Thursday, July 4, 2013

PART-1, Chapter-18

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 18

நரசிம்ஹனின் இடது திருநேத்திரம் சந்திரன்.
தன்னுடைய திவ்ய மனோகர ரூபத்தினாலே எல்லோரையும் ஆகர்ஷிப்பவன்.  சின்னக் குழந்தை முதல் முதியோர் வரை அத்தனை பேரையும் ஆகர்ஷிப்பவன்.  "சந்தா மாமா ராவே", "நிலா நிலா ஓடிவா" என்று எல்லா மொழிகளிலும் விளையாட்டுப் பாடல்களால் வரவேற்கப்படுகிறான்.

சோம ஸவம் என்று ஒரு பெரிய யாகம் செய்வார்கள்.  சந்திரனுக்கு என்ன கொடுக்கிறான் இந்த சந்திரன்..?
கன்றுடன் கூடிய பசுவைக் கொடுக்கிறான் - பாலை வருஷிக்கக்கூடிய. பலத்தையும், புஷ்டியையும் தரவல்ல.. வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்  பசுக்கள்.  சந்திர அனுக்கிஹத்தினாலேதான் அது கிடைக்கும்.

குதிரை!  வேகமாகப் போகக்கூடிய, நல்ல சுழியை உடைய குதிரைகள் ஒரு நாட்டிலே இருந்தால் நிரம்ப க்ஷேமம் உண்டாகும்.  அவற்றை அளிப்பவன் சந்திரன்.

வீரம் -  இந்த வீர சப்தத்துக்கு நல்ல புத்திரன் என்று  அர்த்தம். நித்ய கர்மானுஷ்டானங்களை விடாமல் பண்ணக் கூடிய சத்புத்திரன் ஏற்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறது யாகம்.

வீட்டிலே எல்லோராலும் கொண்டாடப்படக் கூடியவனாய், சபையிலே கொண்டாடப்படுபவனாய் அப்பாவின் கீர்த்தியை உலகிலே பிரகாசிக்கச் செய்யக் கூடியவனாய் இருக்கும் புத்திரன்.

இவை எல்லாம் சோமதேவன் - சந்திரனால்  ஏற்படுகிறது.  இத்தனையையும் கொடுக்கும் சந்திரன்தான் பகவானின் இடது திருநேத்திரம்.

மூன்றாவது நேத்திரம் அக்னி - அக்னிக்கு வித்வான் என்று ஒரு பெயர்.  வித்வான் என்றால் வழிகாட்டி.  நல்ல மார்க்கத்திலே என்னை அழைத்துப் போ, என்னிடத்திலே இருக்கக்கூடிய பாவக் குவியலைப் போக்க வழிகாட்டு என்று அக்னியை வேண்டுகிறது உபநிஷத் மந்திரம்.

பாவங்களிலே இரண்டு வகை.  சஞ்சிதம், பிராரப்தம்.

சஞ்சிதம் என்றால் இன்னும் பலனைக் கொடுக்க ஆரம்பிக்காதது - அவிழ்க்காத மூட்டை. அதாவது, இந்தப்பிறவியிலே நாம் செய்து வரும் பிழைகளினால் நம் கணக்கில் எறிக் கொண்டிருக்கும் பாவ மூட்டை.

பிராரப்தம்.  என்ன பண்றது... அனுபவிச்சாகணும் என்று பேச்சு வழக்கிலே சொல்வதுண்டு.   இந்த பிராரப்தம் என்பது ஏற்கெனவே எடுத்த பிறவிகளில் செய்த பாவங்களுக்கு நாம் இப்போது அனுபவித்து வரும் பலன்.

இந்த பாவங்கள் மொத்தத்தையும் நீ போக்கடிக்க வேண்டும் என்று அக்னியை வேண்டுகிறோம்.  பதிலுக்கு நாங்கள் உனக்கு என்ன செய்ய முடியும்?  நம: நம: என்று ஸ்தோத்திரம்  பண்ணலாம், அவ்வளவுதான் என்று வேண்டுகிறோம்.  அக்னி மாதிரி நான் ஜொலிக்க வேண்டும்.  மனிதர்க்குள்ளே உயர்ந்த வகை வேண்டும். என்னையும் உன்னைப் போன்ற தேஜஸ்வியாக ஆக்கு என்று பிரார்த்திக்கிறோம்.

நல்வழிப்படுத்தக் கூடியவன் அக்னி; அனைத்தையும்  கொடுக்கக்கூடியவன், யார் துதித்தாலும் ஐச்வர்யத்தை கொடுக்கக்கூடியவன்.  இப்படிப்பட்ட வரங்களை அருளக்கூடிய அக்னியானது பகவானுடைய மூன்றாவது நேத்திரம்.

சூரியன், சந்திரன், அக்னி என்று மூன்று கண்களை  உடையவன்.  ஆதலினாலே, தபன இந்து அக்னி நயன: என்று நரசிம்ஹனைச் சொல்லி ஆராதிக்கிறோம். 


