Wednesday, December 18, 2013

PART -1, Chapter - 29

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 29

விச்வம் என்கிற சப்தத்தினால் பரசுராமர்  சொல்லப்படுகிறார்.  தசாவதாரத்திலே வரக்கூடிய இவரை "பார்கவ ராமர்"  அழைப்பது உண்டு. சாமான்யரால் பார்க்க முடியாதவர்.  பகவதவதாரத்திலே எத்தனையோ அவதார வகைகள் உண்டு.  சாஷாத் அவதாரம், அனுப்ரவேசாவதாரம், ஆவேசாவதாரம் என்று இப்படிப் பல சாஷாத் அவதாரமென்றால், ராமர், கிருஷ்ணர், நரசிம்ஹர் என்று பிரத்தியட்சமாய்ப் பார்க்கப்பட்ட அவதாரங்கள்.   அனுப்ரவேசாவதாரம் என்பது இன்னொரு உருவிலே பகவான் உட்புகுந்து வந்த அவதாரம்.  வியாசாவதாரம் என்பது அனுப்ரவேசாவதாரம்.  இதிலே ஆவேசவதார வகையைச் சேர்ந்தது பரசுராம அவதாரம்.
இந்த அவதாரத்திலே பகவான் ஆவேசித்து முழுமையாய் நின்று பிரகாசிக்கிறான்.  இந்த அவதாரம் ஏன் ஆவேசாவதாரமாகிறது என்று பார்த்தோமானால், நித்யம் ஜபம், ஹோமம் பண்ணக்கூடியவளாலே தான் அதைப் பார்க்க முடியுமே ஒழிய, சாமான்ய ஜனங்களால் பார்க்க முடியாது.  அத்தனை தேஜஸ் அந்த அவதாரத்துக்கு!

23 தலைமுறை சத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அழித்தவர் இந்த பரசுராமர்!   சத்ரிய இரத்தத்தினாலே தர்ப்பணம் பண்ணினவர்.  உலகம் எல்லாம் சஞ்சாரம் பண்ணினவர் என்பதாலே விச்வம் என்கிற சப்தத்தினால் இவர் அழைக்கப்படுகிறார்.

ரசுராமரை அடுத்தவன் சாஷாத் விச்வ ரூபியாய் விளங்கக்கூடிய விச்வ சப்தத்தினால் சொல்லக்கூடிய ராகவன்.  அது எப்படித் தெரிகிறது..?
விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே வருகிறது.  ராமாவதாரத்தைக் குறிக்கக்கூடிய முக்கியமான, விஷேசமான 16 திருநாமங்கள் வருகின்றன.  அதை நன்றாக நாம் கவனிக்க வேண்டும்.
புருஷ சூக்த ஹோமம் செய்ய வேண்டும் என்பதை விதிக்கின்ற ரிக் வேதத்தில் கூட 16 ரிக்குகள் - மந்திரங்கள் இருக்கின்றன.  16 என்பது அத்தனை சிறப்புடையது.  பகவான் ராமனும் 16 குணங்களை உடையவன்.
வால்மீகி ராமாயணத்திலே, வால்மீகி நாரதரைப் பார்த்துக் கேட்கிறார் "16 குணங்களை உடைய ஒருவன் இருக்கிறானா என்ன?"  அதற்குத்தான் ஸ்ரீ ராமனை முன்னிறுத்தி பதில் சொல்கிறார் நாரதர்: "குணவான் அவன்: குணக்குன்று அவன்: குணக் கடல் அவன்"
குணவான் என்று சொல்லும்போது என்ன குணம் சொல்லப்படுகிறது?  ஒரு குணத்தைக் காட்டி இந்தக் குணம் உடையவனா" என்று வால்மீகி கேட்கவில்லை.  நாரதரும் அப்படி ஒரே ஒரு குணத்தைக் காட்டி பதில் சொல்லவில்லை.  அளவிட முடியாத குணங்களைச் சொன்னார்.
கோவிந்தராம் என்பவர் வியாக்யானத்திலே எழுதுகிறார்.  "சௌசீல்யம்" என்பதே பகவானின் குணம் - உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பாராமல் சகலரிடத்திலும் கலந்து நிற்றல், தன் உயர்த்தி பார்ப்பதில்லை பகவான்.
மகாதேசிக சுவாமிகள், பகவானை சௌசீல்ய சாகரம் என்று சொல்கிறார். அத்தனை காருண்யம் அவனுக்கு.  தயா சதகத்திலே சொல்கிறார், "ஏ, ஏழுமலை பெருமாளே,  காருண்யத்தை  அப்படியே நடுங்கிப் போகிறது" என்று.  அத்தனை கருணை.
குகனுடன் ஐவரானோம் என்று சொன்னானே.. வாத்சல்யத்தால் அவனை நனைத்தானே.  சுக்ரீவனுக்காக எதையும் செய்யத் தயாராய் இருந்தானே:  யாரோ ஒருத்தி அந்த சபரி. அவளுக்கு உயர்ந்த கதியைத் தந்தானே!  சபரி எவ்வளவு கெட்டிகாரி பாருங்கள்.  பிரபோ, உன் பார்வை என் மேல் பட்டது; அது ஒன்றே எனக்குப் போதும்.  உயர்ந்த கதியை  அடைந்து கொண்டிருக்கிறேன்;  மோக்ஷம் போய்க் கொண்டிருக்கிறேன் என்று போய் விட்டாள் அவள்.
அதனால் தான் சுவாமி தேசிகன், "சபரிக்கு மோக்ஷம் தந்தவனே.. என்று சொல்லாமல், சபரி மோக்ஷம் போவதற்கு சாட்சியாய் நின்றவனே" என்று சொன்னார். மோக்ஷத்துக்கு உண்டான காரியத்தை சபரி பண்ணி இருக்கிறாள்.  அதனாலே பகவான் அதை அவளுக்குக் கொடுக்க வேண்டியதே இல்லை.  அவன் வெறுமனே அவளைப் பார்த்தபடி நின்றானாம்.

