Saturday, December 22, 2012

PART-1, Chapter-8


குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 8

ஒரு பானை இருக்கிறது அது காரியம்.  அதாவது உண்டான வஸ்து.  அந்த வஸ்துவுக்கு - காரியத்துக்கு - மூன்று காரணங்கள். 
முதலாவது உபாதான காரணம்.  பானையை உருவாக்க எது மாறியதோ அது உபாதான காரணம்.  இங்கே பானையை உருவாக்கப் பயனான மண் உபாதான காரணம். 
அடுத்தது மனுஷ்ய சக்தி - அந்த சக்தி தானே பானையை ஆக்குகிறது? இது நிமித்த காரணம் எனப்படுகிறது.  பானையை உருவாக்கியவர் குயவர் நிமித்த காரணமாகிறார்.
குயவருக்குப் பானை செய்ய சக்கரம் வேண்டும்  ஒரு தண்டம் வேண்டும்.  இவை பானை செய்ய அவருக்கு உதவுவதால் சஹகாரி காரணம் எனப்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் காரணங்களை ஆராய்ந்து கொண்டே போகலாம். இந்த உலகத்தைக் காரியமாக எடுதுண்டோமானால் பரமாத்மா அதற்கு உபாதான காரணமா? நிமித்த காரணமா? சஹகாரி காரணமா? என்று விசாரிக்கலாம்.
இதைப் பற்றி உபநிஷத் சொல்வதை ஆசார்யர்கள் எல்லாம் விவரிக்கிறார்கள். எல்லாக் காரணங்களுமாய்  அவனே இருந்து வருகின்றான். ஜகத் காரண வஸ்து அவன். பகவானே விச்வமாய் காட்சி அளிக்கிறான். 
தத்வம் அஸி என்கிற மகா வாக்யத்தை ஒரே பதத்தில் சொல்லணும் என்றால் விச்வம் என்று சொல்லணும்.  அந்த விச்வத்தில் நடப்பனவற்றுக்கு எல்லாம் எத்தனை காரணம் சொன்னாலும் ஐந்தாவது காரணமாய் பரமாத்மா இருக்கிறான்.   இந்த உபந்யாஸத்தையே எடுத்துக் கொண்டோமானால், இதற்கு ஐந்து காரணம். 
முதலாவது, உபந்யாஸகரின் சரீரம்.  அது உபந்யாஸம் நடக்கிற இடத்துக்கு வந்து சேரணும்.
சரீரம் மட்டும் உபந்யாசத்துக்குக் காரணம் ஆகிடுமா?   சொல்கிறவனுடைய வாக்கு, கேட்கிறவனுடைய செவிப்புலன் என்கிற இந்திரியங்கள் இரண்டாவது காரணம்.
இந்த இரண்டுக்கும் மேலே, மூன்றாவது காரணம் மனசு. உடம்பு, இந்திரியங்களுடன் மனசும் கூடச் சேரணும்.
ஒருத்தர் ராத்திரி சொகரியமாய் தலையணை வெச்சுண்டு தூங்கறார்.  விடிஞ்சதும் பார்த்தா   தலையணை அடியிலே மூன்று பாம்பு.  அது இருக்கிறது மனசுக்கு தெரிஞ்சிருந்தால் தூக்கம் வருமோ?  மனசும் சேர்ந்து தூங்கினதால் தானே அவராலே தூங்க முடிந்தது. ஆகையினாலே எந்தக் காரியத்துக்கும் மனசும் கூடச் சேரணும்.
நாலாவதாக, சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மா காரணம்.  சாந்தோக்ய உபநிஷத்திலே ஒரு கதை உண்டு  உடம்பின் காது, மூக்கு, கண், வாய், எல்லாத்துக்கும் ஒரேயடியாய் பெரிய சண்டை வந்ததாம்.  எல்லாம் பிரும்மாவிடம் போய் "எங்களுக்குள் யார் பெரியவன்? நீங்களே சொல்லுங்கள்" என்றதாம்.  அதற்கு பிரும்மா சொன்னார் "நீங்கள் ஒவ்வொருத்தராக ஒரு வருஷ காலத்துக்கு தனித்தனியே சரீரத்தை விட்டு பிரிந்து போங்கள், யாரு விலகறதாலே சரீரத்துக்கு அதில் பாதிப்போ அவர் தான் உயர்த்தி". அப்படியே ஆகட்டும்னு முதலில் கண் ஒருவருஷத்துக்குப்  பிரிந்து இருந்ததாம்.  "தீய விஷயங்களைப் பார்க்காமல் நிம்மதியாய் இருந்தேன்" என்றார் உடம்புக்குரியவர்.
அதே போலக் காதும் மூக்கும் மற்ற இந்திரியங்களும் அவரை விட்டுப் பிரிஞ்சு போன போதும் கஷ்டமில்லாமல் இருந்தார்.
ஒரு நாள் அந்த உடலுக்குள் இருந்த பிராணன் புறப்பட்டுப் போனது.  அவ்வளவு தான்,  பிராணன் கிளம்பினதும் மற்ற எல்ல இந்திரியங்களும் மொத்தமாக புறப்பட்டுப் போய் விட்டன.
ஆகவே, எந்த ஒரு செயலுக்கும் பிராணன் நாலாவது காரணம் என்று தெரிகிறது. ஆனால் பிராணன் மட்டுமே தனித்துச் செயல்பட முடியுமா?  உடம்பும் இந்திரியங்களும் மனசும் ஆத்மாவுடன் சேரணும்.  அதோடு இன்னொரு காரணமும் சேருகையில் தான் பூரணத்துவம் உண்டாகிறது.  அது என்னவென்று பார்த்தால் அதுக்கு ஒரு கதை சொல்லலாம் - நடந்த சம்பவம்.
ஸ்ரீரங்கத்திலே எம்பார் காலட்சேபம் பண்ணுறார்.  அப்போ வடக்கு சித்திரை வீதிக்காரர் ஒருத்தர் திண்ணையிலே வீணாகக் காலத்தை போக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் எல்லோரும் அவரை, காலட்சேபத்துக்கு வரக் கூடாதா, இப்படி வீணா காலத்தைப் போக்கறீர்களே என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார்கள்  யார் கேட்ட போதும் அவர் மசியவில்லை; அப்படியே மறுபக்கமா தலையைத் திருப்பிக் கொண்டு விட்டார். இப்படியே பல நாட்கள் கழிந்தன.  திடீரென்று ஒருநாள் திண்ணைக்காரர் தாமே காலட்சேபத்துக்குக் கிளம்பி வந்தார்.
எல்லோரும் ரொம்ப மகிழ்ந்து போனார்கள். பிரவசனம் பண்ணின எம்பார் கேட்டார், "இத்தனை நாளா வராத இவர் இன்னைக்கு வந்திருக்கார் என்றால் அதற்கு யார் காரணம்? ஆசார்யார் காரணமா, அவரை வரச் சொல்லி வற்புறுத்திக் கூப்பிட்டவர்கள் காரணமா?  ஆசார்யார் காரணம் என்று நினைக்கிறவர்கள் கையை உயர்த்தலாம்.  ஆசார்யர்தானே எதிரிலிருப்பவருக்கு எவ்வளவு புரியும் என்று பார்த்து, அதற்கு ஏற்பச் சொல்பவர்? அதனாலே அவர் காரணம்னு நினைக்கறவர்கள் கை உயர்த்தலாம் என்றார்.  கூட்டத்தில் பாதி பேர் கையை உயர்த்தினார்கள்.
சரி, அழைத்தவர்களின் வற்புறுத்தலால் தானே இவர் வந்திருக்கிறார்.  அதனால், இவரை வரச் சொல்லிக் கூபிட்டவர்களே இவருடைய வருகைக்குக் காரணம் என நினைக்கிறவர்கள் கை உயர்த்தலாம் என்றார்.  கூட்டத்தில் இன்னொரு பாதி பேர் கையை உயர்த்தினார்கள்.

அந்த சமயத்திலே ஆசார்யர் எம்பார் சொல்கிறார், "இப்போ சொன்ன எதுவுமே காரணமில்லை.  இவரை இங்கே வரவழைச்சதுக்குக் காரணமானவன் பரமாத்மா தான். இத்தனை நாளாக இல்லாமல் திடீரென்று இங்கே வரணும் என்று அந்த புத்தியைக் கொடுத்ததே அந்த பரமாத்மாதான்"என்றார்.
உலகத்தின் சகல காரியங்களுக்கும் ஐந்தாவது காரணமாய் இருப்பவன் அந்த பரமாத்மாதான்.  
ஆடு மாடு மாதிரி மனிதர்களை ஓட்டுவதில்லை பகவான்.  ஜீவாத்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான இடத்திலே சுதந்தரத்தைக் கொடுக்கிறான்.  நல்லது இது - கெட்டது  இதுன்னு காட்டிக் கொடுத்து அது எதைப் பிடிச்சுக்கறதுன்னு கவனிக்கிறான்.  "மனிதன் நல்லதைப் பற்றுகிறானா? தீயதைப் பற்றுகிறானா? என்று சோதித்துப் பார்ப்பது அவனுடைய லீலை.

ஆகையினாலே, விச்வம் என்கிற சப்தத்துக்குப் பொருள் கேட்டால், 'ஜகத்காரண வஸ்துவாக பரமாத்மா இருக்கிறான்.  அவனே காரியமாய் இப்படிப் பரிணமிக்கிறான்.  விச்வத்துக்குக் காரிய காரணம் அவனே,  ஆனதனாலே விச்வம் என்கிற சப்தத்தினால் பரமாத்மா அழைக்கப்படுகிறான்'.  இதுக்கு மேலே இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.  சுவாபாவிகமாக - அதாவது இயற்கையிலேயே எண்ணிறந்த திருக்கல்யாண குணங்கள் இருப்பதாலே பகவான் என்று அழைக்கப்படுகிறான் அவன்.  பகவான் என்றால்?  புத்தி உடையவன், புத்திமான், குணமுடையவன், குணவான், பகத்தை உடையவன் பகவான்.  என்ன குணங்கள்?  ஆறு குணங்களை அவனுக்கே உரியவையாக விவரிக்கிறார்கள்.  பகம் என்றால் ஆறு குணங்கள்.