ம்ருத்யு ம்ருத்யவே ஸ்வாஹா என்றும் நரசிம்ஹனை ஆராதிக்கிறோம். 
ம்ருத்யு - மரணம்!  ம்ருத்யுவுக்கு ம்ருத்யுவாய் இருக்கக்கூடியவன் நரசிம்ஹன் என்பதாலே ம்ருத்யு பயம் நீங்க, சம்சார பயம் நீங்க அந்த எம்பெருமாணனின் திருவடியை ஆச்ரயிக்க வேண்டும்.  ம்ருத்யுவையும் விரட்டியடிக்கும்படியான பராக்கிரமமுடையவன் நரசிம்ஹன்.
விச்வயோனி: விச்வாத்மா: என்றும் அவனை அழைக்கிறோம்.  விச்வயோனி: விச்வத்துக்கெல்லாம் காரணமாய் இருக்கக்கூடியவன்.    ப்ரஹலாதப்ரியனான நரசிம்ஹனை முழுக்ஷுபாஸ்ய தேவதை என்று நினைப்பவர்கள் அவனை உபாஸனை பண்ண வேண்டும்.  சம்சாரம் வேண்டாம் என்கிற விவேகம் மட்டும் எப்போது வரும் என்றே சொல்ல முடியாது.

சௌபரி என்று ஒரு மகரிஷி - வெளியிலே இருந்தால் உலகம் நம்மைக் கெடுக்கிறது என்று கருதி சமுத்திர ஜலத்துக்கு அடியிலே போய்  உட்கார்ந்து கொண்டார்.  உட்கார்ந்து தவம் பண்ணினார். பத்தாயிரம் வருஷத்துக்கு ஒரு முறைதான் கண்ணைத்  திறப்பார் அவர். வெளியிலே வருவார், ஏதாவது பழமிருந்தால் பறித்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் சமுத்திரத்துக்கு உள்ளே போய் விடுவார்.


ஒரு சமயம் அவர் கண்ணை திறந்த போது, ஒரு மீன் குடும்பம் கடந்து செல்வதைக் கண்டார் - தாத்தா, பாட்டி தொடங்கி பேரன், கொள்ளுப்பேத்தி என்று சுமார் இருநூறு மீன்கள் ஒரே குடும்பமாய்ப்  போய்க் கொண்டிருந்தன  உடனே அவருக்கு மனசிலே ஏக்கம்  வந்ததாம்.  அடடா!  வாழ்க்கைன்னா இதுவல்லவா வாழ்க்கை!  இப்படி அழகா குடும்பமா இருக்கறதை விட்டுட்டு மூக்கைப் பிடிச்சுண்டு ஜலத்தடியிலே உட்கார்ந்திருக்கோமே?  இதனாலே நாம் என்னத்தைக் கண்டோம் என்ற சிந்தனை வந்ததாம்.  உடனே அவர் தவம் அப்படியே கலைந்து போய்விட்டது.  மீன்களைப் போல் குடும்பமாக வாழவேண்டுமேன்றால் திருமணம் செய்துகொள்ள வேண்டுமல்லவா?  ஒரு சன்னியாசிக்கு யார் பெண் கொடுப்பார்கள்? யோசித்துப் பார்த்த அவர், மாந்தாதா என்கிற இஷ்வாகு வம்ச மன்னனிடம்  போனார்.  அந்த மன்னருக்கு ஐம்பது பெண்கள்.  ஐம்பது பெண்களிலே ஒரு பெண்ணை நமக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்க மாட்டாரா என்ன? என்கிற தைரியம் முனிவருக்கு.  ஆனால் எவ்வளவுதான் பெண் குழந்தைகள் இருந்தாலும் எந்தத் தந்தைதான் ஒரு வயோதிகருக்கு அவர்களைத் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொள்வார்!  அல்லது எந்தப் பெண்ணாவது ஒரு வயோதிகனை விரும்பி வரிப்பாளா?  ராஜாவுக்கு ரொம்ப தர்மசங்கடமாகப் போய்விட்டது.  ஒரு உபாயம் செய்து இக்கட்டிலிருந்து தப்பிக்க முயன்றார்.


"சுவாமி!  எங்கள் குல வழக்கம் என்னவென்றால், பெண்கள் யாரை வரிக்கிறார்களோ அவருக்குத்தான் அவர்களை மணமுடித்துக் கொடுப்போம்.  அந்த மாதிரி சுயம்வரம் வைக்கும் குலவழக்கத்தை நான் மீற முடியாதே; நிர்ப்பந்தம் இருக்கிறதே" என்றார் சௌபரியிடம்.

சௌபரி சளைக்கவில்லை  "எனக்கொரு ஆட்சேபணையும் இல்லை.  உங்கள் பெண்கள் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துப் போங்கள்.  அவர்களில் யாரேனும் என்னை வரித்தால் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீர்கள் அல்லவா? என்றார்.  அரசன் ஒப்புக் கொண்டான்  "கட்டாயம் கொடுப்பேன்" என்று சொல்லி அந்தப்புரத்துக்கு அழைத்துப் போனான்.  அங்கே, உள்ளே நுழையும்போதே அதிரூப சுந்தரராக, மன்மதனையும் பழிக்கக்கூடிய ரூபனாய் நுழைந்தார் முனிவர்.  