ப்படி  சபரி, குசேலர் என்று சொல்லி பகவானுடைய சௌசீல்ய குணத்தை விஷேஸமாய்ச் சொல்லலாம்.
விச்வ மூர்த்தியாகிய பரமாத்மா, இப்படி சௌசீல்ய குணவானாக இஷ்வாகு வம்சத்திலே வந்தான்.
சஹஸ்ரநாம ரீதியாக அவனுக்குச் சொல்லப்படுகிற குணங்களைப் பார்ப்போம்.  
16  குணங்களிலே முதல் குணமாக சொல்லப்படுவது உத்தம குணம்.
அதாவது, பகவான் இராமபிரான் இருக்கிறானே.. அவன் எப்படிப்பட்டவன் என்று கேட்டால், ரூபத்திலும், ஸ்வரூபத்திலும், வாக்கு, நடை, உடை, பாவனை என்று எதை எடுத்துக் கொண்டாலும் உத்தமமானவன்.  அவன் வடிவ அழகை நாம் பார்க்கிறோம்.  எப்படி இருக்கிறது அந்த அழகு?
ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தாய்  என்கிறார் கம்பர்.
வாலி ராமனைப் பார்த்து சொல்வதாக வருவது  இந்த வாக்கு!
"அடடா! என்ன சுந்தர வடிவம்!  ஒரு சித்திரம் எழுதக்கூடியவன் இந்த அழகை  எழுத முடியுமா?  எத்தனை நாழி எழுதினாலும் கிழித்துக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
வால்மீகியின் வர்ணனனையைப் பாருங்கள்!
சந்திரகாந்தாநனம் ராமம்! - சந்திரனைப் போன்று பிரகாசிக்கிறான்.   புருஷர்களுடைய திருஷ்டி சித்தத்தைக்  அபகரிக்கிறான்.   சமஸ்தத்தையும் துறந்தவர்கள் கூட அவன் தோளை   ஆலிங்கனம் செய்து கொள்ள   ஆசைப்படுகிறார்களாம்.
எழுத முடியாத அழகு, எழுத முடியும் என்கிறார் சுவாமி தேசிகன்.  அது எப்படி என்று கேட்டால், "நாமாக எழுத முடியாது.   ஆனால்,அந்த அழகை  அவனே எழுதினால் நம்மாலே அதை அழித்து விட முடியுமா என்ன"? என்று கேட்கிறார்.
விளையாட்டு என்கிற எழுதுகோலைக் கையிலே எடுத்துக் கொண்டு, காருண்யம் என்கிற மயிலே தோய்த்து, நம் ஹ்ருதயம் என்கிற பலகையிலே, அவனே தன் உருவத்தை எழுதினால் அதை அழிக்க முடியுமா?