முதலாவதாக ஞானம். குறுகுதல், விரிதல் என்பது பகவானுடைய ஞானத்துக்குக் கிடையாது. மனித ஞானம் மாதிரி இ ல்லை அது.  மனிதர் ஒருவர் தத்துவம் படிக்கிறார்.  அவர் புத்தி ஒருநாள் அதை கிரஹிக்கிறது போல் இன்னொரு நாள் கிரஹிப்பதில்லை.  ஏன்?  அந்த புத்திக்கு சங்கோச விஹாசம் இருக்கிறதனாலே  அது அப்படி நடந்து கொள்கிறது.  சில நாள் குறுகிப் போயிடறது;  சில நாள் சாத்விகமான ஆகாரம் சாப்பிடாததாலே ஒத்துழைக்கிறதில்லை.  இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் பகவானுக்கு கிடையாதே.  நமக்கு இந்த்ரியங்கள் எல்லாம் வேண்டியிருக்கு.  அப்படியில்லை பரமாத்மா.  பகவானுடைய ஞானம் சங்கோச விஹாசம் இல்லாத ஞானம்.

பலம் என்பது பகவானின் இன்னொரு குணம்.  எல்லாவற்றையும் தாங்கும்படியான பலம். பதினாலு லோகத்தையும் தாங்கறான் பரமாத்மா.  நாம் அவஸ்தைப் பட்டுத்தாங்கற மாதிரி தாங்கறானா? அதெல்லாம் இல்லை. சங்கல்ப ஆதீனத்திலே - அப்படி இருக்கணும் என்று அவன் நினைக்கிறதாலேயே மட்டுமே தாங்குகிற பலம் அவனுக்கு இருக்கிறது.

ஐச்வர்யம் மூன்றாவதான குணம்.  நித்ய விபூதி என்று சொல்லப்படுகிற வைகுண்டம். லீலாவிபூதின்னு சொல்லக் கூடிய இந்த உலகம். உலகத்தைச் சேர்ந்தவை - அதன் உரிமைக்காரர் ஒருத்தர்,  காவல்காரர் இன்னொருத்தர்.   காவல்காரருக்கு மாம்பழத்தை அனுபவிக்கும் உரிமை இல்லை.  இந்த லோகத்தின் உரிமைக்காரனும், காவல்காரனும் அவனே.
அர்ச்சனை பண்ணும்போது எந்த மந்திரம் சொன்னாலும் நம: (நமஹ - உச்சரிப்பு) என்று முடிக்கிறோமே... இதற்கு அர்த்தம் என்ன?  நம: என்றால் இல்லை என்னுடையது என்று பொருள்.  அதாவது அத்தனை விஷயங்களையும், என் பொருட்டில்லை, உனக்காக என்று அவனிடம் சமர்ப்பிக்கிறோம்.
எனதில்லை என்று சொல்வதுதானே வழக்கம்.  இல்லை என்னுடையது என்று ஏன் வர வேண்டும்?  எனது என்று முதலில் சொல்லி விட்டாலே அப்புறம் இல்லை என்று சொல்ல மனம் வராமல் போய் விடுமோ என்கிறதுக்காகத்தான் இல்லை என்னுடையது என்று சொல்ல வைத்தது.   ஐச்வர்யம் அத்தனையும் அவனுடைய குணம்.  ஜெயிக்கும் தன்மை.  உயர்ந்த பராக்கிரமத்தாலே சர்வத்தையும் அடக்கி, ஆளும்படியான ஆதார குணம்.
 
சக்தி - ஐந்தாவது குணம்.  உலகத்திலே அததுவும் அதனதன் இடத்திலே நிற்பதற்கு ஆதார சக்தியாக இருக்கக் கூடியவன். 

ஆறாவது குணம் - தேஜஸ்.  ஒளிப் பிழம்பாய், சூரியனாகவும், சந்திரனாகவும், நட்சத்திரங்களாகவும் ஜொலிக்கிறான் பகவான்.

இந்த ஆறு குணக்கூட்டங்களுக்குப் பகம் என்று பெயர்.  இவற்றை உடையவன் பகவான். விச்வ சப்தத்துக்கு பகவான் என்று பொருள் ஆனதினாலே அப்படிப்பட்ட பகவானை விச்வம் என்று சொல்லி நாம் ஆராதனை பண்ண வேண்டும். 
சஹஸ்ரநாமத்தின் முதல் நாமாவான விச்வம் என்பதற்கு அப்படியொரு முக்கியத்துவம்.

தொடரும் ...



 

 

Monday, November 26, 2012

PART-1, Chapter-7


குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 7

பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார்.  சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார்.  வந்து சேவை  கொடுக்கிறார்.  அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.  ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார்.  அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான்.  இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை  ஆனால் அவர் ரொம்ப சதுரர் - கெட்டிக்காரர் - பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள்.  உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார்.

உடனே பரமாத்மா கேட்டானாம் - இவ்வளவு கேட்கிறீரே ... நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?
உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி? என்றார் பக்தர்.
என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா? பகவான் கேட்கிறார்.
அதைத்  தெரிஞ்சு வச்சுண்டுதான் அதைக் கொடுக்க வந்தேன்.
என்னது அது?
கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன் நீ சஞ்சாரம் பண்ணினாய் அல்லவா .. அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை.. அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்.. என்றார் பக்தர். 
பகவான் பதிலே சொல்லலை.  வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆகவே மனசை சமர்ப்பிக்கணும்.  தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன்.? எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி என்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்.
பூரணனான  அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான்.  இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான்நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள்ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது.  
 
திவ்யாபரணங்கள் அவனுக்கு உண்டா? அவற்றை ஏன் தாங்கியிருக்கிறான்?   விச்வமாய்க் காட்சி அளிப்பவனே;  தாமரைக் கண்ணனே, உனக்கு ரூபம் கிடையாது.  ஆயுதம் கிடையாது, ஆகாரம் கிடையாதுன்னு அதைச் சொல்கிறோமே.. அவையெல்லாம் உனக்கு இருப்பதைப் பார்த்துக் கொண்டே சொல்கிறோமே என்று கேட்கலாம். ரூபம் இருக்கிறது என்றால் அது அவன் பொருட்டு அல்லபக்தர்கள் சேவித்து மகிழ்வதற்காகதான் இருக்கிறது. அவனுக்கு ஆயுதங்கள் இருக்கிறது என்று சொன்னால், அவை நம் இடுக்கண் களைய அவன் தரித்தவை.  அவன் பொருட்டு அல்லாமல் நம் பொருட்டு தான் அவன் அவற்றை ஏந்துகிறான்ஆபரணங்கள்.  திவ்யமேனியில் இவ்வளவு திருவாபரணங்கள் தரித்திருக்கிறானே. ஆபரணத்துக்கு அழகு செய்யும் பெருமாள்; முன்னழகைக் காட்டிலும் பின்னழகு விஞ்சி நிற்கும் பெருமாள், என்று பராசர பட்டர் ஸ்ரீ ரங்க நாதருக்குக் கட்டியம் சொல்கிறார்.

ஒருத்தர் ஒரு லட்ச ரூபாய் செலவில் பெருமாளுக்கு முத்துக் கொண்டை  செய்வித்தாராம். அதை அணிவித்து கற்பூர ஹாரத்தி காட்டி சேவிக்கிறார்கள் எல்லோரும்.  "ஆஹா" அவன் எவ்வளவு அழகா இருக்கான்" என்கிறார்கள்.  இப்படிச் சொன்ன வார்த்தை ரொம்ப அபசாரமான வார்த்தை.  இந்த முத்துக் கொண்டை இல்லையென்றால் அவன் அழகன்  இல்லையா?

உபசாரமாய்ச் சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லணும்.  "அவன் திருமேனி சம்பந்தப்பட்டதனால் அல்லவோ இந்த முத்துக் கொண்டை இவ்வவளவு சோபை பெற்றது" என்று சொல்ல வேண்டும்.  அதே மாதிரி தான் இந்த ஆத்மாவும்.  அவன் திருவடிக்கு அர்ப்பணமானதினாலேதான் அழகு பெறுகிறது.  இந்த சரீரத்திலே அது உட்கார்ந்து கொண்டுருந்தால் அதற்கு அழகு ஏது?இன்னதால் தான் அவனுக்கு அழகும் தேஜசும் உண்டாகின்றன என்று சொல்ல முடியாத அளவுக்கு சர்வத்தையும்தன்னுள்ளே அடக்கி, காத்து, அழிக்கும் படியான ஆற்றல் கொண்டவன் பரமாத்மா. ருக்மிணீ அவனை புவனசுந்தர் என்று அழைக்கிறாள்.  உலகத்திலேயே அழகுடையவன் நீ ஒருவன் தான்.  நீ எல்லா சராசரங்களுக்குள்ளேயும் 
இருப்பதனாலே அவை அழகு பெறுகின்றன.  அதனாலே உலகத்திலே அழகன் நீ ஒருவன்தான் என்று அர்த்தம்.  
ஒருத்தர் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறார்.  நான் அழகன்தான் என்று அவருக்கு தோன்றுகிறது.  அவரைக் காட்டிலும் பல அழகர்கள் இருக்கலாம்அப்படியும் அவருக்கு அப்படித் தோன்றுவானேன்?  அவருக்குள்ளேயும் பகவான் அந்தர்யாமியாய் உட்கார்ந்திருப்பதினாலே தான் அப்படித் தோன்றுகிறது.