அந்தப்புரத்திலிருந்த ஐம்பது ராஜகுமாரிகளும் ஒரு சேர அவரை வரித்து விட்டனர்.  எல்லோருக்கும் போட்டியே வந்து விட்டதாம்.  ஓடிச் சென்று, அரசனிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.  அவனும் வேறு வழியின்றி கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக ஐம்பது பெண்களையும் அவருக்கே மணமுடித்துக் கொடுத்தான்.  அவரும் ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியே கல்யாணம் பண்ணிக் கொண்டு தன் பின்னோடு அழைத்துப் போனார். 


தனித்தனியாக ஐம்பது பவனங்கள் (வீடுகள்) நிர்மாணம் பண்ணினார். ஒவ்வொரு கிரஹத்திலும் ஒரு மனைவியைக் குடிவைத்தவர் அத்தனை கிரஹங்களிலும் தானும் இருக்கும்படியான மாயத் தோற்றத்தை ஏற்படுத்தினார்.  ஐம்பது கிரஹங்களிலும் இருந்தவர், வெளியே மரத்தடியிலேயும் இருக்கலானார்.

இப்படி ஒரு கிழவருக்குக் குழந்தைகளைக் கொடுத்து விட்டோமே என்ற வருத்தத்துடன் சக்ரவர்த்தி மாந்தாதா, தம் பெண்களைப் பார்க்க வந்தார்.  ஒரு பெண் விடாமல் அத்தனை பெண்களும் தந்தையை ஸ்தோத்திரம் பண்ணி வணங்கினார்கள்!  "இப்பேர்ப்பட்ட ஒரு வரனுக்கு எங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தீர்களே. நாங்கள் சகல போகத்தொடு சந்தொஷமாயிருக்கிறோம்" என்று ஒத்தாற்போல் ஐம்பது பெண்களும் சொன்னார்கள்!


பார்த்தார்  மாந்தாதா.  முதல் பெண்ணைத் தனியே அழைத்து விசாரித்தார்.  அவள் சொன்னாள்:  "தந்தையே நான் ரொம்ப மகிழ்ச்சியாகவும் சுபிட்சமாகவும் இருக்கிறேன்  எனக்கொன்றும் போகத்தில் குறையில்லை  ஆனால் ஒரே ஒரு கஷ்டம்"... "என்ன கஷ்டம்"? என்றார் தந்தை.  "எப்போது பார்த்தாலும் பார்த்தா (கணவர்) இங்கேயே என் வீட்டிலேயே இருக்கிறார்.  மற்ற தங்கைகளின் வீட்டிற்கு போவதேயில்லை. அவர்களை நினைத்தால் எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்றாள்.

அடுத்த மகளைத் தனியாய் விசாரிக்கையிலும் மாந்தாதாவுக்கு இதே பதில் கிடைத்தது!  தொடர்ந்து ஐம்பது பெண்களும் இதே பதிலைச் சொன்னார்கள் தந்தையிடம்!

இப்படிப்பட்ட மகிழ்ச்சியான வாழ்க்கையினூடே ஒவ்வொரு வீட்டிலும் ஐம்பது குழந்தைகள் பிறந்தன.  அவர்கள் வளர்ந்து நடக்கும் பருவத்திலே குடும்பமே ஒன்றாயிருந்த ஒரு சமயத்தில் தன் பின்னே பார்த்துக் கொண்டார் முனிவர்.  "ஆஹா! எத்தனை அழகான குடும்பம் என்னுடையது" என்று வியந்து கொண்டார்.  இவ்வாறு மகிழ்ந்தபடியே போய்க்கொண்டிருந்த போது திடீரென்று அவருக்கு விவேகம் வந்து விட்டது!
இந்த விவேகம் மட்டும் எப்போது, எங்கிருந்து, எப்படி வருமென்று சொல்வதற்கேயில்லை!

"இப்போது நாம் குடும்பஸ்தனாகி என்ன சாதிச்சோம்" என்ற எண்ணம் வந்தது அவருக்கு.
"பந்தத்தை இப்படி அதிகமாக்கிக் கொண்டோமே. ஜலத்துக்குள்ளே உட்கார்ந்திருந்தபோது ஒரு பந்தமும் இல்லாமல், ஒரு நிர்ப்பந்தம் இல்லாமல் இருந்தோமே, இப்போது ஏகப்பட்ட பாசத்தினால் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.. அநியாயமாய் ஒரு மீன் குடும்பம் நம்மைக் கெடுத்து விட்டதே" என்று "தடாரென்று" அத்தனை பந்தங்ககளையும் உதறி விட்டு மறுபடியும் பழையபடி ஜலத்திலே போய் உட்கார்ந்து கொண்டார்.  

இந்த  கதையை ஆராய்ந்து பார்த்தால் எதுவுமே சாசுவதமில்லை என்பது புரிகிறது.

சாச்வதமான நித்யானந்தத்தை அடைய வேண்டுமென்றால் யாரை உபாஸனை  செய்வது...?

நரசிம்ஹனைத்தான் உபாசனை செய்யவேண்டும்!

(தொடரும்)