்தான் கோதாவரிக்கு ஏற்பட்டது.

திரேதா யுகத்திலே கோதாவரிக்கு ஏற்பட்ட இந்த களங்கம் கலியுகத்திலே தீர்ந்து போயிற்று... எப்போது தீர்ந்தது என்று கேட்டால் ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள் பிறந்தப்போ, பெரியாழ்வார் அந்தக் குழந்தைக்கு "கோதா" (கோதை) என்று பெயர் வைத்தாரே ... அப்போது தீர்ந்தது கோதாவரியின் களங்கம்.

இந்தக் கதையை சொல்லி அடியேன் ஆரம்பிக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு... "நாம சாம்யம்" - பெயர் ஒற்றுமை என்கிறதன் பெருமை நேயர்களுக்குப் புரிய வேண்டுமில்லையா...? அதனால் சொன்னேன்.

நம் குழந்தைகளுக்கும் தெய்வீகத் திருபெயர்களைச் சூட்டுவது இந்த "நாம சாம்யம" கருதிதான்.  பெயர் சூட்டப்படுபவர்களுக்கும் ராமா, கிருஷ்ணா என்று அந்தப் பெயர்களைச் சொல்லி அழைப்பவர்களுக்கும் ஒருசேர நன்மைகள் உண்டாகும் என்றுதான்.

"பாதேயம் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்" என்கிறது கருடபுராணம். பகவானின் கல்யாண குணங்களைச் சொல்லும் திருநாமங்கள் ஒரு மூட்டை என்று இதற்கு அர்த்தம்.
மூட்டை என்றல் சுமையல்லவா? என்று யோசிக்க கூடாது.  பூர்வகாலத்தில் ஊர் விட்டு ஊர் செல்பவர்கள் நடந்து தான் போவார்கள். கையில் ஒரு மூட்டையை எடுத்துப் போவார்கள். கட்டுச் சாத மூட்டை. வழியிலே குளக்கரையிருக்கும். மரத்தடியில், குளக்கரையில், மூட்டையைப் பிரித்து வைத்துச் சாப்பிடுவார்கள்.  களைப்பும் தீரும், போய்ச் சேர வேண்டிய இடத்துக்கும் போய்ச் சேரலாம்.

வாழ்க்கை என்கிற பயணத்துக்கான கட்டுச்சாத மூட்டைதான் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்.  சிரமத்தை, களைப்பை, அலுப்பைப் போக்கும் மூட்டை.  பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள் "நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே"... பகவானை எண்ணிக்கொண்டே நாம சங்கீர்த்தனம் பண்ண வேண்டும்.  சங்கீர்த்தனம் என்றால் இடைவிடாது எப்பவும் சொல்லிக் கொண்டேயிருப்பது என்று பொருள்.

இடைவிடாது சொல்கிற அளவுக்கு அப்படி என்ன பெருமையிருக்கிறது, ஏன் சொல்ல வேண்டும் என்று தர்க்கம் பண்ணலாம்.  நமது ஹிந்து மதத்துக்குப் பரம பிரமாணம் வேதம் தான். பக்தி, பிரபத்தி, சரணாகதி, கர்ம யோகம், ஜானயோகம் எல்லாம் வேதத்தில் உள்ளவை தான்.  பகவானே கூட அந்த வேதத்தைத்தான் மேற்கோள் கட்டிச் சொல்கிறார்.
ஏகாதசி தினம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஈரவாடை சேவை.  ஆபரணங்களை எல்லாம் களைந்து விட்டு வெறும் துளசி மாலை அணிவித்திருக்கிறார்கள். ஈரம் படிந்த வஸ்திரம் திருமேனியில் கிடக்கிறது. கற்பூர ஹாரத்தி நடக்கிறது.  கொள்ளமாளா இன்ப வெள்ளமாய் - ஆச்சர்யமாய் தோற்றமளிக்கிறார் பகவான்.
அப்போது ஜீவாத்மாவுக்கும் பரமாத்வுக்கும் பெரிய சண்டையே வந்ததாம். "நான் சுதந்திரன்" என்று வாதடியாதம் ஜீவாத்மா. "இல்லை நீ எனக்குக் கட்டுப்பட்டவன்" என்றான் பகவான். "எதுனால அப்படிச் சொல்கிறாய்" என்று எதிர்த்துக் கேட்டதாம் ஜீவாத்மா.
இந்த சமயத்திலே பகவான், நான் சொல்றேன், அதனால் நீ என் அடிமை என்று பதில் சொல்லலை.