சுயக்ஜன் என்றொரு (மாணவன்) வித்யார்த்தி இருந்தான்.  தினமும் குருவின் வஸ்திரத்தைத் துவைத்து வைப்பது அவன் பொறுப்பயிருந்தது. அதை எடுத்து உதறி குரு தாமே உலர்த்திக் கொள்வார்.  ஒருநாள் அப்படி உதறிய பொது, மாண்டு போன மீன்கள் அதிலிருந்து உதிர்ந்தனஅவற்றினால் ஏற்பட்ட அசுத்தம் வஸ்திரத்தில் கறை கறையாகப் படிந்திருந்தது.     
ஆற்று நீரில் வஸ்திரத்தை அலசும் பொது அதில் சிக்கிய மீன்களைக் கவனிக்காமல் சேர்த்துப் பிழிந்திருக்கிறான்.   இவ்வளவு அலட்சியாமா என்று குரு கோபித்துக் கொண்டார்.  உடனே சாபம்தான்.  நீ பன்றியாகக் கடவாய் என்று சாபம் கொடுத்து விட்டார்.  மாணவன் நடு நடுங்கி போய்  விட்டான்.  சுவாமி, பன்றி வாழ்க்கையை நினைத்தாலே நடுக்கமாய் இருக்கு. எப்படியாவது சாபத்தை போக்குங்கள் என்று கெஞ்சினான்.  எனக்கு சாபம் கொடுக்கத்தான் தெரியும், போ, என்று சொல்லி விட்டார் குரு.  சாபம் பலிதமாவதற்குள் சக வித்யார்த்திகளிடம் போனான், நடந்ததைச் சொன்னான்.  
ஆசார்யர் சுமுகமாய் இருக்கிற நேரத்திலே அவரிடம் கேட்டு, நான் எந்த இடத்திலே இருக்கேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  நான் இருக்கிற இடத்துக்கு வந்து என்னை அடித்துக் கொன்று விடுங்கள். என்னாலே அந்த வராஹா ஜன்மத்தைத் தாங்க முடியாது என்று வேண்டிக் கொண்டான்.
உடனே அந்த வித்யார்த்திகள், கூட படிச்சதுக்காக நாங்கள் இதைக் கூட பண்ண மாட்டோமா என்றார்கள்சாபம் பலித்துவிட்டது.  ஒரு நாள் சாயங்காலம் குரு சந்தோஷமாக இருக்கிறார்வித்யார்த்திகள்  அவரிடம் போய் காலில் விழுந்து, சேவித்து கேட்கிறார்கள். சுயக்ஜன் எங்கே பிறந்திருக்கிறான், அவனுக்கு நாங்கள் உதவணும் என்கிறார்கள்

குரு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கே ஒரு பன்றி, ஆறு குட்டிகள் போட்டிருக்கும்  அதில் ஐந்து குட்டிகள் கருப்பயிருக்கும்.  ஒரு குட்டி மட்டும் முன்னும் பின்னும் வெள்ளைத திட்டு உள்ளதை இருக்கும் என்று அடையாளம் காட்டுகிறார்.

சீடர்கள், குரு சொன்ன இடத்தில் போய்ப் பார்க்க, அவர் சொன்னபடியே ஆறு குட்டிகளில் ஒன்று மட்டும் வேறுபட்டுத் தெரிந்தது. குரு சொல்லிக் கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொன்னார்கள்.  மற்ற குட்டிகளெல்லாம் ஓடிவிட அது மட்டும் அவர்களின் அருகே வந்தது. எல்லா சிஷ்யர்களும் தடியை ஓங்கிக் கொண்டு தயாரானார்கள்.  அந்தப் பன்றிக்குட்டியோ ஓட ஆரம்பித்தது. . நில்லு, நில்லு,  நீ சொல்லித்தான் வந்திருக்கோம் என்றார்கள்.   அப்போ நான் சொல்லியிருக்கலாம்  ஆனால், இப்போது என்னை அடிக்காதீர்கள்.  என் தாயார் என்னிடம் எத்தனை அன்பாக இருக்கிறாள்.  என்ன பட்டான மேனி இது என்றது பன்றிக்குட்டி.   வித்யார்த்திகள்  விக்கித்துபோய் நிற்கையிலே, என்னை அடிக்கவே அடிக்காதீர்கள் என்று அது ஓடிப் போய்  விட்டது

அந்த சிஷ்யர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டு குருவிடமே திரும்பிப் போனார்கள்.  ஆசார்யர், நீங்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பேசாமலிருந்தேன்.  உங்களுக்கு வேண்டுமானால் பன்றி பண்ணுகிற காரியம் அருவருப்பாய் இருக்கலாம்.  ஆனால் அதற்கு அது யோக்யமாய்த்தானே இருக்கு. திருப்தியாத்தானே இருக்கு.  அதனுடைய ஆனந்தத்தை நாம் இல்லாமல் பண்ணி விட முடியுமா என்றார்.  இப்படி ஒவ்வொரு உயிருக்குள்ளேயும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் பகவான் என்பதை தெரிவிப்பது தான் சுயக்ஜன் கதை.  அதனால் தான் அவரவர்க்கு அவரவர் உருவம் உயர்த்தியாகத் தெரிகிறது  அதனாலே எந்த உயிரையும் நாம் அலட்சியம் பண்ணிவிட முடியாது.

பத்து லட்ச ரூபாய்க்கு நோட்டுக்  கட்டாக அடுக்கி வைத்திருக்கு.  நமக்கு அந்த ரூபாய் உயர்த்தியாகத் தெரிகிறது.  அதிலே இரண்டு லட்சம் இருந்தால் உபயோகமாய் இருக்குமே என்று நினைக்கிறோம்.  ஆனால், அங்கேயிருந்து நாலு கட்டெறும்பு வரும். அந்த நோட்டுக் கட்டு மேலே ஊர்ந்து மறுபக்கம் போய்க் கொண்டேயிருக்கும். நமக்கு ரொம்ப உயர்த்தியாய்  உள்ள பொருள், கட்டெறும்புக்குப் பிடிக்கிறதா? அதுக்கு அதன் உயர்வு தெரியவேயில்லை. அப்படியும் ஒரு ஜீவன் உலகத்திலே  ஜீவிக்கிறதில்லையா ?  இதனாலே உலகத்திலே எதுவுமே பரமார்த்தம் இல்லைன்னு தெரியறது.  

பரமாத்மாதான் பரமார்த்தம்.

அவன் அந்தர்யாமியாய் இருந்து, பூரணனாய் இருந்து, பூரணமாய் ஆனந்தம் கொடுப்பதினாலேதான் புவன சுந்தர என்று ருக்மிணீ அவனை அழைத்தாள்.

தொடரும் ...



Friday, November 23, 2012

PART-1, Chapter-6

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 6

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு நாமத்துலேயும் நால்  வேத மந்திரங்களும் அடங்கியிருக்கு.  அதனாலே அதைப் பாராயணம் பண்ணினால் வேத பாராயணம் பண்ணின பலன் என்று சொன்னேன்.  அதிலும் ராம நாமத்துக்குத் தனியொரு சக்தி. ராம நாமத்துக்கு எப்படி அதன் சக்தி வருகிறது?  காயத்ரி மந்திரத்தின் பொருளை ராமாவதாரத்தின் போது பகவான் நடித்துக் காடியதாலே.  அதனால்தான் வால்மீகி, ராமாயணத்தில் ஆயிரம் சுலோகத்துக்கு ஒரு தடவை காயத்ரியின் ஒரு அக்ஷரத்தை வைத்தார்  மொத்தம் 24,000 சுலோகம் ராமாயணத்தை பாராயணம் பண்ணினா காயத்ரியைப் பாராயணம் பண்ணின பலன் கிடைக்கும்.
 காயத்ரி மந்திரம் எல்ல மந்திரங்களுக்கும் தாய்.
ஒருமுறை தேவாசுர யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, தேவர்களுக்கே நித்திய ஜெயம் உண்டாகிக் கொண்டிருந்தது.  33வது நாள் அந்த தேவதைகள் படுதோல்வி அடைந்தார்கள். இன்றைக்கு நாம் ஏன் தோற்றோம்? என்று ஆராய்ச்சி பண்ணினார்கள்.  காயத்ரியை ஜபிக்காமல் சென்றதால் என்று பதில் கிடைத்தது.  ஜெயம் வந்தபோது மந்திரத்தை மறந்ததால் தோல்வி உண்டாயிற்று.  மனுஷ சுபாவமே அதுதான்  சரீரத்தைக் கொடுத்த பகவானை மறந்து, உடம்பு தளர்ந்து போகிறபோது மட்டுமே அவனை நினக்கிறோம்.
 அதனால் தான் குந்தி தேவி ஒரு வித்தியாசமான வரத்தைக் கண்ணனிடம் கேட்டாள்.   வாழ்க்கையிலே விபத்துக்களை உண்டு பண்ணச் சொல்லி வரம் கேட்டாள்.   ஏன் இப்படி கேட்கிறாய் என்றான் பரமாத்மா. அப்போதுதானே உன் நினைவு சதா மனத்திலே இருக்கும் என்றாளாம் குந்தி தேவி.
 அதைப் போல தோல்வி வந்தபோதுதான் காயத்ரியை மறந்தோம் என்று உணர்ந்தார்கள் தேவர்கள்.  கடைசியில் அவள் இருந்த இடத்தைத் தேடி அலைந்து போய்க் கண்டுபிடித்து ஸ்தோத்திரம் பண்ணினார்கள்.  ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவுடன் காயத்ரி, தேவர்களின் பக்கம் திரும்பினாளாம்.  ஸ்தோத்திரத்தின் மகிமையைப் பாருங்கள்.  விஷ்ணு சஹஸ்ரநாமம் கூட, ஸ்தோத்தரிக்கத் தகுந்தவன் பரமாத்மா: ஸ்தோத்திரப் பிரியன் அவன் என்கிறது.

அப்படியிருக்கிறது ஒரு பெருமையா என்று கேட்டால், அப்படியிருப்பதும் அவன் கருணை தான் என்று சொல்லணும்.  நமது ஸ்தோத்திரம் அவன் பிரபாவத்தை முழுதும் சொல்ல முடியுமா?  ஏதோ கொஞ்சம் சொல்லலாம்.  அவனிடம் இருப்பதையும் இல்லாததையும் நம்மாலே முழுதும் சொல்லி ஸ்தோத்திரம் பண்ண முடியாது.  நாம் ஸ்தோத்திரம் பண்ணும் போது பகவான் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டால் என்ன செய்ய முடியும்?  அப்படிச் செய்யாமல் ஸ்தோத்திரப் பிரியனாக இருந்து நமக்கு அருள் செய்வதே அவன் கருணை. 