டிவழகிலே உயர்ந்த பரமாத்மா, குணங்களிலும் உயர்ந்தவன்தான்.
தசரத சக்ரவர்த்தி ராமருக்குப் பட்டாபிஷேகம் பண்ண முடிவு செய்து பிரஜைகளை அழைத்துக் கேட்டாராம், "ஹே மகா ஜனங்களே!  என் குழந்தைக்குப் பட்டாபிஷேகம் பண்ணனும் என்று நினைக்கிறேன்.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று. "நாங்களும் அதையே விரும்புகிறோம்.   காரியத்தைச் செய்யுங்கள்" என்று அத்தனை ஜனங்களும் வேத மந்திரத்தைச் சொல்கிற மாதிரி உடனே பதில் சொன்னார்களாம்.  ஒருத்தருக்கொருத்தர் கலந்து ஆலோசிக்காமல் அத்தனை பேருமே எப்படி இவ்வாறு  சொன்னார்கள்?
"வெண்கொற்றக் குடை திருமுக மண்டலத்தை மறைக்க, யானை மீது பவனி வரும் அவனை நாங்கள் சேவிக்க இச்சை கொள்கிறோம்" என்றார்கள்.
அது மாத்திரமல்ல..."அறுபதாயிரம் வருஷம் பரிபாலனம் பண்ணின தள்ளாத கிழவர்;  இப்போதாவது உனக்கு இந்த எண்ணம் வந்ததே.. சீக்கிரம் இறங்கு" என்றார்களாம்.
இந்த வார்த்தைகள் தசரதனைச்  சுரீரென்று சுட்டதாம். "நான் என்ன தப்பு பண்ணினேன்?  என்னை இறங்கச் செய்வதில் ஏன் இத்தனை ஆவல்"? என்று கேட்டானாம்.
மக்கள் சொன்னார்கள்: "ஹே ராஜாவே!  தாங்கள் தவறாக எண்ணக் கூடாது.  தங்கள் ஆட்சியிலே குறை கண்டதாலே இதை நாங்கள் சொல்லவில்லை.  தங்கள் மகனிடத்திலே உள்ள குண நிறையைக் கண்டு சொன்ன வார்த்தைகள் இவை"
முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர், ராமாயணத்தில் இந்தக் கட்டத்துக்கு சிறப்பான ஓர் அர்த்தத்தைச் சொல்லுவார்:
"ந்ருப" என்ற பதத்தை "ராஜாவே" என்று விளியாக நான் மேலே சொன்னேன். சுவாமி தேசிகன் இந்த "ந்ருப" என்கிற பதத்தை "குணங்கள்" என்கிற சொல்லுக்கு அடை மொழியாக இடம் மாற்றிப் பொருள் சொல்லுவார்... "பஹவ; ந்ருப கல்யாண குணா:"  "அரசகுணங்கள் - அதாவது அரசனாக இருப்பதற்குரிய அத்தனை தகுதிகளும், கல்யாண குணங்களும் - உடையவன் ராமன்" என்று பொருள்.
சரி, பிரஜைகளின் பதிலைக் கேட்ட தசரதனுக்கு வருத்தம் போய் ஆனந்தம் ஏற்பட்டது.  எப்பேர்ப்பட்ட ஆனந்தம் அது என்று பாருங்கள்:
புத்ரகாமேஷ்டி யாகம் பண்ணி, குழந்தையைப் பெற்ற ஆனந்தம், பிற்காலத்தில் அவன் தாடகையை வதம் செய்தபோது விருத்தியடைந்த ஆனந்தம், சிவதனுசை முறித்து சீதா கல்யாணம் செய்து கொண்டதைப் பார்த்த போது விளைந்த ஏகமான ஆனந்தம், பரசுராமனை பங்கப்படுத்தியபோது ஏற்பட்ட கரையில்லா களிப்பு.  அத்தனை ஆனந்தத்தையும் தூக்கி வேறுபுறம் தள்ளி விட்டது இந்த ஆனந்தம்!  இந்த ஆனந்தத்துக்குச் சமானமேயில்லை.
ன் புத்திரன் குணவான் என்று பிறர் சொல்லக் கேட்கும்போது விளையும் ஆனந்தம் அலாதி அல்லவா!
இப்படி உத்தமமான நல்ல பிள்ளையாக அவன் இருந்ததாலே பராதி: (உத்தமன்) என்று சஹஸ்ரநாமம் ஸ்ரீரமனைச் சொல்கிறது.

(தொடரும்)...