"வேத மூல ப்ரமாணாத்" என்று பதில் சொல்கிறார்.  அதாவது, வேதத்தின் மூலமான ஓம்காரத்தை ஆராய்ந்தால் உன் எதிர் கேள்விக்குப் பதில் கிடைக்கும் என்று சத்தியம் பண்ணுகிறார்.
"நான்" என்ற சப்தமே ஒலிக்காமல், அந்தப் பெருமானே "வேதத்தில் பதில் தேடு" என்று சொன்னதன் மூலம் வேதத்தின் உயர்வைப் புரிஞ்சுக்கணும்.  அவனையும் நம்மையும் சேர்த்து வைக்கிறது அந்த வேதம்தான்.
அப்பேர்ப்பட்ட வேதத்திலே.. திருநாம வைபவம் பற்றிச் சொல்லியிருக்கிறதா? திவ்யமாய்ச் சொல்லியிருக்கிறது. நம்மைப் பார்த்து ரொம்ப ஆதரவாக அந்த வேதம் சொல்கிறது " பகவான் கட்டிப் பொன் போலே.. அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே"
கட்டிப்பொன் மிக உசத்தியானதுதான்.  ஆனால் அதைத் தலையில் வச்சுக்க முடியுமா? கழுத்திலே போட்டுக்க முடியுமா? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா?

ஆனால் பகவானின் திருநாமன்களோ உடனே எடுத்தாளக்கூடிய ஆபரணங்கள்.  அணிந்தும், அணியச் செய்தும் மகிழலாம், அழகு பார்க்கலாம்.
பிள்ளைலோகாச்சார்யார் தமிழில் மூன்று அழகான சூத்திரங்கள் மூலம் இந்த வேதப் பொருளை விளக்குகிறார்.
"வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம் "
வாச்யன் - பகவான்; வாசகம் - அவன் நாமம்.  பகவான் கைவிட்டாலும் விட்டுவிடுவான்.  ஆனால் அவன் நாமம் கைவிடாது.
"அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும்"  ஹே விஷ்ணு! இதை ஏற்றுக்கொள் என்று சொல்லி ஹோமம் பண்ணுகிறோம்.  அவன் எங்கே வேண்டுமானாலும் இருக்கட்டுமே, அவன் பெயரைச் சொல்லி அளிப்பது அவனுக்குப் போய்ச் சேருகிறது.
"திரௌபதிக்கு ஆபத்திலே ஆடை சுரந்தது கோவிந்தா நாமமிறே"
வஸ்திர அபஹரணம் நடக்கும் போது திரௌபதி கூப்பிடுகிறாள். "ஹே கிருஷ்ணா... ரக்ஷமாம் சரனாகதாம்" என்று .  அனால் பகவான் அவளை ரட்சிக்கவில்லை. இதை அந்த பகவானே சொல்கிறார்.  "ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு குறை உண்டு.  கிருஷ்ணாவதாரத்திலே திரௌபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை... என்கிறார்.   திரௌபதிக்கு ஆடை சுரந்ததே? உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம் என்று கேட்டால் பகவான் சொல்கிறார் "நானில்லை, என் கோவிந்தா நாமம் அவளை ரக்ஷித்தது"
அதனால்தான் ஆண்டாள் பாடினாள் "இப்படியெல்லாம் குறைப்பட்டுக் கொள்கிறாயே, உன்னிடம் கூட குறை என்பது இருக்குமா? என்று அர்த்தமாகும்படி திருப்பாவையில் "குறையொன்றும் இல்லாத கோவிந்தா" என்று அவனை அழைத்தாள்.  கோவிந்தா என்கிற நாமம் இருக்கும்போது உனக்குக் குறை இல்லை.  உன்னை ஆச்ரயிக்கிறவர்களுக்கும் குறையில்லை என்றாள்.  பகவானின் நாமமே நம்மை ரட்சிக்கும்.  அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.
எல்லாம் சரிதான். இப்படி இடைவிடாது கோவிந்தா என்று சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் உலகக் கடமைகளைச் செய்ய வேண்டாமா? அவனுடைய பல நாமங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளனவே, வாயிலே நுழைய வேண்டாமா? இப்படி நியாயமான சந்தேகங்கள் பல பேருக்கு வரத்தான் செய்யும்.  அவற்றுக்கான பதில்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.


தொடரும் ...