பகவான் ஸ்தோத்திரப் பிரியனாக இருப்பதாலே தான் அவனிடமிருந்து தோன்றிய நாமும் ஸ்தோத்திரப் பிரியர்களாக இருக்கிறோம்  மண்ணின் குணம் அதைக் கொண்டு செய்யப்படும் பானைக்கு வருகிற மாதிரி. காரணத்தின் குணம், அதன் பயனான காரியத்துக்கும் வரும்.
ஆக, வேதமந்திரங்கள் எல்லாமே ஸ்தோத்திரம்,  துதி பாடுவதால்தான். ஸ்தோத்திரம் செய்த தேவர்களின் பக்கம் காயத்ரி வந்தாள். அவர்களுக்கு வெற்றி உண்டாயிற்று.  அப்படிப்பட்ட காயத்ரி, தேவர்களுக்கே அனுக்கிரஹம் செய்தாள்  என்றால் அந்த அருள் மேலும் தேவையான நமக்கு எத்தனை செய்வாள்.  அந்த காயத்ரியை தேவர்கள் எப்படித் துதித்தார்கள் என்றால், "விச்வமஸி, விச்வாயு" என்று ஆரம்பித்துத் துதித்தார்கள். அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் நாமமாக இருக்கிறது.
விச்வம் என்பதன் விரிவான பொருள் என்னஸ்ரீபதியான பகவானுடைய மூச்சுக்காற்றாக விளங்கக் கூடியது வேதம். அதன் மந்த்ரார்த்தத்தைக் கேட்டோமானால் விஷேசமான பலன் கிடைக்கும்.  திருவேங்கட மலையைப் பற்றி சுவாமி தேசிகன் சொல்கிறார்.  வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பே வேதமே பர்வத (மலை) ரூபத்திலே அமைந்திருக்கிறது.  "வேம்" என்றால் "மகா பாவம்" என்று பொருள்.  "கடையத்தி" என்றால் "பொசுக்குதல்".  நமது மகா பாவங்களை நெருப்பிலே பொசுக்கி விடக்கூடிய ஆற்றல் திருவேங்கட மலைக்கு இருக்கிறது. வேதங்களிலே ஏழு காண்டம் உண்டு.  திருவேங்கடத்தில் ஏழு மலை.  அந்த வேதங்களால் தாங்கப்பட்டு நிற்கிறான் திருவேங்கடமுடையான்.  மலை வடிவிலே வேதம் இருக்கு என்று சொன்னால் புரியவில்லையே என்று கேட்கலாம்.  வேதத்தைப் பாராயணம் பண்ணினால் முழுமையாகப் புரிகிறதா? புரியாவிட்டாலும் உயர்த்தியான பாவம் எற்படுகிறதோயில்லையோ, நம்முடைய அந்த பாவத்தை உணர்ந்து பரமாத்மா மேலும் மேலும் புரியும்படியாகப் பண்ணுகிறான்.  வேத வடிவிலே மலை இருக்கிற மாதிரி, சப்த வடிவிலே பரமாத்மா இருக்கிறான்.  அதனால்தான் வேதாந்த விசாரத்திலே கருத்து வேறுபாடு கொண்ட தர்ம தாசார்யர்கள் கூட (சங்கரர், ராமானுஜர், மாத்வாச்சர்யர்) "வேதம் நித்தியமாய்" இருக்கக்கூடியது என்று ஒப்புக் கொண்டார்கள்.
பிரளய காலத்தில் கூட வேதம் அழிவதில்லை.  அதைத் தாங்கிக்கொண்டு வெளியே விடுகிறான் பரமாத்மா. வேத கோஷத்தின் உயர்ந்த சப்தத்துக்கு பிரும்ம கோஷம் என்று பெயர்.  "சமே, சமே" என்ற ஒலி மீண்டும் மீண்டும் ஒலிக்கக் கேட்கலாம்.  "சமே" என்றால், அது எனக்கு உண்டாகட்டும் என்று அர்த்தம்.  பகவானிடத்திலே என்ன கேட்க வேண்டும் என்பதைக் கூட வேதம் நமக்குச் சொல்லித் தருகிறது.  நாமாக கேட்டால் அல்பமான விஷயத்தைத்தான் கேட்போம்.   இந்திரனுடைய தாயாரான அதிதி சொல்கிறாள் - கற்பக விருஷத்திடம் போய் கௌபீனம் கேட்டாற் போலே" என்று.  அப்படியல்லாமல், மங்களம் கீர்த்தி, ஷேமம் எல்லாம் உண்டாகட்டும் என்று வேதம் கேட்கிறது. விச்வம் சமே என்பதும் கோரிக்கைகளும் ஒன்று.  விச்வத்தை எனக்கு கொடு என்று கேட்டால் உலகம் மொத்தமும் கிடைக்குமா?  அது பெருங்கோரிக்கை இல்லையா? 
இந்த கோரிக்கைக்கு என்ன வியாக்யானம் பண்ணுகிறார்கள் என்றால், விச்வ சப்தத்துக்கு பகவான் என்று அர்த்தம்.  விச்வம் என்றால் பகவான்.  சஹஸ்ர நாமத்திலே முதல் சப்தம் விச்வம். அந்த சப்த்ததினாலே பரமாத்மா சொல்லப்படுகிறான்.  அவனையே நாம் அடைய வேண்டும் என்பது கோரிக்கை.  அந்த பரப்ரும்மத்தையே நாம் அடைய வேண்டும்.  
அந்த பரமாத்மாவை, வா, வா - வந்து என்னை ரக்ஷி என்று பிரார்த்திப்பதுதான் விச்வம் சமே.  சுவாமி, நீ வரமாட்டாயா? சீக்கிரமாக வரமாட்டாயா?  காலம் குறுகாதா? என்று நெக்குருகி ஒருவர் உபன்யாசம் பண்ணுகிறார்.
பகவான் கருடாரூடராய் வந்து இப்பவே வா, கருடனில் ஏறிக் கொண்டு போகலாம் என்று அழைத்தால் போக முடியுமா?  அவனே வந்து  கூப்பிட்டாலும் போவதற்கு எத்தனை பேர் சித்தம்?
ஆகையினாலே பிரபுவினிடத்திலே என்ன சொல்ல வேண்டும்?  நான் கூப்பிட்டால் நீ வந்துவிடுவாய்.  ஆனால், நீ கூப்பிட்டால் நான் வருவேனா?  ஒன்று செய்.  இந்த சரீரம் கீழே விழுகிற வரையிலே அதிலே இருந்து கொள்கிறேன். அதற்குப் பிறகு இன்னொரு சரீரத்தைக் கொடுத்து விடாதே என்று பிரார்த்திக்கணும்.
அதற்கும் அவன் சித்தமாயிருக்கிறான் எண்ணும்போது, அவன் தயையை  என்னவென்று சொல்வது.  பகவான் தயையைக் குறித்து தயா சதகம் என்றே பாடியிருக்கிறார் சுவாமி தேசிகன்.   எத்தனையோ குணமிருந்தாலும் தயைகுணம் இல்லாமல் பிரகாசிக்காது.  அம்மா தாயே, நீ பகவானிடத்தில் இல்லையென்றால் மற்றைய குணங்களெல்லாம் அவனுக்கு தோஷமாகுமே ஒழிய குணங்களாக என்கிறார்.  நாம் அழைத்ததும் தயையினாலே ஓடி வருகிறவனைப் பார்த்து இப்போது நான் சித்தமாக இல்லை; அப்புறம் என்னை அழைத்துப் போ என்று சொன்னால் அதற்கும் அவன் தயார்.   இப்படிப்பட்ட தயாளனான பரமாத்மா நமக்குக் கிடைப்பது விச்வ சப்தத்தினாலே.. விச்வ சப்தத்தை தியானம் பண்ணினால், ஓம் விச்வஸ்மை நம: ஓம் விச்வாய நம: என்று அதைச் சொல்லி அர்ச்சனை பண்னினால், அவன் தயை இல்லாமல் போகுமா, கிருபை கிடைக்காமல் போகுமா?
விச்வம் என்கிற சப்தத்துக்குப் பூரணத்துவம் என்றும் ஒரு பொருள் உண்டு.  பகவான் எதிலும் குறைவில்லாதவன் என்று அர்த்தம்.  அதனால்தான் பூரணன், கொள்ளக் குறைவிலன் என்றெல்லாம் அவனைப் பாடியிருக்கிறார்கள்  சுவாமி தேசிகன் சொல்கிறார்: தனதனைத்தும் அவர்தமக்கும் வழங்கியும் தான் மிக்க விளங்கக் கூடியவன் பரமாத்மா.  கொடுத்ததினாலே அவனிடத்திலே குறைவில்லை. பகவான் கொள்ளக் கொள்ளக் குறைவிலன்.  கொள்ளமாளா இன்பவெள்ளம் அவன் என்கிறார் ஆழ்வார்.  கொடுக்கக் கொடுக்கக் அவனிடத்திலே விருத்தியாகிக் கொண்டேயிருக்கிறது.  அதனால் அவன் பூரணன் ஆகிறான்.
எல்லாம் அவனிடத்தில் இருக்கிறது என்றால் அவனுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்?  தேங்காயை அவனிடத்தில் சமர்ப்பிக்கிறோம்.  அவனிடத்திலே தேங்காய் இல்லையா? புஷ்பத்தை சமர்ப்பிக்கிறோம்.  அவனிடத்திலே புஷ்பம் இல்லையா?  இந்த கேள்விகளுக்கான பதில் ஒரு அழகான கதையிலே அடங்கியிருக்கிறது - அதை அடுத்த அத்தியாயத்திலே பார்ப்போம்.

தொடரும்...
 



PART-1, Chapter-5

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 5

நால் வேதங்களிலே அதர்வ வேதம் ஒரு பரிசோதனைக் கூடம் மாதிரி.  மற்ற  மூன்று (ரிக், யஜுர், சாம) வேதங்கள் சொல்வதைப் பரிசோதித்துப் பார்க்கிற கூடம்.  இன்றைக்கும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளபடற  பல உண்மைகள் இந்த அதர்வ வேதத்திலே இருக்கிறது.  தீர்த்தம் என்பது இரண்டு வாயுக்களின் கூட்டுப் பொருள்.  ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் அதில் உள்ளது என்கிறோம்.
        
        
H2O, H2O என்று மனப்பாடம் பண்ணுகிறோம்  அதர்வ வேதம் இதையே "பிராணம் ஏகம் அன்யத்வே" அதாவது பிராண வாயு ஒரு பங்கும் இன்னொரு வாயு இரண்டு பங்கும் தண்ணீரில் இருக்கிறது என்கிறது.  அங்கிரஸ் மகரிஷியை தியானம் பண்ணச் சொல்கிறது வேதம் - எல்லா தோஷங்களையும் நிவர்த்தி பண்ணுகிற அளவுக்கு அவர் ஹோமங்கள் பண்ணியிருக்கிறார் என்பதால்.  சயன யக்ஞம்  என்று ஒரு ஹோமம் பண்ணினார் அவர்.  அதற்கு சந்திர லோகத்திலிருந்து மண் எடுத்து வந்து பூவுலக மண்ணுடன் கலந்து பிசைந்து ஹோம குண்டம் தயாரிக்கணும் என்று சாத்திரம் "சந்த்ரமஸி கிருஷ்ணம்" என்று வேதம் சொல்கிறது. (சந்திர மண்டலத்து மண் கருப்பாகயிருக்கிறது என்று இதற்குப் பொருள்)
கல்கத்தா, பிர்லா  பிளானடோரியத்துக்கு அடியேன் போனபோது சந்திர மண்டலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.  கருப்பாக இருந்த அதைப் பார்த்ததும் "சந்த்ரமஸி கிருஷ்ணம்" என்கிறதுதான் நினைவில் வந்தது. வேதம் சொன்ன வாக்கியம் பொய் இல்லை. ஆனால் அன்றைக்கு அவர்கள் ராக்கெட்டில் பறந்து போய் சந்திரனிலிருந்து மண்ணைக் கொண்டு வரல்லை.  அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு, "ஹே, சந்திர மண்டலத்து மண்ணே  வான்னா" வந்துடும்.  மூடின கண்ணைத் திறந்து பார்த்தால் மண் அங்கே இருக்கும்.  இப்போது நாம் இயந்திர சக்தியைத் தான் நம்ப வேண்டியதாயிருக்கிறது.  ஆனால் எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது மந்திர சக்தி.
மந்திரம் அபரிமிதம் (வரையறையற்றது). யந்திரம் பரிமிதம்(வரையறைக்குட்பட்டது) என்கிறது அதர்வ வேதம்.  எதிர்காலத்தில் வரவிருந்த யந்திர சக்தி பற்றிக் கூட வேதத்தில் சொல்லியிருக்கிறது பாருங்கள்.  இப்போது நான் பேசுவதை டேப் ரெகார்டரில் அப்படியே பதிவு பண்ண முடிகிறது.  இதை நாம் ஏதோ முன்னேற்றம்னு  நினைக்கிறோம்  ஆனால் அப்படியில்லை அது.  டேப் ரிகார்டர் செய்யறதை செய்யக் கூடிய சக்தியுடையவர்களாய் நாம் இருந்தோம்  ஒரு முறை கேட்டால் அப்படியே மனசுல பதிஞ்சுபோயிடும் .  இப்போது நாம் சக்தியை வேறே விஷயங்களிலே ஏத்தி வச்சிருக்கோம்  அதனாலே அந்த ஆற்றல் இல்லை நமக்கு.


இவ்வளவையும் எதற்குச் சொல்கிறேன் என்றால் வேதம் சொல்வது ஏதோ மாய மந்திரமில்லை, ஆதாரமுள்ள விஞ்ஞானம் என்கிறதுக்காக.
போன அத்தியாயத்தில், விஷ்ணு சஹாச்ற நாமத்திலே நரசிம்ஹா அவதாரம் விஷேசமாக  சொல்லப் பட்டிருக்கிரதாகச் சொன்னேன்.   அந்த நரசிம்ஹ அவதாரம் பற்றி அதர்வ வேதம் விஞ்ஞான பூர்வமாக விளக்குகிறது  பிரஹலாதனுக்கும் ஹிரண்ய கசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம், நரசிம்ஹ அவதாரத்தை மின்சக்தி  என்கிறது.  பிரஹலாதன் அஸ்தி  (உண்டு) என்று சொல்கிறான்.  ஹிரண்ய கசிபு நேதி  (இல்லை) என்கிறான்  அஸ்தி என்கிற பாஸிட்டிவ் தத்துவனும் நேதி  என்கிற நெகடிவ்வும் மோதிக் கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம்.  ஒளிமயமாய் நரசிம்மன் தோன்றினானாம்.  அவனுடைய அட்டகாசம் ஏழு உலகம் தாண்டிப் போய், பிரும்மா அமர்ந்திருந்த தாமரையை ஓர் அடி அடித்ததாம்.  பிரும்மாவைக் கீழே தள்ளியதாம். பிரும்மாவை மட்டும் ஏன் தள்ள வேண்டும்? இருக்கிறவனுக்கெல்லாம் வரத்தைக் கொடுத்துவிட்டு, நீ மட்டும் ஜபமாலையை உருட்டிக் கொண்டு மனைவியின் (சரஸ்வதி) வீணா கானத்தைக் கேட்டிண்டிருக்கியே என்றுதான் பிரும்மாவை தள்ளியதாம்.
ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்  முல்லர் கூட நரசிம்ம அவதாரத்தை An Electrical Phenomenon என்றுதான் விவரிக்கிறார்  நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு. ஒளியாய் இருக்கக் கூடியவன் நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும் சஹஸ்ர நாம தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.
பிரணவத்தோடு ஆரம்பித்து "விச்வம்" என்று முதல் நாமாவை விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சொல்கிறோம்.  விச்வம் என்கிற சப்தம் என்ன?  அது ஒரு நாமம், ஒரு பதம் மட்டுமில்லை.  வேதத்திலே வரும் பொருள் அது.  பகவானே விச்வம் என்று சொல்வதாக ஆகிறது  விச்வம் என்றால் பிரபஞ்சம்.  நாம் பார்க்கிற உலகம் பார்க்கப்படுவதால்தான் அதற்கு லோகம் என்று பெயர்.
உபநிஷத் சொல்கிறது: காரணமாகிய பரப்ருஹ்ம்மத்தை நாம் உணர வேண்டும். எதைக் கொண்டு தெரிந்து கொள்வதாம்?  சாஸ்திரத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம். சாஸ்திரமாகிய உபநிஷத், காரணமாகிய பரப்ருஹ்ம்மத்தைத் தெரிந்து கொள்ள, காரியமாகிய பிரபஞ்சத்தைப் பார் என்கிறது. எதனிடத்திலிருந்து பிரபஞ்ச வஸ்துக்கள் எல்லாம் உண்டாயிற்றோ, எதனால் அவை ரக்ஷிக்கப்படுகின்றனவோ எதனிடத்தில் அவை லயமடைகின்றனவோ அதுவே இதற்குக் காரணம் என்று பரப்ருஹ்ம்மத்தைக் குறித்துச் சொல்லப்படுகிறது.   காரணம் காரியம் இரண்டும் ஒன்றே.   பரமாத்மா ஒருவன்.  ஒருவனே பலவாகி நிற்கிறான், பலவும் அவன்தான்,  ஒன்றும் அவன்தான்.  விச்வம் என்பதற்கு இதுவே பொருள்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே ரொம்ப முக்கியமான பகுதி எது என்று சிலர் கேட்கலாம்  இப்படிக் கேட்டால் கீதை பாராயணம் பண்ண முயன்ற ஒருவருடைய கதை நினைவில் வருகிறது.  பகவத் கீதை கற்றுக் கொள்ள  போன சிஷ்யர், குருவிடம் "எந்த பகுதி முக்கியம்" என்று கேட்டானாம்.  "முதல்லேருந்து பதினேழு அத்தியாயங்களை விட்டுவிடு, பதினெட்டை மட்டும் விடாதே. அது மோக்ஷ சந்நியாச யோகம்,  அதைத் தெரிஞ்சுண்டா போதும்" என்றார் குரு. பதினெட்டைப்  புரட்டிப் பார்த்தவர், அதிலே ஏகமா சுலோகம் இருக்கே, எந்தெந்த சுலோகம் முக்கியமோ அதை மட்டும் குறிச்சுக் குடுங்களேன் என்றார். பதினெட்டிலே முன்னேயும் பின்னேயும் விட்டுவிடு, இரண்டு சுலோகம் மட்டுமே மனனம் பண்ணு, என்று எளிமைப் படுத்தினாராம் குரு. "அதிலேயும் முக்கியமான சொற்களை மட்டும் சொல்லுங்களேன், எல்லாவற்றையும் மனனம் செய்வது கஷ்டம்" என்று சிஷ்யர் சலித்துக் கொள்ள, கடைசியில், நீ எதை விட்டாலும் விடு.. மா சுச என்கிறதை மட்டு விட்டுடாதே என்றாராம் குரு.  மா சுச - இதுதான் பகவத் கீதையின் சாரம்.  ஸ்ரீ  பகவானுவாசா மா சுச: பகவான் சொன்னான் "கவலைப்படாதே".  நாம் எப்படியிருந்தால் கவலைப்படாமலிருக்கலாம் என்று பகவான் சொன்னான்.  அவன் சொன்னபடி நடந்தால் கவலைப்படாமல் இருக்கலாம் என்றான்.  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் சொன்னான்? என மீண்டும் கேட்டால், அதற்கு கீதையின் முதல் அத்தியாயத்துக்குத்தான் திரும்பவும் போக வேண்டும்.

ஸ்ரீ  பகவானுவாசா மா சுச: என்பதை கீதையின் சாரமாகச் சொன்னது போல விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் சாரமாக எதைச் சொல்லலாம்?   நித்தியம் சஹஸ்ர நாமம் பாராயணம் பண்ணுகிற ஒருவர், ஒரு திடீர் அவசரத்தின் போது நேரமில்ல்லாமல் போனால் சுலபமாகச் சொல்லலி முடிக்க வழி இருக்கிறதா?  இதை அன்றைக்கே பார்வதி பரமசிவனிடம் கேட்டு விட்டாள்.  "ஆயிரம் திருநாமங்களை இலகுவான உபாயத்திலே சொல்வதற்கு வழி உண்டா?  அதற்கு ஈச்வரன் அழகாக பதில் சொல்கிறார்.
ஈச்வரோ வாசா:
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே

வரானனே - அழகான திருமுக மண்டலம் கொண்டவளே என்று பார்வதியைக் கொண்டாடுகிறார் பரமசிவன்.  "ராமா ராமா ராமா" என்று மூன்று தடவை சொன்னால், சஹஸ்ரநாமத்துக்கு அது துல்யமானது என்கிறார்.   அதற்காக நித்தியமே நாம் "ஸ்ரீ ராம ராம ராம" என்று சொல்லிவிடலாம்னு வைத்துக் கொள்ளக் கூடாது.  நித்யம் சஹஸ்ரநாம பராயணம் பண்ணணும்.  அது அபூர்வமாக முடியாமல் போகிற தினத்தில் "மூன்று முறை ராம நாம சொன்னால் போதும்" என்று ஈச்வரனே பேசுகிறார்.
மூன்று முறை சொல்வது ஆயிரம் நாமங்களுக்கு ஈடாகும்?   திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்திலே எண்ணில் அடங்கி  

மூன்று முறை சொல்வது ஆயிரம் நாமங்களுக்கு எப்படி ஈடாகும்?   திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்திலே எண்ணில் அடங்கி உள்ள தத்துவத்தை எடுத்து சொல்கிறார்  வேத சமக மந்திரமும் எண்ணிக்கையைக் கொண்டாடுகிறது.  ராமா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், ர  வர்க்கத்திலே ரா என்பது இரண்டாவது எழுத்து.  ம என்பது ஐந்தாவது எழுத்து (வடமொழியின் ப  ப  ப  ப  ப  ம  வரிசை) இரண்டை ஐந்தால் பெருக்கினால் கிடைப்பது பத்து.  ஆக ராம என்ற ஒரு சொல்லுக்குரிய எண் 10, ராம, ராம, ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண்  10 x 10x 10 அதாவது ஆயிரம்.  ஆக, ராம, ராம, ராம என்று மும்முறை சொல்வது ஆயிரம் திருநாமங்களுக்கு துல்யமானதுதானே.  ராம நாமத்தின் மகிமையை கம்பன், வாலி வதைப் படலத்திலே சொல்கிறான்.  ராமனின் அம்பில் அவன் நாமத்தை வாலி கண்டதை விவரிக்கிறான்:
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் எண்ணும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
இதனினும் உயர்வு ஒரு நாமத்துக்கு என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்?

தொடரும் ...






Wednesday, October 31, 2012

PART-1, Chapter-4



குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 4

எம்பெருமான் திருநாமங்கள் அவன் பெருமைகளைக் காட்டிலும் மேலானது என்று சொன்னேன்... வேதமே சொல்கிறது.  "யக்ஜமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும்.  யக்ஜம் பண்ணின பலன் கிடைக்கும்"..  கலியுகத்திலே கடும் அனுஷ்டானங்களைக் கடைப் பிடித்து யக்ஜமெல்லாம் பண்ண முடியாதுன்னு வேதத்துக்கே தெரியும்.  கீதையின் கடைசிப் பேச்சாக வருவதை சரம ஸ்லோகம்னு சொல்றது. மகா மந்திரம் அது.  அது என்ன சொல்கிறது தெரியுமா..? "எல்லா தர்மங்களையும் நன்றாக விட்டு, என்னையே சரணமடைவாய்" என்கிறது.  தர்மங்களை விடுவது என்பது நித்ய கடமைகளான சந்தியாவந்தனம், மாத்யானிகம் போன்றவற்றை விட்டு விடுவதல்ல. நியமத்தோடு பண்ண முடியாத பெரிய யக்ஜங்களை விட்டு விடலாம் என்று அர்த்தம்.
இதற்கு இன்னொரு வியாக்யானமும் சொல்வதுண்டு.. கலியுகத்திலே எல்லா தர்மங்களும் நம்மை விட்டு தூர, தள்ளி அகன்று போய்விடுகின்றன. "இவனாலே யக்ஜமெல்லாம் முறைப்படி பண்ண முடியாது"  என்று அவற்றுக்குத் தெரியுமாம்!  அதனால்தான் நம் மேலே பரிவு கொண்டு, வீணான விஷயங்களிலே நாம் காலத்தைக் கழித்துவிட அனுமதிக்காமல் மாற்றுவழி சொல்லியிருக்கிறது.  யக்ஜம் பண்ணினால் என்ன திருப்தியை பகவான் அடைவானோ, அதே திருப்தியை அவன் திருநாமத்தை சொன்னால் அடைஞ்சுடுவான்.  எம்பெருமான் நாமங்களால் சமஸ்த யக்ஜ பலனும் நமக்குக் கிடைக்கும்.
பகவான் நாமா நமக்கு என்ன உபகாரம் பண்றது என்று கேட்டால் மூன்று விதமா உபகாரம் பண்றது.
திருஷ்ட பலம்
அதிருஷ்ட பலம்
திருஷ்டாதிருஷ்ட பலம் என்று மூன்று வகையான பலத்தைக் கொடுக்கிறது.  நேராக, கண் கூடாக எல்லோரும் பார்க்கும்படியான நேர் பலன்.   நேராக வந்து காரியத்தை நடத்திக் காடும் பெருமை, திருநாமத்துக்கு உண்டு.  இதைத்தான் திருஷ்ட பலம் என்கிறது.
திருஷ்ட பலத்துக்கு உதாரணமாக பாகவதத்த்திலே ஒரு சம்பவம் வருகிறது.
ஜாமி என்றால் நல்ல ஸ்த்ரீ என்று அர்த்தம்.  அஜாமி என்றால் அதற்கு நேர் எதிரானவர்!  அத்தகைய ஸ்த்ரீயின் சேர்க்கையுடையவனாக இருந்தான் அஜாமிளன். காட்டிலே தர்பை கொண்டு வர போனவன், அங்கு பார்த்த ஸ்த்ரீயுடன் தங்கி பத்து குழந்தைகளைப் பெற்றான். எண்பத்தெட்டு வயது நிறைந்த காலத்தில், அஜாமிளன் படுத்த படுக்கையானான்.  அந்த ஸ்த்ரீ அவனை கைவிட்டு விட்டாள்.  கவனிக்க யாருமில்லை.  அந்திம காலத்திலே மூன்று யம பட்டர்கள் வந்து அவன் பக்கத்திலே நிற்கிறார்கள். (வழக்கமாக இருவர் தான் வருவார்கள், ஆனால் அவன் "மகா பாபி" என்பதால் யமன் மூன்றாவதாக ஒரு ஆளை அனுப்பினானாம்)  நடுநடுங்கி, கதிகலங்கி போனானாம் அஜாமிளன்.  என்ன செய்வதென்று புரியாமல், சற்று தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த தனது பத்தாவது புதல்வனைக் கூப்பிட்டானாம்.

"நாராயணா"என்று அவன் தன் குழந்தையைத் தான் கூப்பிட்டான்.  கூப்பிட்டவுடனேயே, பீதாம்பரதாரியாக  சங்கு சக்கரத்தோடு எம்பெருமான் போன்றே, நான்கு பேர் வைகுண்டத்திலிருந்து வந்து யம தூதர்களை விரட்டினார்கள்.  அந்தக் கட்டத்திலே அஜாமிளன் எண்ணினான்.  "அடடா! இப்படிக் கடைசி காலத்திலே என் குழந்தையின் பேரைச் சொன்னதற்கே பகவான் ஓடி வந்து காப்பாற்றினானே! ஆயுள் முழுவதும் அவன் பெயரைச் சொல்லியிருந்தால் எத்தனை  கதிபாலன் அடைஞ்சிருப்பேன்"
அப்புறம் அஜாமிளன் கூட முக்தி அடைந்தான். அதனாலே "அவனைப்போல் நாமும் இருக்கலாமே" என்று எண்ணினால் அது நம் கையில் இல்லை.  நம் சரித்திரம் அஜாமிள சரித்திரம் ஆகாது.  அப்போதைக்கிப்போதே நாம் பகவான் நாமாவைச் சொல்லி வைக்கணும்.
ஒருத்தர் ரொம்ப உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாயிருந்தார். போகிற வழிக்கு அவருக்குப் புண்ணியம் கிடைக்கட்டுமே என்று அவருடைய கடைசிப் பிள்ளையைக் காட்டி "இவன் யாரு" என்று கேட்டார்கள் (அவர் கடைசிப் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர்)
"இவனா இவன் என் கடைசிப் பிள்ளை" என்று சொல்லிவிட்டு உயிரை விட்டுவிட்டார் அவர்.  அஜாமிளன் சரித்திரத்தைச் சொன்னது திருஷ்ட பலம் பற்றித் தெரிஞ்சுக்கறதுக்காக. எல்லோரும் அறியும் வண்ணம் நேராக உணர்த்தும் பலனை அவன் நாமத்தின் மூலம் பெறுகிறோம்.

அடுத்து, அதிருஷ்ட பலம்.  திரௌபதி சரணாகதி அடைந்த பொது அவளுக்குப் புடவை சுரந்தது அதிருஷ்ட பலத்துக்கு உதாரணம். அதாவது மறைந்து நின்று உதவக்கூடியது பகவான் திருநாமம்.

திருஷ்டா திருஷ்டா பலனுக்கு உதாரணம் கஜேந்திர மோக்ஷம். ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைத்ததுமே பகவான் அதிவேகமாக வந்து ரக்ஷித்திருக்கிறான்.  "ரங்கநாதா! உன்னை நமஸ்கரிக்கவில்லை   நான்.. அன்னைக்கு கஜேந்திரன் அழைத்ததும் ஓடி வந்தாயே, அந்த வேகத்துக்கு நமஸ்காரம் என்கிறார் பராசரபட்டர்.  அத்தனை வேகம்.

வேகமாக வந்ததுடன், முதலையிடமிருந்து கஜேந்திரனை விடுவித்தான். அந்த யானைக்கு மோக்ஷத்தையும் அளித்தான். உயிரைக் காப்பாற்றிய திருஷ்ட பலத்துடன் மோக்ஷத்தை அளித்த அதிருஷ்ட பலமும் சேர.. திருஷ்டா திருஷ்ட பலம் வாய்க்கப் பெற்றது.

அவனை மனசார நினைத்து அன்னம் எடுத்து ஹோமம் பண்ணுங்கள்; அப்படியில்லை என்றால் மனசார அவன் நாமத்தைச் சொல்லுங்கள்.  எம்பெருமான் அனுக்கிரகஹம் விஷேஷமாக  கிடைக்கும்.  இப்படி மூன்று வகையான பலன்களும் கிடைக்கும்.
திருநாமத்தைச் சொன்னால் மோக்ஷம் கிடைச்சுடுமா?  அது நேரே மோக்ஷம் வாங்கி தராது. சொல்லச் சொல்ல பக்தி ஏற்படப் பண்ணும்.  பக்தி உண்டாக உண்டாக, இந்த ஆத்மா அவனுடையதுன்னு நினைப்போம். அதை அவன் திருவடியிலே சமர்ப்பிப்போம். அதன் விளைவாக மோக்ஷம் கிடைக்கும்  இதுவே அவன் திருநாமம் நமக்குப் பண்ணக் கூடிய மிக உயர்ந்த உதவி.

அப்படிப்பட்ட திருநாமங்கள் அடங்கியதாலேதான் விஷ்ணு சகஸ்ர நாமத்தை ரொம்ப உயர்த்திச் சொன்னது.  வேதம் சொல்லி ஹோமம் வளர்க்கிறதுக்குப் பதிலாக இப்படி நாமங்களைச் சொன்னால் போதுமா என்று கேட்டால்... மூன்று வேதங்களின் சாரம் காயத்ரி என்கிற மகா மந்திரம்.  இந்த உத்தமமான மகா மந்திரத்தை விளக்கும்படியாக அமைந்திருக்கிறது விஷ்ணு சகஸ்ர நாமம். காயத்ரி மகாமந்திரத்தை தினமும் சொன்னவர்களுக்கு அசாத்தியமான ஆசீர்வாத பலம் உண்டு.  காகிநாடா பக்கத்திலே ஒரு சமஸ்தானத்து ராஜா, அவர் குழந்தைக்குப் புண்யாகவசனம்.  வேத வித்துக்களால் சபை நிரம்பியிருக்கும் சமயம் குழந்தை தவழ்ந்து போய் அரண்மனையில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து மாண்டு போய்விட்டது.  நடந்ததை மறைத்து விட்டாள் குழந்தையின் அம்மா.  துக்கம் சம்பவித்த இடத்திலே சாப்பிடக் கூடாது.  எல்லா வேத வித்துக்களும் பட்டினியாய்ப் போவார்களே என்ற எண்ணத்தில் குழந்தை இறந்ததைச் சொல்லாமல், மடியிலே அதை மறைத்து வைத்துக் கொண்டாள் ராணி.
புண்யாகவசனம் ஆகி, ஒவ்வொரு வேத விற்பன்னரும் கிட்டே வந்து குழந்தைக்கும் அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறார்கள்.  (ஆந்திரா தேசத்திலே அப்படித்தான் வழக்கம்)  கொஞ்ச நேரத்திலே குழந்தையின் கால் அசைகிறது.  ராணிக்கு ஒரே ஆச்சரியம்.  மாண்டு போன குழந்தை திரும்பவும் உயிர் பெற்றதே.  அந்த மாயம் எப்படி நிகழ்ந்தது என்றால், பெரியோர்களின் ஆசீர்வாத பலத்தாலே.  அவர்களுக்கு எப்படி பலம் வந்தது?.. காயத்ரி மகா மந்திரத்தை தினமும் சொன்னதாலே.  சாமானியர்கள் ஆசி சொன்னால் பலிக்குமா என்ன?.. அனவரதம் காயத்ரியை ஜபிப்பதனாலேதான் அந்த அதிகாரம் கிடைக்கும், வாக்கு பலிக்கும்.
ஒருவருக்கு உபநயனம் செய்விக்கிற காலத்தில், பிரம்மோபதேசத்தின்போது அப்பா, மாமா அல்லது வேறு உயர்ந்த அதிகாரி காயத்ரி மந்திரத்தை உபதேசம் பண்ணனும்.  உபதேசம் பண்ணுகிறவர் நித்யம் ஆயிரம் முறை காயத்ரி ஜபிப்பவராய் இருக்க வேண்டும். ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் தானே இரண்டாயிரம் ரூபாயை அவராலே கடனாகத் தர முடியும்.  அதுமாதிரி தான் இது.

காயத்ரிக்கு ஏன் சிறப்பு?.. காயத்ரியானவள் பிராத காலத்தில் சிவப்புப் பட்டு உடுத்தி  ரிக் வேதத்தை உச்சரிக்கிறாள்.  அவளே உச்சி காலத்தில் வெண்பட்டு உடுத்தி, யஜுர் வேதம் கூறும் சாவித்ரியாகக் காட்சி தருகிறாள்.   சாயங்காலத்தில் கருப்பு உடுத்தி, சாம வேதம் ஓதும் சரஸ்வதியாக இருக்கிறாள். இதில் ஒரு தர்ம சூட்சுமம் அடங்கியிருக்கிறது.  ஒரு நாள் பொழுதில் மூன்று வேதமும் பூரணமாகச் சொல்லி விடுகிறாள் காயத்ரி.  அவள் குழந்தைகளான நமக்குச் சிரமம் தராமல், அவள் சிரமப்படுகிறாள்.  நீங்கள் என்னைச் சொன்னால் போதும் என்கிறாள்.  அவள் சிரமத்தை எடுத்துக் கொண்டு நம் சிரமத்தைப் போக்குகிறாள்.. அவளைக் காட்டிலும் கருணை உள்ளவர்கள் யார் உண்டு?

விஷ்ணு சகஸ்ர நாமத்துக்கு வருவோம்.  கருணை வடிவான காயத்ரியின் முதல் எட்டு அக்ஷரத்தை விளக்க வந்தது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முதல் சுலோகத்தின் முதல் பாதம்.  அடுத்த எட்டு காயத்ரி அக்ஷரங்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தின் இரண்டாவது சுலோகத்திலே விளக்கம் பெறுகின்றன.  மூன்றாவது எட்டை விளக்க வந்தது சகஸ்ர நாமத்தின் மூன்றாவது சுலோகம்.  இந்த மூன்று சுலோகங்களுக்கு சர்வ மந்திரங்களுக்கும் சாரமான காயத்ரியை எடுத்துச் சொல்லுவதால் அவற்றுக்குச் சிறப்பு அதிகம்.  இந்த முதல் மூன்று சுலோகங்களுக்குள்ளே ஓர் அவதாரம் பேசப்படுகிறது.
விஷ்ணு சகஸ்ர நாமத்தை பீஷ்மர் சொல்ல, கிருஷ்ணன் கேட்கிறான்.  ஆனால் எதிரே உள்ள கிருஷ்ணரை ஸ்தோத்திரம் பண்ணவில்லை பீஷ்மர்.  நரஸிம்ஹ அவதாரத்தை தியானம் பண்ணுகிறார்.  விஷ்ணு சகஸ்ர நாமத்தின் ஆதியிலேயும் இடையிலேயும் கடைசியிலேயும் நரஸிம்ஹ அவதாரம் பற்றிச் சொல்லப்படுகிறது.  இந்த சிறப்பையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

தொடரும் …

PART-1, Chapter-3

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 3

சஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் - திருப் பெயர்கள். பகவானுக்கு வெறும் ஆயிரம் பெயர்கள் தானா..? ஆயிரம் நாமங்கள் என்று வெறும் எண்ணிக்கையிலே மட்டும் சொல்ல வந்ததன்று. சஹஸ்ரம் என்பதற்கு "பலபல" என்றும் பொருள் உண்டு.  "பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே" என்று ஆழ்வார் சொல்கிறார்.  எல்லோரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.   "சஹஸ்ரநாமம்" என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது. ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை பண்ணிக் கொண்டிருந்த பொது, தம் சிஷ்யரை அழைத்து புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி சொன்னார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்கு திருவுள்ளம். அங்கேயிருந்து போனார் சிஷ்யர்.  அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம். "நான் இதைக் கேட்கலியே.. நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா.. நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே" என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார்.  திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது. அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிறார்.  "நான் சொல்வது என்ன? நீ செய்வது என்ன? "சுவாமி, நான் என்ன செய்வேன்.  அங்கே போய் லலிதா சஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு அதை வைச்சிடு, இதை எடுத்துண்டுபோன்னு சொல்கிறாள்.  நான் என்ன செய்வேன்" என்றார் சிஷ்யர். அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைக்கிறார்.  "அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..."  அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர். இப்படி லலிதையே போற்றும்படியான லலிதமான சஹஸ்ரநாமம், எல்லோரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது.  எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான்.  ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...? ஜானிகளுள் அக்ரகண்யரான பீஷ்மரால்... பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம்.  அம்புப் படுக்கையில் இருக்கிறார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சொல்கிறார் பகவான் கிருஷ்ணர் "அணையும் நெருப்பைப் போல இருக்கிறார் பீஷ்மர்.  அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ, அவர் சொல்வதைப் போய்க் கேள்" என்று தர்மபுத்திரரை அனுப்புகிறார்.

"ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே தர்மத்தைச் சொல்ல" என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.  
பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக்கூடிய மகான்கள் இருக்கணும். இந்த உண்மைக்கு சாட்சியாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு   சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள்.  அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.  அவன் சொன்னது கீதை - கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.  பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர்.  பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய  கண்ணாடி என்று பொருள்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்... அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை.  அத்தனையும் சுகுணங்கள்.
சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக்கூடக் காட்டவல்லது இல்லையா... அதைப் போலே சர்வ வியாபகனானவனை அந்த சின்ன திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்த பகவத் குணதர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹாஸ்ரநாமத்துக்கு  உரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.  ஆறு வித உயர்வுகளைச் சொல்கிறார்.

1. மகாபாரத சாரம்:
ரசாலு என்று ஆந்திர தேசத்திலே ஒருவகை மாம்பழம் வருவதுண்டு. வெயில் காலத்திலே வரும்.  அதைப் பிழிந்தால் மொத்தமும் ரசமே  கொட்டும். அதைப் போலவே மகாபாரதம் ஒரு பெரிய ரசாலு என்று வைத்துக் கொண்டால், அதைப் பிழிந்தால் வரக்கூடிய சாறு சஹஸ்ரநாமம்.  மகாபாரதக் கதை முழுவதும் அதில் இருக்கிறது.  மகாபாரதத்துக்கு அப்படி என்ன சிறப்பு...?  "சாப்பிட்டால் வடையே சாப்பிடணும், கேட்டால் மகாபாரதக் கதையே கேட்கணும்" என்கிற அர்த்தத்திலே ஒரு தெலுங்கு பழமொழி உண்டு.  தர்மத்தைச் சொல்வது மகாபாரதம்.   "மகா" பாரதம் என்று ஏன் அதற்குப் பெயர் உண்டாயிற்று...? பெரிதாக பளுவுடையதாக இருப்பதாலே அந்தப் பெயர்.. அளவிலும் பளு, புத்திக்கும் பளு.. சாமான்யனின் புத்திக்கு வடிவமாகச் சொல்லியிருக்கிறது.  தர்ம, அர்த்த, காம மோக்ஷம் என்ற சதுர்வித புருஷார்த்தத்திலேயும் தெளிவான  ஞானம் பிறக்க வழி, மகாபாரதம். வேத சாகரத்தை (சமுத்திரத்தை) வியாசரின் புத்தியாகிற மத்தினாலே கடைந்து பெற்ற உயர்ந்த வெண்ணெய் போன்றது மகாபாரதம்.  இப்படி வேத ஸாரமான  மகாபாரதத்தின் ஸாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம்.

2. மகரிஷிகளாலே  நன்கு, பலமுறை கானம் பண்ணப்பட்டது:
ரிஷிகளுக்கும் நம்மைப் போன்ற நித்ய சம்சாரிகளுக்கும் வித்தியாசமில்லையா...? நம் பார்வை ஒரு வரையறைக்குட்பட்டது. மகரிஷிகளின் பார்வையோ உயர்ந்த ரீதியிலே வஸ்துவாகப் பார்க்காமல் அதன் உள்ளே இருக்கிற சக்தியைக் காணக்கூடியது.  உடல்மிசை உயிரெனக் கறந்து எங்கும் பரந்துளன் - உடலுக்குள் உயிர் மறைந்துள்ளது போல் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான் பரமாத்மா.  இதுக்கு ஒரு கதை...
சுக பிரும்ம மகரிஷி ஒரு தடாகக் கரை வழியே வேகமாக நடந்து போனார்.  அவர் அவதூதர். திருமேனியில் வஸ்திரம் கூட இல்லை. தடாகத்தில் சில அப்ஸர  ஸ்திரீகள் நீராடிக் கொண்டிருந்தனர்.  அத்தனை ஸ்திரீகளும் சுக பிரும்மரைப் பார்த்தனர்.  அவரும் அவர்களைப் பார்க்கிறார் - அவர் மனசில் எந்த விகாரமும் ஏற்படவில்லை.  அந்த ஸ்திரீகளும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொள்ளவில்லை.
சுகபிரும்மரைத் தொடர்ந்து வந்தார் அவர் தந்தையான வியாசர். "ஹே புத்ரா" என்று அழைத்தபடி வந்தார்.  அவர் குரலைக் கேட்டதுமே மான சம்ரக்ஷணம் செய்து கொண்டார்களாம்.  வியாசர் அந்த ஸ்திரீகளிடம் வந்தார். "நான் வயோதிகன்; அவனோ சின்னப் பையன்.. அப்படியும் என்னைக் கண்டதும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொண்டதேன்..? இது என்ன விபரீத ஆசாரம்?" என்று கேட்டார்.  "இந்த கேள்வியை உங்கள் பிள்ளை கேட்டாரா? எங்களைத் திரும்பிப் பார்த்தாரா? அவர் தன்மை எங்களுக்குத் தெரியும். நிற்கின்றதெல்லாம்  நெடுமால் என்று நினைப்பவர்; சர்வ பதார்த்தங்களிலும் பகவானைப் பார்க்கிறார்.  நீர் இன்னும் கீழ்ப்படியில் இருக்கிறீர்.  ஆகையினாலே உங்களைக் கண்டால் பயப்பட வேண்டியிருக்கிறது என்றார்களாம் அப்ஸர  ஸ்திரீகள்.  இதனால் வியாசரைக் குறைத்துச் சொன்னதாக அர்த்தம் ஆகாது. ஒருத்தரைக் குறைச்சுச் சொல்றமாதிரி சொல்லி அடுத்தவரை உயர்த்திச் சொல்றது.  இதை "நஹி நிந்தா ந்யாயம்" என்பார்கள்.  சுகபிரும்மரைப் போல் எதிலும் பகவானைப் பார்க்கும் ரிஷிகள், பகவான் நாமத்தைத் தனியே சொல்ல வேண்டியதில்லை... ஆனால் அப்படிப்பட்ட ரிஷிகளே விஷ்ணு சஹாஸ்ரநாமத்தைக் கானம் பண்ணுகிறார்கள்.  அனைத்து ரிஷிகளும் அபிப்ராய பேதமின்றி பண்ணுகிறார்கள்.   

3. பகவானாலே அடையாளம் காட்டப்பட்டது:
வியாசரை வேத வியாசர் என்று சொல்கிறோம். வேதத்தை விபஜிக்கிறவர் என்று பொருள். விபஜிக்கிறவர்..? பிரிக்கிறார்.
கலியுகத்திலேதான்   நால்   வேதங்களை   நான்கு   பிரிவினர் தனித்தனியே சொல்கிறார்கள்.   கிருத யுகத்திலே அப்படியில்லை.  எல்லா வேதங்களையும் பூர்ணமாகக்   கற்று உணர்ந்திருப்பார்கள்.  ரிக் வேதம் சொல்லும் என்றால் சொல்வார்கள்; சாம கானம் பண்ணும் என்றால் பண்ணுவார்கள்.. எல்லாவற்றையும் சேர்த்து தரித்தார்கள்.  இப்போது கலியுகமானதினாலே மந்த புத்தியும் மந்த பாக்யமும் உடையவர்களாயிருக்கிறோம்.
ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலேயும் அடுத்து வரப் போகிற கலியுகத்து மனிதர்களுக்கு உதவும்படியாகப் பரமாத்மாவே வியாசாவதாரம் பண்ணுகிறார்.  வேத சாரத்தை விபஜித்துக் காட்டுகிறார்.  பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்கு விபஜித்துத் தருகிறார்.  இப்படி வசிஷ்டர் ஒரு முறை வியாசாவதாரம் பண்ணியிருக்கிறார்.  பகவானே கருணை கொண்டு வேத வியாசராய் அவதரித்து வழங்கியது மஹா பாரதம்.  சாரம் பகவத் கீதை; அதன் சாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம்.  ரிஷிகள் கானம் பண்ணிய விஷ்ணு சகஸ்ர நாமத்தை பகவானே அடையாளம் காட்டியிருக்கிறார்.

4. பீஷ்மரால் உயர்ந்ததாகக் கொண்டாடப்பட்டது:
ஆங்கிலத்திலே "superlative  degree"  என்றொரு வார்த்தை சொல்வதுண்டு. அதற்கு மேலாக ஒன்றும் கிடையாது.  ஒப்பு உயர்வு சொல்ல முடியாமல் பெருமை உடையது என்று பீஷ்மரே ஏற்று விஷ்ணு சகஸ்ர   நாமத்தை எடுத்து ஆண்டிருக்கிறார்.  "மகரிஷிகளால் கானம் பண்ணப் பட்ட பரம நாமம்" என்று போற்றி உகந்திருக்கிறார்.

5. நோய் தீர்க்க வல்லது:
வைத்ய சாஸ்திரமான சரக சம்ஹிதையிலே சொல்லியிருக்கிறது.  விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லக் கேட்டால்  வியாதிகள் போகும்!  முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வேடிக்கையாச் சொல்வார்.  "எல்லோரும் உபநிஷத்படி நடக்கிறார்கள் - மாத்திர பலத்தை நம்புகிறார்கள்" என்று.  உபநிஷத் சொல்லும் மாத்ரா பலம் -  வேத கோஷங்களின் ஒலி மாத்திரைகளுக்கு உள்ள சக்தியை.  நாம் நம்புவதோ மாத்திரை (tablet)  பலத்தை. அந்த நரசிம்ஹனே பலம் என்று நம்பி சஹாஸ்ரநாமத்தைப் பூரணமாய்ச் சொல்லி மூன்று தடவை தீர்த்தம் கொடுத்தால் தலைவலி போய்விடும். அந்திம காலத்தை தடுக்கக் கூடிய சக்தி கூட சகஸ்ர நாமத்துக்கு இருக்கிறது.

நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சகஸ்ர நாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் கிடையாது.  சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.

6. கீதைக்குத் துல்லியமாய் அர்த்தத்தை உடையதனாலே:
கீதைக்கு சமானமா ஏதாவது உலகத்திலே உண்டா  என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.  இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத் சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய பீஷ்மர் சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ர நாமம். பகவானை காட்டிலும் பீஷ்மர் உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.
துளி கூட மிச்சமின்றி அந்த ஆகாயம் முழுவதையும் காகிதமாக்கி, ஏழு சமுத்திர ஜலத்தையும் மையாக்கி எழுதினாலும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை விளக்க முடியாது.

தொடரும் …